druvan bala bookதலைப்பே சொல்லி விட்டது. உள்ளே தலைப்புடன் கூடிய மேக மூட்டத்தில் சமூக பிம்பங்களின் வடிவங்கள் இருக்கிறது என்று.

கொம்பனுக்கு கொம்பன் இருப்பான். அன்பனுக்கு அன்பனும் இருப்பான். இரண்டுக்கும் பொருத்தம் துருவன் பாலா சார். மிக நுட்பமான சிரிப்போடு உற்று நோக்கும் அந்த முகத்தில்.. எப்போதும் ஆச்சரியங்கள் தான். நல்லவைகள் எங்கிருப்பினும்... தேடிப்பிடித்து பொதுவில் வைக்கும் மார்க்சிய அகம் அது. அவரின் முதல் கவிதை நூல் இந்த "மரணப் படுக்கையில் நெபுலாவின் குழந்தை".

இரண்டு முறை தான் படித்தேன். மூன்று முறை புரிந்தது. எட்டு திக்கும் சமூக சாளரங்கள் தான் இவருக்கு. எந்த சந்தில் இருந்தும் சிறு வெளிச்சம் இவர் கவிதையில் காணக் கிடைக்கும். எல்லாமே சமூக சரக்குகள் தான். சமூகம்.....அது சார்ந்த யோசனை.....எண்ணம்.... அங்கலாய்ப்பு..... பயம்.. அன்பு... செயல்.... எல்லாமே சமூகம் சார்ந்த விளைவுகள் தான். நீண்ட நெடிய மார்க்சிய சிந்தனையில் புடம் போட்டு தன்னை தானாக மாற்றிக் கொண்டவர் என்று தான் நான் புரிந்து கொள்கிறேன். நீண்ட நெடிய சமூக அக்கறை ஒவ்வொரு கவிதையிலும்... கூட ஒரு கவிதை...கூட ஒரு கருத்து சேர்த்து கொண்டிருக்கிறது.

மரணங்கள்...... நினைப்பது போல இறுதியில் வருவது இல்லை. அது எப்போதும் உடன் இருப்பது. ஒரு குழந்தையின் வீறிட்ட அமைதியைப் போல அது நம்மோடே பயணிக்கிறது. மரணத்தை புரிந்து கொண்டவன் தவறுகள் இழைப்பதில்லை.

"தினம் ரெண்டு வேலை குளிச்சு
வெள்ளை மங்காம காரு பங்களானு
ஊருக்குள்ள உலா வந்தவரு தான்
நம்ம கோடீஸ்வர கோவிந்த சாமி

பொசுக்குன்னு மாரடைப்புல செத்தப்புறம்..

மரணம் பற்றிய கவிதை ஒன்று இப்படி ஆரம்பித்து.....

"ஏம்பா

இடுப்புல இருக்கற
அறைஞ்சா கயிறை
மறக்காம அறுத்துடுங்கப்பா"

இப்படி முடிகிறது. என்ன சொல்ல வருகிறார் என்று சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது தானே. வெகு சுலபம் தான் மரணம் மற்றும் அது பற்றிய செய்தி. அத்தனை இலகுவாகத்தான் வாழ்வின் நேர்த்தியும் இங்கிருக்கிறது என்பது தான் கோணல் மானல் செய்தி. கிட்டத்தட்ட எல்லா கவிதைகளும் பேச்சுத்தமிழில்... பக்கத்துக்கு வீ ட்டு செவிகளிலும் நுழையும் படியான மொழி நடை தான். கலை மக்களுக்கானது. இவர் கவிதையும் மக்களுக்காகத்தான். சமீப கால ஊடக வளர்ச்சி... முகநூல்...டிவிட்டர்..... வாட்சப் ஆதிக்கம் பற்றிய சிந்தனைகள் அதிகம் ஆசிரியரை அலைக்கழித்திருக்கிறது.

அதன் தாக்கம் மேற்சொன்ன வஸ்துகளின் குளறுபடிகளை பல கவிதைகளில் மனம் பதைக்க பதிந்திருக்கிறார். மானுட வாழ்வின் நகர்வு.. இந்த வஸ்துகளின் மூலமாக அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்திருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்திருக்கிறார். லைக்ஸ்க்கும் பகிர்தலுக்கும் பின்னூட்டங்களுக்கும் நீரில்லா குளத்தினருகே காலில்லா கொக்கு காத்திருப்பது போல..... நாம் காத்துக் கிடப்பதை பகடியாக சொல்லி செல்கிறார்.

அதே நேரம்

"பருப்பு டப்பாவுக்குள்
பதுக்கி வைத்த
அம்மாவின் பழைய மாடல் பட்டன் கைபேசி"

என்று முடியும் "அம்மாவின் கைப்பேசி" என்று தலைப்பிட்ட கவிதையில்.... அன்பின் காற்றாலைகள் எத்தனை தூரம் நெகிழ்வுத் தன்மையோடு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது என்பதையும் பதிவு செய்கிறார்.

சாதிக்கு எதிரான நிறைய கவிதைகளை காண முடிகிறது. சமகாலத்து காதல் பிரச்சனைகளில் மீண்டும் மீண்டும் ஒரு ஜோடி பிரிக்கப்பட்டுக் கொண்டே அல்லது கொல்லப்பட்டுக் கொண்டே இருப்பதை வேறு வேறு தலைப்புகளில் வேர் அறுக்க பார்க்கிறார் ஆசிரியர். அத்தனை கோபமும்... கொந்தளிப்பும் அவரின் ஆழ்மனதில் இருக்கிறது. அத்தனை பதற்றத்தோடு அந்த கவிதைகள் ரத்த மையில் எழுதப் பட்டிக்கிறது.

"விலக்க எல்லை தாண்டி
கமக்கிறது
சேரிக் குடிலடுப்பு
கருவாட்டு வாசம்"

"எங்களை உள்ள விட மாட்ட... என் கருவாட்டு குழம்பு வாசத்தை என்ன பண்ணுவ...?" என்று கேட்கையில்... எதிர் பக்கம் பதில் கண்டிப்பாக இல்லை. காற்று பொது. காலம் பொது. வாசம் பொது. வாழ்வும் பொது. இங்கே பொதுவில் இருக்கையில் எல்லாம் புது விதியாகி இருந்தது. தனித்து ஒதுங்குகையில் எல்லாம் சதியாகி போனது. அதுவே பிழையாக சாதியாகி போனது.

காதல் இல்லாத கவிதைகள் எப்படி முழுமை பெரும். இவரும் காதலால் கட்டுண்ட நொடிகளை கவிதையாக்கி படிப்பவர் மனதுள் தீபம் ஏற்றுகிறார். மனைவியே காதலியாவதெல்லாம் காதலியே மனைவியாகிய எனக்கு சுலபமாக சுகமெனப் புரிகிறது. ஆனால் பல நேரங்களில் மனைவிக்கு உதவி செய்யாத கவிதைக்காரனாய் அவரும் இருக்கிறார். நானும் இருக்கிறேன். ஆனாலும்.. காதலால் அவர்கள்.. எங்களை தத்தெடுத்துக் கொண்டார்கள் என்பதை உணர்கையில்..... செல்லாம்மாக்களுக்கு எப்போதும் அழு மூஞ்சி இல்லை. அழகு மூஞ்சிதான். இல்லாளுக்கு இல்லாத துதி ஒரு நாளும் உருப்படாது என்பதை புரியும் மனோநிலையை வாய்க்க செய்த கவிதைகளுக்கு நன்றி.

"தோசை கல்லில்
வட்ட வட்டமாய்
காதல் வார்க்கிறாள்" என்ற வரியோடு முடியும் கவிதை....அதன் பிறகும் படிப்பவர்க்கு அவரவர் பசியென நீள்கிறது.

"மனைவிகளுக்கு
முட்ட தோசை தான் போடத் தெரியும்
காதலிகளுக்கு தான்
முத்த தோசை போடத் தெரியும்...."

இந்த கவிதையை எப்போதோ எழுதிய நான் இப்போது

"காதலிகளுக்கு
முட்ட தோசை தான் போடத் தெரியும்
மனைவிகளுக்குதான்
முத்த தோசை போடத் தெரியும்...." என்று மாற்றிக் கொள்கிறேன். மனைவிகள் மேன்மையானவர்கள்.

ஹைடெக் கூடு கட்டிய காகத்தைக் கண்டு அதிர்ந்து நின்று விட்டேன். மிக நிச்சயமான நிதர்சனத்தை இப்படி பொதுவில் போட்டு பகிரங்கமாக அச்சுறுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அச்சம் என்பது வேகமாய் போய்க் கொண்டிருக்கும் தொழில்நுட்ப காலத்துக்கு மிக அவசியமான ஒன்றென தோன்றுகிறது. காகம் கூடு கட்ட இப்போதெல்லாம் எலெக்ட்ரானிக் மிச்ச மீதிகளைத்தான் கவ்விக் கொண்டு நிற்கிறது என்பது பகீர் என்றாலும்.. நிஜம் தான் என்கிறது கவிதை. கூடு தாண்டி சிறகடிக்கும் சிந்தனையை இன்றைய காலத் தேவையெனவே கருதுகிறேன். காக்கா செத்தால் மனுஷனும் சாவான்.... என்பது இயற்பியல் விதி.

"குலசாமி" என்றொரு கவிதையில்.....

நாளைய சோத்துக்கு அல்லல்படும் ஒருவனுக்கும் நாளைய சொத்துக்கு அல்லல்படும் ஒருவனுக்கும் ஒரே குலசாமி என்று முடித்திருப்பார். எத்தனை உண்மை இரு கன்னத்திலும் அறைந்து சிரிக்கிறது. குலசாமி ஒன்று தான்... ஆனால்... வாழ்வின் தரம்... வேறு. சாமிக்கு அடி சறுக்கிய இக்கவிதைக்கே இப்புத்தகத்தை கொண்டாடலாம்.

கடைசி வரி......." அந்த ஊரு கோட்டை முனி" யை தவிர்த்திருக்கலாம். "ஒரே குலசாமி"யிலேயே கவிதை முடிந்து விட்டது என்பது ரசிகனின் பார்வை.

இந்த நூலில் ஆகச்சிறந்த ஒரு கவிதை இருக்கிறது.

"குப்பை மேட்டில்
சரிந்து கிடக்கும்
அந்த தினக்கூலி
தன்னாசி கையில்
இறுக்கமாய்
தன் குழந்தைக்கான தீனி"

எத்தனை உள்ளடக்கம் கொண்ட வரிகள் இவை.

குப்பை மேட்டில் ஏன் சரிந்து கிடக்க வேண்டும். கைக்குள் குடும்பம் இருந்தாலும் கண்களுக்குள் போதை இருக்கிறதை எப்படி விளக்க. முக்குக்கு முக்கு சாராயக்கடையை திறந்து கொண்ட அரசுக்கு வால் முளைத்த தந்திரம் உண்டென்றால்..... பலிகடாக்கள் என்னவோ
தன்னாசிகள்தான். திக்கென்று எங்கோ சரிந்து விட்ட நினைவை சரிந்தே விட்டு விட்டேன். சரிந்து கிடக்கையில் தான் சரியாய் யோசிக்க முடிகிறது. தன்னாசிகள் சரியாய் யோசித்த பிறகு சரியக் கூடாது என்பது தான் கையிலிருக்கும் தீனியின் பிசுபிசுப்பு வாசம் சொல்லும் அப்பாவுக்கு காத்திருக்கும் செய்தி.

பல கவிதைகள் போட்டு தாக்குகின்றன. சில கவிதைகள் நீளம் குறைத்திருக்கலாம். சில கவிதைகள் முடிந்த பின்னும் தொடர்வதை தவிர்த்திருக்கலாம். அட்டைப் படம் "ஓவியர் ஜீவா" வரைந்திருக்கிறார். ஓவியத்தில் அவரின் அனுபவத்தைக் கரைத்திருக்கிறார்.

மிக நுட்பமான உள்ளடக்கம் கொண்ட அட்டைப்படத்துக்கு ஆயிரம் லைக்ஸ். தலைப்புக்கு ஆகச் சிறந்த பின்னூட்டம். மொத்தத்தில் இந்த "மரணப் படுக்கையில் நெபுலாவின் குழந்தை " கவிதை நூலை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நூலை படிக்காதோர் வேறு எந்த நூலை படிப்பார்.

மார்க்சிய...... கம்யூனிச சிந்தனைகள் விரவிக் கிடக்கும் பக்கங்களில் சிவப்பு சிந்தனைகளின் கொடி சமூக விடுதலை வேண்டி கம்பீரமாக பறக்கிறது.

- கவிஜி

நூல் : மரணப் படுக்கையில் நெபுலாவின் குழந்தை
ஆசிரியர் : துருவன் பாலா
விலை : ரூ.100/-
தொடர்புக்கு : 9843122403

Pin It