இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாவது கட்டமாகக் குறிப்பிடப்படும் காலம் 1919 முதல் 1922 –ஐ மக்களின் பார்வையில் விவரிக்கிறார் அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ரஜனி பாமி தத். இவர் வாழ்ந்த காலம் 1896-1974.
மன்னர்களைப் பாடி பரிசில் பெற்ற புலவர்கள், மன்னர்களின் நிலை பற்றி எழுதப்பட்ட வரலாறுகள் மக்களை மறந்த எழுத்தாளர்கள் என்ற நிலையில் இருந்த பாரத நாட்டில், விடுதலைப் போராட்ட களத்தினை இந்நாட்டு மக்களின் பார்வையில் எடுத்துரைக்கும் புத்தகம் ‘இன்றைய இந்தியா” என்றால் அது மிகையல்ல.
அன்றைய விடுதலைப் போராட்ட வரலாற்றை ரஜனி பாமி தத் இன்றைய இந்தியா என்ற புத்தகத்தில் எடுத்துக் கூறிய விதத்தையும், இன்று நம் டிஜிட்டல் இந்தியாவில் நடைபெறும் மக்கள் விரோத போக்குகளையும் ஒரு ஒப்பீட்டோடு பார்க்கலாம்.
மக்கள் இயக்கம் இந்தியாவில் தோன்ற முதல் உலகப் போரும் (1914-1919), 1917-ல் நடந்த உலகப் புரட்சிகளும் முக்கிய காரணமாக அமைந்தன.
அன்று 1905-ல் நாடெங்கும் வெறுப்புணர்ச்சியை மூட்டிய வங்கப் பிரிவினையை எதிர்த்து, அயல்நாட்டுப் பொருட்களை வாங்காமல் இருப்பதென்று இந்திய தேசிய இயக்கம் (காங்கிரஸ்) அறிவித்தது. சுதேசி இயக்கம் உருவானது. 1906-ல் சுதேசி இந்தியாவின் மக்கள் தொண்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களால் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி அக்டோபர் 16-ல் பதிவு செய்யப்பட்டது.
தற்போது இன்றும் கூட ஆங்கிலேய மனோபாவம் கொண்ட ஆட்சியாளர்கள் மக்களுக்கிடையே வெறுப்புணர்வை வளர்த்து தங்களின் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தி வருகின்றனர். 100 சதவீதம் அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டை கொண்டு வரத் துடிக்கின்றனர். சுதேசி வீரன் சிதம்பரனார் பிறந்த நாட்டிற்கு இந்த அவலநிலை வருவதற்கு காரணம் தேசபக்தியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் ஆட்சியே.
அன்று 1905-ல் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட விழிப்பிற்குப்பின், அதைவிட அதிகமாக 1917-க்குப் பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தையே தகர்க்கும் அளவுக்கு மாபெரும் மக்கள் இயக்கம் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்துக்கு தயார் ஆனது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இந்திய மக்கள் தொகையில் ஒரு சில பகுதியினருக்கு இடையில் மட்டும் பரவியிருந்த அரசியல் விழிப்புணர்வு பொது மக்களுக்கிடையில் பரவிய மாறுதல் 1917-ஐ அடுத்த ஆண்டுகளில் நிகழ்ந்தது. முதல் உலகப்போரில் வல்லரசு நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதைக் கண்ட கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயத்தில் போராட்ட உணர்வு பிறந்தது.
இன்று மெரினாப் போராட்டம் (ஜல்லிக்கட்டு புரட்சி) நெடுவாசல் போராட்டம், மீனவர்கள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம் போன்றவை பொதுமக்களின் நம்பிக்கையினால் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தையும் காக்க நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று முதலாம் உலகப் போர்க் காலத்தில், பிரிட்டிஸாருக்கு ஆதரவாக படைதிரட்டி உதவி செய்வதன் வாயிலாக இந்திய சுயாட்சியின் கதவு மிக விரைவாய் திறக்கும் என இந்திய தேசிய இயக்கத்தினர் நம்பினர்.
இன்று தன் நாட்டு மக்களின் நலனுக்கு செலவு செய்வதை விட அதிகமாக அடுத்த நாடுகளை உளவு பார்க்க தனது உளவு நிறுவனத்துக்கு செலவு செய்யும் அமெரிக்காவை பிரதான நட்பு நாடாக இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளும் தருணமிது.
அன்று உலகப்போர்ச்சூழலில் இந்திய மக்களின் புரட்சி வளர்வதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தவை:
1.போர்த் தேவைக்காக நலிவுற்ற இந்திய மக்களிடமிருந்து கட்டாயமாக வசூலிக்கப்பட்ட நிதிக் காணிக்கை.
- விலைவாசி ஏற்றம்.
3.பொறுப்பற்ற அநியாய லாப ஆசை.
4.அடக்குமுறைச் சட்டங்கள்.
இன்று இந்திய வங்கிகள் குறைந்த பண இருப்பு வைத்தமைக்கு தண்டனையாக சிறிய ஊர் முதல் மாநகர் வரையுள்ள வங்கிக்கிளைகள் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை தண்டனைக் கட்டணமாக பிடித்தம் செய்வது எந்த மாதிரியான தேசபக்தி அரசின் நடவடிக்கை என்பது தெரியவில்லை.
கேஸ் சிலிண்டர் விலை,பெட்ரோல் விலை பற்றி நான் இங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அன்று துருக்கிக்கு எதிரான யுத்தத்தினால் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியினால் இசுலாமிய சகோதரர்களின் உணர்ச்சிப் பெருக்கு தீவிரமாய் தூண்டி விடப்பட்டிருந்த காலம். 1916-ல் லக்னோ உடன்பாட்டின்படி, காங்கிரஸ் -முஸ்லீம் லீக் திட்டத்தில் முக்கியமானதாக வைசிராயின் (அக்காலத்திய கவர்னர்) நிர்வாகக் குழுவில் சரிபாதி நபர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
இன்று மக்கள் அரசை விடுத்து, மாநிலங்களில் ஆளுநர் மூலம் அதிகாரம் செலுத்துவது (டெல்லி, புதுச்சேரி தற்போது தமிழ்நாடு) அகம்பாவ மனப்போக்கே அன்றி வேறென்ன தேசபக்தியா?
அன்று 1917-ல் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், ஆங்கிலேய அரசுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் தேசிய சுய நிர்ணய உரிமை வேண்டும் என்ற உணர்வு இந்திய மக்களிடையே எழுச்சி பெற்றது. அத்தருணத்தில் அவசர கோலத்தில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதாவது ஆங்கிலேய ஆட்சியின் நோக்கமானது இந்தியாவில் பொறுப்புள்ள அரசாங்கம் அமைத்து தன்னாட்சி என்ற சுயாட்சியைக் கொண்டு வருவதே என தெரிவித்தது அந்த அறிக்கை. அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அதற்கு என்ன செய்யவேண்டும் என ஆலோசித்து ஓராண்டுக்குப்பின்னரே, ‘இந்திய மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை” (இந்தியப் பிரதிநிதிகளுக்கு இடம் அளித்தல்) என்ற பெயரில் 1919-ல் மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
இன்று நவம்பர் 2016-ல் பணமதிப்பு நீக்கம் என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலைப்பாதித்த இரவு நேர அறிவிப்பு, ஏழை மக்களை பாதுகாக்கும் எந்த விதமான முன் தயாரிப்பும் இன்றி வெளிவந்ததும் ஆங்கிலேய மனோபாவத்தின் வெளிப்பாடே. தேவையான ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை. அனைத்து இந்திய மக்களைப் போலவே நானும் எனது நண்பரும் நேரடியாக இந்த அறிவிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள். 2000 ரூபாய்க்காக ஏடிஎம் வாசலில் நின்ற நேரத்தில் எனது நண்பருக்கு தனது தாயின் சிகிச்சைக்காக 1.25 இலட்சம் ரூபாய் மொத்தமாக தேவைப்பட்ட தருணமது. அவரின் மனநிலையை இப்போதும் கூட என்னால் கற்பனையில் கூட காண தைரியமில்லை.
அன்று 1919 டிசம்பரில் சுயநிர்ணயக் கொள்கைப்படி, முழுப்பொறுப்புள்ள அரசாங்கம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ், ஆங்கிலேய அரசை வலியுறுத்தியது. இந்நிலையில் அடக்கு முறையின் சின்னங்களாக கொண்டு வரப்பட்ட ‘ரவுலட் சட்டம்” (அதாவது வழக்கு விசாரணையின்றி சிறைபடுத்தும் சட்டம்) அமிர்தசரஸ் படுகொலை, பஞ்சாபில் இராணுவச் சட்டம் போன்ற அடக்குமுறைகளை எதிர்த்து 1920-ல் ஆங்கிலேய அரசுக்கு ஒத்துழைக்காதிருத்தல் என்ற ‘ஒத்துழையாமை இயக்கம்” துவங்கியது.
இந்நிலையில் நம் தமிழ்நாட்டில் 1888-ல் திருமந்திர நகர் எனப்படும் தூத்துக்குடியில் கடற்கரைச்சாலையில் ‘கோரல் மில்” என்ற பெயரில் இயங்கி வந்த ஆலையில் 1916 ஆம் ஆண்டில் 1800 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அன்றை நிலையில் தொழிற்சங்கம் எதுவும் கிடையாது. 1908 பிப்ரவரி 27-ல் கோரல் மில் வேலைநிறுத்தம் குறித்து, சுதேசமித்திரன் மற்றும் இந்து நாளேடுகளில் செய்திகள் வெளியாயின. 1922-ல் கோவையில் நடந்த ஸ்டேன்லி ஆலை வேலைநிறுத்தம் வ.உ.சிதம்பரனார் அவர்களின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றது என குற்றம்சாட்டப்பட்டு ஆங்கிலேய அரசு அறிக்கை வெளியிட்டது. 1921-ல் மலபார் இசுலாமிய சகோதரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் வ.உ.சிதம்பரனார். மிக முக்கியமாக 1920-ல் காங்கிரசின் சென்னை மாநில மாநாட்டில் மாநிலச்சட்டமன்றத்தில் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என தொழிலாளர்களின் தொண்டன் வ.உ.சிதம்பரனார் உரையாற்றினார். உழைக்கும் வர்க்கம் நாட்டை ஆள தகுதி படைத்தது என்பதை உரக்க பேசியவர் வ.உ.சிதம்பரனார். இச்செய்தி 28.6.1920-ல் இந்து நாளிதழில் வெளியானது.
இதற்கு முன்பாக இந்திய மக்கள் அறிந்திராத அளவில் 1918-ல் ‘பம்பாய் ஆலை வேலைநிறுத்தம்” ஆரம்பித்து 1919 ஜனவரியில் 1,25,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மகாத்மா தனது தென்ஆப்பிரிக்க அனுபவத்தைப் பயன்படுத்தி, வழக்கு விசாரணையின்றி பொதுமக்களை சிறையிலடைக்கும் ரவுலட் சட்டத்தை எதிர்த்து, ‘அஹிம்சை” எனும் ஆயுதப் போராட்டத்தை துவங்கினார்.
சீர்திருத்தம் என்ற பெயரில் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகள், எங்கும் பரவலான குமுறல்களை ஏற்படுத்தியிருந்த சமயம் அது.
இன்று பணமதிப்பு நீக்கம், ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கும் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்ததும், காலியாக உள்ள அரசுப்பணியிடங்களை நிரப்பாமல் அப்பணியிடங்களை நீக்குவதும், ஆதிக்க பாசிச மனோபாவம் என்று சொல்லாமல் தேசபக்தி என்றா புகழ முடியும்.
அன்று அஹிம்சை போரின் துவக்கமாக மகாத்மா சத்தியாகிரக குழுவை அமைத்தார். அக்குழுவின் மூலம் ‘அடையாள வேலைநிறுத்தம்” அதாவது எல்லா வேலைகளையும் ஒருநாள் நிறுத்தி வைத்தல் என்ற போராட்டத்தை 1919 ஏப்ரல் 6-ல் மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. மக்களின் பேராதரவைப் பெற்ற இந்த வேலைநிறுத்தம் ஆங்கிலேய அரசின் அடக்குமுறையைப் பொருட்படுத்தாமல், இந்து - முஸ்லீம் சகோதரர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வண்ணம் நடைபெற்ற வேலைநிறுத்தம் அந்நியர்களின் அரசாங்கத்தை அச்சம் கொள்ள செய்தது. ’முன் எந்தக் காலத்திலும் இல்லாத அளவில் இந்துக்களும், இசுலாமிய சகோதரர்களும் சகோதர உறவு பாராட்டியதுதான், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தது.
தேசிய இயக்கத்தினரின் நீண்ட கால முயற்சியின் காரணமாக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் சகோதர உறவு பாராட்டுகிற புதுமையான காட்சிகள் நிகழ்ந்தன. இந்துக்கள் வெளிப்படையாக இசுலாமிய சகோதரர்களின் கையிலிருந்து தண்ணீர் வாங்கி குடித்தனர். இந்து-முஸ்லீம் ஒற்றுமையே ஊர்வலங்களிலும், கோஷத்திலும் கொள்கையாக ஆங்கிலேய செவிடர்களின் காதில் ஓங்கி ஒலிக்க செய்தது. மசூதி மேடையிலிருந்து உரையாற்ற இந்து தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய ஒரு சூழலை தேசிய இயக்கம் முழுமையாகப் பயன்படுத்த தவறியது. இந்திய மக்களின் உழைப்பு வீணானது.
இந்நிலையில் புதிய அடக்குமுறைகள் தொடர்ந்தன. அமிர்தசரசில் (பஞ்சாப் மாகாணம்) வெளியேற வழியின்றி சுற்றிலும் அடைப்பாக இருந்த இடத்தில் கூடியிருந்த பொதுமக்களின் மீது ஜெனரல் டயர் என்னும் கயவன் துப்பாக்கியால் 1600 முறை சுட்டான். அரசாங்கத் தகவலின்படி, 379 பேர் இறந்தனர். 1200 பேர் கவனிப்பாரற்றுக்காயப்பட்டு கிடந்தனர். போராட்ட வழிமுறையை பின்பற்ற துவங்கியிருந்த இந்திய மக்களை அச்சுறுத்த வேண்டும் என்பதே அக்கயவனின் நோக்கம்.
இன்று நம் பாடப்புத்தகத்தில் சர் என்றும் பிரபு என்றும் மதிப்பு வழங்கி ஆங்கிலேய காட்டுமிராண்டிகளை அழைப்பது நம் நாகரித்தின் வெளிப்பாடு. ஆனால் இன்றளவும் நம் தட்பவெப்பத்திற்கு ஒவ்வாத நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்பு கோட் அணிவது போன்ற பலவிஷயங்களை கடைப்பிடித்து வருகிறோம்.
அன்று இந்நிலையில் வேலைநிறுத்தம் துவங்கிய ஒரே வாரத்திற்குள் போராட்டம் உச்ச கட்டத்தை அடையும் தருவாயில் போராட்டம் நிறுத்தப்பட்டது. இதற்கு சில வன்முறைச் செயல்கள் காரணம் என சத்தியாகிரக குழு அறிவித்தது. இருப்பினும் 1920-ன் துவக்க ஆறுமாதங்கள் பதினைந்து லட்சம் தொழிலாளர்கள் பங்குகொண்ட 200-க்கும் குறையாத வேலை நிறுத்தங்கள் உழைக்கும் மக்களிடம் இந்தியாவில் விடுதலைப்புரட்சி அலையை பரவச்செய்தது.
1920- செப்டம்பரில் லாலா லஜபதிராய் உரையில், ‘ நாம் ஒரு புரட்சிகரமான காலத்தை கடக்கிறோம் என்னும் உண்மையை கண்மூடித்தனமாய் மறுப்பதால் பயனில்லை. சுபாவத்தாலும் மரபாலும் நாம் புரட்சிகளை விரும்பாதவர்கள். வழிவழியாகவே நாம் மெதுவாகச்செல்லும் மக்கள். ஆனால் நாம் அடியெடுத்து வைக்க தீர்மானித்தால் விரைவாகவும், நீளமாகவும் அடியெடுத்து வைப்போம். வாழ்க்கையின் பாதையில் எந்த உயிருள்ள பொருளும் முற்றிலும் தப்பிவிட முடியாது என முழக்கமிட்டார்”.
இன்று இக்காலத்திலும் டிஜிட்டல் இந்தியாவின் மக்களாகிய நாம் நம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போதும், இயற்கை வளங்கள் சூறையாடப்படும்போதும், சக மனிதனுக்கு துன்பம்நேரும் போதும் கூட, ஒரு சிறிய எதிர்ப்பு அல்லது போராட்டம் கூட செய்வதற்கு யோசிப்பது வழக்கமாகவிட்ட சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். போராட்டம் செய்தாலே தேசத்துரோகி என்று சொல்வோரை தேசபக்தர்கள் என்றா புகழ முடியும்.
அன்று 1921-ல் ஏற்பட்ட தேசிய இயக்க வளர்ச்சியின் அடையாளங்களாக அஸ்ஸாம் - வங்காள ரயில்வே வேலைநிறுத்தம், மிதுனாபூர் வரி கொடாப்போராட்டம் நம் அண்டை மாநிலம் கேரளாவில் மலபார் இசுலாமியர்களின் போராட்டம் ஆகியவை அமைந்தன. இந்நிலையில் தேசிய இயக்கத்தின் தொண்டர்படையில், மாணவர்களும், ஆலைத்தொழிலாளர்களும் பெருமளவில் அணி சேர்ந்தனர். ‘ஆங்கிலேய அரசு எதிர்ப்பு உணர்ச்சி” இக்கால வாட்ஸ் அப் மெசேஜ் போல், நகரங்களிலிருந்து லட்சக்கணக்கான உழவர்களுக்கு இடையில் வேகமாகப்பரவியது.
ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளும், வானவூர்திகளும், கொதி உலைபோல் கொந்தளிக்கும் 30 கோடி இந்திய மக்களை ஏதும் செய்ய இயலவில்லை.
இதன் முக்கிய தருணத்தில் இந்திய தேசிய இயக்கம் பின்வாங்கும் நிலைக்குத்தள்ளப்படக்காரணம், வரிகொடாமை இயக்கத்திற்கு தேசிய இயக்கத்தில் இருந்த ஜமீன்தாரர்களும், நிலப்பிரபுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததே காரணமாக அமைந்தது.
1921-ல் இந்திய சுதந்திரப்போரில் முக்கியப்பங்காற்றிய இளைய கட்சியான கம்யூனிஸ்ட்டுகளின் அறிக்கையில் இந்தியாவின் அஸ்திவாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் புரட்சிக்கு காங்கிரஸ் தலைமை வகித்து நடத்த விரும்பினால், வெறும் ஆர்ப்பாட்டங்களிலும் தற்காலிகமான கொந்தளிப்பான உற்சாகத்திலும் இந்திய தேசிய இயக்கமான காங்கிரஸ் நம்பிக்கை வைக்க கூடாது. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை உடனடியாகக்கோரும்படி செய்வதும், விவசாய சபைகள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தீட்டிக்கொள்ளவும், நிலமற்ற ஏழைகள் ஜமீன்தார்களின் பிடியிலிருந்து விடுபடவும் ஆவண செய்தால் மட்டுமே, எந்தத்தடையாலும், காங்கிரஸ் தேங்காத காலம் வரும் எனவும், நம் பாரத நாட்டின் நலன்களுக்காக போராடும் மக்கள் அனைவருடைய யாராலும் தடுக்க இயலாத பலம் அதற்கு கிட்டும் என புரட்சி முழக்கம் வெளியிடப்பட்டது.
இன்று கம்யூனிஸ்ட் -களின் மாபெரும் போராட்டம் மற்றும் விடுதலைப் போரின் முக்கிய தருணங்கள் இன்றளவும் நம் பாடப்புத்தகத்தில் இடம்பெறாமலும், மக்களை சென்றடைய விடாமலும் பார்த்துக் கொண்டவர்கள் நம் மதிப்பிற்குரிய தலைவர்கள்தான். நாட்டு விடுதலைக்காக தன் சொத்தை விட்டு போராடிய வ.உ.சி பிறந்த நாட்டில் உலக வங்கியின் அறிவுரையின்படி, அந்நிய முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுவது அத்துமீறலின் உச்சம்.
இன்றும் கூட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொழிலாளர் போராட்டத்தின் மூலம் அரசியல் லாபம் பார்ப்பதில்லை. உரிமைகளைப்பெற்று தந்துவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.
அன்று அனைவரும் வரிகொடாமை இயக்கம் துவங்க காத்திருந்த நிலையில் ஆந்திரமாநிலம் குண்டூரில் தேசிய இயக்கத்தின் அனுமதியின்றி வரிமறுப்பு போராட்டம் துவங்கியது.
இந்நிலையில் சௌரி சௌராவில் நிகழ்ந்த வன்முறையின் காரணமாகவும் காங்கிரசில் ஆதிக்கம் செலுத்திய ஜமீன்தார்களுக்கு நெருக்கமான தலைவர்களால் வரிகொடாமை இயக்கம் நிறுத்தப்பட்டது. மக்கள் இயக்கம் வரிமறுப்பு போராட்டத்தில் தோல்வி அடையவில்லை. திட்டமிட்டு சிதைக்கப்பட்டது.
1922-ல் வரிமறுப்பு போராட்டம் முழுமையடைந்திருந்தால் 30 கோடி மக்களின் நலன்களும் நலிவுற்ற ஏழை விவசாயிகளும் பாதுகாக்கப்பட்டிருப்பர். ஜமீன்தாரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களிடமிருந்தும் நாட்டு மக்கள் விடுதலை பெற்றிருப்பார்கள்.
இன்று இந்தியாவில் பெரும்பாலும் சாதிய அடக்குமுறைக்கு வித்தாக அமைந்தது ஜமீன்தாரி மற்றும் நிலப்பிரபுத்துவ முறையே. அன்று வரிமறுப்பு போராட்டம் வென்றிருந்தால் விவசாயிகளும் இந்நாட்டின் மன்னர்களாக வாழ்ந்திருப்பர்.
சாதிபாகுபாடுகளற்ற சமத்துவ சமுதாயம் (எல்லோருக்கும் உழவு செய்ய சொந்தமாக நிலம் இருக்கும்பட்சத்தில் ) தமிழன், இந்தியன் என்ற அடையாளத்தோடு வீறுநடைபோட்டிருக்கும்.
2019-லும் கூட விடுதலை பெற்று 70 ஆண்டுக்குப்பின்னரும் கூட விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக, திட்டம் தீட்டப்படுவதாக நமது நாட்டின் நிதியமைச்சர் கூறுவதையும், இந்த வருடத்தின் பட்ஜெட்டையும் படித்திருந்தால், நிலம் எங்கள் உரிமை நடைபயணத்தை தினசரி பத்திரிக்கைகள் புறக்கணித்து பொதுமக்களின் வாழ்வியலை வெளிக்கொணர மறுக்கும் நிலையை ரஜனி பாமி தத் எனும் சமதர்மவாதி, மக்கள் எழுத்தாளர் கேட்டிருந்தால் அதனை எப்படி எழுதியிருப்பார், யோசித்துப்பாருங்கள். அவரது எழுத்துக்களை மனதால் வாசித்துப் பாருங்கள் என் சக மனிதர்களே.
இன்றைய இந்தியாவை தன் எழுத்துக்களால் கட்டமைக்க முயன்ற மக்கள் பொறியாளர் ரஜனி பாமி தத்.
- சுயம்புலிங்கம் பாலகணேஷ்