எல்லா நூற்றாண்டுகளிலும் இலக்கிய உலகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் கவிதைகள். இந்தப் பூமி விளிம்பையே தொட்டு விடும் அளவிற்கு நீளமானவை; இந்தப் பூமிப் பந்தைப் புரட்டிவிடக்கூடிய நெம்புகோல் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கவிதைகள் காலந்தோறும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. படைப்பாளன் என்பவன் அந்தரத்தில் இருப்பது இல்லை. அவன் சமூகத்தில் ஒட்டி உறவாடிக் கலந்து பழகி ஓர் அங்கமாகவே இருப்பதால் படைப்புகளில் சமுதாயச் சிந்தனை பிரதிபலித்துவிடுவதைத் தடுப்பதற்கில்லை.

ameer abbas bookகாலங்காலமாகச் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நீரோ மன்னனின் செயல்பாடுகளில் ஒன்று, அவன் ரோம் நகரம் பறி எரிந்த போது பிடில் வாசித்த விவகாரம். அவன் வாசித்தானா இல்லையா? நகநரம் தீக்கு இரையாகும்போது எப்படிக் கலையை வளர்க்க முடியும் என்ற கேள்விகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு நீரோ பிடில் வாசித்ததற்காக நன்றி கூறும் படைப்பு ‘இசைக்கும் நீரோக்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு. இன்னும் தீய பாதிப்பை விளைவிக்காமல் இருக்க நீரோக்கள் கலையை மட்டும் வளர்க்கட்டும் கொலைகள் அழியும் என்கிறார் கவிஞர் அமீர் அப்பாஸ். திரைப்பட இயக்குநராக முகம் காட்டி வரும் கவிஞருக்குக் கவிதை வசப்பட்டிருக்கிறது.

கடந்த கால சொல்லான ‘நேற்று’ என்ற சொல் காட்டுகின்ற உண்மை எத்தனை வலிகளைக் கொண்டு வருகிறது என்பதை முதுமையோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் புரியும். காலம் பெரிய பெரிய பாடங்களை மிகச் சாதாரணமாகச் சொலிவிடுப் போகிறது. சொற்களினால் பல மாயங்கள் நிகழ்க்கூடும் என்பது கவிஞரின் கருத்து. “இன்று போய் ஓருக்கு நாளை வா” என்ற சொற்களினால் ஒருவன் நடைபிணமானான் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். உறவை வளர்ப்பதற்கும், சமுதாய மகிழ்ச்சிக்கும், வாழ்க்கை மீதான நம்பிக்கை வளரவும், போரை நிறுத்தவும் வார்த்தைகள் பாலமாக அமைகின்றன. அதுவே எதிர்மறையாகக் கையாளப்படுமானால்,

“சொற்கள்

அரூப வடிவிலான

ஆயுதங்கள்,’’

என்று எல்லாம் முடிது விடவும் வாரத்தைகளே காரணமாகின்றன என்று உரக்கச் சொல்கிறது கவிதை.

பொதுவாக ஒரு படைப்பாளிக்குத் தான் வாழும் சமுதாயம் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்து உகொண்டே இருக்கும். குறைந்தபட்சம் இறுதி ஊர்வலத்தின் முடிவிலாவது சமநிலையைச் சந்தித்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு மயானக் கரையைப் பேச வைத்திருக்கிறார் கவிஞர். ஆனால் என்ன செய்வது? ஒவ்வொரு சமூகத்தாருக்கும் தனித்தனி மயானம் இருக்கிற எதார்த்தத்தை எதைச் சொல்லி மாற முடியும்! ஆரம்ப காலங்களில் நமக்குத் தமிழ்ச் சமுதாயம் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது மனிதன் புதைக்கப்பட்ட இடங்களே ஆராய்ச்சிக்குக் கிடைத்ததால் என்னவோ மயானக் கரையைப் பண்பாட்டின் தாய்மடி என்று கவிதை பதிவு செய்துள்ளது.

நகரங்களில் எல்லா சௌகரியங்களும் சாத்தியப்படுகின்றன. வாகன வசதி, உணவுச்சாலை, பொழுது போக்கு அம்சம் என்று அனைதும் நிறைந்திருக்கின்றன. பெரும்பானைமையான கிராம மக்களுக்கு எப்படியாவது நகரத்திற்குக் குடிபெயர்ந்துவிட வேண்டும் என்ற வாழ்நாள் இலட்சியத்தை ‘நகரவாசி’ என்ற கவிதை பொடிப்பொடியாக்கிவிடுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து போன ஒருவருக்கு சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைக்க வழியில்லாததால் உறவுகள் இருந்தும் அனாதையாகக் கிடக்கிறது பிணம் என்கிறார் கவிஞர். சகலமும் மாநகரத்தில் கிடைக்கிறது, ஆனால் உண்மையான அன்பிற்கு மட்டும் நிலவும் தண்ணீர் பஞ்சம் போல என்றுமே பஞ்சம்தானாம்.

பிறந்த பெண் தந்தைக்கு அடிமை பின் கணவனுக்கு அடிமை அதன்பின் தன் மகனுக்கு அடிமை என்ற சாத்திரத்தைக் கிழித்துப் போட்டு ‘மேன்மேட்’ என்பதை யார்டிஃபிசியல்’ என்றும் ‘ஒர்க்கிங்க் மதர்’ என்பது ‘ஒர்க்கிங் பேரண்ட்’ என்றும் சமத்துவம் பாராட்டும் காலத்தில் மது ஒருவனை எப்படியெல்லாமோ ஆட்டிப் படைக்கிறது. பெண்களின் தாலியையே பறித்து விடும் கணவனுக்கு மனைவியிடத்திலும், குடும்பத்திலும், சமூகத்திலும் என்ன மரியாதை இருக்கு முடியும்? அவன் ஓர் ஆண்மகன்தானா என்ற கேள்வியை எழுப்புகிறது கவிதை. மேலும் குடியைக் கெடுக்கும் குடியைப் பூவையர் குடிக்க நேர்ந்தால் ஆண்கள் மது அருந்துவதை ஏற்றுக்கொள்ளும் இதே சமுதாயம் மகளிர் குடிக்கும் போது,

“மதுக்குடுவையில்

பனிக்கட்டியாய்க் கரைகின்றன

மதங்களும் போதனைகளும்,’’

என்று சகதியில் கல்லெறிவது போல் எறிந்து விட்டு நம்மை ஆழச் சிந்திக்க வைக்கிறார் அமீர் அப்பாஸ். இதனால் பெண்கள் மது அருந்துவதற்குப் பச்சைக் கொடி காட்டுகிறார் என்று பொருள்ளல்ல. எந்தப் பாலினமாக இருந்தாலும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது என்பேத கவிஞரின் விழைவு.

படைப்பாளி சுதந்திரமானவன்; அவன் எதற்கும் எப்போதும் கட்டுப்பட்டவன் அல்லன். அறிஞர்கள் சிலர் அடிமை வாழ்வு வாழும் இக்கட்டிற்குள் மாட்டிக் கொள்ளும்போது அவர்களைப் ‘பள்ளத்தாக்குகளுக்குக் கீழேயும் சில சிகரங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்’ என்ற படிமத்தைக் காட்டும் கவிதை ‘உச்’ கொட்ட வைக்கிறது. சிந்தனை மலர்வதற்கு விடுதலை உணர்வு மிகவும் வேண்டற்பாலது. அதனால் தான் ‘சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்?’ என்று படைப்பாளனால் கேள்வி எழுப்ப முடிகிறது.

நீதிமன்றங்கள் நிதிமன்றங்களாகிவிட்ட காரணத்தினால் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மகாத்மாவின் கொள்கை மீறப்படுகிறது. கற்பனைகள் சாட்சிகளானால் திருடனுக்கு வீட்டை ஒப்படைக்க வேண்டும் தீர்ப்பு சொல்லப்படும் என்று எச்சரிக்கும் கவிஞர் காந்தியின் தேசம் கோட்சேக்களின் கொள்கை வழி நடப்பதாகவும் ஆதங்கப்படுகிறார்.

“நீரோக்கள்

இசைப்பதை மறந்து

தீர்ப்பு வாசிக்கிறார்கள்

தேசம் எரிகிறது,’’

என்ற வருத்தத்தைக் கண்ணீரோடு பதிவு செய்கிறார். ‘குரங்கு கையில் பூமாலை’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தும் நமக்குக் கவிதையின் ஆழம் புரியாமலா போய்விடும்!

புரட்சிக்கவி பாரதிதாசன் நட்சத்திரங்களை வானத்தின் கொப்புளங்கள் என்று பாடியிருப்பார். உழைக்கும் மக்கள் முதலாளி வர்க்கத்தினரால் கொடுமைக்கு ஆளாகும் போது பகலெல்லாம் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வானம் விண்மீன் கொப்புளங்களாகி விட்டன என்று வருந்துவார். இங்கு இரவைத் தின்று செரிமானம் ஆகாமல் காற்றில் தள்ளாடுகின்றன நட்சத்திரங்கள் என்று கற்பனை செய்திருப்பது வேடிக்கையாகவே தோன்றுகிறது.

வாழ்க்கையை மலர்க்காடு என்று வர்ணிப்பவர்கள் உண்டு; வாழ்க்கையைத் தொலைத்துக் கட்டிவிடவேண்டும் என்று வாதிடுவோர் உண்டு. ஆனால் வாழ்க்கையை இசையாகப் பார்க்கும் அத்தனை பேரிடமும் கைகுலுக்கிக் கொள்கிறது கவிதை. வாழ்க்கை என்பது அனைத்தும் கலந்த இனிய பொழுது. ஒற்றையாய்த் தனித்து வாழ்வதில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட முடியும்? எங்கோ காட்டில் பிறக்கும் மூங்கிலில் இருந்து செய்யப்படும் புல்லாங்குழலில் காற்று நுழைந்து வெளிவருவது தானே இசையாகப் பரிமளிக்கிறது. காற்று தனியாகவும், புல்லாங்குழல் தனியாகவும் இருக்கும்வரை இசைக்குச் சாத்தியமில்லை. இதை வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து வாழ்க்கையை ரசித்துக் கொண்டாடலாம்!

முனைவர் சி.ஆர்.மஞ்சுளா

Pin It