01. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவமெடுத்து சில வருடங்களிலேயே எனது தந்தை மிகக் குரூரமாகக் கொல்லப்பட்டார். எனக்குப் புத்தி தெரிந்து சூழ நடப்பவைகள் குறித்து நான் விளங்கிக் கொண்டிருந்த வேளை ஆயுத யுத்தம் உச்சகட்டமடைந்திருந்தது. ஆளையாள் கொல்வதும் மரணச் செய்திகளும் படுகொலைச் செய்திகளும், வெட்டி அரியப்பட்ட பிரேதங்களும் இரத்தமும் சதையுமாக தினமும் செய்திகள் வந்துது கொண்டிருந்த காலம். நான் சிந்திக்கவும் செயற்படவும் சமுகக் களத்தில் கால் பதித்த போது யுத்தபூமி என்ற பெயர்தான் தெரியும். ஆளையாள் சந்தேகத்தோடும் வெறுப்போடும் அச்சத்தோடும் பார்த்துக் கொள்ளும் சூழல். புன்னகைக்குப் பஞ்சமாயிருந்த காலம் அத்துடன் போலியான புன்னகை மலிந்திருந்த காலம்.  நான் திருமணம் செய்தவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆயுத விடுதலைப்போர் தோற்றுப் போயிருந்தது. எனக்கு மகன் பிறந்த போது போரட்டத்தில் ஈடுபட்டவர்களின் சோகக் கதைகள் மனதை நிரப்பிக் கொண்டிருந்தன. எனது மகன் பேசத் தொடங்கியிருக்கின்றான் இப்போது இன சௌஜன்யம் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு, இருப்பை ஏற்றல் அங்கீகரித்தல் பரஸ்பரம் துணையாக இருக்க முயற்சித்தல் என்று சிந்திக்கவும் செயற்படலும் முனையும் காலம். எனது மகன் தன்னைச் சூழ நடப்பவற்றைப் புரிந்து கொள்ளும் போது ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்த சூழலையொத்த புரிதலை  நாம் ஓரளவுக்கு உயிர்ப்பித்திருக்கலாம்,அவன் செயற்படத் தொடங்கும் போது வேற்றுமைகள் இல்லாத மனிதம் பற்றிப் பேசுகின்ற நிலையும் தோன்றியிருக்கலாம். அல்லது இன்னுமொரு போராட்டக்களத்துக்கு முகங்கொடுக்க அவன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கலாம்.

காலந்தான் எத்தனை வேகமாக மாற்றங்களை விதைத்துவிட்டபடி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஏனெனில் எனது தந்தையைக் கொன்ற விடுதலைக் கோசம் போட்ட அதே துப்பாக்கியைத் தூக்கி அதே விடுதலைக்காக களமாடிய ஒருவரின் சிறுகதைகள் குறித்து இப்போது நான் எழுதுகின்றேன். அத்துடன் இன்னுமோர் ஆச்சரியம் பாருங்கள் அதே தந்தையின் ஞாபகங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு பதிப்பகத்தால் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டுக்கு ஒத்தாசை நல்கவும் படுகின்றது.

02.யுத்தகாலக் கதைகள் எப்போதும் கவனயீர்பைப் பெற்றவையே. ஏனெனில் அவற்றில் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் அத்தகையவை. அதிலும் யுத்தகளத்தில் ஒரு பங்காளியாக நின்று களமாடிய ஒருவரின் அனுபவங்களில் இருந்து புறப்படும் எழுத்துகள் மிகப் பெறுமதியானவை. இன்னுமொரு பக்கத்தில் வரலாற்றை எழுதிச் செல்பவை. வரலாற்றுக் குறிப்புகள் இந்த எழுத்துகளின் பின்னணியில் இருந்து உத்வேகத்தோடும் உணர்வுகளோடும் ஒன்றித்தே பெறப்படும்.

எல்லாக் காலத்திலுமே யுத்தகாலக் கதைகளுக்கு மவுசு இருக்கும். அதே நேரம் போலிகளால் புணையப்பட்ட சோபனைகளை அலங்காரமிக்கதாக நீண்ட காலத்துக்குத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் காலம் நிதர்சனங்களை மட்டுந்தான் பாதுகாக்கும் பொறுப்பைச் செய்யும். போலிகளை நீர்த்துப் போகச் செய்துவிடும். ஊகங்களை அப்படியே முடிவற்றதொன்றான்றாக்கி எந்தவொரு முடிவுக்கும் வரச் செய்யாது இருண்மைக்குள் வீசி விடும். ஏன் இரண்டு கேள்விகளைக் கேட்டுப் பாருங்களே! இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முக்கிய நபர் அடொல்ப் ஹிட்டலர் எப்படிச் செத்தான்? அவனுக்கு என்னவானது? அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு போசிக்கப்பட்டு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மனிதத்துக்கு எதிரான அவல அத்தியாயத்துக்கு பொறியாகப் பயன்படுத்தப் பட்ட அல்காயிதா இயக்கத்தின் தலைவர் உசாமா பின் லேடனுக்கு என்ன நடந்தது? இந்தக் கதைகள் ஒரு காலத்திலும் சுவாரஸ்யம் இழக்காது.

ஈழத்தில் கடைசியாக 2009 வரை நிகழ்ந்த யுத்தம் பற்றிய கதைகளும் அப்படித்தான். ஒவ்வொரு கதையும் முக்கியமானவை. இன்னும் மிக உச்ச உணர்வுள்ள கதைகள் வெளிவரவில்லை, ஆயினும் அவை நிச்சயம் வெளிவராமல் போகாது. புலம் பெயர்ந்தவர்கள் வீடியோக் காட்சிகளைப் பார்த்துவிட்டு அல்லது மற்றவர்கின் அனுபவங்களைக் கேட்டுவிட்டு தாமும் யுத்த களத்தின் பங்காளிகளே என்ற தோரனையில் எழுதும் கதைகளையும் நாவல்களையும் இந்த வகைக்குள் நான் சேர்த்துக் கொள்ளவில்லை ஏனெனில் அவை தமது இருப்பையும் இன்னும் சில விசயங்களையும் நிறுவிக்கொள்ள எழுதப்படும் கற்பனைகள், உண்மைக்கு மிக நெருக்கமாகப் பயணிப்பதால் அவற்றையும் கண்ணீரோடு ஆராதிக்கும் பலவீனமான மனது நம்மில் பலருக்கும் இருக்கத்தான் செய்கின்றது.

இந்தக் கதைகள் அந்த வகைக்குள் சாராது. ஏனெனில் இது ஒரு போராளியின் வாக்குமூலம். அல்லது மனவோட்டம்.

03 .மழைக்கால இரவு இது ஏலவே சிங்கள மொழியில் அளுயம் சிஹினய எனும் பெயரில் வெளிவந்துவிட்ட தொகுப்பு. இத்தொகுதியில் ஆறு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழினி இது போன்ற கருத்தியல்களை முன்னிறுத்திய பத்துக் கதைகள் வரை எழுதி ஒரு தொகுதியாகப் போட வேண்டும் என்று ஆசை கொண்டிருந்ததாகவும் அதற்கிடையில் அவருடைய வாழ்க்கைப் பயணம் முடிந்துவிட்டதாகவும் அவருடைய கணவர் தெரிவித்த போது மிகுதி அந்த நான்கு கதைகளுக்காகவும் இப்போது மனது அவாக் கொள்கின்றது.

ஒரு பெண்ணாக பெண்களின் மனநிலையில் செய்யப்பட்ட வாசிப்பாகவே இக்கதைகளை நான் பார்க்கின்றேன். போரின் தோல்வியும் சிறைச்சாலை வாழ்க்கையும் தமிழினிக்கு கற்றுக் கொடுத்தவைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை அவர் எழுத்தில் கொண்டுவர முயற்சித்து அதில் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதும் கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே.

இந்த ஆறு கதைகளும் பேசுகின்ற விதம்பற்றியும் கதைக்களம் பற்றியும் வகுப்பெடுக்க நான் விரும்பவில்லை. நீங்களும் படிக்கத்தானே போகின்றீர்கள்.

அத்துடன் எனது மனவுனர்வுகளை இங்கே எழுதுவதையும் கூட விரும்பவில்லை. ஏனெனில் இங்கே எழுதுவதற்கு பலநூறு விடயங்கள் இருக்கின்றன. கதைகளை வரலாற்றோடும் களத்தோடும் பொருத்திப் பார்த்துக் கருத்துரைக்கவும் கலந்துரையாடவும் பெரிய பரப்பொன்று விசாலமாக இருக்கின்றது. அந்தக் கருத்தாடலைச் செய்வதுதான் போராளியான தமிழினிக்கு தமிழ் சமுதாயம் செய்யும் கைம்மாறு. அத்தகைய கருத்தாடல் இன்னும் பல்வேறு விசாலித்த பரப்புகளை நிச்சயம் திறக்கும். அத்தகைய உறவாடலை சுமுகமான மனநிலையில் செய்வதற்கு தமிழினியின் கதைகள் இடந்தரப்போவதில்லை. ஏனெனில் ஒரு சிறு நதிபோல ஓடத் தொடங்கி பிரளமாகி கட்டற்று ஓடுகின்ற நீருக்கு முன்னால் நாம் எத்தகைய மனநிலையோடு நிற்க வேண்டும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆனால் நிச்சயம் விவாதிக்கின்ற நமக்குள் மனிதம் உயிர்ப்போடு இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழினியின் எழுத்துகளில் தொக்கி நிற்கும் பல்வேறு சங்கதிகளை எம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

தமிழினி உயிரோடு இருந்து இக்கதைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றால் நிச்சயம் அது கண்ணீரோடுதான் முடிந்திருக்கும். ஏனெனில் அவரது வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும். அவை நமது கையாலாகாத் தனத்தின் மீது இடியாக இறங்கியிருக்கும்.

ஆயுத யுத்தமொன்றில் தோல்வியுற்ற மனநிலையில் இருந்து தமிழினி விடுபட்டிருக்கின்றார். என்பதை இக்கதைகள் ஏதோவொரு விதத்தில் பதிவு செய்கின்றன. உண்மைகளைப் பேசவும் ஏற்றுக் கொள்ளவும் பலரதும் உள்ளரசியல் இடங்கொடுப்பதில்லை. குறிப்பாக தமிழகத்தில்.  ஆனால் தமிழினியின் கதைகள் அத்தகைய உள்ளரசியலில் இருந்து விடுபட்டு ஒரு புதிய உலகை நோக்கி எதிர்பார்ப்புகளோடு பயணிக்க எத்தனிக்கின்றன.

தமிழினியை இலங்கை அரசாங்கம் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்காமல் தமிழகத்தில் இலங்கை அகதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் முகாமுக்கு அனுப்பியிருக்க வேண்டும்  என்று இப்போது எனது மனதில் தோன்றுகின்றது. ஏனெனில் அங்கிருந்து பல நாவல்களையும் பலநூறுகதைகளையும் அவர் எழுத ஆசை கொண்டிருப்பார். இது யதார்த்தம் தொப்புள்கொடி உறவுகள் இதைப் புரிந்துகொள்வார்கள்.

04 . எனக்கு மிகப் பிடித்தது தமிழினியின் மொழி நடைதான். சாதாரணமாக வாசிக்கத் தெரிந்த ஒருவர் கூட விளங்கிக் கொள்ளத் தக்க சொற்கள் இயல்பாக அமையப் பெற்றிருக்கின்றன. தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் வாசித்த பொழுதும் இக்கதைகளை வாசித்த பொழுதும் ரசித்த மிக முக்கியமான ஒரு விடயம் இந்த எழுத்து லாவண்யம்தான். எனக்கு ஒருபோதும் இப்படி எழுதவருவதில்லை. அது மேதாவித்தனமல்ல எனக்கு இப்படி இலகு நடை வாய்ப்பதில்லை, அது என்ன கருமமோ தெரியாது. எளிமையாக எழுதுவது எப்படி என்ற சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியாக இந்தக் கதைகளை திரும்பத் திரும்ப படித்திருக்கின்றேன். ஒரு பிரதி வாசகனுக்காக காத்துக் கிடக்க வேண்டுமாம் அதைப் புரிந்து கொள்ளும் ஒருவனுக்காக அது தவம் கிடக்க வேண்டுமாம். என்றொரு கருத்தியலை அன்மைக்காலமாக படித்த ஞாபகம். ஆனால் இப்போது அதை நினைத்து சிரிப்பு வருகின்றது. பிரதி வாசகனை மொழியால் திணரடித்துவிடக் கூடாது. வாசிக்கப்படக் கூடியதாக பிரதி அமைவதே சிறந்தது. அப்படிச் சிறப்பானதாக தமிழினியின் பிரதி அமைந்திருக்கின்றது.

இயல்பான மொழிப் பிரயோகம், வித்துவத்தைக் காண்பிக்க முயலாத சொற்களின் போக்கு, பொதுமகனோடு பொதுமகனாக நின்று உறவாடும் எழுத்து இதெல்லாம் தமிழினியின் பலம்தான். நிறைய எழுதிக் குவிக்காமல் சொற்பமாக எழுதி தனது பெயரையும் இலக்கியப் பரப்பில் நிலைநிறுத்திக் கொண்ட தமிழினியின் எழுத்து வெற்றிபெற்று இன்னும் பல போராளிகளின் உள்ளத்தினதும் கதவுகளைத் திறந்துவிடட்டும் அங்கு தேங்கிக் கிடக்கும் புயல்கள் எல்லாம் எழுதுகோல்கள் சுமந்து புறப்பட்டு பல விடயங்களைப் புரட்டிப் போடட்டும்.

-எதிர்பார்ப்புகளற்ற மனநிலையோடு – முஸ்டீன்

Pin It