ஈவு இரக்கமற்ற இலங்கைப் போரின் இறுதியில் தமிழர்களாகிய நாம் துயரமான வகையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். போராளிகளை, அப்பாவிகளை, ஆண்களை, பெண்களை, முதியோர்களை, குழந்தைகளை, கால்நடைகளை, தோட்டம் துறவுகளை, நிலங்களை பறித்துக்கொண்டு ஈழத் தமிழர்களை கதியற்றவர்களாய் மாற்றியிருக்கிறது சிங்களப் பேரினவாதம். சச்சரவுகள் அற்ற சந்தைகளை விரும்பும் உலக வல்லாதிக்க நாடுகளும், அவற்றின் பெரு நிறுவனங்களும் ஒரு வீரம் மிக்க விடுதலைப் போராட்டத்தை துவக்குகளின் முனையில் நசுக்கியிருக்கின்றன. இன்றைய புதிய ஒரு துருவ உலக ஒழுங்கில் இன விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, எதிர்ப்பியக்கங்கள் அனைத்தையும் அரசுகள் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதற்கு வன்னிப்போர் ஒரு வகைமாதிரியாக இருக்கிறது. ஈழப் போர் இலங்கை அரசுக்கு மட்டும் வெற்றியைத் தேடித் தரவில்லை. தெற்காசியப் பிராந்தியத்தின் அரசுகள் அனைத்துக்கும் பாரிய நம்பிக்கையையும், எதிர்ப்பியக்கங்களை மேலும் வீச்சோடு நசுக்கும் துணிச்சலையும் தந்திருக்கிறது.

கொடும் யுத்தத்தின் முடிவில் எளிதில் மீள முடியாத வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டிருக்கும் ஈழத் தமிழினத்தின் உளவியல் சமநிலையானது பெரிதும் குலைந்திருக்கிறது. போரின் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கும், புலிகளின் தலைமை அரங்கில் இல்லை என்பதை ஒத்துக்கொள்வதற்கும் தமிழ் மனம் தயங்குகிறது. பிரபாகரனை மாயவியாக்கி வழிபடுவதன் வாயிலாக இவர்கள் இரண்டு தவறுகளை செய்கிறார்கள். ஒன்று பிரபாகரனை அவமதிக்கிறார்கள். இரண்டு, தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலை மறுபடியும் இறந்த காலத்தில் தள்ளி, எதிர்காலத்தை நிராகரிக்கிறார்கள். தமிழ் மக்களின் மீது இரு தசம ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தியவர்கள் என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு என ஓர் அரசியல் பாத்திரம் இருக்கிறது. அது முற்போக்குப் பாத்திரமா, பிற்போக்குப் பாத்திரமா என்பதை நாம் பேச வேண்டும்.

மாறாக, எதை முன்னிட்டும் புலிகளை உரையாடலில் இருந்து நீக்கம் செய்ய முடியாது. அதேநேரம் இ துவரை காலமும் புலிகள் நிராகரித்த தமிழ் அறிவையும், ஜனநாயகத்தையும், முற்போக்கு அரசியலையும், சுதந்திரத்தையும் நாம் பேச வேண்டும். அதைப் பேசுவதினூடாக அடுத்தக் கட்டத்தை அடைய எத்தனிக்க வேண்டும். இந்த முரண்களின் அரசியல் ஒரு புள்ளியில் சந்திக்கும்போதுதான் நாம் விரும்பும் புதிய அரசியல் கோட்பாடு பிறக்கும். அதற்கான பரந்த முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக ‘வடலி’ பதிப்பகத்தின் ‘கொலைநிலம்’ புத்தகத்தைக் குறிப்பிடலாம்.

‘ கொலைநிலம்- முரண் அரசியல் உரையாடல்’ என்ற என்ற தலைப்பில் வடலி பதிப்பகத்தின் வெளியீடாக இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கும் இந்த நூலானது, ஷோபா சக்தி, தியாகு இருவரையும் சந்திக்க வைத்திருக்கிறது. புலி விமர்சன கருத்துக்களின் ‘ஐகான்’ ஆக பார்க்கப்படும் ஷோபா, புலிகள் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த காலம் தொடங்கி தனது விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். அதுபோலவே, ஈழப்போரின் இக்கட்டான காலம் முதல் முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஈழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராக இயங்குபவர் தியாகு. எந்த சந்தர்ப்பத்திலும் அதிகாரங்களுடன் சமரசம் செய்துகொள்ளாதவர்கள் என்ற அடிப்படையில் இந்த இரு சக்திகளும் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இருவரும் இந்த ‘கொலை நிலம்’ நூலில் ஈழம் குறித்த ஓர் அரசியல் உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். முரண் அரசியல்கள் ஒரே அறையில் அமர்ந்து பேசுவது என்ற நல்ல கலாச்சாரத்தை தொடங்கி வைக்கிறது என்ற அடிப்படையிலும், இப்படியான முரண்களின் உரையாடல்களின் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியலை கண்டெடுக்க முடியும் என்பதாலும் இந்த நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

நூலின் தலைப்பு : கொலைநிலம்
ஆசிரியர்கள் : ஷோபா சக்தி-தியாகு
விலை : 80 ரூபாய்
பதிப்பகம் : வடலி
கிடக்கும் இடம் : வடலி,
13/54, 10-வது குறுக்குத் தெரு,
டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம்,
சென்னை-24

E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தொடர்பு எண்: 9003086011, 044-43540358