ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள்.

முப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழர்களை அவர்களுடைய “எதிரிகளிடம்” கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடக நண்பர் சொன்னார் “போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும்,பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற ராணுவத்தை இப்பொழுது எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்” என்று. இனி ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றி கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு நொந்து நூலாகிப் போய் விட்டார்கள் வன்னி மக்கள்.

ஒரு புறம் களத்தில் அதாவது வடக்கு கிழக்கில் தமது அரசியல் எதிர்காலம் எது என்பதைப் பற்றி சிந்திக்கும் சக்தியற்று காணப்படும் ஜனங்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்த நாடுகளில் நாடுகடந்த அரசைக் குறித்த வாதப்பிரதிவாதங்களும் வாக்கெடுப்புகளும் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. தமது அரசியல் எதிர்காலம் எது என்பதைத் தீர்மானிப்பதில் களத்திற்கும் புலத்திற்கும் இடையில் பொதுவான நிகழ்ச்சி நிரல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் இருந்தவரைக்கும் சரிக்கும் பிழைக்கும் அப்பால் அவர் ஓரளவுக்காயினும் களத்துக்கும் புலத்துக்குமான ஜனவசியம் மிக்க ஒரு மையமாகத் திகழ்ந்தார். இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் அவருக்குப் பின்னரான அடுத்த கட்ட அரசியலை முன்னெடுத்துச் செல்ல வல்ல ஜனவசியம் மிக்க, தீர்க்கதரிசனமுள்ள, ரத்தக்கறைபடாத, தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்ற ஒரு பேராளுமை இனிமேல்தான் எழுச்சிபெற வேண்டியிருக்கிறது.

வரப்போவது யாராயிருப்பினும் அவர் திரு.பிரபாகரன் ஏற்படுத்திய விளைவுகளைக் கடந்தே போக வேண்டியிருக்கும். அதாவது பிரபாகரனின் உடலைக் காவிக்கொண்டு வரவும் முடியாது. அதே சமயம் பிரபாகரனை அவரது தோல்விகளோடு சேர்த்து ஒரேயடியாக வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்துவிடவும் முடியாது. தற்பொழுது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளியில் மூன்று பிரதானமான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவது திரு.பிரபாகரனை கடவுளாக்கி வழிபடும் ஒரு போக்கு. ஏற்கனவே இருந்து வந்த இந்தப் போக்கு மே 17- ற்குப் பின் உண்டாகிய கழிவிரக்கம் காரணமாக இன்னும் பலமடைந்து வருகிறது. இரண்டாவது திரு.பிரபாகரனைப் பிசாசு என்று தூற்றும் ஒரு போக்கு. இதுவும் ஏற்கனவே இருந்து வந்த ஒரு போக்கு. இது மே 17-ற்குப் பின்பு எல்லாத் தீமைகளிற்கும், எல்லா தோல்விகளிற்கும் பிரபாகரனின் மீது பழியைப் போடும் ஒன்றாக வளர்ச்சி பெற்று வருகிறது. மூன்றாவது இந்த இரண்டு துருவ நிலைகளுக்கு நடுவே வரும் ஒரு மிதப்போக்கு. பிரபாகரனுக்கு முன்பு இது சிறு போக்குத்தான்… பிரபாகரனுக்குப் பின்பும் இன்று வரையிலும் இது சிறு போக்குதான். இந்த மூன்று போக்குகளையும் விரிவாகப் பார்ப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அடிப்படைகளை கண்டு பிடிக்கலாம். எனவே இம் மூன்று போக்குகளையும் ஆழமாகப் பார்ப்போம்.

முதலாவது பிரபாகர வழிபாடு. இது அவரை ஒரு அவதாரப் புருசராகவோ அல்லது அமானுஸ்ய சக்திகள் மிக்க ஒரு யுகபுருசனாகவோ பார்க்கிறது. அவரைக் கேள்விக்கிடமற்ற விமர்சனங்களிற்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கும் இப்போக்குக்குரியவர்களில் ஒரு பிரிவினர், அவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். மற்றொரு பிரிவினர் அவர் இல்லாவிட்டாலும் அவருடைய பாணியிலான ஒரு அரசியலைத் தொடர யாராவது ஒரு தப்பிப் பிழைத்த விசுவாசி எங்காவது ஒரு மறைவிடத்திலிருந்து என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருக்கிறார்கள்.

முதலில் திரு. பிரபாகரன் இறக்கவில்லை என்று நம்புவோர்க்கான பதிலை பார்க்கலாம். அவர் இறக்கவில்லை அல்லது அவரைக் கொல்ல இந்த பூமியிலே எந்த மானுடனாலும் முடியாது என்று நம்பும் எவரும் பிரபாகரனை அவமதிக்கிறார்கள் என்றே பொருள் படும். ஏனெனில் பிரபாகரன் ஒரு செயல் வீரன். எதையாவது செய்யாது விட்டால் நாடு தன்னை மறந்துவிடும் என்று நம்பிய நெப்போலியனைப் போன்ற இயல்புடைய ஒருவர். அவருடைய எழுச்சியின் தொடக்கத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி வரைக்கும் அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அவருக்கு உறங்குகாலம் என்பதெல்லாம் கிடையாது. தலை மறைவாக இருந்தாலும் அவர் சும்மாயிருக்க மாட்டார். அவருடைய இந்த சதா செயற்படும் பண்புதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏனைய விடுதலை இயக்கங்களை விடவும் இராணுவ ரீதியாக பலமுடையதாக மாற்றியது. எனவே பிரபாகரன் இயல்பில் ஒரு செயல் வீரன். உறங்கு நிலையற்ற ஒரு செயல் வீரன். அப்படிப்பட்ட ஒருவர் மே 17-ற்குப் பின்னர் இத்தனை மாதங்களாக செயற்படாமல் இருக்கிறார் என்றால் அது அவருடைய இயல்பிற்கு மாறானது.

தவிர பிரபாகரன் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதை ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் கூட, அவர் அப்படி தப்பிச் செல்லமுன்பு வயதான தனது பெற்றோரையும் தப்ப வைத்திருப்பார். அவர்களை எங்காவது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே அனுப்பி வைத்திருப்பார். அல்லது தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் முடிவில் என்ன நடந்தது? அவருடைய முதிய பெற்றோர் அவருடைய “எதிரிகளிடம்” கையளிக்கப்படும் ஒரு பரிதாபகரமான நிலையே வந்தது. இது அவருடைய இறுதிக்கட்டம் எந்தளவுக்கு நெருக்கடியானதாக இருந்தது என்பதையே காட்டுகிறது.

இவை தவிர மேலும் ஒரு விளக்கமும் உண்டு. அவருடைய முன்னாள் சகாவும் பின்னாளில் அவரிடமிருந்து பிரிந்து சென்று தற்பொழுது அவரை விமர்சிப்பவருமாகிய திரு.ராகவன் கூறியது அதாவது ஒரு மரபு ரீதியிலான அரசாங்கம் இவ்வளவு பெரிய பொய்யை தொடர்ச்சியாகக் கூற முடியாது என்பது. அதுவும் இந்தத் தகவல் யுகத்தில் சொன்ன பொய்யை தொடர்ந்தும் அழுத்திச் சொல்வது என்பது கடினம். எனவே திரு.பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதே மெய்யானது. அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் எல்லா விசுவாசிகளும் முதலாவதாக அவருடைய இயல்பை அறியாது அவரை அவமதிக்கிறார்கள். இரண்டாவதாக ஈழத்தமிழ் அரசியல் அவரோடு தேங்கி நின்று விடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அடுத்ததாக அவருடைய பாணியிலான போராட்ட வடிவத்தை தொடர விரும்புவோர் பற்றி பார்க்கலாம். இவர்களும் ஏறக்குறைய பிரபாகரனின் உடலையும் அவரது கோட்பாடுகளையும் மம்மியாக்கம் செய்து பேண முற்படுகிறார்கள் எனலாம். ஏனெனில் நிலவும் ஒரு துருவ உலக ஒழுங்கின்படி பிரபாகரனின் பாணி எனப்படுவது காலங்கடந்ததாகி விட்டது. இந்நிலையில் பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து பேணமுற்படும் எல்லாரும் இறந்தகாலத்திலேயே சீவித்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு கள யதார்த்தம் தெரியவில்லை. இனியுமொரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அளவிற்கு ஈழத்தமிழர்கள் குறிப்பாக வன்னி மக்கள் களைத்தும், சலித்தும், வெறுத்தும், இடிந்தும் போய்விட்டார்கள்.

மிகச் சிறிய இனமாகிய ஈழத்தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தின் சாணக்கியமற்ற மற்றும் தீர்க்க தரிசனமற்ற போக்குகளால் தமது வல்லமைக்கு மீறி அசாதாரணமான அசாத்தியமான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஒரு சிறிய இனத்திற்கு இருக்கக்கூடிய புறவயமான பௌதீக வரையறைகளை மீறிச்சாதிக்கப்பட்ட அனைத்து பெருஞ் செயல்களுக்கும் அதிகமதிகம் அகவயப்பட்ட விளக்கங்களையே கொடுக்க முடியும். அதிலும் குறிப்பாக வன்னியில் வாழ்ந்த ஒரு சிறிய சனத்தொகையே (இது கனடாவில் புலம்பெயர்நது வாழும் சனத்தொகைக்கு ஏறக்குறைய சமம்) முழு ஈழத்தமிழினத்துக்குமான போரை எதிர் கொண்டது. தியாகம் செய்ததும், காயப்பட்டதும், அவமானப்பட்டதும், பசிகிடந்ததும், பதுங்குகுழிக்கும் தறப்பாள் கூடாரத்துக்கும் இடையே ஈரூடகமாக கிழிபட்டதும், இறுதிக்கட்டதில் போராளிகளுக்கும் அரச படைகளிற்கும் இடையே நார்நாராய் கிழிபட்டதும் அவர்கள்தான்.

ஏறக்குறைய முழு உலகத்தாலும் கைவிடப்பட்ட ஒரு நிலையில் கூட்டுத் தண்டனையை அனுபவித்ததும், அனுபவிப்பதும் அவர்கள்தான். யார் யாருடையதோ தீர்கதரிசனமற்ற முடிவுகளால் தலைச்சான் பிள்ளைகளை பலியாடுகளாய் கொடுத்ததும் தலைமுறை தலைமுறையாக சேகரித்த சொத்துக்களையெல்லாம் தெருக்களில் வீசி எறிந்து விட்டு வெறுங்கையுடன் சரணடைந்ததும், தண்டனைக் கைதிகளாய் பிடிக்கப்பட்டதும் அவர்கள் தான். எனவே போரைத் தொடர வேண்டும் என்று ஆசைப்படுவோர் முதலில் வன்னி மக்களிடம் சென்று வாக்கெடுப்பு நடத்தட்டும்.

முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட வன்னிச் சனங்களை ஏனைய அப்பாவித் தமிழர்கள் அன்போடும் ஆதரவோடும் அணைக்கிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அரசியல் தெரிந்த அல்லது படித்த தமிழர்களில் பெரும் பகுதியினர் இந்த வன்னி அகதிகளுடன் தொலைபேசியில் கதைப்பதற்கே பயந்து நெளிகிறார்கள். வன்னியில் இருந்து வந்தாலே அது புலிகள் தான் என்று அரசாங்கம் மட்டும் நம்பவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே வசித்து வரும் தமிழர்களில் கணிசமான தொகையினரும் அப்படித்தான் நம்புகிறார்கள். வன்னி அகதிகளுடன் கதைக்க அவர்களுடன் நெருங்கி உறவாட அஞ்சுகிறார்கள். ஒரு வன்னி அகதியை சந்தித்து விட்டு வீடு திரும்பும் போது யாரோ என்னை உற்றுப் பார்ப்பது போலவும் என் பின்னால் தொடர்ந்து வருவது போலவும் உயிர் முழுவதும் கூசுகிறது என்று ஒரு படித்த யாழ்ப்பாணத்து நண்பர் என்னிடம் சொன்னார்.

உண்மைதான். அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளில் அநேகமானவை இப்பொழுதும் பெருமளவுக்கு அச்சத்தில் உறைந்து போய் உள்ளன. ஒரு தற்காப்பிற்காக அங்குள்ளவர்கள் வன்னி அகதிகளுடன் நெருங்கிப் பழக அஞ்சுவதை புரிந்து கொள்ள முடியும்தான். ஆனால் தனிப்பட்ட உரையாடல்களின்போது பிரபாகரன் சாகவில்லை என்றும், புலிகள் மறுபடியும் வருவார்கள் என்றும் வீராவேசமாக கதைக்கும் பலரும் (சில அரிதான புறநடைகள் தவிர) வன்னி அகதியோடு நெருங்கிப் பழகத் தயங்குவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்களுக்கு திரு.பிரபாகரன் வேண்டும், வீரம் வேண்டும், தியாகம் வேண்டும், சண்டையும் நடக்கவேண்டும்… ஆனால் அவர்கள் எல்லோருக்குமாக யுத்தம் புரிந்த வன்னி அகதியுடன் நெருங்கிப் பழக மட்டும் அச்சம்.

எந்த ஒரு ஜனக்கூட்டம் முழுத் தமிழனத்துக்குமாக தியாகம் செய்து பெரும்செயல்களைச் செய்து முடிவில் சாவினால் சப்பித் துப்பப்பட்டு தப்பி வந்ததோ அந்தச் சனங்களுடன் நெருங்கி உறவாட துணிச்சலற்ற பலரும் புலிகளின் வீரத்தைப்பற்றி போற்றும் ஒரு முரணைக் காண முடிகிறது. இது எதைக் காட்டுகிறது? இவர்களுக்கு சண்டை வேண்டும். தமிழ் வீரம் என்று சொல்லி கைதட்டவும் விசிலடிக்கவும் வெடி கொழுத்தி மகிழவும் யுத்தகள வெற்றிகள் வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றிற்குமாக தப்பிச் செல்ல வழியற்றிருந்த ஒரு சிறிய ஜனக்கூட்டமே பீரங்கித் தீனியாக வேண்டும். அவர்களுடைய தலைச்சான் பிள்ளைகளே பலியாடாக வேண்டும். இவர்கள் யாரும் யுத்தத்திற்கு போகமாட்டார்கள். தங்களுடைய பிள்ளைகளையும் அனுப்ப மாட்டார்கள். இது முழுக்க முழுக்க தமிழ்ச்சினிமா ஸ்தாபித்து விட்டிருக்கும் ஒரு பார்வையாளர் பண்பாடுதான். யாரோ தியாகம் செய்ய, யாரோ வதைபட இவர்கள் வெடிகொழுத்தி கொண்டாடுவார்களாம்.

எனவே பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து காவும் எல்லோரையும் நோக்கி இக்கட்டுரை ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நீங்கள் யுத்தம் தொடரவேண்டும் என்று விரும்பினால் அதில் முன்னணிப் படையாகப் போகத்தயாரா? பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகமான சூழல்களில் வசித்துக்கொண்டு முழுக்க முழுக்க ராணுவமயப்பட்ட மூடப்பட்ட ஒரு நிலத்தில் வாழும் ஜனங்களின் மீது போரையும் போர்ப்பிரகடனங்களையும் ஏவி விட முயலும் எல்லாருமே அதில் முதல் வீரராகப் போகத் தயாராக இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த ஜனங்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடவேண்டும்.

யுத்த இயந்திரத்திற்கு காசை அள்ளி இறைத்த ஒரே காரணத்திற்காக யாருடையதோ தியாகத்தில் குளிர் காய்ந்து விட முடியாது. எனவே திரு.பிரபாகரனை மம்மியாக்கம் செய்து வைத்திருக்கும் எவரும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு போகவிடாது தடுப்பதோடு, வன்னியில் இருந்து சாவினால் உமிந்து விடப்பட்ட ஜனங்களை மேலும் ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள். இவர்கள் பாதுகாப்பான ஜனநாயகமான ஒரு சூழலில் இருந்து கொண்டு எதையும் கதைக்கலாம். ஆனால் ஜனநாயமற்ற ஒரு சூழலில் வசிக்கும் மக்கள் குறிப்பாக தலைக்குப்பதில் தலை சீவப்படும் ஒரு அரசியல் சூழலில் சிலமாதங்களிற்கு முன்புவரை வசித்து வந்த மக்கள் இவர்களுடைய பிரகடனங்களால் மேலும் வதைபட நேரிடலாம். விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனை கடவுளாக வழிபடும் ஜனநாயக உரிமையை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அந்த வழிபாடானது தோற்கடிக்கப்பட்ட ஒரு ஜனக்கூட்டத்தை தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே உறைந்து கிடக்குமாறு கோருவதை இக்கட்டுரை விமர்சிக்கிறது.

இனி இரண்டாவது போக்கை பார்க்கலாம். இது திரு.பிரபாகரனைப் பிசாசு அல்லது பாசிஸ்ட் அல்லது போர்க்குற்றவாளி என்று கூறுவோர் அணி. அவரைப் பாட்டுடைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை ஒரு பாசிஸ்ட் என்று கூறும் ஜனநாயக உரிமையை இக்கட்டுரை மதிக்கிறது, ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக எல்லாத் தீமைகளிற்கும் அவரே பொறுப்பு என்றும் அதனால் இலங்கை அரசாங்கம் செய்வதெல்லாம் சரி என்றும் கூறுவதை இக்கட்டுரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது.

முதலில் ஒரு அடிப்படை உண்மையை தெளிவாகப் பார்க்கவேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு காரணம் அல்ல; அது ஒரு விளைவு மட்டுமே. தீர்க்கப்படாத இன முரண்பாட்டின் விளைவே விடுதலைப்புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும். விடுதலை இயக்கங்களுடன் கூடப் பிறந்த ஜனநாயக மறுப்பின் விளைவே, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களை உயிர் பிழைத்திருப்பதற்கான தங்குநிலை அரசியலை நோக்கித் தள்ளியது. அதாவது விளைவின் விளைவுகள் அவை. எனவே விளைவின் வீழ்ச்சியை வைத்துக் கொண்டு காரணமும் இல்லாமல் போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. அரசாங்கத்தின் வெற்றியை பெருந்திரளான தமிழ்மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதவில்லை என்பதால்தான், விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்ச்சிப்பவர்கள் கூட அவர்களிடம் இப்பொழுது கழிவிரக்கம் காட்டுகிறார்கள். விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு புலம் பெயர்ந்த தமிழர் சொன்னார் “கடிநாய் என்றாலும் அது ஒரு காவல் நாய்” என்று.

இதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் பெற்ற வெற்றிகளை ஒட்டுமொத்த இறுதிகட்ட அரசியல் வெற்றியாக மாற்ற தயாரற்ற ஒரு போக்கே யுத்தம் முடிந்து ஏழுமாதங்கள் ஆன பின்னரும் இப்பொழுதும் காணப்படுகிறது. அவ்விதம் ராணுவ வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக மாற்றத் தேவையான தீர்க்க தரிசனமும் திடசங்கற்பமும் ஜனநாயக அடித்தளமும் கொழும்பில் இருப்பதாகத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்நிலையில் யுத்தத்தின் வெற்றி காரணமாக சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புதிய இன எழுச்சி அலை உருவாகியுள்ளது. அதை மீறிச் செல்லும் தைரியம் இலங்கைத் தீவில் எந்த ஒரு பெருங்கட்சிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதால்த்தான் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது ஒரு முன்னாள் ராணுவ தளபதியைப் பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது.

இத்தகைய ஒரு பகைப்புலத்தில் இனப்பிரச்சினைக்கு உரிய கௌரவமான ஒரு தீர்வு முன்வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் திரு.பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் தான் காரணம் என்று கூறுவது அதாவது அடிப்படைக்காரணம் அப்படியே தொடர்ந்தும் இருக்கும் ஒரு பின்னணியில், விளைவையே காரணமாக மாறாட்டம் செய்வது என்பது பிரச்சினையின் அடியாழ வேர்களை கண்டுபிடிக்கத் தடையாகிவிடும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க திரு பிரபாகரன் என்ற ஒரு தனிப்பெரும் ஆளுமையின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்புத்தான். அதற்குள் காணப்பட்ட ஏனைய பெரிய ஆளுமைகள் எதுவும் தலைமையை பலப்படுத்திய உப ஆளுமைகளே தவிர திரு.பிரபாகரனுக்கு நிகரானவை அல்ல. அதாவது விடுதலைப்புலிகள் என்றாலே அது பிரபாகரன் தான். பிரபாகரன் என்றாலே அது விடுதலைப்புலிகள் தான். இனிமேல் அவர் இல்லாத வெற்றிடத்தில் யார் வந்தாலும் இயல்பில் அது முன்னைய விடுதலைப்புலிகள் இயக்கமாய் இருக்க முடியாது. எனவே விடுதலைப் புலிகளை விமர்சிப்பது என்பது அதன் பிரயோக நிலையில் பிரபாகரனின் தனி ஆளுமையை விமர்சிப்பது தான். மேலும் விடுதலைப்புலிகளின் அதிகார கட்டமைப்பைப் பொறுத்தவரை அதன் உச்சியில் காணப்பட்ட திரு.பிரபாகரனே எல்லா இறுதி முடிவுகளையும் எடுத்தார். எனவே விடுதலைப்புலிகளை விமர்சிப்பது என்பது அவரை விமர்சிப்பதுதான். ஆனால் அதற்காக அவரை விமர்சிப்பது என்பது அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும், சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் அவரைப் பிரித்தெடுத்து பார்ப்பதாகப் பொருள் படாது. பிரபாகரன் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் வெற்றிடத்தில் இருந்து வரவுமில்லை. அவர் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலின் ஒரு வகை மாதிரி. அவருக்கேயான ஒரு வரலாற்று காலகட்டத்தின் தவிர்க்கப்படமுடியாத ஒரு விளைவு.

அவரை எதிரியாகப் பார்க்கும் ஈழத்தமிழர்களில் அநேகர் அவரை தமக்குப் புறத்தியான ஒரு ஆளுமையாகவே பார்க்கிறார்கள். ஆனால் பிரபாகரத்தனம் எனப்படுவது அநேகமாக எல்லா ஈழத்தமிழர்களிற்குள்ளும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு இருக்கிறது என்பதே உண்மை. இனமானம் இனப்பெருமை பேசும் எல்லாத் தமிழ் போர் வீரனும் அவருடைய சாயலை உடையவன் தான். சரணடையாமை, எதிரியை மன்னியாமை என்றுவரும் எல்லா இடங்களிலும் அவர் உண்டு. கொலனித்துவ கால பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ச் சிப்பாய்களிடம் காணப்பட்ட விசுவாசம், உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் கீழ்ப்படிவு போன்ற தமிழ்ச் சிப்பாய்த்தனம் அல்லது தமிழ் இராணுவத்தனம் எனப்படுவது பிரபாகரனை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டு விட்டது.

மேலும் குடும்பத்திற்குள் மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத குடும்பத் தலைவனையும், பிள்ளைகளை தண்டனைகள் மூலம் வளர்த்தெடுக்கலாம் என்று நம்பும் பெற்றோரையும், பாடசாலைகளில் பிரம்புடன் நிற்கும் ஆசிரியரையும், ஆசிரியரை நிற்கவைத்து கதைக்கும் அதிபரையும், அதிபரை நாட்டாண்மை செய்யும் உயர்அதிகாரியையும், ஆஸ்பத்திரிகளில் எஜமானர்களைப் போல வரும் மருத்துவரையும், அவர் இல்லாத போது ராஜாங்கம் செய்யும் தாதியையும், தாதி இல்லாத இடத்தில் அட்டகாசம் செய்யும் சிற்றூழியரையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் அல்லது மௌனமாக சகித்துக்கொள்ளும் ஒரு சமூகம், அரசியலில் திரு.பிரபாகரன் கொண்டு வந்த ஒற்றைப்பரிமாண அணுகு முறையையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டுவிட்டது.

இக்கருத்தை மேலும் பலப்படுத்த விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படும் ராஜினி திரணகம தன்னுடைய நண்பரான ஒரு மருத்துவ நிபுணரிடம் கேட்ட கேள்வியை இங்கு எடுத்துக்காட்டலாம். “இந்தப்பிள்ளைகள் இவ்வளவு வன்முறையை எங்கிருந்து பெற்றார்கள். எங்களுடைய வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், சனசமூக நிலையங்கள், ஒன்றுகூடும் இடங்கள் போன்றவற்றில் இருந்து தானே” என்று. இதுதான் உண்மை. தமிழ் வீரத்தின் மறுபக்கமாயிருந்த மன்னிப்பிற்கு இடமின்மையும், ஜனநாயக மறுப்பும் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அது ஈழத்தமிழ் சமூகத்தின் கூட்டு உளவியலில் இருந்து அதாவது யுத்தத்தின் வெற்றிக்காக எதையும் தியாகம் செய்யலாம். அல்லது விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற ஒரு கூட்டு மனோநிலையில் இருந்து வந்தவைதான்.

எனவே திரு.பிரபாகனை விமர்சிப்பது என்பது ஒவ்வொரு ஈழத்தமிழனும் அதோடு அவரை ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியத் தமிழனும் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்வதுதான். அவரை அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும் சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் பிடுங்கியெடுத்து விமர்சிப்பது என்பது அவரை மட்டுமல்ல முழு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலையும் அதோடு முக்கியமாக இலங்கைத் தீவின் இன யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளத் தடையாகிவிடும். பிரபாகரனை வழிபடுவது என்பது எப்படி ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடையாயிருக்கிறதோ, அது போலவே அவருடைய பாத்திரத்தை அதற்கேயான சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணிகளில் இருந்து பிரித்தெடுத்து விமர்சிப்பது என்பதும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடைதான்.

இனி மூன்றாவது போக்கைப் பார்க்கலாம். இது மேற்சொன்ன ஒன்றுக்கொன்று நேர் எதிரான துருவ நிலைப்பாடுகளுக்கு நடுவே வருகிறது. இதில் வழிபாட்டிற்கும் இடமில்லை, வசை பாடுவதற்கும் இடமில்லை. பதிலாக நிதானமான தீர்கதரிசனத்துடன் கூடிய அறிவுப்பூர்வமான ஒர் அணுகுமுறையே இது. முன்சொன்ன துருவ நிலைப்பாடுகள் இரண்டும் தமிழர்களை இறந்த காலத்திலேயே தேங்கி நின்றுவிடச் செய்பவை. அதாவது திரு.பிரபாகரன் என்ற மையத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இறந்த காலத்துடனேயே நின்று விடுவது. ஆனால் இந்த மூன்றாவது போக்கெனப் படுவது தமிழ் அரசியலைத் திரு.பிரபாகரன் என்ற மையத்தை கடந்து கொண்டுவரவேண்டும் என்று கோருவதாய் இருக்கிறது. அதாவது நிகழ்காலத்திற்கும் வருங்காலத்துக்கும் ஆனது. பிரபாகரன் ஒரு கட்டம். அதில் அவருக்கென்றொரு முற்போக்கான பாத்திரமும் இருந்தது. பிற்போக்கான பாத்திரமும் இருந்தது. இப்பொழுது அது கடந்து செல்லப்படவேண்டிய காலாவதியாகிவிட்ட ஒரு கட்டம். இனி அடுத்த கட்டம், அது அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவது அல்ல. மாறாக அவர் தொடாத இடங்களில் இருந்து தொடங்குவது. அவர் ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்ற கேள்விகளில் இருந்து தொடங்குவது.

இலங்கைத் தீவிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் பெரும் போக்குகளாக காணப்படும் முன் சொன்ன துருவ நிலைப்பட்ட போக்குகள் தற்பொழுது களத்தில் அதாவது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பேரம் பேசும் சக்தியற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் விடுதலைப் புலிகள் என்ற மையத்தை சுற்றியே அவர்களுடைய அரசியல் இருந்து வந்தது. இப்பொழுது அந்த மையம் இல்லை. எனவே ஆதரிப்போருக்கும் பேரம் பேசும் சக்தி இல்லை. எதிர்ப்போருக்கும் இல்லை. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியை மறு சீரமைத்து மீளக்கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்ட இரு பிரதான போக்குகளையும் சாராது, அதே சமயம் தமது மெய்யான பேரம் பேசும் சக்தி எது என்பதை அடையாளம் கண்டு அதிலிருந்து தொடங்கினால்தான் இனி ஈழத்தமிழர்களுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.

இப்படிப் பார்த்தால் மூன்றாவது போக்கிற்கே பிரகாசமான அரசியல் எதிர்காலம் உண்டு. ஆயுதப் போராட்டத்தின் சாணக்கியமற்ற தீர்க்க தரிசனமற்ற முடிவுகளால் பல துண்டுகளாக உடைந்து சிந்திச் சிதறி நீர்த்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்கள் மீண்டும் ஒரு சக்தியாக ஒன்று திரண்டெழுவது என்பது இந்த மூன்றாவது போக்கினூடாக மட்டுமே சாத்தியப்படும்.

விடுதலைப்புலிகள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் எவரும் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளிற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும். அதோடு புலிகளைத் தடைசெய்திருக்கும் நாடுகளில் சட்டச் சிக்கல்களிற்கும் முகங்கொடுக்க வேண்டி வரும். அதே சமயம் புலி எதிர்ப்பையே ஒரு அரசியலாக செய்து வந்தவர்களும் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆகிவிட்ட ஒரு காலச் சூழலில் ஈழத்தமிழர்களின் பேரம் பேசும் சக்தி இனியும் நீர்த்து போகக்கூடாது என்ற ஒரு மகத்தான பொது இலட்சியத்தின் கீழ் ஒன்று திரள முன்வரவேண்டும்.

இதற்கு முதலில் செய்யப்படவேண்டியது, இறந்தகாலத்தை வெட்டித்திறந்து பார்ப்பதுதான். அதாவது ஒரு பிரேதப்பரிசோதனை - போஸ்ட்மோட்டம்.

இறந்தகாலத்தை ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் ஓர் அரசியல் ஒழுக்கம், ஓர் அறிவியல் ஒழுக்கம், ஒரு கலை இலக்கிய ஒழுக்கம், ஒரு ஊடக ஒழுக்கம்.

இறந்தகாலத்தை காய்தல் உவத்தல் இன்றி விமர்சித்தால் அன்றி இனி ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலமே கிடையாது. அத்தகைய ஒரு பிரேதப் பரிசோதனைக்குத் தேவையான துணிச்சலற்ற எவரும் ஈழத்தமிழர்களுக்கு தீர்க்கதரிசனம் மிக்கதொரு எதிர்காலத்தை காட்டமுடியாது.

பிரேதப் பரிசோதனை என்ற சொல் இங்கு மிகப்பரந்த ஆழமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வரை யுத்தகளத்தில் காட்டப்பட்டதை விடவும் மிக உயர்வான வீரத்தையும் தியாகத்தையும் இது வேண்டி நிற்கிறது. அதாவது பிரேதப் பரிசோதனை செய்யும் ஒருவர் தேவைப்பட்டால் தன்னுடைய தலையையும் வெட்டித் தராசில் வைத்து நிறுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த நோய்க்கூறான அம்சங்கள் அனைத்தும் கண்டறியப்படவேண்டும். ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். முழுச் சமூகமுமே தன்னை ஒரு கூட்டுச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய களங்கள் எல்லாத் துறைகளிலும் எல்லா தளங்களிலும் அரசியல் அறிவியல் கலை இலக்கியம் ஊடகம் போன்ற எல்லாத்துறைகளிலும் திறக்கப்பட வேண்டும்.

மே 17 -ற்கு முன்பு வரை விடுதலைப் புலிகளை விமர்சிப்பதை ஓர் அரசியல் ஒழுக்கமாகவோ அல்லது அறிவியல் மற்றும் கலைஇலக்கிய ஒழுக்கமாகவோ கொண்டிருந்த அனைவரும் அணி தோல்விகள் அற்ற ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனவெளியாக அதை விரிவுபடுத்த வேண்டும்.

அச்சத்தின் காரணமாகவோ அல்லது யுத்தத்தின் வெற்றிக்காக தியாகம் செய்யப்படும் ஒன்றாகவோ வெளிப்படையாக அபிப்பிராயம் கூறா ஓரியல்பு ஆயுதப்போராட்டம் நெடுகிலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் அதாவது மே 17-ற்குப் பின்னரும் யாராவது வன்னி அகதி ஒருவர் தன்னுடைய கசப்பான அனுபவங்களில் இருந்து கதைக்கும் போது ஏனைய தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அதை வரவேற்பதில்லை. முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியோடு நொந்து போயிருக்கும் ஒர் அரசியற் சூழலில் இது போன்ற விமர்சனங்கள் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கே உதவக் கூடும் என்று ஓர் அபிப்பிராயம் படித்த தமிழர்களில் ஒரு பிரிவினரிடம் காணப்படுகிறது. இது வரை இருந்ததோடு சேர்த்து இன்னும் சிறிது காலத்திற்கு மௌனமாக இருந்தால் என்ன என்றும் கேட்கப்படுகிறது. குறிப்பாக இப்படி அபிப்பிராயப்படுவோரில் அநேகர் மே 17-ற்கு முன்புவரை விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பெரும் போக்கே நிலவுகிறது. விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முடியாது போனதால் வந்த குற்றவுணர்ச்சியின் பாற்பட்ட ஒரு கழிவிரக்கமே இதுவென்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் ஈழம் மறுபடியும் தமிழகச் சந்தைகளில் பண்டமாக விற்கப்படுகிறது என்கிறார்கள். எதுவோ எதன் காரணமாக ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ அதைக்குறித்த வாதப்பிரதிவாதங்களிற்கான ஒரு பகிரங்க அரங்கு பெருந்திரள் ஜனப்பரப்பில் இதுவரையிலும் திறக்கப்படாதிருப்பது மிகவும் மோசமானது. இப்படியே போனால் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்பது எப்போது? விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தோன்றியிருக்கும் கழிவிரக்கம்; கைவிடப்பட்டதான உணர்வு; எதிர்த்தரப்பிற்கு மேலும் வெற்றிகள் கிடைத்து விடக்கூடாது என்ற தவிப்பு போன்றவைகள் காரணமாக கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக சமூகத்தின் மீது கவிந்து படிந்திருக்கும் ஒரு கனத்த மௌனம் மேலும் தொடரப்படும் ஓர் ஆபத்து தென்படுகிறது.

தமிழ்ச்சான்றோர், ஆய்வாளர்கள், கலை இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் ஊடகக் காரர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு இந்த மௌனத்தை உடைத்தெறியவேண்டும். உலகையே வியக்கவைத்த தமிழ்வீரமும், தியாகமும் ஏன் காலாவதியாகின, ஏன் வீணாயின என்ற கேள்விக்கு விடை காணப்படவேண்டும். இந்த கால்நூற்றாண்டுக்கு மேலான மௌனம் உடைக்கப்படாத படியால்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் துலக்கமற்று காணப்படுகிறது. எனவே ஈழத்தமிழர்கள் இனியும் மௌனமாயிருக்க கூடாது. இப்போது நிலவும் இடைமாறு காலகட்டத்தை சுயவிசாரணைக் காலமாக, சுயவிமர்சனக் காலமாக மாற்றி இறந்தகாலத்தை வெட்டித்திறக்கவேண்டும்.

இறந்த காலத்தில் வாழ்தல் அல்லது மம்மியாக்கம் செய்யப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்தல் என்பது ஒரு சமூகத்தை அந்த இறந்து போன நம்பிக்கைகளோடு சேர்த்து அழுகச் செய்துவிடும். இறந்தகாலத்தில் வாழ்தல் என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தோல்வியில் வாழ்தல்தான். தோல்விக்கு காரணமான கிருமிகளுடன் சேர்ந்து வாழ்தல்தான். எனவே இறந்தகாலத்தை சரியானபடி எடை போடவேண்டும் அப்படி செய்தால்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் திட்டமிடலாம். அதற்கு முதலில் துணிந்து பிரேதப் பரிசோதனையில் இறங்கவேண்டும். இறந்து போனவர்களை மறந்து போகாமலிருக்கவும் இதை உடனடியாக செய்யவேண்டும். இறந்து போனவர்களுக்கு வரலாற்றில் உரிய இடத்தையும் உரிய கௌரவத்தையும் கொடுப்பதற்காகவும் இறந்தகாலத்தை சரியானபடி எடைபோடவேண்டும்.

தற்பெருமைமிக்க எல்லாச்சிறிய இனங்களிடமும் உள்ளதுபோல ஈழத்தமிழர்களிடமும் ஒரு வியாதி உண்டு. அதாவது வெற்றிகளிற்கெல்லாம் உள்ளேயிருக்கும் சக்திகள் போற்றப்படும். அதே சமயம் தோல்விகளிற்கெல்லாம் புறச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும் அல்லது புறச்சக்திகளின் கைக்கூலிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்படும் அகச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும். இந்த இடத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றை மனந்திறந்து ஒப்புக்கொள்ளவேண்டும். வீழ்ச்சிகளிற்கெல்லாம் காரணம் புறச்சக்திகள் என்பதை விடவும் புறச்சக்திகளால் தோற்கடிக்கப்படும் அளவிற்கு அகச்சக்திகள் தீர்க்க தரிசனமற்றும் சாணக்கியமற்றும் நெகிழ்ச்சியற்றும் மூடுண்டும் காணப்பட்டன என்பதே.

எனவே ஒரு முழு அளவிலான மனந்திறந்த துணிச்சலான பிரேதப் பரிசோதனையே இப்போதுள்ள உடனடித் தேவை. இனியும் இறந்தகாலத்தை ஒரு இராணுவ ரகசியம் போல மூடிவைத்திருக்க முடியாது.

குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகச் சூழலில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு சான்றோரும் அதை உடனடியாகத் தொடங்கலாம்.

தமிழ்ச்சக்தி சிதறிக்கிடக்கிறது. தமிழ்ப்பலம் சிதறுண்டு கிடக்கிறது. தமிழர்கள் தங்களை புத்திசாலிகள் என்றும் தீரர்கள் என்றும் சுழியர்கள் என்றும் தந்திரசாலிகள் என்றும் தற்பெருமை பேசியதெல்லாம் வீண். எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்ததும் இல்லை.

அறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே.

வீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.

அறிவுதான் ஆயுதம்
அறிவுதான் சக்தி
அறிவுதான் பலம்
அறிவுதான் நிரந்தரம்
புத்திமான் பலவான்

- நிலாந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It