அலர் பற்றிய முதல் குறிப்பு வாய்மொழியாய் என்னுடன் பகிர்ந்து கொண்ட அத்தருணம் ... நான் இதுவரை அறியாத கவிதாசரணின் இதிகாசமாய் விரிந்து இன்று "அலர் எனும் மகா உன்னதமாய் என் முன் ... அலர் பற்றி கவிதாசரண் பேச ஆரம்பித்தவுடன் வழக்கத்திற்கு மாறாக நான் அமைதியாக இருந்தேன். அவர் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மொழிகளின் கற்பிதங்கள் மறைக்கும் கதைகளை கண்கள் எப்போதும் மறைக்காமல் சொல்லிவிடும் தானே.!  அவர் தன்னை மறந்து தன் அடிமனதில் பல ஆண்டுகள் திறக்காத கதவுகளைத் திறந்து கொண்டிருக்கிறார். திறக்கட்டுமே.. இதில் மண்டி கிடக்கும் இருள் விலகட்டுமே. இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ரகசியச் சாவிகளைப் பத்திரப்படுத்துவது.?

kavithasaran bookஇப்போது அவரால் திறக்கமுடியவில்லை என்றால் இனி எப்போதும் அது சாத்தியப்படாது என்ற சின்ன புரிதல் மட்டுமே அந்த விசாலமான அறையில் எங்கள் இருவருடனும் இருந்தது. அத்தருணம் கனமானப் பொழுதாக நீண்டது. ஓர் அசரீரி போல ஒலித்த அவர் குரல், அப்போது அந்தக் கண்களில் வெளிப்பட்ட கனவுகள், அந்த அறை எங்கும் வியாபித்தது. இந்தக் கவிதாசரணை நான் அறிந்திருக்கவில்லை என்ற எண்ணம் வந்தவுடன் அவ்விடத்தில் நானொரு மூன்றாம் மனுஷியாக உட்கார்ந்திருந்தேன். அதை அவரும் உணர்ந்திருந்தார். அதைத்தான் அவர் என்னிடம் எந்த தீர்வுகளையும் எதிர்ப்பார்த்து உரையாடல் நடத்தவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்.

"அண்மையில் புதியமாதவி சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்ததில் அலர் பற்றிய தகவலைப் பரிமாறிக்கொண்டேன். சற்றுக் கூடுதலாகப் பரிமாறிக் கொண்டதாக என்னுள் ஓர் எண்ணம். அவர் எனக்கு புதிய வழி சொல்வார் என்பதைவிடவும் யாரோடாவது பேசினால் மனம் சமாதானம் அடையும் அல்லவா? அந்த சமாதானத்துக்கு மாதவி நம்பகமானவராய்த் தெரிகிறார் என்பதாலும் தான் " (பக் . 68)

... அலர் ஒரு கற்பிதமா? கனவா? மாயையா? பல ஆண்டுகள் அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட சிற்பம் என்பது அவருடைய புத்தக வாசிப்பு அனுபவங்களின் ஊடாக நான் வந்தடையும் புள்ளி. . (அதிலும் குறிப்பாக "தெய்வம் தெளிமின்", "அடங்கல்", "புழுதிக்கோலம் " புத்தகங்கள்).

நான் அறிந்த அம்மா திருமதி கவிதாசரண் அல்ல அலர் கவிதாசரண். திருமதி கவிதாசரண் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அலர் கவிதாசரணை அடக்கி வைத்துவிடமுடியாது. அலர் வேறு கவிதாசரண் வேறல்ல. பிரிந்து வாழ்ந்திருந்தாலும் சேர்ந்தே சுவாசித்த ஈருடலாய் அலரும் கவிதாசரணும்.

ஐம்பூதங்களின் சேர்க்கையே உயிர் என்று சொல்கிறது அறிவியல். சுவாசிக்கும் காற்றாய் கண்ணுக்குத் தெரியாத வேர்களைத் தாங்கும் நிலமாய், பச்சையம் வற்றாமல் வளர்த்து ஆளாக்கும் நீராய், ஆண் பெண் சமூக உறவுகளின் வட்டத்திற்குள் அடைபடாத ஆகாயமாய்... இறுதியில்.. கடந்த காலத்தின் நிகழ்காலத்தில் கறைகளை தன் மவுனத்தாலும் பொறுமையாலும் எரித்துப் பொசுக்கி சாம்பாலாக்கும் நெருப்பாய் ...அந்தச் சாம்பலையே உரமாக்கி கவிதாசரணை விசுவரூபமாக்கும் சக்தியாய்.. இப்படியாக ஜீவனைப் பிரசவிக்கும் ஐம்பூதமாய் அலர் . கவிதாசரணின் சக்தியாய் அலர் .. அலர் கவிதாசரண்.

இதழே ஓர் இயக்கமாய் வாழ்ந்த என் ஆசான் கவிதாசரண் அவர்களின் இயங்குசக்தி அலர் என்பதன் எழுத்து ஆவணமாய் இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும்..

புத்தகம் என் கைக்கு வந்தப் பின் இந்த 5 நாட்களுக்குள் 3 தடவைகளுக்கும் அதிகமாக வாசித்தாகிவிட்டது. மகாபாரத இதிகாசம் போல கதைப் பாத்திரங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக விரிகிறது. விரிய விரிய வாழ்க்கை சரித்திரத்தின் ஆழம் பெண்ணுலகின் ஆழியாய் என்னைத் தனக்குள் மூச்சுத் திணற, முக்கி எடுக்கிறது.

ஆனையம்மாளும் ஜலகண்டேஸ்வரியும் அலரும் திருமதி கவிதாசரணும் நல்லம்மாவும் நீமாவும் சோனாவும் இசையும் ... ஏன் இந்த உன்னதப்பக்கங்களில் சிறிய கரும்புள்ளியாக உருவம் தெரியாமல் ... கவிதாசரணுடன் வாழ்ந்து அவர் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்ணும்... ஒவ்வொரு பெண்ணும் கவிதாசரண் என்ற புள்ளியைச் சுற்றி வருகிறார்கள். இந்தப் பெண்களுக்கு கவிதாசரண் வெறும் ஆண்மகனாக மட்டுமே இருந்திருந்தால் இக்கதை பிற புனைவுகள் போல பத்தில் ஒன்றாக படித்துவிட்டு கடந்து சென்றிருக்கும் புதினமாகி இருக்கும்.. ஆனால் இந்தப் பெண்களுக்கு கவிதாசரண் மகாபிரபுவாக ஆகச்சிறந்த தலைவனாகவே இருக்கிறார்.

இப்பெண்களின் கற்பிதங்கள் கவிதாசரணின் வாழ்க்கையில் மேடு பள்ளங்களை உருவாக்கிக்கொண்டே இருக்க்கின்றன. அனைவரும் கவிதாசரண் என்ற ஆளுமையை கண்ணனைக் கொண்டாடும் கோபியர்கள் போல கொண்டாடிக் கொண்டாடி ஓர் இதிகாச தலைவனாக்கி விடுகிறார்கள். இப்பெண்களின கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் கவிதாசரணின் பிம்பத்தை கட்டமைப்பதில் ஒவ்வொரு செங்கலாக அடுக்கப்பட்டு உன்னதங்களை நோக்கி உயரே எழும்பி நிற்கின்றன. இந்தக் கோபுரத்தின் கருவறையாக இருக்கும் ஆனையம்மாள் கருவறையின் சிலைக்கு உயிரூட்டுகிறாள். கவிதாசரணுக்காகவே பெற்று வளர்த்துவிட்ட நேர்த்திக்கடனாய் எப்போதோ ஒலித்த ஜலகண்டேஸ்வரியின் வாக்கை சத்தியவாக்காக ஆக்கும் பிரயாசையில் அலர் எனற இதிகாச தலைவி உருவாக்கப்படுகிறாள்.

பார்வை இழந்தவனுக்கு தன்னை மணமுடித்துவிட்டார்கள் என்ற ஒரு மனநிலையில் தன் கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரிதேவியை அரண்மனையின் அதிகாரபீடங்கள் ... கணவன் காணாத புற உலகை காந்தாரியும் காண விரும்பவில்லை என்ற கற்பிதத்தை அவள் மீது ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கற்பிதத்தை

அரண்மனைப் பெண்கள் கொண்டாடுகிறார்கள். இதுவே  காந்தாரியின் தலையில் முள்கிரீடமாய் ஏறி அமர்ந்து கொள்கிறது. அவளால் கடைசிவரை அவர்கள் கற்பித்த கற்பிதங்களிலிருந்து வெளியில் வர முடியவில்லை.

அலர் மீதும் சுமத்தப்பட்ட கற்பிதங்கள் அலரை ஆகச்சிறந்த உன்னதமாக்கி இருக்கலாம். ஆனால் ஆசாபாசங்களை அனுபவித்த ஒரு சாதாரண மனுஷியாக வாழவிடவில்ல. சாதாரணங்கள் அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. ஜலகண்டேஸ்வரி ஜானகிராமனின் "அம்மா வந்தாள் " புதினத்தின் அம்மாவைப் போலவே தனக்கான பாவ விமோசனம் தேடி அலைகிறாள். ஆனையம்மாளிடம் "தன் மகளைத் தொடாதே .. அவள் தோஷம் உனக்கு வேண்டாம் என்று சொல்லும் ஜலகண்டேஷ்வரி "மகளின் குழந்தையை உத்தமியாக்கி என் பிள்ளைக்கு நேர்ந்துவிடு " என்று வேண்டுகிறாள். காவிரியும் கரைக்கமுடியாத தன் பாவத்தை இந்த நேர்த்திக்கடன் செய்து கரைத்துவிட நினைக்கும் பெண்ணின் கண்ணீர் இந்த நேர்த்திக்கடன். ஒருவகையில் சொல்லப்போனால் ஜலகண்டேஷ்வரிககு இந்த நேர்த்திக்கடன் அவளாகவே கற்பித்துக் கொண்ட ஒரு பாவவிமோசனம்.

தன் மகள் உன மகனுக்காகவே ஒரு பெண்மகவைப் பெற்றுக் கொடுப்பாள். அவள்  ஒரு நேர்த்திக்கடன் என்ற கற்பிதம் அலர் ஜனிப்பதற்கு முன்பே அலர் மீது சுமத்தப்படுகிறது. அந்தக் கற்பிதத்தை நிஜமாக்கும் போராட்டத்தில் அலர் மகா உன்னதமாகிவிடுறாள் கவிதாசரண் எழுத்துகளில்.

சிலப்பதிகாரத்தின் மாதவி தான் பெற்றெடுத்த மணிமேகலையை இளவரசனின் காதலை உணர்ந்தும் விலக்கி வைக்கும் துறவை எப்படி தன் ம்கள் மீது சுமத்தி வைத்திருந்தாளோ அப்படியே ஈஸ்வரியும் தன் மக்ள் வழி பேத்தி மீது சுமத்தி வைத்திருக்கிறாள். மாதவியோ காதலை விலக்க வைத்து அமுதசுரபியுடன் தன் மகளை அலையவிட்டாள். ஜலகண்டேஸ்வரியோ காதலையோ ஓர் அமுதசுரபியாக தன் பேத்தியின் கைகளில் கொடுத்து காதலுக்கு, ஆண்- பெண் உறவுக்கு ஓரு இதிகாசத்தை படைத்துவிடுகிறாள். ஆனால் காதலை விலக்கி வைத்தவளும் சரி, காதலையே அமுதசுரபியாக சுமந்தவளும் சரி, மனுஷியாக ... வாழ்வில்லை. நிஜங்களில் வாழ்வதைவிட கற்பிதங்களில் வாழ்வது இவர்களுக்கு சுகமான வலியாகவே இருந்துவிடுகிறது.

"அம்மா... , நீ உண்மை என்பதைவிடவும் கற்பிதம் என்னும் போது பேரழகாத் தெரியிறே. உண்மையை விடக் கற்பிதம் தான் உண்மையாய் இருப்பதின் உயர்ந்தபட்சத் தகுதியோ என்னவோ.. எனக்கே பல சமயங்கள்ல நான் பாட்டுக்குப் பேசிண்டே போகும் போது அலர் என்னோட கற்பிதமாத்தான் பேசறாளோன்னு பிரமிப்பு ஏற்படுதுப்பா..." (பக்.. 48)

கற்பிதங்கள் கட்டமைக்கும் ஆளுமைக்கு எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும் சில அடிப்படை கேள்விகளைப் புறம் தள்ளிவிட்டு உன்னதங்களைக் கொண்டாடுவது சாத்தியப்படவில்லை. அதனால் மாணிக்கவாசகம் என்ற பெயரில் கவிதாசரணுக்கும் தேவைப்பட்டிருக்கிறது "அலர் - இன்னொரு வெளிச்சம்" என்ற இணைப்பு.

இலையுதிர்காலத்தில் இளைப்பாறும் தருணத்தில் அலர் என்ற ஆலமரத்தடியில் காற்றில் அசைந்தாடும் கிளைகளின் ஊஞ்சலில் ஆடுகிறது கவிதாசரணின் காலம்.

ஆகப்பேரழகு மிக்க அம்மா தன் ஆசைக்கனவுகளை எல்லாம் பாலை மணற்குறுணையாய் பதியமிட்டுவிட்டு, கட்டக்கடைசியில் வாழ்வின் தீராமையாக " என் கடைசிமூச்சு உன் மடியில் தான் டா " என்று அப்பாவை வேண்டி பரிதவிப்பதாக மாணிக்கவாசகம் சொல்கிறார் (பக் 145). ஆனால் அலரின் கிளைகளில் கூடுகட்டவோ நிரந்தரமாக தங்கிவிடவோ நிழலிலொரு கயிற்றுக்கட்டிலில் துயிலவோ மறுக்கிறது கவிதாசரண் என்ற ஆளுமை. ஒரு வகையில் அந்த ஆளுமைதான் அலர் என்ற பெண்ணை ஒரு சக மனுஷியாக வாழவிடாமல் தெய்வீகப்பேயாக அலைய விட்டிருக்கிறது.

" நான் உன் அம்மா கூடவே இருந்திடலாம்டா. அது பெரிய விஷயமே இல்ல. ஆனா அப்படி இருந்துட்டா, நான் ஒரு தூசு மாதிரி அற்பமா தாழ்ந்து போயிடுவனோன்னு பயமா இருக்கு. அப்படியொரு தன்னகங்காரத்தை அம்மாவுக்கு எதிரா, அம்மாவை மீறி அவளே எங்கிட்ட விதைச்சிருக்காம்மா. அதை இப்பத்தான் நான் உணர்றேன்... அம்மாவும் நானும் ஒன்னுங்கைறதெல்லாம் அதுக்கும் மேலதாம்மா. அப்படி ஒன்னு நடந்திட்டா , அம்மாவுக்கு அது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!" (பக் 148)

அவரே இசையிடம் சொல்லும் இக்காரணம் அலரின் கற்பிதங்களை நிஜமாக்கும் கவிதாசரணின் விசித்திரமான வாழ்க்கை.. கற்பிதங்கள் விசித்திரமானவை மட்டுமல்ல, பல தருணங்களில் கற்பிதங்களே நிஜ வாழ்க்கையைத் தீர்மானிப்பதும் ஆட்டுவிக்கும் சக்தியாக இருப்பதும் அலைக்கழிப்பதும் தொடர்கிறது.

இதையே அலரின் பார்வையில் சொல்லப்போனால்,

"அவருக்குள்ள ஆற்றாமை அல்லது அதிதீவிரம் என்னன்னா, அவரு நல்ல கனவு காண்றாரு. நல்லா கற்பனை பண்றாரு. ரொம்ப நல்லா எழுதி தொலைக்கிறாரு. அதுக்கும் மேலே  தான் காண்ற கனவெல்லாம் நிஜம்னு நம்பறாரு. கற்பிதத்தை எல்லாம் அற்புதம்னு பிரமிக்கிறாரு. நாம அழுது புலம்பறதை எல்லாம் தன் மகாகாவியத்தோட பிரம்மாண்டம்னு கூத்தாடுறாரு.."

அலர் எனும் மகா உன்னதம் ... கூத்தாடுகிறது, மலைக்கோட்டைகள் அதிர்கின்றன. எங்கோ ஒலிக்கிறது... இன்னும் கால்டுவெல்லின் பறை ஓசை. 

- புதிய மாதவி

Pin It