அனைத்து சமூக வெளிகளிலுமிருந்தும் ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொரு வெளிகளாக அத்துமீறி நுழையும்போது அவர்கள் ஆண்முதன்மைச் சமூகத்தால் கொடூரமாக ஒடுக்கப் படுகிறார்கள். மீறல்களைச் செய்த பெண்களின் மீது ஒழுக்க மின்மை, ஓடுகாலி, பரத்தை போன்ற வசைகளைச் சுமத்தி அவற்றையே பெண்கள் மீதான முதன்மை ஆயுதங்களாகச் சுழற்றிவிடுவதே ஆண்முதன்மைச் சமூகத்தின் காலாதிகாலத் திற்குமான யுத்த தந்திரமாயுள்ளது. இலக்கியவெளியும் இதனி லிருந்து தப்பித்துவிடவில்லை.

பெண் எழுத்துகளின் உச்சமாக நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தால் துதிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஆண்டாளின் கவித்துவத்திற்குத் தொடர்ச்சியே இல்லாமல் ஆண்டாள் தெய்வப்பிறப்பாகவும் தொன்மமாகவும் நிறுவப்பட்டிருந்த தமிழ் இலக்கியச்சூழலில் பத்து வருடங்களிற்கு முன்னர் அலையெனப் பெண் எழுத்தாளர்களின் எழுச்சி சாத்தியமான போது அவை சிறுபத்திரிகை வட்டாரங்களிற்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்ததுடன் வெளியிலும் கடுமையான கண்டனங்களைப் பெற்றன. சொல் புதிது, பொருள் புதிதெனச் சுழன்றடித்த பெண்மொழியின் அலையில் ஆண்களால் வடிவ மைக்கப்பட்டிருந்த மொழி அமைப்புக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்த ஆண் விமர்சகர்கள் பதறிப்போனார்கள்.

‘நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி' என்றார் பெரியார். நமது மொழி சாதியை மட்டுமல்ல ஆணாதிக்கத்தையும் காப் பாற்றுவதே. ஆண்களின் நலன்சார் நோக்கிலிருந்து கட்டப் பட்டதுதான் நமது மொழி. இந்த மொழி அமைப்புக்குள், மரபுக்குள், ஒழுங்கிற்குள், அழகியலுக்குள் நின்றுகொண்டு பெண்கள் எழுத மறுத்தனர். எப்போதும் போலவே அறிவுஜீவி களிற்கும் தொழில்முறை ஆய்வாளர்களிற்கும் வசப்படுவதற்கு முன்னமே பெண் படைப்பாளிகளிற்கு அவர்களிற்கான தனித் துவமான பெண்மொழி சாத்தியமாயிற்று.

பெண்கள் அவர்களின் தனித்துவமான மொழியுடன் அரசியல் வெளிகளிற்குள் நுழையும்போது ஏற்கனவே நிறுவனப்பட்டி ருக்கும் மொழியுடன், நிறுவப்பட்டிருக்கும் அரசியல் கருத்து களையும் அந்தக் கருத்துகளைச் சுமந்திருக்கும் அரசியல் அணி களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் அணிகள் ஏற்கனவே முன்முடிவுகளுடனும் கறாரான வேலைத் திட்டங்களுடனும் மொழி, கலாசாரம், மரபு குறித்தெல்லாம் திட்டவட்டமான மதிப்பீடுகளுடனும் அளவுகோல்களுடனும் உள்ளன. அவ்வளவும் ஆண்களால் உருவாக்கப்பட்ட மதிப் பீடுகளும் அளவுகோல்களும். இந்த அளவுகோல்களிற்கு கட்டுப்பட வேண்டிய அவசியமோ, அந்த அளவுகோல்களின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் கேள்விகளிற்கும் சீண்டல்களிற்கும் பதிலளிக்கவேண்டிய நிர்ப்பந்தமோ பெண் படைப்பாளிக்குக் கிடையவே கிடையாது.

லீனா மணிமேகலையின் சமீபத்திய கவிதைகள் குறித்து ம.க.இ.கவினர் எழுப்புவது கேள்விகளை அல்ல. ஏனெனில் அவர்களிற்கு அந்தக் கவிதைகள் மீது கேள்விகள் ஏதுமில்லை. அந்தக் கவிதைகள் ஆபாசமானவை, மார்க்ஸியத்தை இழிவு செய்பவை என்றெல்லாம் அவர்களிற்கு உறுதியான முடிவு களுள்ளன. அவர்களது குற்றச்சாட்டுகளை அவர்கள் உறுதியாக முன்வைத்திருக்கிறார்கள். இப்போது அவர்களிற்குத் தேவைப் படுவது லீனா மணிமேகலையிடமிருந்து ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே.

பதினைந்தாம் தேதி, கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள் நடத்திய ‘இந்து மக்கள் கட்சிக்கு' எதிரான கண்டன ஒன்றுகூடலில் புகுந்து ம.க.இ.கவினர் எழுப்பியதும் கேள்விகளல்ல. ‘‘உனது அனுபவத்தில் நீ பார்த்த சி.பி.அய், சி.பி.எம் கட்சியினருடைய ஆண்குறி வகைமாதிரிகளைச் சொல்'' என்று கேட்டது வெறும் ஆணாதிக்கத் தடித்தனம் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. ஒரு விசாரணையில் பொலிஸ் அதிகாரியோ, மதத் தலைவரோ கேட்கும் முதல் கேள்வி இவ்வாறுதான் இருக்கும். ஸ்டாலின் காலத்தில் கலை இலக்கியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்தவரும் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான ஸ்தானோவ் சென்ற நூற்றாண்டின் ருஷ்ய இலக்கியத்தின் ஆகச் சிறந்த பெண் கவியான அன்னா அக்மதோவாவை ‘பாதி பரத்தை, பாதி கன்னியாஸ்திரி' என்று தீர்ப்பிட்டார். பொலிஸ் அதிகாரிக் கும் மதத் தலைவருக்கும் பொலிட்பீரோ உறுப்பினருக்கும் வர்க்க அரசியல் வேறாயிருக்கலாம், ஆனால் பால்நிலை அரசியல் ஒன்றுதான். அங்கே வர்க்கத்தை முந்திக்கொண்டு குறிகள்தான் துருத்திக்கொண்டு நிற்கின்றன. அல்லாமல் ‘பரத்தை'யென்றும் ‘தேவடியாள்' என்றும் எப்படியொரு கம்யூனிஸ்டின் வாயிலிருந்து வார்த்தை வரும்? அந்தக் குறி அரசியல் அவர்களின் ஆண்முதன்மை உளவியலிலிருந்து உருவாவது.

ஒரு தொழிலாளியோ, முதலாளியோ வர்க்கத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டவர்களல்ல. வர்க்கம், பால், சாதி, இனம், நிறம் போன்ற அடையாளங்களும் சேர்ந் ததுதான் மனித உயிரி. வர்க்க சாராம்சவாதத்திலிருந்து பெண் களுடைய, தலித்துகளுடைய, கருப்பர்களுடைய இன்னபிற ஒடுக்கப்பட்டவர்களின் தனித்துவமான பிரச்சினைகளை அணுகும் அரசியல்முறைமை மற்றதின் இருப்பை மறுக்கும் கடும் அடக்குமுறை அரசியல் நிலையையே தோற்றுவிக்கும். தங்களது ஆணாதிக்கக் கொழுப்பெடுத்த கேள்வியை நியாயப் படுத்துவதிற்கு ம.க. இ.கவினர் தந்தை பெரியாரை துணைக்கு அழைத்திருக்கிறார்கள். ‘நாகம்மா தேவடியா' என்று சுவரில் எழுதியிருந்தபோது அதைப் பெரியார் அலட்சியமாக எதிர் கொண்டு புறக்கணித்தார், லீனா மட்டும் ஏன் கொதிக்கிறார்'' எனக் கேட்கிறார் வினவு. நாகம்மையாரைத் தேவடியாள் எனப் பழித்ததிற்குப் பெரியார் வேண்டுமானால் அலட்சியமாகச் சிரித்திருக்கலாம், ஆனால் தன்னைத் ‘தேவடியா' எனச் சொல் பவனை எதிர்கொள்ளும்போது நாகம்மையார் நிச்சயமாகச் சிரிப்பால் அந்தக் காவாலியை எதிர்கொண்டிருக்கமாட்டார். வசமான செருப்பால்தான் அவனை நாகம்மையார் எதிர் கொண்டிருப்பார்.

ஆணாதிக்க வக்கிர மொழியும் தடித்தன மான கருத்தியலும் கவிந்திருக்கும் இந்தச் சூழலில் அதை எதிர்கொள்வதற்கு வேறென்ன மார்க்கத்தை ஒரு பெண்ணிற்கு இந்தச் சமூகம் விட்டுவைத்திருக்கிறது. பெண்களை வல்லாங்கு செய்த ஆண்டைகளின் ஆண்குறிகளை பூலான்தேவி அறுத்து எறிந்ததும் ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறுதான். இந்தப் பால்நிலை அடிமைச் சமூகத்தில் ஆணுக் கும் பெண்ணுக்குமான தன்னிலைகளும் உணர்வுகளும் அவற் றிலிருந்து கிளம்பும் எதிர்வினைகளும் நிச்சயமாகவே வேறு வேறானவை. இதில் பெரியாருக்கும் விலக்கில்லை. அதைப் பெரியார் சரியாகப் புரிந்துகொண்டதின் வெளிப்பாடுதான் ‘ஆண்களின் தலைமையில் பெண்கள் விடுதலை அடைய முடி யாது', ‘பெண் விடுதலைபெற ஆண்மை அழிய வேண்டும்' போன்ற அவரின் புகழ்பெற்ற சொல்லாடல்கள். கூட்டத்தில் கேள்வி எழுப்புவது சனநாயக உரிமை என்றும் அதை மறுப்பது சனநாயக மறுப்பு அல்லது கோழைத்தனம் என்பதும் ம.க.இ.கவினது வாதம். அங்கே ம.க.இ.க. எழுப்பியது கேள்விகளையல்ல ஆணாதிக்க வசைகளையே என்பதைச் சற்றே ஒருபுறத்தே வைத்துவிட்டு அவர்களது வாதத்தைப் பரிசீலிக்கலாம்.

ஒருதரப்பினர் தமது கருத்துகளை பரப்புரை செய்வதற்காக நடத்தும் கூட்டத்தில் மாற்றுத்தரப்பினர் கேள்விகள் கேட்க வழங்கப்படும் நேரத்தில் கேள்விகளைக் கேட்பதென்பது வேறு. ஆனால் கூட்டத்தை நடக்கவிடாமல் ஆரம்பத்திலி ருந்தே வசைகளை எழுப்பிக் குழப்பநிலையை எற்படுத்து வதை ஒருபோதும் கருத்துச் சுதந்திரம் என்றோ கலகத்தனம் என்றோ வரையறை செய்ய முடியாது. அது கலகத்தனம் என்றால் இன்றைய தேதியில் இந்தியாவிலேயே ‘சிவசேனா' தான் ஆகச் சிறந்த கலகக்காரர்கள். ம.க.இ.க. அன்று நடத்தியது கலகம் கிடையாது, அது வெறும் காவாலித்தனம் மட்டுமே. ம.க.இ.கவினர் அவர்களாக ஒரு கூட்டத்தை நடத்தும்போது அதை நடத்தவிடாமல் கூச்சலிட்டு இடையூறு செய்வதோ அல்லது அவர்களது எழுத்துகளிற்கு தடையைக் கோருவதோ தான் அவர்கள்மீதான கருத்துச் சுதந்திர மறுப்பு ஆகுமே ஒழிய இன்னொரு தரப்பினரின் கருத்துக் களத்தை வன்முறையாலும் அய்ம்பது பேரின் ஆள்பலத்தாலும் கைப்பற்ற விடாமல் ம.க.இ.கவினரை தடுப்பது கருத்துச் சுதந்திர மறுப்பாகாது. ம.க.இ.கவினது ஆணாதிக்கத் தடித்தனக் கேள்விகளுக்கெல்லாம் மானமுள்ளவர்களால் மேடை அமைத்துக் கொடுக்க முடியாது. அதைச் சகித்துக்கொண்டிருக்கவும் முடியாது.

நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவு செய்து எழுத்தாளர்கள் கூட்டத்தை ஒழுங்கு செய்வார்களாம், அங்கே ம.க.இ.கவினர் வந்து கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களைப் பேசவிடாமல் கூச்சலிட்டுக் குழப்பம் செய்து அரங்கைக் கைப்பற்றப் பார்ப்பார்களாம். இது எந்தவூர் சனநாயகம்? ம.க.இ.கவினர் தாராளமாக பிரச்சாரம் செய்யட்டும். லீனா வுக்கு கவிதை எழுத உரிமையுள்ளதுபோலவே அதை விமர் சிக்க ம.க.இ.கவினருக்குப் பூரண உரிமையுள்ளது. ஆனால் அது மற்றவர்களின் கூட்டங் கூடும் உரிமையை, கருத்துச் சொல்லும் உரிமையை இடையூறு செய்யாத சனநாயக நெறிகளுடனான விமர்சனமாக இருக்கவேண்டும். இப்போது கூட லீனா மணிமேகலையின் கவிதைகளைச் சுவரொட்டிகளாக ஒட்டப்போவதாக ம.க.இ.கவினர் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். அதுவொரு வரவேற்கத்தக்க சனநாயகபூர்வமான போராட்டம். அந்தச் சுவரொட்டிகளை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்வது அவர்களின் உரிமை. அதை அவர்கள் லீனா மணிமேகலையின் முகத்தில் கொண்டுபோய் ஒட்டாதவரை அதில் நமக்கு எதிர்ப்பதற்கு ஏதுமில்லை. கவிதைகள் சுவரொட்டிகளாக்கப்பட்டு ஊர் முழுதும் ஒட்டப் பெறும் பாக்கியம் அநேகமாகத் தமிழ் இலக்கியச் சூழலில் சுப்பிரமணிய பாரதிக்குப் பிறகு லீனாவுக்குத்தான் வாய்த்திருக்கிறது என நினைக்கிறேன்.

சிறுபத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகள் ஒரு அய்நூறு, ஆயிரம் வாசகர்களைத் தாண்டிப் பரவலாகப் போய்ச் சேர்வதில்லை என்ற மனக்குறை எப்போ துமே படைப்பாளிகளிற்கு உண்டு. அதிலும் கவிஞர்களின் நிலை மேலும் மோசமானது. கவிதையைக் கவிஞர்கள் மட் டுமே படிக்கிறார்கள் என்ற நக்கல் பேச்சும் இலக்கிய வட் டாரங்களிற்குள் உள்ளதுதான். குறிப்பாக அடித்தள மக்களிடம் நமது எழுத்துகள் சென்று சேர்வதில்லை என்ற மனக்குறையும் படைப்பாளிகளிற்கு உள்ளது. ம.க.இ.கவினர் லீனாவின் கவிதைகளைச் சுவரொட்டிகளாகத் தொழிலாளர்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் ஒட்டப்போவதாக அறிவித்துள்ளார்கள். சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியம் அடித்தளமக்களிடம் சென்று சேர்வதில்லை என்ற வசை இவ்வாறாக ம.க.இ.கவினரால் கழியட்டும்! .....

வினவு என்மீது வைக்கும் குற்றச்சாட்டு இன்னும் கேவலமானது. நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேனாம். எனது இத்தனை வருடகாலச் செயற் பாட்டில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதராவான ஒரு சொல்லை என்னிடமிருந்து வினவுவால் ஆதாரம் காட்ட முடியுமா? ஆனால் டக்ளஸின் அரசியலை நான் தொடந்து எதிர்த்துவருவதற்கு ஆதாரமாக என்னால் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பக்கங் களை ஆதாரமாக என்னால் முன்வைக்க முடியும். கொஞ்ச மாவது அரசியல் நேர்மை இருப்பின் பணம் பெறும் இந்தக் கேவலமான குற்றச்சாட்டை வினவுவோ ம.க.இ.கவோ நிரூபித்துக்காட்டட்டும். நேரில் வருவது, வீடுகளிற்குப் போவது எல்லாவற்றையும்விட தாங்கள் எழுது வதற்கு யோக்கியத்துடன் பொறுப்பேற்றுக்கொள்வதே முக்கியமானது என்பது மக்கள் கலை இலக்கியக் கழத்தினருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

எனது ‘பழி நாணுவார்' என்ற முந்தைய மறுப்புக் கட்டுரையில் வினவு ஏற்கனவே எழுதியிருந்த அப்பட்டமான பொய்களைக் குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தேன். ‘செங்கடல்' திரைப் படம் தமிழக மீனவர்களுக்குப் புலிகளால்தான் பிரச்சினை என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுவருகிறது / இப்படத்திற் காக சமுத்திரக்கனியிடம் லீனா ஒரு கோடி ரூபாய்கள் பெற் றிருக்கிறார் / லீனா மணிமேகலையும் சேர்ந்து தீபக்கைத் தாக்கினார் என்றெல்லாம் வினவு எழுதியவை கலப்பில்லாத பொய்கள் எனச் சுட்டிக் காட்டியிருந்தேன். பின்னூட்டங்களிற்குப் பின்னூட்டம் மின்னல் வெட்டில் விரல் சொடக்கில் பதில் சொல்லிவரும் வினவுக்கு நான் சுட்டிக்காட்டிய அவரின் பொய்கள் குறித்துக் கடந்த இரண்டு மாதங்களாக எதுவும் கருத்துக் கூறத் தெரியவில்லை. இப்போது புதிதாக டக்ளஸ் தேவானாந்தாவிடம் பணம் வாங்குகிறேன் என்றொரு புத்தம் புதிய பொய்யுடன் அவர் வந்துள்ளார். பொய்களைக் குறித்துக் கேள்வி எழுப்பினால் அவற்றுக்குப் பதில் இன்னொரு புதிய பொய்யா? நல்லாயிருக்குதய்யா உங்கள் புதிய ஜனநாயகம்.

இந்த நேரடியான, மிக எளிமையான கேள்விகளிற்குப் பதில்களைச் சொல்லாமல் சுற்றிவளைத்து ‘கவிதையைப் பற்றிய உனது கருத்தென்ன?', ‘இந்தக் கட்டுரை கம்யூனிஸ எதிர்ப்புக் கட்டுரை' என்றெல்லாம் நீங்கள் பொருள் மாறிப் பேசிப் போக்குக்காட்டுவதற்கு நான் உங்களை அனுமதிக்கப்போவதில்லை. லீனா மணிமேகலையின் கவிதைகளிற்கு மட்டு மல்ல உங்களால் ‘சரோஜாதேவி' எழுத்துகள் என வசை பொழியப்படும் எல்லாப் பெண்கவிகளின் எழுத்துகளிற்கும் நான் நீண்டகாலமாகவே ஆதரவளித்து வருகிறேன். எனது கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் நீண்டகாலமாகவே அவற்றிற்காக வரிந்துகட்டி வாதாடி வருகிறேன். யோனி, முலை, மயிர் என்று எழுதுவதும் கம்யூனிச தலைவர் களை பெயர் சுட்டி எழுதுவதும் இலக்கியமா என்று தயவு செய்து என்னிடம் கேட்காதீர்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யின் முதல்வரியையே மாற்றிப்போட்டு ‘‘இதுநாள் வரையிலு மான ஏடறிந்த சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் பெண் குறிகளுக்கும் ஆண்குறிகளுக்கும் இடையே நடத்த இடை யறாத போராட்டத்தின் வரலாறேயாகும்'' எனப் பலவருடங் களுக்கு முன்னமே ‘பத்துக் கட்டளைகள்' என்று நான் கதை எழுதியிருக்கிறேன். உங்களால் ‘ஆபாசம்' எனச் சொல்லப் படும் சொற்களை வைத்து எழுதி ஒரு ‘ஆபாசப்பட்டறை' போலவே நான் இலக்கியத்தில் இயங்கி வந்திருக்கிறேன். ஒரு கூட்டத்திலோ அல்லது தெருவிலோ என்னை மடக்கி ‘‘எங்கே உனது அனுபவத்தையும் வகைமாதிரிகளையும் சொல்?'' என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் உங்களுக்குப் பதில் சொல்லப்போவதுமில்லை. பழனி சித்த மருத்துவரைத் தவிர வேறு யாரிடமும் நான் எனது அனுபவங்களைக் குறித்துக் கலந்தாலோசிப்பதாக இல்லை.

இல்லாத ஊதியப் பிரச்சினையை வைத்து உங்களுக்கு வசதி யான இந்த நோஞ்சான் ‘வர்க்க எதிரி'யை நீங்கள் கட்டமைத்து காட்டியிருப்பதுபோலவே எனது இந்தக் கட்டுரையை ஒரு கம்யூனிஸ எதிர்ப்புக் கட்டுரையாக நீங்கள் கட்டமைக்கவும் முயற்சிக்கலாம். ஆலய நுழைவுப் போராட்டங்கள், சங்கராச் சாரிக்கு எதிரான போராட்டங்கள், தாமிரபரணியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம், பார்ப்பன எதிர்ப்பு மாநாடு என மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய பல் வேறு சமூகப் போராட்டங்களை மிகுந்த மதிப்புச் செய்பவன் நான். ஈழப் பிரச்சினையில் ம.க.இ.கவினரின் நிலைப் பாட்டை ஆதரித்து நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். எனது வலைப்பக்கத்தில் வினவு இணையத்தளத்திற்கு நான் இணைப்புக் கொடுத்தும் வைத்திருந்தேன். ஆனால் 15ஆம் தேதிக் கூட்டத்தில் நீங்கள் நடத்தியது கம்யூனிஸ்டுப் போராட் டமல்ல. அன்று நீங்கள் நடத்தியது காவாலித்தனம். அய்ம்பது பேர்கள் உடனிருக்கிறார்கள் என்ற திமிரில் அன்று நீங்கள் காட்டியது ஆள்பலத்தை முன்னிறுத்திய அதிகாரம்.

அன்றைய கூட்டத்தில் நீங்கள் காட்டிய வன்மம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான ஒடுக்குமுறை. அன்று நீங்கள் லீனா மணிமேகலையிடம் எழுப்பிய கேள்வி ஆணாதிக்கக் கருத் தியல் வன்முறை. இவற்றைச் சொல்வதால் நான் கம்யூனிஸ விரோதியாகிவிடமாட்டேன். இவற்றைச் சொல்லாவிட்டால் தான் நான் கம்யூனிஸ விரோதி. ஏனெனில் ‘‘ஒடுக்குமுறை, வன்முறை, அதிகாரத்தைத் தவ றாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் எந்தவொரு வடிவத்தா லும் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் விதிவிலக்கேதுமின்றி அவையனைத்திற்கும் பதிலடி கொடுப் பதும் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதும் ஒரு கம்யூனிஸ்ட்டின் கடமை'' என்று விளாடிமீர் இலியீச் லெனின் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

- ஷோபாசக்தி இணையதளம்

Pin It