திருடன் போலிஸ் உறவு ஊரறிந்த கதை. போலிஸ் நக்சலைட் பிணக்கு நாடறிந்த கதை. திருடன், போலிஸ், நக்சல்பாரி, பைத்தியம் ஆகிய நான்கு பேர்களும் ஒர் இரவின் சந்திகின்றனர். அந்த நிகழ்ந்த உறவு மொட்டாகி, மலர்ந்து. பழுக்க வைக்கப்ப்பட்ட கதைகள் பல உலாவி கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கதை இது!

திருடன் என்றால் எவ்வளவு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாலும் திரும்ப உயிருடன் வரும் பில்லா தமிழ் சினிமாக்கள், அணுகுண்டுகளை திருடும் ஜேம்ஸ்பாண்டு ஹாலிவுட் சினிமாக்கள், பல ஆயிரம் கோடிகளை திருடிய நீரா மோடிகளையும் போன்ற கற்பனை மாய வலைக்களுக்குள் சிக்கி கொள்ளக் கூடாது.

கெட்டும் பட்டணம் சேர் என்ற நினைப்பில் தனது பசியை, தனது குடும்பத்தின் பசியை தீர்க்க சென்னை ஓடி வந்த ஒர் ஏழை கிராமவாசிதான் நம்ம திருடன். பல பேர்களுக்கு சென்னை வாழ்வளித்தாலும் இவனை திருடனாக்கியதும் கூட சென்னைதான்.

பசிக் கொடுமைக்கு கீழே கிடந்த இரும்பை அதாவது சாக்கடை செல்லும் கால்வாய்களில் அமைக்கப்பட்ட இரும்பு மூடி வட்டங்களை எடுத்து பழைய இரும்பு வியாபாரியிடம் போட்டு இரண்டு நாட்கள் பசியை ஓட்ட முடிந்ததை அவன் அறிந்து கொண்ட பெரும் கதையை இந்த சிறுகதைக்குள் கொண்டு வர இயலாது.

இரும்பு மூடி வட்டங்களை சில மாதங்களாக திருடிக் கொண்டிருந்தவனை திருட்டு பொருட்களை வாங்கும் முதலாளி தனக்கு பதிலாக போலிசாரிடம் அவனை அனுப்பினார். சிறிது வாட்டம் சாட்டமாக இளம் வயதினாக இருந்த அவனை வைத்து செய்தது அந்த காவல்நிலையம்.

சில நாட்கள் தங்கள் சட்டவிரோத போலிஸ் கஸ்டடிக்குள் வைத்துக் கொண்டு புனைக்கதை திட்டங்களைத் தீட்டி கொண்டிருந்தது. உண்மையான பணக்கார குற்றவாளிகளை தப்பவிட்டு அப்பாவியான இவன் மீது பொய் வழக்குகளை சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவதற்க்காக புனைய திட்டம் தீட்டி கொண்டிருந்தது.

போலிஸ் என்றால் போலிஸ், போலிஸ்காரன்தான். வாசகர்கள் முன் முடிவுக்கு இதை விட்டு விடுகிறேன். காவல்த்துறை மக்கள் நண்பன் என்பதில் இருந்து காவல்த்துறை நடுநிலையானது அல்ல ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்பது வரை பல கண்ணோட்டங்கள் நிலவுகின்றன.

நமது வாசகர்கள் தேர்ந்த புத்திசாலிகள் என்பதால் அவர்கள் அளவிற்கு கற்பனைகளை பல முனைகளிலும் ஒட்ட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

நக்சல்பாரி என்றால் தமிழரசன், பாலன் அளவிற்கும்… இன்னும் அதைவிட தண்டகாருண்யா மாவோஸ்ட் அளவிற்கு கற்பனைகளை விரிவுப்படுவதுவதை தயவு செய்து நிறுத்தி விடுங்கள்! 130 கோடி மக்கள் வாழும் இந்திய திருநாட்டின் உணவு, உடை, இருப்பிடம், சூழலுக்கு அச்சுறுத்தலாக பொய் பிரச்சாரம் செய்து அதற்கு பல ஆயிரம் கோடிகள் செலவுகள் பண்ணி மத்திய மாநில அளவுகளில் பெரும் திட்டங்கள் போட்டு கொண்டிருக்கும் அளவிற்கு நம்ம கதையில் வரும் நக்சல்பாரி ஒர்த் (மதிப்பு) இல்லை என்பதற்கு அவரது வாழ்க்கை தொடர் சிறு சம்பவத்தை கூறலாம்…

நக்சலைட் முன்னாள் நக்சலைட்டாக மாறி சில ஆண்டுகள் போய் விட்டது. ஆனாலும் பின் தொடரும் நிழலாக இந்த நால்வர் சந்திப்பு வழக்கு வாய்தாவிற்கு அவர் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் இப்படியாக குற்றம் சாட்டப்பட்டவர்களை அக்குஷ்டுகள் என்று பெயர்களை உரக்க அழைத்து வாய்தா நாள் போட்ட பிறகு வழக்கறிஞரும் நக்சலைட்டும் திரைப்படம் காணச் சென்றார்கள்.

படம் என்னமோ நல்ல படம்தான்! திரை அரங்கத்தை விட்டு வெளியே வந்ததும் தேநீர் குடித்து விட்டு பிரியும் வேளையில் நிறுத்தி நிதானமாக கடும் எரிச்சலுடன் கூறினார். “மனிஷசனா நீ… படம் பார்க்க விடமாம பக்கத்தில் உட்காந்திட்டு கண்ணீர் சிந்தி பெருமூச்சு விட்டு தேம்பி கிட்டு கிடக்கிற.. வயசு அய்ம்பதுதான் ஆச்சி இல்ல.. அரை கிழடு ஆயிட்ட…

இந்த மாதிரி ஆயிரம் காட்சிகள சினிமாவுல… நிஜத்திலும் பார்த்திருப்ப… நீயெல்லாம் நக்சலைட்ன்னு சொல்லுறதிக்கே லாயக்கு இல்ல… நீயெல்லாம் எப்படி நக்சலைட் கட்சியில் சேர்ந்த… உன்னை எவன் சேர்த்தான்.. அதில இருக்க வேண்டிய ஆளெ இல்ல நீ… ’

இப்படியான அர்ச்சனைகளை பல செய்து விட்டு டூவீலரில் விட்டால் போதும் என்று முன்னாள் நக்சலைட்டின் இருந்து வக்கீல் தப்பி ஓடினார். ஆனால் விதி சும்மா இருக்குமா என்ன? வழக்கை போலிசார் ஆண்டாண்டாக இழுத்து அடிக்கும் வரையில் வக்கீலுக்கும் இவருக்குமான நட்பு தொடர்ந்தது இன்னொரு தொடர் கதை.

இதிலிருந்து இந்த நக்சல்பாரியை பற்றிய உங்கள் கருத்தை உருவாக்கி கொள்ளுங்கள்!

அன்றைக்கு, அன்றைய கடந்தபோன தேதியில் நக்சல்பாரி கண்ணோட்டத்தில் இருந்த ஒரே காரணம் தவிர இந்திய குற்றவியல் சட்டப்படி அவர் எந்த குற்றங்களும் செய்யவில்லை.

யாரையோ தேடி மப்டியில் ஒரு பொலீஸ்காரர் நக்சல்பாரியின் வீட்டிற்கு வந்து அவர் வீட்டு கதவை தட்டுகிறார்… இல்லை… உடைக்கிறார் என்பதுதான் பொருத்தமான சொல்லாக இருக்கும்.

வந்தவரிடம், ”நீங்கள் யார் என்பது எனக்கு எப்படி தெரியும்.. உங்க அடையாள கார்டை காண்பியுங்க ” என்ற ஒரே ஒரு கேள்வி கேட்டதுதான் அந்த நக்சல் பாரிகாரர் செய்த மாபெரும் குற்றமாகும். முதுகலை பட்டம் பெற்றவர் அவர்.. இதை கூட கேட்கவில்லையெனில் அவர் கல்வி கற்று… வாழ்ந்து… இருந்து… தான் என்ன ஆகப்போகிறது.

இப்படி கேள்விகள் கேட்பவர்கள் வாழக் கூடாது என்பதற்க்காகதான் மக்களின் நண்பன் என பீற்றி கொள்ளும் போலிஸ் துறை ஒரு பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் இழுத்து விட்டது.

அந்த அரும் பெரும் வரலாற்று சட்டத்தை காக்கும் பணியை தன்னை பெத்த படைப்பாளி என்ற நினைப்பில் குப்பை கவி என்று தன்னை முன் ஒட்டு போட்டு விளம்பரப்படுத்தும் ஒரு போலிஸ் அதிகாரி செய்தான்.

போலிஸ் அடையாள அட்டையை காண்பிக்கச் சொன்னதற்க்கா இருபத்தைந்து ஆண்டுகள் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்க வைத்தது தமிழக காவல்துறை.

பின்னர் அவர் முன்னாள் நக்சலைட்டாக மாறிய வழக்கு நடத்தி நடத்தி நடத்தி தான் குற்றவாளி இல்லை என்று நிருபித்தார். இது கதையா உண்மைச் சம்பவமா என்று இந்த சிறுகதையை படிப்பவர்களுக்கு யாருக்காவது சந்தேகம் இருக்கும். இருக்க வேண்டும்!

அப்படியான சமான்ய இந்தியப் பிரஜை யாரும் மப்டியில் லத்தியுடன் வரும் போலிஸ்காரரிடம் அல்லது காக்கிச் சட்டை போட்ட போலிஸ் அதிகாரி நடுசாலையில் குச்சியை காட்டி மடக்கும் பொழுதும், வேறு எங்காவது அவரின் அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி கேட்டு பாருங்கள்!

ஆதார் அட்டை அனைவருக்கும் அவசியம், கட்டாயம் என்று காதுக்களுக்குள் ஒவ்வொரு முறை அலைபேசி ஒலிக்கும் பொழுதும் வலியுறுத்தும் இந்த காலத்தில் மக்கள் பணி செய்யும் போலிசாரிடம் அடையாள அட்டை கேட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

போலிஸ் லத்தி அடி

லத்தி அடையாளம் இல்லாமல் அந்த இடத்தில் இருந்து அந்த இந்தியன் செல்ல இயலாதுப்பா..?

இன்னும் துள்ளினால்…

போலிஸ் ஸ்டேசன் இழுத்துச் சென்று லாடம் கட்டப்பட்டு கட்ட பஞ்சாயத்து நடத்தி அனுப்புவார்கள்…

ர் ர் ர் முக்கியம்… இல்லாவிட்டால் அதற்கும் பொய் வழக்கும் போடப்படும்.

போலிஸ்காரர்ர்ர்ர்கள் மட்டும் இந்தியர்களை ன் ன் ன் ன் என்று விளப்பது சட்டபூர்வமாக சமூக அங்கீகரமான எழுதப்பட்ட மகிழ்மதி சாசனம்!

இன்னும் சில நேரங்களில் பணம் கையூட்டு கொடுத்து லத்திஅடி அடையாளத்துடன் வெளியே தப்பித்தோம் பிழைத்தோம் என்று சாமான்ய மனிதன் நொந்து நூலாகி வர வேண்டி இருக்கும். இப்பொழுதிற்கு இந்த அறிமுகம் போதும்.

பைத்தியம் என்றால் பைத்தியம்தான்!

சமூக நீதி, நியாயம், நேர்மை என்று பேசினால் கிறுக்கு பய, கீழ்பாக்கம் கேஷ் என்ற சென்னை பாஷை சொலவடை இயல்பான புழக்கத்தில் இருப்பவை.

இன்னும் மெத்த படித்தவர்கள் பெத்த்த மனுஷங்க.. சமூக நீதி, நேர்மை என்று பேசினால்

“முத்தன கீழ்பாக்கம் கேஷ்டா இது”

என்று முன் ஒட்டுச் சேர்த்து விளிப்பார்கள்.

மனச்சோர்வு, பதற்றநோய், மனப் பிறழ்வு, தூக்கமின்மை, போதை அடிமை, மனச் சிதைவு, தீவிர மனவெழுச்சி, மிகைக்குழப்பம், மனவளர்ச்சிக் குறை, மூப்பு மறதி என்று வகைகள் அனைத்தையும் லூசு, அரை பைத்தியம், மெட்டல் கேஷ், பைத்தியம் என்ற இந்த ஒற்றை சொல்லில் விளிக்கும் விழிப்புணர்வு கொண்ட சிவில் சமூகமாக தமிழ் சமூகம் பல நேரங்களில் இருக்கிறது.

அனைத்து மன சிக்கல்களையும், பிரச்சனைகளையும் பைத்தியத்துடன் இணைக்க முடியுமா என்ன?

நீளமான லத்தியை இளஞனின் ஆசன வாயில் சொருகி தட்டி தட்டி உள் உறுப்புகளை இரவு முழுக்க லட்டியைச் சுழற்றி சிதைப்பதற்கு பணிச்சுமை மன அழுத்தம்தான் காரணங்களாக என்ற சாத்தான்குளம் போலிஸ் டைரி குறிப்புகள் சொல்வதாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்யும் பொழுது இவைகளுக்கு என்ன விளைவுகளோ?

இந்த பைத்தியத்தை பொருத்த மட்டில் அவருக்கு முதன் முதலில் மாயக்குரல்கள் கேட்கக் தொடங்கிய பொழுது அவர் வயது பதினெட்டு. ஆரம்பத்தில் இது பிரமையா அல்லது உண்மையா என்று அவருக்கு தெரியவில்லை.

ஒரிரு ஆண்டுகளுக்கும் பின் முகம் தெரியாத நபர்கள் அவரைப் பற்றி தவறாகப் பேசுவது போல அவருக்கு கேட்கத் தொடங்கிது ஒரு நாள் அவரை கொல்ல யாரோ தொடர்ந்து வருவதாகவும், சிலர் கும்பலாக கூடி சதி செய்வதாகவும் அவர் எண்ணத் தொடங்கினார்.

சில நேரங்களில் இவைகள் அனைத்தும் கலவையாக வந்தன. அவருக்கு கடும் கோபங்கள் வந்து அருகில் உள்ளவர்களிடம் வீண் சண்டைகளைப் போட தொடங்கினார். அதனால் அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

சில காலத்திற்குப் பிறகு அவர் சிறிது குணமானதால் வீட்டில் வைத்து பார்த்து கொள்வதாக கூட்டி வந்தனர். சில மாதங்கள் கவனித்தும் பார்த்தனர். பின்னர் படிப்படியாக கைவிட்டனர். அவர்கள் பொருளாதாரச் சுமை அந்த அளவிற்குதான் மருத்துவம் பார்க்க, பராமரிக்க முடிந்தது.

வாடகை வீட்டில் குடியிருக்கும் சிறு நடுத்தர குடும்பத்திற்கு அவ்வளவுதான் முடிந்தது அவர்கள் பொருளாதாரச் சுமை அந்த அளவிற்குதான் மருத்துவம் பார்க்க, பராமரிக்க முடிந்தது. அவர் தெருக்களில் திரிய ஆரம்பித்தார். எங்கிருந்தோ ரயில் ஏறி சென்னை வந்து விட்டார்.

சென்னை எழும்பூர்தான் அவர் வந்து சேர்ந்த இடம்! ஒரு கோடி மக்கள் வாழும் இடத்தில் அவரை கவனிக்க ஆள் இல்லை. வேடிக்கை பார்க்க மட்டும் சில சமயங்களில் கூட்டம் கூடும். அவர் அதிஷ்டம் அவரை எந்த மனிதாபிமானமுள்ள மனிதனும் சந்திக்கவில்லை.

மனநல காப்பகத்தில் சேர்க்க யாரும் முயற்சி செய்யவில்லை. தெருக்கள்தான் அவர் தங்குமிடம். இங்குள்ள சூழ்நிலை மெல்ல மெல்ல அவரை முழு பைத்தியமாகி விட்டது. சென்னை அவருக்கு சில கெட்ட வார்த்தைகளை பழகி கொடுக்கும் புண்ணியத்தை செய்தது.. மாய கட்டளைகளை எதிர்த்து இந்த கெட்ட வார்த்தைகளை அவர் தனாக தனக்கே நினைவில்லாமல் சில சமயங்களில் பயன்படுத்துவார்.

அப்பொழுது ஆடி மாதம்..

அம்மன் உடுக்கை மேளம் சீரான தாளலயத்துடனான இசையும் ஓங்கார குரலின் பாட்டும் தூரத்தில் எங்கோ விட்டு விட்டு கேட்டு கொண்டிருந்தது, விட்டு விட்டு தூறலும், சில சமயம் கனத்த மழையும் பெய்த அந்த நாள் உண்மையில் ரம்மியமானது.

சென்னையின் கடும் வெயிலை விரட்டி இதமான குளிர் தென்றல் வீசிக் கொண்டிருந்த நாள் அது. அந்த நாளின் இரவில் இந்த நால்வரையும் சென்னையின் மையத்தில் உள்ள ஒரு காவல்நிலையம் வலுகட்டாயமாக சந்திக்க வைத்தது.

போலிஸ் நிலையத்திற்குள் புதைந்து கிடக்கும் லாக்கப்களுக்கு என்று தனித்துவமான வாசனை உண்டு. அந்த வாசனையை அனுபவித்து நுகர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் கொடூரத்தை உணர முடியும். நூறாண்டுகளாக மனித ஆன்மாக்களில் ஊமையாய் குமுக்கியது. அழுதது. அரற்றியது. பெருங்குரலாய் கதறியது… இப்படி இப்படியான நிறைந்த, துயர் பெருமூச்சு வெப்பக்காற்று அடைத்து கிடக்கும் மிக கனத்த இருள் குகைகளாய் இருக்கும் இடங்கள் அவை.

பிரிட்டிஷ் கால கட்ட லாக்கப்புகள் இன்னும் கூடுதல் நிறையும், சோகமும் அப்பி கிடக்கும். அத்தகையதொரு லாக்கப்பில் திருடன் அடைத்து வைக்கப்பட்டு கிடத்தான். பல பொய் வழக்குகளை அவன் மீது போட தினமும் தீனி போட்டு பலி இடப்போகும் கிடையாய் போன்று வளர்த்து கொண்டிருந்தனர்.

அந்த காவல் நிலையத்தின் பணியில் ஒவ்வொரு போலிசாரும் பணிக்கு வரும் பொழுதும் பணி முடிந்து செல்லும் பொழுது லாக்கப்பில் உள்ள திருடனை நோக்கி கெட்ட வார்த்தையோ அது பாலியல் கொச்சை இம்சை வார்த்தையாக பெரும்பாலும் இருக்கும் அல்லது லத்தியில் ஒரு அடி, தட்டு, குத்து என்பதாக இருப்பது ‘வழக்கமாக’ ஒன்றாக இருந்தது. இது போலிசாரின் கடமைகளில் ஒன்றாக மாற்றப்பட்டு இருந்தது.

நக்சல்பாரியை பேண்ட் சர்ட்டை கழட்டி விட்டு ஜட்டியுடன் உள்ளே போக சொன்னார்கள். 

“நா அரசியல் விசாரணை கைதி..” எரிச்சலுடன் எதிர்சொல் ஒலித்து முடிப்பதற்குள் அவர் வாயை வெற்றிலை போட வைத்தனர் போலிசார்!

தனியாக மாட்டி கொண்ட அந்த நடுத்தர வர்க்க பின்னணி நக்சல் எதிர்ப்புகல் நாலு அப்புகள், அடிஉதைகளில் முடிவிற்கு விட்டது. அதுவும் கூட இவரது பழைய வழக்குக்கும் இந்த காவல்நிலையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அத்தோடு முடிந்தது. இல்லையெனில் இன்னும் ‘பூஜை’ பலமாக இருந்து இருக்கும்

மழை வாசமும், மெல்லிய குளிரும் இருந்ததால் இவர் லாக்கப் அழுகல் நாற்றத்தில் இருந்து தப்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இரவு டிபனாக அய்ந்து இட்லிகள் ஏதோ தெருவோர கடையில் வாங்கி வந்து தந்தனர். நக்சல்பாரி ஏதோ காரணத்தால் சாப்பிட மறுத்து விட்டார்.

“நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்ற அலட்சிய புன்னகையுடன் அதை இயல்பாக போலிசார் கடந்து விட்டனர்.

அந்த திருடன்தான் நக்சல்பாரியை சாப்பிட சொல்லி வற்புறுத்தினார். வயிறு காலியாக இருந்தால் மழைக்குளிர் அதிகமாக வாட்டும் என்று அக்கறையுடன் எச்சரிக்கை செய்தார். அடக்குமுறைக்குள்ளாகும் பொழுது இயல்பாக எழும் ஒடுக்குமுறைக்கு எதிரான உயிர்வாழ்வின் ஒற்றுமை உணர்வின் பரிவு.

ஒருசில மணி நேரத்திற்குள் அந்த கட்டு காவலுக்குள், அதட்டல்களுக்கும் இடையில் குசுகுசு மெல்லிய குரலில் பகிரப்பட்ட இருவரின் வாழ்க்கை கீறல்கள் ஒர் உறவாக துளிர்த்தது. அந்த பந்தத்தின் பரிவுவாகவே இது வெளிப்பட்டது.

காற்றின் திசை மாறியதால் உடுக்கை ஒலி சட்டென்று ஆவேசமாக தெளிவாக கேட்டது. அதையும் மீறி அய்யோ அம்ம்மா.. அய்ய்யோ அம்மமா என்ற வலி துயர ஒலி சட்டென கேட்டது.

ஒருவர் லாக்கப் எதிரில் நீண்டு கிடந்த தாழ்வாரத்தில் வந்து விழுந்தார். நான்கு காக்கிச் சட்டைகள் அவரை லத்திகளால் அடித்து துவைத்து கொண்டிருந்தனர்.

அவர் அலறி துடிதுடித்து கொண்டிருந்தார். திருடனும், நக்சல்பாரியும் அந்த அடியை பார்த்து அரண்டு போயினர். செய்வதறியாது விக்கித்து திகைத்தனர்.

அவர்கள் கை ஒய்ந்ததும், பூட்சு கால்களால் மிதி மிதியென மிதித்தனர். அடித்தாளமுடியாமல் மயக்கி போய் போலிஸ் சுற்று சுவர் வெட்ட வெளியில் அவர் விழுந்தார். அந்த மழை குளிரிலும் வெற்று உடம்புடன் லாக்கப்பில் இருந்தவர்களுக்கு விதிர்த்து வியர்வை கசிந்து துளிகளாய் உடம்பில் அரும்பியது.

“ நிறுந்தங்கப்பா… பைத்தியக்காரன் செத்து கித்து போயிடப் போகிறான்..”

என்று காவல்நிலையத்திற்குள் இருந்து யாரோ புண்ணியவான் குரல் கொடுத்தனர். அப்பொழுதுதான் போலிஸ்காரர்கள் பைத்தியத்தை அடிப்பதை நிறுத்தினர்.

சட சடவென வானம் மழையாய் அடுத்த அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது. பைத்தியத்தை அடிக்கும் வன்முறைகாரர்களுக்கு எதிர்வினையோ, வானம் அழுகிறதோ என்று லாக்கப்பில் இருப்பவர்கள் முணு முணுத்தனர்.

“கட்டையில போறவனுங்க.. நாசமா போயிடுவங்க”

“தெவுடியா பசங்க… பொட்டை பசங்க..”

“எச்ச நாயுங்க…. ஓண்டிக்கு ஒண்டி வாங்கடா பார்க்கலாம்..”

வானிற்கு பொழிந்த அமுதம் பைத்தியத்தை மெல்ல தெளிவித்து விட்டது. மெல்ல முணு முணுத்தார். பின்னனியில் ஒங்காரமாய் அம்மம் உடுக்கை இலயத்துடன் ஒலித்தது. மழை நிற்க்கவும், உடுக்கை இசை பேரொலிக்கு எதிர் தாளமாய் கெட்ட வார்த்தைகள் மெல்ல அதிகரிக்கவும் செய்தன.

போலிஸ் நிலையத்திற்குள் இருப்பவர்கள் அனைவருக்கும் அவை கேட்டது. இயல்பான மனிதர்கள் எவரும் பைத்தியத்தின் செயல்களுக்கு எதிர்வினை ஆற்றுவது கிடையாது.

ஆனால்..அடுத்த அரை மணி நேரம் அங்கு அலறல்கள் தவிர எதுவும் கேட்கவில்லை. உடுக்கை இசை அலறலில் அமுக்கி காணாமல் போய் விட்டது. பின்பு ஒரே நிசப்தம்! மயான அமைதி!!

இப்பொழுது மெல்ல பம்பை ஒலி தாள இலயத்துடன் இதமாய் அதிர்வு அலைகளுடன் பரவி பரவி வியாபித்தது…

விட்ட தூறல் மழை மீண்டும் பெய்ய துவங்கியது. இதற்கு இணையாக அடிப்பட்ட வலியின் முணகல் ஒலிகள் பைத்தியத்திடம் எழுந்தது.

பம்பை இசை அதிர அதிர மீண்டும் அசிங்க அசிங்கமாய தனக்குள்ளாகவே திட்ட துவங்கினார்.

பைத்தியம் தங்களை திட்டுகிறதா, தன்னை தானே திட்டி கொள்கிறதா, அடித்த போலிஸ்காரன்களை திட்டுகிறதா, இந்த உலகத்தையே சபிக்கிறதா என்று திருடனுக்கும் புரியவில்லை, நக்சல்பாரிக்கும் புரியவில்லை. யாருக்கும் புரியவில்லை. புரியாது என்பதுதான் புறநிலையான உண்மை!

உண்மைகளை எப்பொழுது காவல்நிலையங்கள் சகித்து கொள்வது கிடையாது!

அடுத்த அரை மணி நேரம் குண்டாந்தடிகளால், பூட்ஸ் கால்களால் பைத்தியத்தை சிதைப்படுவதை காண சகிக்காமல் அவர்கள் இருவரும் விதிர்த்து போய் வியர்த்து நின்றார்கள்.

பைத்தியம் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதை விட அதிகமாக போலிஸ்காரர்கள் இப்பொழுது கெட்டவார்த்தைகளால் அதிக அதிகமாய் ஏதோ ஒரு ஆவேசத்துடன் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். தண்ணிபட்ட பாடாய் கெட்ட வார்த்தைகள் இயல்பாய் போலிஸ்காரர்களிடம் நிறைந்து கிடந்தது.

ஜாலியாக அடித்தார்கள். திமிராய் அடித்தார்கள். அதிகாரத்தின் வன்மத்துடன் அடித்தார்கள். அலட்சியமாய் அடித்தார்கள். இயலாமையாலும் அடித்தார்கள்.

ஜாலியாக போகிற போக்கில் இரண்டு அடிகள், நாலு மிதிகள் கொடுத்த போலிஸ்காரர்கள் பலர்.

பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்.. இவர்களை இரட்சியுங்கள் என்று எங்கோ யாரோ பாதிரியார் உரத்து கூறியது காற்றின் திசை மாறியதில் சன்னமாய் காவல் நிலையத்திற்குள்ளும் கேட்டது.

ஆனாலும் விடிய விடிய இவைகள் தொடர்ந்து மாறி மாறி நடந்தன..

திருடன், போலிஸ், நக்சல்பாரி, பைத்தியத்தின் சந்திந்த முதல் இரவை அதிகாலை கதிரவனின் பொன்னிற ஒளி பரவல்தான் ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வந்தது.

அதற்கு பிறகு பல ஆண்டுகள் பல நேரங்களில் திருடன் போலிசும், நக்சல்பாரியும் போலிசும், பைத்தியமும் போலிசும், திருடனும் பைத்தியமும், நக்சல்பாரியும் பைத்தியமும் வாழ்வின் போக்கில் நீண்ட நெடிய பயணத்தில் பல முறைகள் திரும்ப திரும்ப தனித்தனியாக சந்தித்து கொண்டு இருக்கின்றனர். மவுனமாக மனக்குகைக்குள் அழும் குரல் இந்த கேள்வியை எழுப்பி எழுப்பி விட்டு கொண்டிருந்தது!

சிறிய திருடனான தன்னை பயமுறுத்தி அனைத்து பொய்வழக்குகளையும் தானே செய்ததாக ஏற்று கொண்டு பெரிய திருடனாக்கும் மாயத்தை செய்யத்தான் பைத்தியத்தை இரவு முழுக்க அடித்தார்களே என்ற வேதனை கேள்வி திருடனை வாட்டி கொண்டிருந்தது.

நக்சல்பாரியிடம் ஒரு கேள்வி இருந்து உறுத்திக் கொண்டே இருக்கின்றது. தன்னைக் காயப்படுத்தி, மனவலிமை இழக்கச் செய்து தோற்கடித்து, அறச்சீற்றத்தை சிதைத்து சரணாகதியாக்க செய்ய பைத்தியத்தை இரவு முழுக்க போலிஸ் பைத்தியத்தை சிதைத்ததோ என்ற கேள்வி தொடர்ந்து ஆண்டு கணக்கில் சித்ரவதை செய்து கொண்டு இருந்தது.

எப்பொழுது இதற்கு பதில் தெரியும்?

உங்களுக்கு தெரியுமா?

(சாத்தான் குளத்தில் போலிஸ் சித்ரவதையில் உயிர் இழந்த சிறுவணிகர்களான தந்தை-மகனுக்கு அர்ப்பணம்)

- கி.நடராசன்

Pin It