காலடி அரவம் கேட்டு ஒற்றை பனை மரத்திலிருந்து இறங்கி வந்த காகம் ஈரம் காயாத சீவப்பட்டுக் கிடந்த நொங்கின் அருகில் அமர்ந்து கொத்தத் தொடங்கியது. பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்த பாதையில் சண்முகம் நடந்து கொண்டிருந்தான். அவனது பால்யம் கரைந்த பாதை. பல நகரங்களின் வெக்கை சுமந்து பால் மார்பில் முகம் சாய்த்தவனாய் பால்யத்தின் தடம் பதிந்த நிலத்தில் கால் பதிய நடந்தான்.

கொக்குகள் பறந்துக் கடக்க முடியாத வாணியக்குடி கண்மாய் வறண்டு நின்றது. அவனது மனம் போல அளக்க முடியாத எல்லை கொண்ட கண்மாய். இருபுறமும் வேலியாய் மண்டி நின்றன கருவேல மரங்கள். பளிங்கு போன்ற ஒளியுடனும், குளிர்ந்த அபரீதமான தாய் அன்புடனும் அவனது இளம் பிராயத்து கதைகளை தேக்கி நின்ற கண்மாய் இன்று வறண்டு காய்ந்த மீன்களின் வாடை தாங்கி நின்றது. கொக்குகளும், நாரைகளும் மறைந்துவிட்டன. 

சலசலத்து ஓடிய நீராய் அம்முவின் பால்ய முகமும் கொலுசுச் சத்தமும் பல நினைவுகளை அவனுள் கிளர்ந்தெழச் செய்தது. பசுமையான இளங்குருத்தாக அவனுள் பூத்து நின்றாள் அம்மு. ஈரம் சுமந்த இதயத்தோடு அவனது வாழ்வெங்கும் கண்ணாடிச் சருகுக்குள் மின்னிச் சுழன்ற கண்களோடு தட்டானாய் தொடர்ந்தாள் அம்மு.

சிலுசிலுத்த வேப்ப மரத்தடியில் கம்பீரமாக நின்றிருந்த 'பொய்யாமொழி அம்மன் கோவில்’ கிராமம் நெருங்கிவிட்டதை உணர்த்தியது. ஒற்றைக் கல்லும், ஊன்றப்பட்ட சூலாயுதமுமாய் ஒரு காலத்தில் நின்ற கோவில். அழகர் கோவில் மலையிறங்கி தனது பரிவாரங்கள் தொடர பயணப்பட்ட அம்மனை வேப்ப மரங்கள் சூழ்ந்த வனமும் நீண்டு அகன்ற கண்மாயும் கவர்ந்திழுக்க அங்கேயே தனது பரிவாரங்களோடு தங்கிவிட்டாள்.

கருத்த முகத்தில் சிவந்து ஒளிர்ந்த கண்கள். கல் மண்டபம் எழுப்பி அழகு பார்த்தனர் கிராமத்து சனங்கள். அருகிலேயே ஆதி வழிபாட்டுக்கல் அதே கருங்கல் நிலவாக பூசைகளை ஏற்று நின்றது. கருங்கல் அம்மனைச் சுற்றிலும் உலர்ந்த பூக்கள்; காற்றில் கலந்து மணத்தது சாமங்கி.

சண்முகத்தை முதலில் எதிர் கொண்டது நெஞ்செங்கும் பனை தடம் ஓடிய மாரியப்பன்தான். மாரியப்பன் என்ற பெயர் மறைந்து கிராமம் முழுக்க எல்லோருக்கும் 'பனையேறி'தான் அவன்; எப்பொழுதும் கள் நுரைத்த வாய். கள் இறக்க மரம் ஏறினால் ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு கள் அவன் கணக்கு. ஒரு நாளைக்கு நூறு மரம் ஏறி இறங்கும் வலு ஏறிய உடல்வாகு. கடைசியில் ஒரு பானைக் கள்ளும், கருவாடுமாகத்தான் முடியும் அன்றைய நாள் கணக்கு. 'இதெல்லாம் என்ன மசுரு செய்துவிடும்'.

தூரத்தில் வந்து கொண்டிருந்த சண்முகத்தை அடையாளம் கண்டு கொண்டான் பனையேறி. காளிமுத்து கோனார் வீட்டு விசுவாசமிக்க வேலையாள் பனையேறி. காளிமுத்து கோனார், காடெல்லாம் அறிந்தவன். அவர் மறைந்த நாளில் கிராமத்தை விட்டு வெளியேறிய சண்முகத்தின் நினைவு தோளில் தூக்கிப் போட்ட குட்டி ஆடாக ஒட்டிக் கொண்டுவிட்டது.

பனையேறி மாரியப்பனின் தோள் துண்டாய் படர்ந்து வளர்ந்தவன் சண்முகம். காய்ந்த கண்மாயின் ஊற்றுக்கண் திறந்து நீர் பெருகியதைப் போல பீறிட்ட பாசத்துடன் அவனை நெருங்கி அணைத்துக் கொண்டான் பனையேறி. சண்முகத்துக்கும் அந்த அணைப்பு தேவையாக இருந்தது. தாய் மண் ஈரத்தின் வெதுவெதுப்பில் ஆசுவாசமடைந்தான் சண்முகம். இருள் அடைந்த கருவேல மரத்திலிருந்து எம்பிப் பறந்து மறைந்தது மஞ்சள் குருவியொன்று.

வாணியக்குடி 'காளி' கோவிலின் சாமியாடி காளிமுத்து கோனார். அருள் வந்து சலங்கைக் கட்டிய அவரது ஆட்டத்தில் சனமெல்லாம் மூச்சடக்கி விதிர் விதிர்த்து நிற்கும். ஆக்ரோஷத்துடன் காளியின் துடி ஏறி சிவந்த கண்களோடு பதமேறிய அருவாள் மேல் நின்று மடையாகப் பெருகும் அருள் வாக்கு.

கோனாரிடம் மகனை ஒப்படைத்த திருப்தியோடு மறைந்து போனாள் சண்கமுகத்தின் அம்மா. மகளை உரித்து வைத்து நின்ற சண்முகத்தின் மேல் அத்தனை நேசத்தையும் கொட்டி வளர்த்தார் காளிமுத்து கோனார். அவரது அன்பில் மூழ்கி வளர்ந்தான் சண்முகம்.

சுற்று வட்டார கிராமங்களில் கோனாருக்கிருந்த மதிப்பும் மரியாதையும் துளியும் குறையாமல் சண்முகத்திற்குக் கிடைத்தது; ஊரார்களின் அன்பையும் பாசத்தையும் பருகி வளர்ந்தான். வாணியக்குடி வயக்காட்டு வரப்பு வழி நாலு தப்படி வைத்து நடந்தால் அடைந்துவிடும் தூரத்தில்தான் அம்முவின் கிராமம்.

அம்முவின் கிராமத்தை அடையாளம் சொல்லி நின்றது அரசமரம். அரசமரம் தன் கிளைகளை கைகளாக விரித்து ஆகாயம் தொடும் தாகத்துடன் நின்றது. மரத்தடி நிழலில் வீற்றிருந்து அருள்பாவித்து வந்த பிள்ளையார் பல தலைமுறைகளைப் பார்த்தவர். கிராமத்து திண்ணைகளை நிறைத்த வெள்ளெழுத்து விழாத கண்கள் கொண்ட கிழவிகள்.

கிராமத்து மூச்சொலியாய் இடைவிடாத வெத்தலை உரல் ஒலி; போயிலை எச்சில் சிவப்பில் ஊறித்தெறிக்கும் பூர்வீகப் புதிர்க்கதைகள். அரசமரத்துப் பிள்ளையாருக்குப் பத்தடி தூரத்தில் இடுகாட்டுக்காளி குடியிருக்கும் ஒற்றைப் பனை கூந்தல் விரித்து நின்றது. உச்சிப் பொழுதுகளிலும், சூரியன் அடைந்த பின்னும் விபரம் தெரிந்த ஊர் சனம் யாரும் அந்தப்பக்கம் நடமாடத் துணிவதில்லை.

பனைகளும், கதைகளும் நிறைந்த அம்முவின் கிராமம். கதை கேட்கும் ஆவலில் விழித்திருக்கும் அம்முவின் இரவுகள். எல்லா கதைகளிலும் பனை மரக்காளி வந்துவிடுவாள். அப்பத்தாவின் தலைமுடி கோதல் சுகத்திலும் கதையின் சுவாரஸ்யத்திலும் அப்பத்தாவின் மடியிலேயே தூங்கிப் போவாள் அம்மு.

கதை முடிந்த பின்னிரவிலும் பல ரூபங்களில் அம்முவின் உலககெங்கும் படர்ந்து நிற்பாள் பனை மரத்துக்காளி. நகரத்துச் சந்தைக்குப் போய் கடைசி பஸ்சேறி ஊர் திரும்பும் சனங்களோடு கூடை சுமந்து வந்திறங்குவாள். பனை ஏறி மறையும் வரை தடம் தெரியாது. கதை சொல்லாத மற்ற நேரங்களில் வெற்றிலை அரைப்பில் அசைபோடும் அப்பத்தாவின் வாய்.

உற்சாகமானது அம்முவின் காலைப் பொழுது. எப்போதும் நடந்தே அறியாதது அவள் கால்கள்; வரப்பெங்கும் முயலாய் தாவும் றெக்கை முளைத்த கால்கள். ஓடுகிற ஓட்டத்தில் கைகள் நீண்டு வேர்க்கடலைச் செடியை கொத்தாகப் பறித்து புத்தகப் பைக்குள் திணித்துக்கொள்ளும். புத்தகமெல்லாம் அப்பிக் கொள்ளும் ஈர மண். அரசமரத்துப் பிள்ளையாருக்குத்தான் கொத்து வேர்கடலை.

ஒரு கொத்து பச்சை வேர்கடலை படைத்து மூனு உக்கிப் போட்டுத்தான் பள்ளிக்கூடம் நகர்வாள் அம்மு. உக்கி போடாத நாட்களில் அவள் மனசெல்லாம் அப்படியொரு பாரம் அப்பிக் கொள்ளும். அன்றெல்லாம் பாடத்தில் கவனம் செல்லாது ஜடம் போல் அமர்ந்திருப்பாள். ஈரமும், பச்சை வாசமும் நிறைந்த வேர்கடலை கொத்து இல்லாமல் பிள்ளையாருக்கும் திருப்திப்படாது.

ஊர் சனம் படைக்கும் சுண்டலிலும், கொலுக்கட்டையிலும் அவர் மனம் லயித்ததில்லை. அவரின் நேசத்துக்குரியது அம்மு தினசரி படைக்கும் கொத்து வேர்கடலைதான். குழந்தைகளின் மீதான தீராப்பிரியத்தில் மீன் குஞ்சாக நீந்தித் திரியும் பிள்ளையாரின் நெஞ்சம். அபூர்வமான மனோரத உலகுக்குள் சஞ்சரித்தாள் அம்மு. அவளுக்குள் வேர் முண்டாக பொதிந்திருந்தது அதிசய பொக்கிஷம்; பச்சைக்கல் ஒளி மறைந்து திரியும் பொக்கிஷம்.

நெகிழ்வான அன்பின் சுரப்பில் நிறைந்த குளம் அம்முவின் நெஞ்சம்; தட்டான்கள் பூத்த குளம். மலர்களின் அடர்வில் தட்டான்களின் கண்ணாடிச் சருகு நிழலில் நகரும் குளிர்ந்த நீர் அம்மு. அரசமரத்துப் பிள்ளையார் கோவிலிலிருந்து பத்து பர்லாங் தொலைவில் அம்முவின் பள்ளிக்கூடம். ஓடுகள் வேயப்பட்டு புறாக்கூடாக வேப்பமர அடர்வுள் வெக்கை புகா குளுமையில் கால் பதித்து நின்றது அந்தக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம்.

சாரதா டீச்சரை பிடிக்காத குழந்தைகளே இல்லை. எப்பொழுதும் எளிய அன்புடனும், சின்ன சிடு சிடுப்போ இல்லாத கனிந்த முகமுமாய் வலம் வரும் சாரதா டீச்சரை எப்படிப் பிடிக்காமல் போகும் குழந்தைகளுக்கு. டீச்சருக்கும் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். 'அடுத்தகுடி' டூரிங்டாக்கீஸ் திரையில் பார்த்த தங்களின் அபிமான நடிகையின் தோற்றத்தை நினைவு படுத்தி நின்றாள் சாரதா குழந்தைகளுக்கு.

அம்முவின் குக்கிராமத்திலிருந்து பள்ளிக்கூடம் செல்லும் தடத்தில் இருந்தது சாரதா டீச்சரின் தோப்பு வீடு. கொய்யா மரங்களும், மாமரங்களும் நிறைந்த தோப்பு. அணிலோடும் மரங்கள்; பழந்தின்னி வவ்வால்களும் பெயர் தெரியா பட்சிகளும் அடையும் பழமரங்கள் நிறைந்த தோப்பு; குழந்தைகளின் பைகளை நிறைப்பதற்கே குறைவில்லாமல் கிளை நிறைந்து காய்த்து நிற்கும் பழங்கள். தோப்பு வீட்டின் தனிவாசம் மணக்கும் தார்சாலையெங்கும்.

ஸ்கூல் பை விட்டு அவ்வளவு எளிதில் நீங்காது பழவாடை; கழுவக்கழுவ குளமெங்கும் கலந்துவிடும். பழ வாடையில் பித்தேறி அலைவுறும் மீன்கள். சூல் கொண்ட மீன்கள் குளத்தின் மேல் மூக்கு நீட்டி மூச்சு வாங்கிப் போகும். காம்பௌண்ட் சுவர் தாண்டி கிளை விரித்திருக்கும் தோப்பு வீட்டு பழமரங்கள்.

அணில் கொறித்து உதிர்ந்த பழங்கள் தார் சாலையெங்கும் சிதறிக் கிடக்கும். குழந்தைகளின் கையெட்டும் நெருக்கத்தில் கிளைகள் தாழ்ந்து காத்திருக்கும் கொத்துக் கொத்தாய்ப் பழங்கள்; சாரதா டீச்சரின் மனம் போல் கனிந்த தித்திப்பான பழங்கள்.

கருவேல மரங்களைக் கடந்து பனை மரங்களின் நிழல்களில் பாம்பாக நெளிந்து நகர்ந்த வரப்புகளின் வழித்தடம் கொண்டு சேர்க்கும் அம்முவின் வீட்டிற்கு. ஓடு வேயப்பட்ட மச்சு வீடு. பெரியய்யா கோனாரின் உழைப்பில் பனையாய் நின்ற வீடு. தாட்டியான உடல்வாகு கொண்டவர் பெரியய்யா கோனார்.

விரல்களை இறுக்கி கையை நீட்டினால் நாலு ஆள் சேர்ந்தாலும் மடக்க முடியாது. மச்சு வீட்டு குதிரில் எப்பொழுதும் நிறைந்த நெல்மணி.. குதிர் நெல் வாசம் நிறைந்த மச்சு வீடு. வீடெல்லாம் மலர்ந்து நிற்பாள் அம்மு.

ஆடு, மாடு, கோழிகளின் துள்ளல் நிறைந்த கசாலை. மூத்திரக் கவிச்சியிலும், ஆட்டுப்புழுக்கை நெடியிலும் உழன்று வளர்ந்தவர் பெரிய்யா. குழுதாழியில் எப்பொழுதும் குறையாத தவிட்டுக் கரைசல்.

மூக்குக் கயிறெல்லாம் வழியும் தவிட்டு நீரை நாக்கைச் சுழற்றி நக்கி நிற்கும் மாடுகள். கொல்லைக்கு நகரும் சனங்களின் காலடி சரசரப்போடு விடியும் கிராமத்தின் காலை. மேற்கு திசை நோக்கி வில் வடிவில் பறந்து மறையும் கதிர்க்குருவி கூட்டமொன்று.

உறவு சனங்களின் வரவுக்காகவே கசாலையிலும் வயல் வெளியிலும் மேய்ந்து திரியும் கோழிகள். அம்மிக்கல் மணத்திருக்கும் மசாலை அரைப்பில். மசாலாவில் கலந்திருக்கும் மச்சு வீட்டுப் பெண்களின் கைமணம்.

மச்சு வீட்டுப் பதநிச் சோறுக்கும், மீன் குழம்பிற்கும் உறவுச்சனங்களின் வாயெல்லாம் நீர் நிறைந்திருக்கும். விசேஷ நாட்களில் வீடே நிறைந்துவிடும் உறவுகளால். நொங்குகளை வெட்டி வந்து குவித்து விடுவான் வீரன், விடியும் பொழுதிலேயே. சட்டியில் கஞ்சி குறையாது; எல்லார் வயிற்றையும் நிறைத்துவிடும் நொங்கு. பதமேறி நிற்கும் வீரன் கைகள்.

அம்முவின் கனவில் நிறைந்திருந்தது சாரதா டீச்சரின் தோப்பு வீடு. கான்கிரீட் வீடும் பழ மரங்கள் நிறைந்த தோப்பும் அவளுக்குள் இலட்சிய கனவாக பூத்து நின்றது. சாரதா டீச்சர் வாசம் சுமந்து வயல் வெளியெங்கும் வளைய வருவாள்; குழந்தைகளுக்கே ஆன கனவு. விரிந்து பரவிய வயலெங்கும் தட்டானாய் பறந்து திரிந்த அம்முவுக்குள் அப்படி ஒரு கனவு விதை.

விசேஷ நாள் கணக்கெல்லாம் சண்முகத்திற்கு இல்லை; தோணும் போதெல்லாம் அம்முவைப் பார்க்க ஓடி வந்துவிடுவான். அவனுக்குள் ஒரு தேன்சிட்டாய் சிறகு விரித்து இருந்தாள் அம்மு. பொங்கல் வந்துவிட்டால் உறவு சனத்தின் கூட்டத்தில் நிறைந்துவிடும் மச்சுவீடு. அம்முவிற்கும், சண்முகத்திற்கும் உற்சாகம் கொப்புளித்துவிடும். நகரத்துப் பவுசு வந்துவிடும் சண்முகத்திற்கு. இங்கிலீசில் பேச ஆரம்பித்துவிடுவான். 'Butterfly' மறைந்து திரியும் ரகசிய இடமெல்லாம் அம்முவிற்கும், சண்முகத்திற்கும் அத்துப்படி.

பனங்கிழங்கும், நொங்கும் கொண்டு வந்து நிறைத்துவிடுவான் வீரன். நொங்கு சீவித் தருவதிலும், பனங்கிழங்கு வாட்டித் தருவதிலும் அவனது அளவிட முடியா அன்பு நிறைந்திருக்கும். 'கண்ணாமூச்சி' விளையாட்டில் அவனையும் சேர்த்துக் கொள்வார்கள் குழந்தைகள். எப்பொழுதும் முதலில் அவனே பிடிபடுவான்.. ஒளியவே தெரியாது அவனுக்கு. குதிர் குதிராக நகர்ந்து ஒளிந்து மறைவார்கள் அம்முவும், சண்கமுகமும்.

சண்முகத்தின் வரவை நண்டு ரசத்தின் வாசம் காட்டிக் கொடுத்துவிடும். மண் சட்டிக்குள் கொதித்துத் தயாராகும் மச்சு வீட்டில் ஸ்பெஷல் வயல் நண்டு ரசம். வாசம் பிடித்தே வயிறு நிறையலாம். பனஞ்சட்டமாய் காய்த்து வலுத்த கையெல்லாம் நண்டு மணக்க வலம் வருவான் வீரன்.

பனை ஏறவும், பனம் பழம் புதைத்து கிழங்கு தோண்டி எடுக்கும் பக்குவமும் சண்முகத்திற்கு கற்றுக் கொடுத்திருந்தார் 'பனையேறி'. நொங்கு சீவும் லாவகமும் சண்முகத்திற்கு அத்துப்படி. பனை மர நிழல்களில் நகர்ந்து மீன்பிடி குளம் அடைவார்கள் சண்முகமும், அம்முவும். குளமெங்கும் பரவி மின்னும் வெயிலின் வெப்ப ரேகைகள். வீடு திரும்பும் நினைவே வராது இருவருக்கும்.

இந்த முறை பருவமழை ஏமாற்றவில்லை. விவசாயிகள் முகமெல்லாம் மலர்ச்சி. எதிர்பார்த்த மகசூல் விளைந்துவிடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு மலைப்பில்லாமல் நாள் குறிக்கலாம். வாணியக்குடி கண்மாய் பொங்கிப் பெருகி நிறைந்துவிட்டது. மீன் துள்ளல் சேதி அறிந்து கொக்குகளும், நாரைகளும் கண்மாயை சூழ்ந்து குவிந்துவிட்டன. படிகமாய் நீர் ஒளி வீசி நின்றது. 'பொய்யாமொழி அம்மனுக்கு ' பௌர்ணமி பூசைக்கான ஏற்பாடு தடபுடலாக தொடங்கியது. முனியய்யாவுக்கு நேர்த்திக் கெடா குறைவிருக்காது. கிராமமே பூரித்து நின்றது.

அந்த வருடப் பொங்கல் திருவிழாவின் நாயகனாகிவிட்டான் ராசு. பானை உடைப்பிலும், கம்பு சுத்தலிலும், வண்டி மாட்டுப் பந்தயத்திலும் அவன்தான் ஜெயிப்பு. சுத்து வட்டார கிராமங்களில் குமறுகளுக்கெல்லாம் அவனே பேசு பொருளாகிவிட்டான். தோப்பு வீட்டுக்கு மட்டும் இந்த சேதி எட்டாதா என்ன. சாரதாவுக்குள் விதையாக விழுந்து விட்டான். வாணியக்குடி கண்மாய் காதல் நுரைத்து தளும்பியது. புல் மண்டிய கரையெங்கும் சில் வண்டுகளின் ரீங்காரம். கொக்கின் இறகாய் இலேசாகி இளகிய இதயத்தில் ராசுவைச் சுமந்து மிதந்தாள் சாரதா.

பொங்கிய புது உணர்வின் பரவசம் தொற்றிக் கொண்டது ராசுவுக்கும். விவசாய வேலை ஒழிந்த நேரங்களில் வலிய சென்று சாரதா வீட்டுத் தோப்பு வேலையில் ஒத்தாசை செய்தான்; புதுப் பொலிவில் குதூகலித்தன பழ மரங்கள். உலகமே அற்புத அழகாய் மாறிவிட்டது ராசுவுக்கு.

ஜன்னல் கம்பிகளின் வழியே ராசுவைப் பார்த்தபடி இருப்பாள் சாரதா. மஞ்சள் வெயிலோடிய மரமேறி விளையாடும் அணில்கள். அந்தப் பனி பரவிய அதிகாலைப் பொழுதிலும் முத்து முத்தாய் வியர்வை பூத்து நிற்பான் ராசு. எங்கும் காதல் ததும்பிய காற்று நிறைந்து எல்லாவற்றையும் அழகுபடுத்தியது.

சாரதாவின் அழகில் அவள் அம்மாவுக்குத்தான் அப்படி ஒரு பிடிபடாத பெருமை. தண்ணீர் குளத்தில் ஓயாது அவள் பெருமைப் பேச்சு. சாரதாவும் குறையில்லா அழகுடன் தான் இருந்தாள். கான்கிரீட் வீடு, தோப்பு என செல்வாக்கு மிக்க குடும்பம். போதாக் குறைக்கு சாரதாவின் அப்பழுக்கற்ற அழகு.

சாரதாவை கட்டிக் கொண்டு அவளையும் தோப்பு வீட்டையும் ஆள யாருக்குத்தான் கசக்கும். ஆனாலும் சாரதாவின் மனம் ராசுவின் திசை பார்த்தல்லவா மலர்ந்திருந்தது. காதலெனும் நெருப்புக் கங்கு எந்த காட்டில் எப்போது விழும் என்று யார் அறிவார். பனி இரவில் பனைகளின் ஊடாக நகரும் நிலவாக ஒளிவீசினாள் சாரதா.

தேனாறு பொங்கிப் பாய்ந்த வழியெங்கும் காதலை விதைத்துச் சென்றது. ஆற்றின் குளுமையையும், பனித்துளி போன்று பவித்திரமான காதலையும் சுமந்த பட்சிகள் கிராமத்தின் வயல் வெளியெங்கும் பாடித் திரிந்தன. சாரதாவின் மனம் கனிந்து, காதல் விளை நிலமாகிவிட்டது. தன் காதலில் எந்தக் குற்றமும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.

கல்லூரி நாட்களில் வாசித்த 'ஜமீலா' நாவலில் வரும் ஜமீலாவைப் பரவசத்தில் ஆழ்த்திய இசை சாரதாவையும் பீடித்துக் கொண்டது. ஸ்தெப்பி புல்வெளியை நிறைத்த ஜமீலாவின் காதல் தேனாற்றின் பசும் புல்வெளியெங்கும் எதிரொலித்தது. இன்னும் காலங்கள் கடக்கலாம். ஜமீலாவும், சாரதாவும் மறைந்துபோகலாம். மீன்களின் துள்ளல் நிறைந்த ஆற்றின் நீரோட்டமும், பசும் புல்வெளியெங்கும் பறந்து திரியும்

 சில்வண்டுகளும் நிலைத்து நிற்கும்; பின்னும் பொன்னிறமாய் மின்னி ஒளிரும் சூரியக் கற்களை செதில்களில் சுமந்து நீந்தித் திரியும் மீன் குஞ்சுகள். அவைகளிடம் நிறைந்திருக்கும் காதல் பாடல்கள். குழந்தைகளின் தெளிந்த நீர் போன்ற மனதுடன் சாரதா, ராசுவுக்குள் காதல் கிளர்ந்து நின்றது. முன்பைவிட மேலும் சாரதாவை மென்மையாக்கிவிட்டது காதல். அவள் அன்பில் நனைந்த பூக்களைச் சூடி வலம் வந்தனர் குழந்தைகள். பள்ளி வளாகம் எங்கும் இனிய பாடல்கள் ஒலித்தன.

அரச மரத்துப் பச்சை இலைகளுக்குள் வெண்ணிற சிறகு ஒடுக்கி மழைக்காலத்தில் கொக்குகள் வந்து அடையத் தொடங்கின. தான் தோன்றிப் பாதைகளில் முளைத்து நின்ற கிராமங்களுக்குப் பொதுவாகிவிட்டார் அரசமரத்துப் பிள்ளையார்.

ஓரியூர் வழித் தடத்தின் வெக்கையில் நகரும் பசுக்கள் அரச மரம் சொறிந்த நிழலில் தங்கி சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டே நடையைத் தொடரும். தோப்பு வீடு விட்டுப் புறப்படும் பட்சிகளும் அரசமரம் தங்கிப் போகும். சாரதா வீட்டுத் தோட்டத்தில் பழங்களும், பட்சிகளும் பெருகிவிட்டன. பட்சிகளின் இனிய குரலில் விழிப்புற்று இருந்தது தோப்பு. அரச மரத்திலிருந்து புறப்படும் பட்சிகளும், கொக்குகளும் தெற்கு நோக்கி ஓடும் தேனாற்றின் மேலாக நகர்ந்து வாணியக்குடி கம்மாய் அடையும்.

இப்பொழுதெல்லாம் சீட்டி ஒலியில் ஏதேனும் சினிமா பாடலைப் பாடியபடி வளைய வந்தான் ராசு. வயல்களில் பசுமை நிறைந்துவிட்டது. தான்ய மணத்திற்கு பட்சிகள் வயலெங்கும் கூடி விட்டன. மயில்களும் வரத் துவங்கிவிட்டன. வயல் வெளிக்கு மேலே வானம் பொன்னிறத்தில் மின்னியது.

அம்முவின் கிராமம் நோக்கி நகர்ந்த சண்முகத்தின் கால்கள் கனத்துவிட்டன. பால்யத்தின் பசுமையை எங்கும் காணமுடியவில்லை. வாணியக்குடி கண்மாய் வறண்டுவிட்டது. வானம் பார்த்து நின்றது பூமி. புல்வெளி அழிந்து கருவேல மரங்கள் மண்டிவிட்டன. சில்வண்டுகளின் ரீங்காரம் மட்டும் ஒலித்தபடி இருந்தது. பனையேறியும், வீரனும் மட்டுமே அறிந்த முகங்களாய் இருந்தனர். சிவந்து நின்ற வானம் என்ன சொல்லி நின்றது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை சண்முகத்தால்.

வேரோடு அரசமரம் சாய்ந்த நாளில் பெரியய்யா கோனார் நெஞ்சுவலியில் மறைந்து போனார். தேனாறும் ஒடுங்கி நூலாகிவிட்டது. காய்ப்பு ஓய்ந்த ஒற்றைப் பனைவிட்டு இடுகாட்டுக் காளியும் நீங்கிவிட்டாள். அவள் குறித்த கதைகள் மட்டும் கிராமத்தை விட்டு நீங்காமல் வலம் வந்தது.

தோப்பு வீட்டுப் பழ மரங்களும் ஈரம் உலர்ந்து பட்டுப் போய் நின்றது. ஆதி அடையாளங்கள் மறைந்த நிலத்திலிருந்து வானத்தை அண்ணாந்து பார்த்தான் சண்முகம். நீலம் படர்ந்த வானத்தில் பட்சிகளையும் அம்முவையும் தேடினான். ஆழ்ந்த வெறுமை அவனுள் இறங்கி பாரமாய் அழுத்தியது.

மீன்கள் காய்ந்து பாளம் பாளமாய் வெடித்து நின்றது குளங்கள். வெடிப்புக் கோடுகளோடு நின்ற குதிர்களின் நிழல்களில் பதுங்கி மறைந்தாள் அம்மு. சண்முகம் தேடி வந்த பால்யத்தின் ஈரமெல்லாம் மறைந்த நிலத்திலிருந்து பொலிவிழந்த சித்திரமாய் மறைந்து நின்று கேலி செய்தாள் விளையாட்டு மறையாத அம்மு.

அநாதரவாய் வெயில் வாங்கி நின்றார் பிள்ளையார். ஊர் எல்லையில் வற்றிய குளத்தின் காய்ந்து படர்ந்த அல்லிக் கொடியின் வேர் முண்டுகளில் வெறித்த விழிகளோடு பிரேதமாய் கிடந்தன மீன் குஞ்சுகள். மடிந்த மீன் கண்களில் சொல்லொணா துயரம். பூசைகள் மறைந்துவிட்ட பாழ் வெளியில் 'மகாலிங்கத் தெய்வம்' கல்லாய் நின்றார்.

மனிதர்கள் மறந்த பாதைகளில் தான் தோன்றிப் புதர்கள் மண்டிவிட்டன. அறியா திசையில் எந்த வனம் நோக்கியோ பறந்து மறைந்த பட்சிகளளோடு சென்றுவிட்டது அம்முவின் இசை சுமந்த ஆன்மா. வர்ணங்கள் உதிர்ந்து இத்து தேய்ந்த பட்டாம் பூச்சியாய் எங்கேனும் முகம் மறைத்து கருவேல முட்கள் சூழ இருக்க வேண்டும் அம்மு. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை சண்முகத்தால்.

நடுக்கமுற்ற மனதோடு ஆதி காலடித்தடங்கள் மறைந்த பாதை வழி நடந்தான். மழை பொய்த்த ஒரு நாளில் சாரதாவும், ராசுவும் வடக்கே கல்குவாரி நோக்கி சென்று விட்டார்கள். அவர்களோடு தோப்பு வீட்டுப் பட்சிகளும் சென்றுவிட்டன. அழகும் பொலிவும் இழந்து நின்றது தோப்பு வீடு. தேனாற்றில் மணல் நிரம்பி விட்டது. காய்ந்து கூடு தட்டிப் போன பனம்பழங்கள் ஒன்றிரண்டு வழித் தடத்தில் கிடந்து சண்முகத்தின் காலைப் பதம் பார்த்தன. பாதத்திலிருந்து கிளம்பிய வலியின் வேதனை மூளையைத் தாக்கியது.

செங்கல் சூளைகளிலிருந்து கிளம்பிய புகை மூட்டம் பறவை ரூபத்தில் கந்தக வெக்கையாய் அவனுள் புகுந்து நெஞ்செரியச் செய்தது. பல நகரங்கள் சுற்றி எங்கும் நிலைக்க முடியாது பூர்வீக கிராமம் திரும்பிய சண்முகம் காலடி எடுத்து வைக்கும் திசை குழம்பி நின்றான். கரையான் அரிப்பில் கலங்கி நின்றன மச்சு வீட்டு பனஞ்சட்டங்கள். தான்ய மணம் மறைந்து வெக்கை சுமந்து வீட்டை அடைத்து நின்றன குதிர்கள். கனவெல்லாம் மடிந்து ஈரம் உலர்ந்த சுடு செ ங்கலாக நின்றான் சண்முகம்.

றெக்கை பொசுங்கிய பட்டாம் பூச்சியின் இறுதிப் பாடல் அவனுள் ஒலிக்கத் தொடங்கியது. மீன்களின் வாசனை சுமந்த பருந்து ஒன்று தேனாற்றின் மணல் வெளியைக் கடந்து புள்ளியாய் மறைந்தது. கருவேல மரங்களின் முட்கள் அடர்ந்த இருளுக்குள் ஒளியிழந்த நட்சத்திரமாய் மூழ்கி அமிழ்ந்து போனான் முகமிழந்த சண்முகம்.

துரை. அறிவழகன்

Pin It