"எவ்வளவு தடவ சொல்லிருக்கேன் ட்ரான்ஸ்பிளான்ட் பண்ணுன பேசன்டுக்கு க்ரியேட்டின் போடும்போது ரொம்ப கவனமா போடுன்னு... க்ரியேட்டின் வச்சு தான் சிறுநீரகத்தின் செயல்திறனை அளவிட முடியும்... புரியுதா புரியலையா " கத்திக் கொண்டு ஆய்வறைக்குள் நுழைந்தான் ராஜேந்திரன். ராஜேந்திரன் ஒரு மருத்துவமனையில் ஆய்வகப் பொறுப்பாளராக இருந்தார்.

அது சிறுநீரக சிகிச்சை அளிக்கக்கூடிய ஐம்பது படுக்கைகள் கொண்ட பிரத்தியோக மருத்துவமனை, அங்கு வருபவர்கள் பெரும்பாலும் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக வருபவர்கள். வருபவர்களில் நடுத்தர வர்க்கம் மிகுதியாக இருந்தது.

காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் கூட்டம் இருந்துகொண்டே தான் இருந்தது. துறைகளில் மகத்துவமான துறை மருத்துவத்துறை, மருத்துவத்தில் சிகரம் தொட்டவர்கள் இருப்பதால் தான், நோய் நெருக்கடியிலும் வாழ்கிறது இந்த சமூகம். ஆனால் வறுமையின் காரணமாக செவிலியராக்கப் படுபவர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வருவதால், நோயாளிகளிடன் நடந்து கொள்வதில் நாகரிகம் உடைந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கின்றனர். மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் கிரகநிலை மற்றும் வாஸ்து ஆச்சாரத்தில் தெற்குப் பார்த்து அமைந்திருந்தது தலைமை மருத்துவரின் சிற்றறை, அதிலிருந்து மணி ஒலித்தது.

"என்ன ராஜேந்திரன்... ஆறுசாமிக்கு நீங்க கொடுத்த பிளட் ரிப்போர்ட் எனக்கு சாடிஸ்பை இல்ல.. ப்ளீஸ் ரீசெக் பண்ணுங்க..." என்று சிறிது காட்டமாக பேசினார் தலைமை மருத்துவர்.

சுருட்டை முடியும், உயரமான உடல்வாகு கொண்டிருந்தவன் கண்கள் அகல விரிந்தது, ‘தவறுகள் இங்கு நடக்கக்கூடாது’ என்ற பொன்விதிகளை மீறியதாக இருந்தது அந்த பார்வை. தரைத்தளத்தில் இருக்கும் ஆய்வகத்திற்கு விரைந்தான் ராஜேந்திரன்.

"யாரு இந்த டெஸ்ட் போட்டது, கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உங்களுக்கு,

காஞ்சனா எங்க…" ராஜேந்திரன் குரல் சற்று ஓங்கி ஒலித்தது.

வெள்ளை நிறத்தில் மேலுடுப்பு அணிந்திருந்தவர்கள், அவர்கள் செய்துக் கொண்டிருந்த பணியை விட்டுவிட்டு எதோ இழவு வீட்டுக்கு தூக்கம் விசாரிப்பவர்கள் போல தலை தொங்கப் போட்டபடி நின்றிருந்தார்கள்.

அதிலிருந்து மெதுவாக ஒரு குரல்.

"சார் அவ இன்னைக்கு லீவு... அதுனால ட்ரைனிங் வந்த பிரியா தான் இந்த டெஸ்ட் போட்டா ..."

அவன் பார்வையில் சினம் உச்சம் பெற்றதாய் விரிந்தது. “ஒரு ட்ரைனியா இருக்கர உன்னை யாரு டெஸ்ட் போட சொன்னது, என்கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்ல, இங்க எல்லோரும் என்ன வேல செய்யறீங்க ...”

"விடுடி... அதைவே நினைச்சுட்டு இருக்காதா "

"அப்பறம் என்னடி, என்ன அவ்வளவு பேருக்கு முன்னாடி அவுமானப்படுத்திட்டான் அந்த ராஜேந்திரன். நான் என்ன பெரிய தப்பு பண்ணினேன்... ஒரு நாளைக்கு அவன் டாக்டர்கிட்ட திட்டுவாங்க வைக்கணும்..." என்று பொருமிக் கொண்டிருந்தாள் பிரியா.

இருபது இருக்கைகள் கொண்ட அந்த உணவு அறையில் மதிய உணவு இடைவெளியில் வருபவர்கள் தங்கள் சூட்டை இறக்கி வைப்பதால் அனல் தகித்துக் கொண்டிருந்தது அந்த அறை.

“இல்ல நிலா… டாக்டர் நாளைக்கு டயாலிசிஸ் பண்ணனுமா வேண்டாமான்னு சொல்லுவாரு நீ அழுகாதே …” என்ற தோழியிடம்.

"இல்லடி எனக்கு அம்மா இல்ல அப்பா மட்டுந்தான் இருக்காரு அவருக்கு இப்படியொரு நிலைமையா ..." என்று அருகில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த தன் மகள் நிலாவை தேற்ற முடியாமல் கண்களை மூடி சமாதானத்தை தேடியவரே படுத்திருந்தார் ஆறுச்சாமி.

சிறுநீர்கழிப்பதில் பிரச்சனை என்று வெகுதூரத்தில் இருந்து வந்திருந்தவர் அவருடைய பரிசோதனை முடியும் வரை அட்மிட் செய்யப்பட்டிருந்தார். பக்கத்தில் படுக்கையில் இருக்கும் இன்னொருவருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க வந்த ராஜேந்திரன், அழுது கொண்டிருந்த நிலவைப் பார்க்கும் பொது தன் மகள் நினைவுக்கு வந்து போனாள்.

ஊர்… ர்… என்று உறுமியது ராஜேந்திரன் அலைபேசி.

“மணி பத்தாகுது இன்னும் லேபுல வேல முடியலையா ... உங்கப்புள்ள இன்னும் தூங்காம உங்களுக்காக முழுச்சிட்டு இருக்கா..”

“வந்துர்றேன் ... நீ தூங்கு”  என்று குறுவாக்கியத்தில் அழைப்பைத் துண்டித்துக் கொண்டான் ராஜேந்திரன்.

ரத்தப் பரிசோதனை இயந்திரங்களுக்கு இடையில் தனியாக அமர்ந்திருந்தான், அதனுள்ளிருந்து வரும் ஒளி அகோர கண்களென மினுக்கிக் கொண்டிருந்தது, அடுத்தநாள் கொடுக்க வேண்டிய பரிசோதனை முடிவுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான். ஆறுசாமியின் ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் அதை உற்று பார்த்தான்... அதில் நிலா தெரிந்திருந்தாள்...

“உங்களுக்கு ஒரு ப்ரோப்ளேமும் இல்ல எல்லா ரிபோர்டும் நார்மலா இருக்கு”

உங்களுக்கு சிறுநீர் தொற்று மட்டும்தான் இருக்கு அதுக்கு ஒரு ஆண்டிபயாடிக் கொண்டுதிருக்கேன், வேற எந்த பிரச்னையும் இல்ல... பிளட் ல பிரச்சனை இருக்கும்னு நினைச்சேன் இன்னைக்கு அதுவும் தெளிவாயிருச்சு .. நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம்” என்று மருத்துவரின் அந்த பலம் கொண்ட வார்த்தைகளில் எதிரமர்ந்திருப்பவர் ஆயுள் ரேகை கைகளைத் தாண்டி நீண்டு கொண்டது.

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்... நீங்க ஒண்ணுமே இல்லைனு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... என் புள்ளைய தனியா விட்டுட்டுப் போயிருவேன்னு நினைச்சேன்..” என்று ஆறுச்சாமி கண்ணீர் மல்க மருத்துவரை வாழ்த்திக் கொண்டுவெளியே வந்தார்.

எப்போதும் போல அல்லாமல் அன்று மருத்துவமனைக் கூட்டம் தாங்காமல் மூச்சு வாங்கியது. அன்று அவசர சிகிச்சைக்கு வேகமாக தள்ளப்பட்டு வந்த ஸ்ட்ரெச்சர் அவரை கடந்து மின்னலென மறைந்தது. அதற்கு பின்னால் எப்போதும் போல ஒரு கும்பல் துரத்தியது.

எப்போதும் அமைதி காத்த தலைமை மருத்துவரின் அறை அன்று பேரமைதியுடன் இருந்தது. எதையோ சரிபார்த்தபடி இருந்தார் மருத்துவர். அவருக்கு முன்னாள் இருக்கும் மேசையில் சிறிய அளவிலான சிலை சிறுநீரகம் தெரியும்படி விஸ்தாரமாக நின்றிருந்தது.

பல ஒலிகளை உள்வாங்கியதில் களைப்புற்று மேசையில் சுருண்டுக் கிடந்தது ஸ்டெதெஸ்கோப், புதிதாய் பார்ப்பதுபோல உடலசைவில்லாமல் கண்களில் அந்த அறையை அளந்துக் கொண்டிருந்தனர் ஆய்வகத்தில் உள்ள எல்லோரும் அமைதி காத்தவாறு வரிசையாக நின்றுகொண்டு.

"நான் எதுக்கு உங்கள இங்க வர சொன்னேன்னு தெரியுமா ..." என சொல்லிக் கொண்டே மெதுவாக தன் தலையை உயர்த்தினார் மருத்துவர்.

"யாரும் எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"எந்த டெஸ்ட் பண்ணும் போதும் கொஞ்சம் கவனம் அதிகமா வச்சு போடுங்க போடற டெஸ்ட் நம்ம வீட்டில இருக்கறவங்களோட ரத்தமாதிரினு நினைச்சுக்கோங்க, அப்போதான் பொறுமை வரும் ..."

“ஆறுசாமியோட க்ரியேட்டின் டெஸ்ட் ரிப்போர்ட் தப்புனு சஸ்பெக்ட் பண்ணுனதால... திரும்பவும் அத மறு ஆய்வு செஞ்சுருக்காரு ராஜேந்திரன், அப்போ அது நார்மலா வந்திருக்கு, அதை உறுதி செஞ்சதற்கப்பறம் நேத்து வந்த எல்லா க்ரியேட்டின் டெஸ்ட்டையும் மறுஆய்வு செஞ்சு ரொம்ப லேட்டா தான் வீட்டுக்கு போயிருக்காரு ராஜேந்திரன்... நீங்க நினைக்கற மாதிரி அவரு உங்கள மாதிரி சாதாரண ஆளு இல்ல அவரு ஒரு சிறுநீரக நோயாளி, இப்போ அவருக்கு ஒரு கிட்னி தான் வேலை செய்யுது, அதுவும் செயல் திறன் ரொம்ப குறைவா இருக்கு அவரை நான் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணவேண்டான்னு சொல்லி இருந்தேன்.

இதோ இப்போ வெளில பார்த்திங்களே அவசரமா அம்புலனசுல வந்த ஐ சி யு கேஸ், அது அவரு தான் ரொம்ப கிரிட்டிக்கலா இருக்காரு…

பேரதிர்ச்சி அறைந்ததில் மௌனம் கலைத்திருந்தது அந்த அறை.

- சன்மது

Pin It