அன்று காலையில் இருந்தே வானமும் நானும் கொஞ்சம் மந்தமாக தான் இருந்தோம்…

ஏன் என்று தெரியவில்லை இன்று ஞாயித்துக் கிழமை என்பதாலோ?… அம்மா இன்னும் என்னை எழுப்பவில்லை…!

man 247மறந்தே போனேன் ஞாயித்துக் கிழமை நேற்றே முடிந்து விட்டது; இன்று திங்கள் ஆயிற்றே…? ஞாயிறு கொஞ்சம் நீண்டு இருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டே…ஜன்னலைத் திறந்து, எனக்கு முன் எழுந்து கதிர் தூவிக் கொண்டிருந்த கதிரவனைப் பார்த்து… உன்னால்தான் பிரச்சினை ஏன் நீ தினைக்கும் எனக்குமுன் எழுகிறாய்? என்று கேட்டு விட்டு…

காலைப் பணிகளை முடித்தவாறு அம்மாவைத் தேடினேன்…!

இன்னும் அசரீரீ ஒலித்துக் கொண்டுதான் இருந்தது… ஏன் இன்னும் எழுப்பவில்லை! எங்கு போனாள்…!?

“அம்மா! அம்மா!!”

குழந்தை போல் அல்ல இருபத்தி ஐந்து வயது இளைஞனாக… இன்னும் என் அம்மாவின் குழந்தையாகத் தான் விளித்தேன்……

காலையில் எழுந்த உடன் இட்லி சுடுவதுதான் அம்மாவுக்கு தொழில்….

அவளின் ஒவ்வொரு இட்லியும் என் கல்லூரி புத்தகத்தின் பக்கங்கள்…

ஆம்! அப்பா இறந்ததில் இருந்து அம்மாவும் இட்லியும் தான் என்னை படிக்க வைத்தார்கள்…! அப்பா எனக்கு ஐந்து வயது இருக்கும் போதே இறந்துவிட்டார்…! நான் அழக்கூட இல்லை.. மரம்!!!?

அம்மாவை தேடிக் கொண்டே எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறேன்…

இதோ அம்மா இட்லி தான் சுட்டுக் கொண்டிருக்கிறாள்…!

“அம்மா! இன்னாம்மா இன்னிக்கு இன்டெர்வியுக்கு போனுண்டு தெரியும்ல ஏன் எழுப்பல…!” கோபம் கலந்து கேட்பது போல் பாசாங்கு வேறு இந்த தண்டசோற்றுக்கு…

“இல்லபா இன்னிக்கு திங்கள் கிழமை இல்ல… வேலைக்குப் போறவங்க எல்லாம் நெறைய வருவாங்கன்னு விரசா எழுந்து இட்லியப் போட்டுட்டுஇருந்துட்டேன் வேக்காடுல மறந்துட்டேன்ப்பு…. இந்தா சூடா இந்த இட்லிய புட்டு போட்டின்னு கெளம்பு…”

“சரிம்மா… கற்பகம் அக்காவுக்கு காசு குடுக்கணுமே குடுத்துட்டியா?…"

“இல்லப்பு எங்கே வயித்துக்கும் வாயிக்குமே பத்தல…”

கொஞ்சம் கூட எனக்கு சொரனையே கிடையாதா?

“அஞ்சலை அக்காகிட்ட இருந்து பணம் வாங்கி குடுத்துட வேண்டிதானே அவங்க நமக்கு குடுக்கநுமில்லெ”

“இல்லப்பு வேணாம் அவ புருஷன் ஒரு மாதிரி எதாச்சும் பண்ணிடுவான்… நீ இன்டெர்வியுக்கு கெளம்பு அப்பு உனக்கு இந்த வேலை கிடைச்சுட்டாஅப்புறம் அவ காசு நமக்கெதுக்கு?”

“அதுவும் சரிதேம்மா இருந்தாலும் நம்ம பணமில்லையா…? பார்ப்போம் அவங்களா குடுக்கட்டும் இல்லன்னா கேப்போம்..?”

படித்து முடித்து இத்தனை நாள் என்றால் சும்மா இல்லை… ஒன்றரை வருடம் பல இடங்களில் தேடி இருக்கிறேன் எனக்கொரு வேலை…

என் ஏட்டு சுரைக்காய் எதற்கும் இது வரை பயன்படவில்லை…!

தமிழ் சினிமாவில் காட்டுவது போல இது எனக்கு நூறாவது நேர்காணல் எல்லாம் இல்லை தொன்னுத்தி ஒன்பதாவது தான்…!

கொஞ்சம் சுமாராகப் படித்திருந்தால் இதுதான் பிரச்சினை…எங்கும் நமக்கு முன் படித்த பிசாசுகள் இருந்து கொண்டே இருக்கும்… படிப்புக்கு மதிப்பு எனில் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமே? வேண்டுமேனில் அனைவரும் படிக்க வேண்டுமே… அனைவரும் படித்தால் விவசாயம்…?உழவன்…? அய்யய்யோ நேரமாச்சே…!

சகதிக்குள் குளிக்கும் காக்கா லக்ஸ் போட்டாலும் வெள்ளை ஆகாது; நாம் மட்டும் வெள்ளையாகி என்ன சிவாஜி ரஜினியாகவா போகிறோம்…!?

காக்கா குளியலுக்கு விளக்கம் வேறு…!

இதோ கிளம்பிவிட்டேன்…. தோளில் வேதாளத்தை சுமந்து செல்லும் விக்ரமாதித்யனைப் போல… வேதாளம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்தால் தலை வெடிக்கும்… இங்கே என் தலை வெடிக்காது. ஏன் எனில் இது எனக்குப் புதிது இல்லையே…!

இனி என் நண்பன் ரங்கசாமியப் பார்த்துட்டு இன்டெர்வியுக்கு போக வேண்டியது தான்…

என்உயிர் தோழன் அவன்! ஆனால் எனக்கும் அவனுக்கும் சிறு வயதில் இருந்தே ஒத்துப் போனதில்லை…

ஒரு முறை…

சற்றே பின்னோக்கிச் செல்வோம்…!!??

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எனக்கு ஒன்பது வயதிருக்கும்…

நானும் அவனும் மாங்காய் அடிக்க ராசப்பரோட தோட்டத்துக்குப் போறது வழக்கம்…

தோட்டக்காரன் துரையப் பார்த்தா அண்ட்ராயர் நனஞ்சிரும்… ஆனா ரங்கனோட போனா அந்த பயம் இருக்காது. அவன் என்ன விட கொஞ்சம் அதிக புத்திசாலி… நேரங்காலம் பார்த்து தான் மாங்காய் அடிக்க கூப்டுவான்…!

அது ஒரு சித்திரை மாசங்க்ரதுனால கொஞ்சம் வெயில் ஜாஸ்தியாதான் இருந்துச்சு…

மாந்தோப்பு பக்கம் யாருமே இல்லை…

நாங்க ரெண்டு பெரும் கையில ஆளுக்கு ஒரு உண்டிவில்லோட உள்ள போனோம்…

திருட்டு மாங்கா ருசிக்கு எங்க பயத்த வித்துட்டு தைரியமாத்தான் போனோம்..

அங்க நெறைய சிட்டுங்க இருந்துச்சு… அதுங்க ஏன் அங்க வந்துச்சுங்கன்னு தெரியல…

தானியம் இருக்க பக்கத்துல நெறய பாத்திருக்கேன் ஆனா இங்க ஏன்…!?

அப்புறம்தான் தெரிஞ்சுது அதுங்க பக்கத்துல இருக்குற ராசப்பரோட தானிய கிடங்க நம்பி அங்க கூடு கட்டி இருக்குறது…!

பம்ப் செட்டுல தண்ணி இரயுற சத்தம் கொஞ்சம் அமைதிய குலைச்சுகிட்டே இருந்தது…

சரி ரங்கன் என்ன பண்றான் பார்த்தா மாங்காயை விட்டுட்டு குருவிங்கள குறி பார்த்துக்கிட்டு இருக்கான்…!

நான் இவ்ளோ நேரம் ரசிச்சுகிட்டு இருந்த குருவில ஒன்ன அடிக்கப் பார்த்த ரங்கன விடல…

ஓடிப் போய் அவன் கையப் புடிச்சி…

“ரங்கா குருவிய விட்டுட்டு மாங்காய அடி இல்லைனா எனக்கு கெட்ட கோவம் வரும்”

“டேய் சிட்டுக் குருவிய சுட்டுத் தின்னா அருமையா இருக்கும் டா… விடுடா ரெண்டு பேரும் சுட்டுத் திம்போம்…”

“முடியாதுடா அதுங்க நிம்மதியா… அமைதியா துன்னுகிட்டு இருக்கு அதுகளோட அமைதியா குலைக்காதடா… உயிர் போனா வராது ரங்கா…"

“போட தத்து பித்து… இன்னிக்கு சிட்டுக் குருவிய அடிக்காம விட்றது இல்ல!”

” ஏலே ஏன் கண்முன்ன வேண்டாம்… நான் பார்த்துகிட்டு இருக்க மாட்டேன்…”

மீறி அவன் குறி வைத்த போது…. “பளார்…” அறைந்தது எனக்கு வலித்தது. அவனும் நானும் கட்டி புரண்டோம்…

சிட்டுகள் தெறித்துப் பறந்தன…

ஒரு மாதம் என்னோடு அவன் பேசவில்லை… அதற்குப் பின் அவன் சிட்டுக்களை வேட்டை ஆடினானா என்று தெரியவில்லை…?

ஆனால் இப்படி தான் நான் ஒரு கிரகம், அவன் ஒரு கிரகமாக சுத்திக் கொண்டிருந்தோம்…

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அனைத்து இன்னாவும் நன்னயம் செய்யப்பட்டு இப்போது நாங்கள் மீண்டும் நண்பர்களாகத் தான் சுற்றி கொண்டிருக்கிறோம்…

இதோ டீக் கடை பெஞ்ச்சில் அவன் வீட்டுக்குத் தெரிந்தே ரயில் ஓட்டி கொண்டிருக்கிறான் ரங்கன் …

“என்ன மாப்ள ஏதும் விஷேசம் உண்டா…”

“இல்லடா இப்போ டவுன் ல ஒரு இன்டெர்வியுக்கு போயிக்கின்னு இருக்கேன் இந்த வேலை கிடைக்கனும்னு வேண்டிக்க டா…”

“மெத்த படிக்காதடா ன்னா கேட்டியா அவஸ்தை படு… என்னோட பேசாத கூலி வேலைக்கு வந்துடுறியா? தினம் இரு நூறு ரூவா குடிக்க வாச்சும் உதவும்…!?”

சடேர்!!!!! என்று யாரோ தலையில் அடித்தாற்போலிருந்தது… எம்.எஸ் சி படிச்சிட்டு கூலி வேலைக்கா?

“போடா இவனே…!”

அவ்வளவுதான் வந்த பஸ்ஸில் ஏறிப் பறந்தேன்… நாம் படித்த படிப்புக்கு கூலி வேலை செய்வதா…!

இந்த வேலையை எப்படியும் வாங்கி விட வேண்டும்…

அம்மாவின் நம்பிக்கை உடைந்திடக் கூடாது அதே நேரம் அம்மாவின் பணக் கஷ்டத்தையும் ஒழிக்க வேண்டும்…

எப்படியும் இந்த வேலையை வாங்கி விட வேண்டும்… ஜன்னல் வழி சினிமா போஸ்டர் கூட வேலை என்றுதான் எனக்குத் தென்பட்டது…!?

நடத்துனர் டிக்கெட் என்ற போதும் கூலி வேலை என்று ரங்கன் தான் தெரிந்தான்…?

இதை எல்லாம் மறந்து….

கேள்விக் கணைகளை எதிர்நோக்க தயார்படுத்திக் கொண்டேன்…

மனதுக்குள்… “டெல் மீ அபௌட் யுவர்ஸெல்ப்” ஓடிக் கொண்டிருந்தது…

அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும்…

வெறியோடு எதிர் நோக்கி இதோ இறங்கிவிட்டேன்…

Confidence technologies pvt ltd எங்கே? எங்கே?எங்கே?

தேடிப் பறந்தது மனம்…

எதிரில் வந்தவரிடம் வழி கேட்டு தேடித் திரிந்து இதோ கண்டுபிடித்து விட்டேன்…

செக்யூரிட்டி அண்ணனிடம் மல்லு கட்டி உள்ளே சென்று வெளியே வந்தும் விட்டேன்…

மறுபடியும் ஒரு ஏமாற்றம்! எனது நூறாவது நேர்காணலுக்கு வழிவகுத்தாகி விட்டது…

மனதுக்குள் ஓடிய “டெல் மீ அபௌட் யுவர்ஸெல்ப்” உள்ளே தேர்வுக் குழு கேட்டபோது ரீல் அறுந்து தொங்கிவிட்டது…

என்ன செய்ய படித்தது முழுக்க தமிழ் வழிக் கல்வியில்..! அது என் தப்பா…!?

சரி இருக்கட்டும் தொண்ணூத்து ஒன்பது பார்த்தாகி விட்டது நூறாவது இன்டெர்வியுவில் தான் நான் கரை சேர வேண்டுமெனில்… ஆண்டவா! நீதான் பதில் சொல்ல வேண்டும்…!?

இப்போதே மீண்டும் ரங்கனைப் பார்க்கும் பயம்…!

அம்மாவிடம் மீண்டும் ஒரு தோல்வியைக் கூறி அவள் மடியில் சரணாகதி ஆகா வேண்டுமே…!

ஒரு நாளும் என்னைக் குறை சொன்னதில்லை… கற்பகமோ இல்லை அஞ்சலை அக்காவோ “என்ன பையன படிக்க வைச்சிட்டு இன்னும் இட்லி சுட்டுட்டு இருக்க உன் பையனையும் இட்லிக் கடை வைக்க சொல்ல வேண்டியது தானே?” என்று நையாண்டி செய்த போதெல்லாம் பொறுமையாக பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள் அம்மா…!

அவளுக்கு என் மீது நம்பிக்கை எப்படியும் நம் மகன் நம்மை காப்பாத்தி விடுவான் என்று…!

இதோ நான் எனக்கே கேள்விக் குறியாக…!

கொஞ்ச தூரம் நடந்தால் பேருந்து நிறுத்தம்…

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நடந்து கொண்டே ஒரு குளிர் பானம் வாங்கி அருந்தியவாறு சென்று கொண்டிருந்தேன்…?

திடீர் என்று அதோ தூரத்தில் யார் அது…!

“டேய் மாப்ள….!”

எனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான் மாணிக்கம்…! என் இள வயது பள்ளித் தோழன் பார்த்து சில வருடங்கள் ஆகிறது…

மூச்சி வாங்கிக் கொண்டே… எனைக் கேட்டான்…

“எப்படி இருக்க மாப்ள…!?”

எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. என்ன வேலை பார்க்கிறாய் என்று கேட்டு விட்டான் என்றால் என்ன பதில் சொல்வது..?

“மாப்ள நல்லா இருக்கேன் டா… நீ எப்படி இருக்க…”

“எனக்கு என்ன மாப்ள கறிக் கடை பொழப்பு. ரத்தமும் சதையும் என்ன காப்பாத்துது… நீ என்ன மாப்ள பண்ற அம்மா எப்படி இருக்காங்க…?”

“எங்க மாப்ள வேலை கிடைக்கல… அம்மா நல்லா இருக்கு நாந்தான் குற்ற உணர்ச்சியோட வாழ்ந்துகிட்டு இருக்கேன்…?”

“ஏன் டா… நீ என்ன படிச்சு இருக்க? நல்ல வேலை கெடைக்கலையா?…?”

“எம். எஸ் சி படிச்சிருக்கேன் டா… எங்க படிச்சா வேலை கிடைக்குது…படிப்புக்கு மேல நெறைய இருக்கு டா… படிச்சா மட்டும் வேலை கிடைக்கறது இல்ல காலம் மாறி போச்சு…”

“ஆமாம் டா பாட்டன் பூட்டன் காலத்து எஸ்.எஸ்.எல்.சி படிச்சுட்டு கவர்மன்ட் வேலைக்குப் போய்டாங்க… இன்னிக்கு நம்ம பாடு பெரும் பாடு ஆகிப்போச்சு…!?”

“ஆமாம்!! நீ எப்படி இருக்க…?”

“எனக்கு கல்யாணம் ஆகிருச்சு டா… ஒரு குழந்தை… கடைய இப்போ தான் பெரிசா ஆக்கிட்டு இருக்கேன்…”

கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது இருந்தாலும் என் நண்பனாயிற்றே…!

“ இருக்கட்டும்… நல்லா இருந்த சரி… மாணிக்கம் உனக்கு தெரிஞ்ச எடத்துல எதாச்சும் வேல இருந்த சொல்லி விடேன் டா…?”

என் நண்பன் என்ற உரிமையில் கேட்டுவிட்டேன்….

“ஹ்ம்ம்… உனக்கு எந்த மாதிரி வேலை டா வேணும்…?”

“எதுவா இருந்தாலும் பரவாயில்ல டா…. ஒரு நாலாயிரம் ரூவா சம்பளத்துல எந்த வேலைய இருந்தாலும் சரி…?”

“ஹ்ம்ம்… அப்போ நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாடியே…”

“தாராளமா சொல்லு டா மாப்ள…?”

“இல்ல என் புது கடைல ஒரு மேற்பார்வையாளர் வேல இருக்கு. உனக்காக நான் அஞ்சு ஆயிரம் தாரேன்… வரியா டா… நீ படிச்சும் இருக்க அதனால கணக்கு வழக்கும் பார்த்துக்க தோதுவா இருக்கும்… எனக்கும் நம்பகமான ஒரு ஆளுகிட்ட வேலைய குடுத்த மாதிரி இருக்கும்… என்ன சொல்றடா மாப்ள… உன் விருப்பம் தான்…. வேற வேலை கிடைச்சா விட்டுட்டு போய்டு. நான் எதுவும் கேட்க மாட்டேன். இப்போதைக்கு உனக்கும் உதவுனாப்ல இருக்கும்…"

எனக்கு திடீர் என்று மாணிக்கத்திற்கு நகை மாட்டி என் இதய கர்ப்ப கிரகத்தில் வைத்து கும்பிட வேண்டும் போல் இருந்தது… ஆனால்… எந்தக் கண்ணால் அன்று சிட்டுக்களை கொல்வதை பார்க்க கூடாது என்று கதறினேனோ அந்த கண்களால் எப்படி இந்த கொடூரங்களைப் பார்ப்பது…!

வாழ்க்கை வென்று விட்டது…! என்னை இந்த நிலைக்கு தள்ளியதில் விதிக்கு சற்று மகிழ்ச்சி இருக்கட்டும் என்று….

“சரி டா மாப்ள! ரொம்ப நன்றி! நாளைக்கே உன் கடைக்கு வரேன்” என்றவாறு அங்கிருந்து ஊரத் தொடங்கினேன்

Pin It