வறுமை என்றால் என்ன? ஒரு தனி நபரோ அல்லது ஒரு குடும்பமோ தனக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்ய இயலாத நிலையை வறுமை எனக் குறிப்பிடலாம். எவையெல்லாம் மனிதர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளாக உள்ளன. சரிவிகித உணவு, உடை, குடியிருக்க சுகாதாரமான வீடு, தூயக்குடிநீர், தூயக்காற்று, கல்வி, மருத்துவ வசதி, இவற்றை நிறைவு செய்யத் தேவையான வருவாய் தரும் வேலை ஆகியவற்றை அத்தியாவசியத் தேவைகளாகக் குறிப்பிடலாம்.

poor girl 305வறுமை எவ்வாறு அளவிடப்படுகிறது. அத்தியாவசியத் தேவைகளில் உணவு நுகர்வே குறைந்தபட்சத் தேவையாக உள்ளதால் உணவு நுகர்வை அடிப்படையாகக் கொண்ட அளவீட்டு முறையில் வளரும் நாடுகளில் வறுமை கணக்கிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் வருவாயின் அடிப்படையில் வறுமை கணக்கிடப்படுகிறது.

2020ல், அமெரிக்காவில், 65 வயதிற்குட்பட்ட தனிநபரின் ஆண்டு வருமானம் 12,760 அமெரிக்க டாலர் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 35 டாலருக்கு குறைவாக இருக்குமானால் அவர் வறுமையானவர் என வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் வருவாய் ஆண்டுக்கு 26,200 அமெரிக்க டாலருக்குக் குறைவாகவோ அல்லது ஒரு நாளைக்கு சுமார் 72 டாலருக்குக் குறைவாகவோ இருந்தால் அது வறுமையான குடும்பமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில், சராசரி நிகர வருவாயில் 60 விழுக்காட்டிற்கும் குறைவான வருவாய் கொண்ட ஒரு குடும்பம் ஏழைக் குடும்பமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் வறுமை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தியாவின் திட்டக் குழு வறுமைக் கோடு மற்றும் வறுமை விகிதங்களை அவ்வப்போது மதிப்பீடு செய்து வெளியிட்டுவந்தது, இதற்கான தரவுகள் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) நடத்தும் குடும்ப நுகர்வோர் செலவினங்களுக்கான மாதிரி கணக்கெடுப்பிலிருந்து பெறப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு ஐந்தாண்டுக்கு ஒரு முறை செய்யப்படுகின்றன.

சரி, வறுமைக்கோட்டிற்கான அடிப்படை வரையறையை யார் உருவாக்கினர்?.வறுமை குறித்து பேராசிரியர் வி எம் தண்டேகர், பேராசிரியர் நீலகந்த ராத் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டு 1971ல் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. அவர்களின் பரிந்துரையை திட்டக்குழு வறுமைக் குறியீட்டிற்கான வரையறையாக ஏற்றுக்கொண்டது. இதற்கான குறைந்தபட்சத் தேவைகளை தீர்மானிப்பதற்கான பணிக்குழு 1979ல் நியமிக்கப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் உணவு ஆராய்ச்சி அட்டவணை அடிப்படையிலான அதன் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு தேவையான உணவு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் நுகர்வு கிராமப்புறத்தில் உள்ள நபர்களுக்கு 2400 கலோரிகளாகவும், நகர்ப்புறத்தில் உள்ள நபர்களுக்கு 2100 கலோரிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் தினசரி 2400 கலோரி உணவையும், நகர்ப்புறங்களில் தினசரி 2100 கலோரி உணவைப் பெற இயலாத நபர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என வரையறுக்கப்பட்டது. இது வறுமையின் குறைந்தபட்ச வரையறை மட்டுமே ஏனெனில் உணவு அல்லாத அத்தியாவசிய பொருட்களுக்கான செலவினங்கள் உறைவிடம், மருத்துவப் பராமரிப்பு, கல்வி, போக்குவரத்து செலவின்ங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. இந்த வரையறையின் அடிப்படையில் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள நபர்கள் பிற உணவல்லாத பொருட்கள், சேவைகளை பெற இயலாமல் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். ஆனால் இதே வரையறை தான் இன்றும் இந்தியாவில் வறுமையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை.

டிசம்பர், 2005 இல், திட்டக் குழு, வறுமையை மதிப்பிடுவதற்கான முறையை ஆய்வு செய்ய பேராசிரியர் சுரேஷ் டி. டெண்டுல்கர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி உணவு, கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் போக்குவரத்துக்கான மாதாந்திர செலவினங்களின் அடிப்படையில் வறுமைக் கோட்டை வரையறுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

டெண்டுல்கர் முறையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்குத் தேவையான உணவு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் நுகர்வு அதற்கு முன் இருந்த 2400 கலோரியிலிருந்து 1800 கலோரியாக குறைக்கப்பட்டது. தனிநபர் உணவு நுகர்வில் 600 கலோரிகள் நான்கில் ஒரு பகுதி வெட்டப்பட்டது. டெண்டுல்கர் முறையில் கணக்கிடும் போது அரைப் பட்டினி நிலையிலுள்ளவர்களும் வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர்களாகவேக் கணக்கிடப்படுவர்.

2011-12க்கு, கிராமப்புறங்களில் டெண்டுல்கர் முறையைப் பயன்படுத்தி தேசிய வறுமைக் கோட்டுக்கான தனிநபர் சராசரி மாதாந்திர செலவினம் ரூ.816 ஆகவும், நகர்ப்புறங்களில் தனிநபர் சராசரி மாதாந்திர செலவினம் ரூ1,000 ஆகவும் மதிப்பிடப்பட்டது. ஐந்து நபர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, நுகர்வு செலவினம் கிராமப்புறங்களில் மாதம் ரூ 4,080 ஆகவும் நகர்ப்புறங்களில் மாதத்திற்கு ரூ. 5,000 ஆகவும் மதிப்பிடப்பட்டது.

டெண்டுல்கர் வறுமைக் கோடு மிகக் குறைவாக இருப்பதாக பரவலாக விமர்சனம் செய்யப்பட்ட பின், திட்டக் குழு, ஜூன் 2012 ல், டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி, வறுமையை அளவிடுவதற்கான முறையை மறுபரிசீலனை செய்தது.

வறுமையை அளவிடும் முறையை ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு மறுபரிசீலனை செய்து 2014ல் திட்டக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது. ரங்கராஜன் குழு அகில இந்திய அளவில் கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு தேவையான குறைந்தபட்ச உணவு நுகர்வை 2,155 கலோரிகளாகவும், நகர்ப்புறங்களில் ஒரு நபருக்கான குறைந்தபட்ச உணவு நுகர்வை 2,090 கலோரிகளாகவும் நிர்ணயித்துள்ளது. இது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வறுமைக்கோட்டு வரையறையை மேலும் நீர்த்துப் போகச் செய்துள்ளது என்ற போதும் டெண்டுல்கர் குழு பரிந்துரைக்கும் 1800 கலோரிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரங்கராஜன் குழு வறுமைக் கோட்டிற்கான தினசரி தனியாள் நுகர்வு செலவினத்தை கிராமப்புறங்களுக்கு ரூ.27 (டெண்டுல்கர் முறை-2009-10)லிருந்து ரூ.32 ஆக 18.5% உயர்த்தியது, நகர்ப்புறங்களுக்கான நுகர்வு செலவினத்தை ரூ.33 லிருந்து ரூ.47 ஆக 42% உயர்த்தியது.

ரங்கராஜன் குழு அகில இந்திய அளவில் வறுமைக்கோட்டிற்கான தனிநபர் நுகர்வு செலவு கிராமப்புறங்களில் 972 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில் 1407 ரூபாயாகவும் நிர்ணயித்தது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கான மாதாந்திர நுகர்வு செலவு கிராமப்புறங்களில் 4860 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில் ரூ.7035 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. உணவல்லாத பிற அடிப்படைச் செலவுகளான வாடகை, உடை, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவு கிராமபுறங்களில் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 277 ரூபாயாகவும், நகர்புறங்களில் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 344 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான மதிப்பீடு என்றே கூறவேண்டும்.

ரங்கராஜன் முறையில், 2011-12 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான வறுமை விகிதம் 29.5 விழுக்காடாகவும் 2009-2010 ஆம் ஆண்டிற்கான வறுமை விகிதம் 38.2 விழுக்காடாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இது டெண்டுல்கர் முறையில் கணக்கிடப்பட்ட வறுமைவீதத்திலிருந்து பெரிதும் மாறுபடுகிறது. 2011-12 க்கான வறுமைவீதம் டெண்டுல்கர் முறையால் 21.9 விழுக்காடாகவும், 2009-10ஆம் ஆண்டுக்கான வறுமைவீதம் 29.8 விழுக்காடாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ரங்கராஜன் முறையில் 38.2 விழுக்காடாக உள்ள 2009-10க்கான வறுமை விகிதம் டெண்டுல்கர் முறையில் 29.8 விழுக்காடாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டிற்கிடையிலான வேறுபாடு 8.4 விழுக்காடாக உள்ளது. 2011-12க்கான வேறுபாடு 7.6 விழுக்காடாக உள்ளது. ரங்கராஜன் முறையை விட டெண்டுல்கர் முறையில் வறுமை குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ரங்கராஜன் குழு 2011-12 ஆம் ஆண்டில் 30.9% கிராமப்புற மக்களும் 26.4% நகர்ப்புற மக்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்ததாகவும், அகில இந்திய வறுமை விகிதத்தை 29.5% எனவும் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில், கிராமப்புறங்களில் 26.05 கோடி மக்களும், நகர்ப்புறங்களில் 10.25 கோடி மக்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்துள்ளனர் என்றும் மொத்தமாக, 2011-12ல் 36.3 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருந்தனர் என்றும் மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கிராமப்புறங்களில் 2009-10 ல் 39.6% லிருந்து வறுமை விகிதம் 2011-12ல் 30.9% ஆகக் குறைந்துள்ளதாகவும், நகர்ப்புற இந்தியாவில் 35.1% லிருந்து 26.4% ஆக குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் வறுமைவிகிதம் 8.7 விழுக்காடு குறைந்துள்ளது!. அகில இந்திய வறுமை விகிதம் 38.2% லிருந்து 29.5% ஆக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 9.16 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கணக்கிட்டுள்ளது.

டெண்டுல்கர் முறையின் படி 2011ல் இந்தியாவில் 26.93 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். இதில் நகர்புறத்தில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 5.28 கோடி, கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 26.93 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2004-05ல் 40.7 கோடியாக இருந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 7 ஆண்டுகளில் 26.93 கோடியாகக் குறைந்துள்ளது. 13.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 ரங்கராஜன் குழு இந்தியாவில் 36.3 கோடி மக்கள் அல்லது 29.6 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. சுரேஷ் டெண்டுல்கர் குழு 26.98 கோடி மக்கள் அல்லது 21.9 சதவிகிதம் விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. ரங்கராஜன் முறையுடன் ஒப்பிடும் போது டெண்டுல்கர் முறையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கை 6.7 கோடி குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 2011-12ல் சுரேஷ் டெண்டுல்கர் முறையின் படி கிராமப்புறங்களில் 59.23 லட்சம் நபர்களும், நகர்புறங்களில் 23.40 லட்சம் நபர்களும் மொத்த்த்தில் 82.63 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளதாகவும், கிராமப்புறங்களில் வறுமைவீதம் 15.83 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 6.54 விழுக்காடாகவும் மொத்தத்தில் தமிழ் நாட்டளவில் வறுமை விகிதம் 11.28 விழுக்காடாகவும் கணக்கிடபட்டுள்ளது.

ரங்கராஜன் முறையில் 2011-12ல் தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில் 91.1 லட்சம் பேர், நகர்ப்புறங்களில், 72.8 லட்சம் பேரும், தமிழ்நாடு முழுவதிலும் 163.9 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்பதாகவும், கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 24.3 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 20.3 விழுக்காட்டினரும் தமிழ்நாடு முழுவதற்குமான வறுமை விகிதம் 22.4 விழுக்காடாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

கௌரவ் சவுத்ரி ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டிற்கு எழுதியக் கட்டுரையில் இந்தியாவின் வறுமைக் கோடு மிகக் குறைவாக இருப்பதை ஒரு ஒப்பீடு காட்டுகிறது என்கிறார். உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில் மூன்று வறுமைக் கோடுகள் உள்ளன – 1.உணவு, 2.நடுத்தரம் மற்றும் 3.மேல்நிலை – இவை மூன்றுமே இந்தியாவை விட உயர்ந்தவை. தென்னாப்பிரிக்காவில் உணவு வறுமைக் கோடு 2010 இல் மாதந்தோறும் 1,841 ரூபாயாகவும், நடுத்தர வறுமைக் கோடு 2,445 ரூபாயாகவும், மேல் வறுமைக் கோடு 3,484 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராமப்புற ருவாண்டியனின் தனிநபர் வறுமைக் கோடு மாதத்திற்கு 892 ரூபாயாகும் இது கிராமப்புற வறுமைக்கோட்டிற்கான இந்திய அளவுகோலான 816 ரூபாயை (டெண்டுல்கர் முறை) விட அதிகம். மேலும் ருவாண்டாவில் உணவுப் பொருட்களின் விலைகள் இந்தியாவை விட குறைவாக இருப்பதை மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒரு கேள்வி எழக்கூடும் டெண்டுல்கர் முறையில் வறுமைக்கோடு தவறாக மதிப்பிடப்பட்டுள்ளது அதற்கு முன்னர் எவ்வாறு அளவிடப்பட்டது? டெண்டுல்கர் முறைக்கு முன் வறுமைக்கோடு சரியான முறையில் தான் அளவிடப்பட்டிருக்கும் என்று கருதுவோமானால் அதுவும் தவறு. பொருளியலாளர் உத்சா பட்நாயக் இது குறித்து 2006ல் இந்தியாவில் 2006இல் இந்தியாவில் “வறுமையும் புதுத்தாராளியமும்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

1990களில் நவீன தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு வறுமை பெருமளவில் குறைக்கப்பட்டது போல் பெரும்பாலானோரால் பரப்புரை செய்யப்படுகிறது. 1993-4ல் 37.3 விழுக்காடாக இருந்த வறுமை வீதம் 1999-2000ல் 27.3 விழுக்காடாகக் குறைந்ததாக திட்டக்குழு தெரிவித்துள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தொடர்வதற்கு வசதியாகவே வறுமையின் அளவு குறைத்து மதிப்பிடப்படுகிறது என்கிறார் உத்சா பட்நாயக்.

1980களுடன் ஒப்பிடும்போது 1990 களில் பயிர் வளர்ச்சி விகிதங்கள் பாதியாக குறைந்துவிட்டன, கிராமப்புற வளர்ச்சி செலவினங்களும் குறைக்கப்பட்டன. கிராமப்புற வேலைவாய்ப்பு வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்தது. விவசாயிகளுக்கு வங்கிக் கடன் நிராகரிக்கப்பட்டது. விவசாயிகள் கந்து வட்டிக்கே கடன் பெறும் நிலை பெறுமளவில் காணப்பட்டது. விலைச் சரிவும் ஏற்பட்டது. கடனை திரும்ப செலுத்த இயலாததால் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயத் துறையில் ஏற்பட்ட நெருக்கடிகளை வெளிக்காட்டும் இக்குறியீடுகள் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ள வறுமையையே குறிப்பிடுகின்றன ஆனால் அதற்கு முற்றிலும் முரணுள்ள விதத்தில் வறுமைக் குறைந்துவிட்டது என்று திட்டக்குழு அறிவித்துள்ளதாகக் கூறுகிறார்.

இது ஒரு பெரும் கேள்வியை எழுப்புகிறது வறுமையை மதிப்பிடுவதற்கான அலுவலக முறை தவறானதா, அது வறுமையின் உண்மையான போக்குகளை கண்டறிய தவறியதா? 1997 முதல் பொது விநியோக முறை குறுக்கப்பட்டு (targetedPDS) 'வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே மலிவு விலை உணவுப் பொருட்கள் அளிக்கப்படுகிறது. வறுமை தவறான முறையில் கணக்கிடப்படுவது லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறு வறுமை தவறாக அளவிடப்படுகிறது எனப் பார்த்தோமானால் திட்டக் குழு நுகர்வு செலவினம் அடிப்படையிலான வரையறையைப் பயன்படுத்தி 1973-74ஆம் ஆண்டுக்கு மட்டுமே வறுமைக் கோட்டை அளவிட்டுள்ளது. அதற்கடுத்துள்ள அனைத்து ஆண்டுகளுக்கும் அதே தரவுகளின் முடிவுகளை விலைக் குறியீட்டின் அடிப்படையில் முன்னொக்கி மதிப்பிடுவதன் மூலம் அளவிட்டுள்ளது. அதாவது வறுமைக்கோடு எந்த ஆண்டிற்கு அளவிடப்பட வேண்டுமோ அந்த ஆண்டின் விலையில் 1973-74ஆம் ஆண்டிற்கான நுகர்வு கணக்கிடப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் நுகர்வுச் செலவுத் தரவுகள் பெறப்பட்ட போதும் அவை ஒரு போதும் பயன்படுத்தப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நுகர்வுச் செலவினங்களிலும், நுகர்வுப் பொருள்களிலும் மாற்றம் ஏற்படலாம், ஆனால் நுகர்வில் ஏற்பட்ட மாற்றம் அளவிடப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 1973-74ஆம் ஆண்டில் என்ன நுகர்வு செய்யப்பட்டதோ அந்த அடிப்படையிலே சமீபகாலம் வரை வறுமையானது அளவிடப்பட்டுள்ளது. நுகர்வு ஒரு மாறிலியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வால் நுகர்வில் ஏற்பட்ட மாற்றங்கள் அளவிடப்படாமலே புறக்கணிக்கப்பட்டுள்ளன என்கிறார் உத்சா பட்நாயக்.

1999-2000 க்கான அகில இந்திய கிராமப்புற வறுமைக்கோட்டிற்கான நுகர்வு செலவினம் ரூ.327.6 என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதைக் கொண்டு 1890 கலோரிகளை மட்டுமே பெற முடியும். 2400 கலோரிகளை பெறுவதற்கு நுகர்வு செலவினம் 565 ரூபாய் ஆகும். அகில இந்திய நகர்ப்புற வறுமைக் கோட்டிற்கான நுகர்வு செலவினம் ரூ.454 என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரூ.454ஐக் கொண்டு 1875 கலோரிகளை மட்டுமே பெறமுடியும். 2100 கலோரிகளை பெறுவதற்கான நுகர்வு செலவினம் ரூ.625 ஆகும். 1999-2000 ஆண்டில் வறுமை வீதம் 27.4 விழுக்காடாக இருந்ததாகத் திட்டக்குழு மதிப்பிட்டுள்ளது. ஆனால் சரியான முறையில் அளவிடும் போது வறுமை வீதம் 74.5 விழுக்காடாக இருந்ததாக உத்சா கணக்கிட்டுள்ளார். கிராமப்புற மக்களில் கிட்டத்தட்ட பாதிபேர் - 47.1 விழுக்காடு அல்லது 37.0 கோடி மக்கள் - உண்மையில் ஏழைகளாக இருந்தும் கூட தவறான கணக்கீட்டால், அதிகாரப்பூர்வமாக வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களின் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் (உத்சா பட்நாயக், 2006).

நகர்ப்புறங்களில் உண்மையான வறுமையின் அளவு 45 விழுக்காடாக இருந்துள்ளது ஆனால் திட்டக் குழுவின் கணக்கீட்டின் படி வறுமையின் அளவு 23.5 விழுக்காடாகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக நுகர்வுத் தரவுகளின் அடிப்படையில் வறுமை வீதத்தைக் கண்டறியாமல் மாறாத நுகர்வுக் கூடையைக் கொண்டு விலைக் குறியீட்டின் மூலம் சுற்றடியாகக் கணக்கிடப்படும் இம்முறையின் மூலம் உண்மையான வறுமையின் அளவு சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை. வறுமைக் கோட்டிற்கான நுகர்வு செலவின மதிப்பீட்டிற்கும், பரிந்துரைக்கப்பட்ட கலோரிகளை பெறுவதற்கான நுகர்வு செலவினம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு ஆரம்பத்தில் குறைவாக இருந்த போதும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. (உத்சா பட்நாயக், 2006)

வறுமைக் கோட்டிற்கான அலுவலக நுகர்வு செலவின மதிப்பீட்டின் படி 1977-8ல் 2170 கலோரிகள் மட்டுமே பெற முடியும் (230 கலோரிகள் குறைவு), 1983ல் 2060 கலோரிகளையே பெற முடியும் (340 கலோரிகள் குறைவு), 1993-44ல் 1990 கலோரிகள் மட்டுமே பெற முடியும் (410 கலோரிகள் குறைவு) மற்றும் 1999-00ல் 1890 கலோரிகள் மட்டுமே பெற முடியும் (510 கலோரிகள் குறைவு).

இவ்வாறு மறைமுகமான கணக்கீட்டு முறையின் மூலம் வறுமைக் கோட்டிற்கான தரம் காலப் போக்கில் மேலும் மேலும் குறைக்கப்படுவதன் மூலம் பெரும்பாலான மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்ற தவறான முடிவை அடைய வழிவகுத்துள்ளது.

திட்டக்குழு வெளியிட்டத் தரவுகளின் படி 1973 முதல் 1983 வரையிலான பத்தாண்டுகளில் வறுமை வீதம் 56 விழுக்காட்டிலிருந்து 46 விழுக்காடாக 10 புள்ளிகள் குறைந்துள்ளது. 1983லிருந்து 1993-4 வரையிலான 10 ஆண்டுகளில் வறுமை வீதம் குறைந்து 46 விழுக்காட்டிலிருந்து 37 விழுக்காடாக 9 புள்ளிகள் குறைந்தது.ஆனால் 1993-4 முதல் 1999-00 வரையிலான ஆறு வருடங்களுக்குள் வறுமை வீதம் 37 விழுக்காட்டிலிருந்து 27 விழுக்காடாக 10 புள்ளிகள் குறைந்துள்ளது.

1983ல் வறுமைக் கோட்டிற்கான சரியான நுகர்வு செலவினம் ரூ.120 ஆகவும், 1993-4ல் நுகர்வு செலவினம் ரூ.325ஆகவும், 1999-00ல் நுகர்வு செலவினம் ரூ.565 ஆகவும் கணக்கிட்டிருக்க வேண்டும். உண்மையான வறுமை வீதம் 1983ல் 40 விழுக்காடாகவும், 1993ல் 58 விழுக்காடாகவும், 1999-00ல் 72 விழுக்காடாகவும் இருந்துள்ளது.

1999-2000ல் தமிழ்நாட்டில் கிராமப்புற நுகர்வோரின் வறுமைக் கோட்டிற்கான செலவினம் 308 ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 308 ரூபாயின் மூலம் 1510 கலோரிகளை மட்டுமே பெற முடியும், இது பரிந்துரைக்கப்பட்ட 2400 கலோரி மதிப்பை விட 900 கலோரி குறைவானது.

சரி 1973-74ஆம் ஆண்டிலாவது வறுமைக்கோடு சரியாக அளவிடப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.1973-74ஆம் ஆண்டு கலோரி நுகர்வுத் தரவுகள் வெளியிடப்படவில்லை. மேலும் இது வெறும் 9 மாத தேசிய மாதிரி கணக்காய்வையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது ஆரம்பத் தரவுகளிலேயே வெளிப்படைத் தன்மை இல்லாத நிலையையே குறிப்பிடுகிறது. 1970-71 தேசிய மாதிரி கணக்காய்வுத் தரவினை ஆய்வு செய்தபோது கிராமப்புறங்களில் 72 விழுக்காட்டினரால் 2400 கலோரிகளுக்கு குறைவாகவும், நகர்ப்புறங்களில் 54 விழுக்காட்டினரால் 2200 கலோரிகளுக்கு குறைவாகவும் ஆற்றல் நுகர்வைப் பெறமுடிந்தது. அதாவது கிராமப்புறங்களில் 72 விழுக்காட்டினரும், நகர்ப்புறங்களில் 54 விழுக்காட்டினரும் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருந்துள்ளனர். இது 1973-74 ஆம் ஆண்டுக்கு அதிகாரப்பூர்வமாக மதிப்பிடப்பட்ட 56.4 விழுக்காடு வறுமைவீதம் சரியானதல்ல என்பதையே குறிப்பிடுகிறது. அந்த ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்திருந்தது, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் விலை எதிர்ப்பு இயக்கம் ஏற்பட்டிருந்தது. ஆகையால் மூன்று ஆண்டுகளில் வறுமைவீதம் 72 விழுக்காட்டிலிருந்து 56.4 விழுக்காடாகக் குறைவதற்கு சாத்தியமேயில்லை. வறுமைவீதம் மிக அதிகமாக 72 விழுக்காடு இருந்ததால், இந்தத் தரவுகள் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டிருக்கலாம். 1973-74ல் 56.4 விழுக்காட்டினரால் 2200 கலோரிகளுக்கு குறைவாகவே பெற முடிந்தது. ஆக முதன்முதலில் அளவிடப்பட்ட வறுமைவீதமும் 2400 கலோரி நெறிமுறையை பின்பற்றி மதிப்பிடப்படவில்லை என்பது தெளிவு. இவ்வாறு 2400 கலோரி நெறிமுறையை நீர்த்துப் போகச் செய்வதன் மூலமே வறுமையின் அளவு குறைவாக காட்டப்பட்டுள்ளது.

1973-4 முதல் இந்தியாவின் திட்டக்குழுவால் இந்தத் தவறு இழைக்கப்பட்டது. 1993 நிபுணர் குழவும் அதே தவறான முறையையே பரிந்துரைத்துள்ளது. இதை விமர்சனமற்ற முறையில் பல பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். (உத்சா பட்நாயக், 2006)

இந்தியாவில் வறுமையின் அளவு கடைசியாக அதிகாரப்பூர்வமாக திட்டக்குழுவால் மதிப்பிடப்பட்டு 2011-12ல் 21.92 விழுக்காடாக அறிவிக்கப்பட்டது. இது டெண்டுல்கர் குழுவின் அணுகுமுறையைப் பின்பற்றி மதிப்பிடப்பட்டது. இன்றும் அரசு தரப்பில் இந்தியாவின் வறுமைவிகிதம் 21.92 விழுக்காடாகவே குறிப்பிடப்படுகிறதே தவிர ரங்கராஜன் குழு மதிப்பிட்ட 29.5 விழுக்காடு குறிப்பிடப்படுவதில்லை.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2015ல் திட்டக்குழுவிற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அதற்கு பதிலாக நவீன தாராளமய ஊதுகுழலான நிட்டி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வறுமையை அளவிடும் பணி தற்போது நிட்டி ஆயோக்கையே சார்ந்துள்ளது.

2015ல், நிட்டி ஆயோக் அதன் அப்போதைய துணைத் தலைவர் பேராசிரியர் அரவிந்த் பனகாரியாவின் தலைமையில் வறுமைக்கான ஒரு பணிக்குழுவை அமைத்தது. வறுமை கோடு அவசியமா என்பது குறித்து அக்குழு விவாதித்ததாம்!.

வறுமைக் கோடு மற்றும் வறுமை விகிதம் மூன்று சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன என்று நிதி-அயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1. ஏழைகளை அடையாளம் காணுதல்; 2. மாநிலங்கள் முழுவதும் வறுமை எதிர்ப்பு திட்டங்களுக்கான செலவின ஒதுக்கீடு செய்தல் 3. காலப் போக்கில் வெவ்வேறு பகுதிகளில், பிராந்தியங்களில் வறுமையைக் கண்காணித்தல் ஆகியவையே அதன் மூன்று பயன்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமையிலிருந்து மக்களை வெளியே கொண்டு வரப்பட வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தால் தினம் இரண்டு வேளை மட்டுமே உணவு பெறும் கடும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களை கண்டறியும் வகையில் வறுமைக் கோட்டின் வரையறையை மேலும் கீழே குறைக்க வேண்டும் என்ற கருத்தும் நிட்டி ஆயோக்கால் முன்வைக்கப்படுகிறது. வறுமைக் கோட்டை உயர்மட்டத்தில் நிர்ணயித்தால் குறிப்பிடத்தக்க வாழ்வாதாரத்தை அடைந்த அரசு திட்டங்களின் பயனாளிகளை மட்டுமே அடையாளம் காண முடியுமே தவிர தீவிர வறுமையைக் குறைக்க உதவாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கடும் வறுமையில் உள்ள குடும்பங்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும் எனில் வறுமைக் கோட்டிற்கான வரையறையை குறைக்க வேண்டும் என்பது உண்மையில் வறுமையைப் போக்கப் பயன்படாது, வறுமையின் அளவை செயற்கையாகக் குறைத்துக் காட்டுவதற்கு மட்டுமே பயன்படும்.

இந்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு சுற்றுகளின் நுகர்வோர் செலவின தரவுகளிலிருந்து வறுமை கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களின் நுகர்வு செலவு முறைகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இதில் உணவு மற்றும் உணவு அல்லாதவை) மற்றும் சேவைகளுக்கான சராசரி செலவினங்களை அறியப் பெறலாம். நுகர்வு செலவு கணக்கெடுப்புகளின் மூலம் மக்களின் நுகர்வுமுறை, வாழ்நிலை, குடும்பங்களின் நல்வாழ்வு குறித்து அறிவதற்கும், அரசு அமைப்புகளின் திட்டமிடல் மற்றும் கொள்கை உருவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. வறுமைக் கோட்டு நுகர்வுசெலவினத்தை விடக் குறைவான நுகர்வு செலவினத்தைக் கொண்டிருக்கும் குடும்பம் ஏழைக் குடும்பம் என வரையறுக்கப்படுகிறது.

இந்தியாவில் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் 2017-18ஆம் ஆண்டிற்கான 75ஆம் சுற்றின் தரவுகள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 2019 நவம்பரில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Mospi) தேசிய புள்ளியியல் அலுவலக நுகர்வோர் செலவு கணக்கெடுப்பின் 75 வது சுற்றின் தரவு மற்றும் அறிக்கைகள் வெளியிடப்படாது என்று அறிவித்தது.

"நுகர்வு முறையின் அளவுகளில் மட்டுமல்லாது, அதன் போக்கிலும் நிர்வாக தரவு ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் அதிகரித்துள்ளதால் அவற்றை வெளியிடவில்லை என அமைச்சகம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. 2023 க்குள் திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிடுவதாகக் கூறி, கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிடாமல் வைத்துள்ளது.

ஆனால் இதற்குப் பின் ஒழிந்துள்ள உண்மையான காரணம் என்ன?, இந்த அறிக்கை தரவுகளின் உண்மையால் பாஜக அரசின் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சியதாலே இந்த அறிக்கையை வெளியிட விடாமல் தடுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 200 க்கும் மேற்பட்ட அறிஞர்கள் 75வது சுற்றின் தரவுகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்த பின்பும் நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு தரவுகள் வெளியிடப்படவில்லை.

2011-12க்கும் 2017-18க்கு இடைப்பட்ட காலத்தில் மக்களின் உண்மையான நுகர்வு செலவினம் குறைந்துள்ளது. இது பாஜக ஆட்சியில் இருந்த காலம். கசிந்த அறிக்கையின்படி, இந்திய மக்களின் உண்மையான மாதாந்திர தனி நபர் நுகர்வு செலவினம் 2011-2012ல் 1,501 ரூபாயிலிருந்தது 2017-2018ல் 1,446 ரூபாயாக 3.7% சரிந்துள்ளது. கிராமப்புறங்களில் நுகர்வு செலவினம் 8.8% குறைந்துள்ளது, நகர்ப்புற குடும்பங்களில் நுகர்வு செலவினம் 2% அதிகரித்துள்ளது. 2011-12 மற்றும் 2017-18 க்கு இடையில் வறுமையின் அளவு அதிகரித்திருத்திருப்பதையே இது குறிப்பிடுகிறது.

இதற்கு முன்னர் நுகர்வு செலவினம் 1960-66க்கு இடைப்பட்ட உணவு நெருக்கடியின் போதும், 1973-74ன் போதும் குறைந்துள்ளது என்று பொருளியலாளர் ஹிமான்சு குறிப்பிடுகிறார். 2011-12 முதல் 2017-18 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி ஆறு விழுக்காட்டிற்கு மேல் இருந்துள்ள போது நுகர்வு செலவினம் குறைந்துள்ளதற்கு பாஜகவின் மக்களுக்கு அநீதியான கொள்கை நடைமுறைகளே காரணம் எனக் குறிப்பிட முடியும்.

தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது வறுமைவீதம் அதிகரித்துள்ள உண்மையை வெளியிட பாஜக அரசு விரும்பவில்லை என்பதாலே புள்ளியியல் அறிக்கையை வெளியிடாமல் தடுக்கும் அளவிற்கு கேடுகெட்ட நிலைக்குச் சென்றுள்ளது பாஜக அரசு.இதனால் இந்தியாவின் வறுமை விகிதமும், வறுமைக்கோடும் புதுப்பிக்கப்படாமல் 2011ஆம் ஆண்டின் தவறான டெண்டுல்கர் முறை வறுமைவீதமே இன்றும் இந்தியாவின் வறுமைவீதமாக குறிப்பிடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் வறுமையை அளவிடுவதற்காக பல பரிமாண வறுமை குறியீடு (MPI) பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2010ல் ஆக்ஸ்போர்ட் வறுமை, மனித மேம்பாட்டு முன்னெடுப்பு, ஐநா வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக இக்குறியீடு உருவாக்கப்பட்டது. 2018லிருந்து எல்லா வடிவங்களிலும் எல்லா இடங்களிலும் வறுமையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற வளங்குன்றா வளர்ச்சிக்கான முதல் குறிக்கோளை (SDG1) நடைமுறைபடுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் இந்த பல பரிமாண வறுமைக் குறியீடே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரத்தில் எவ்விதமான குறைபாடுகளைக் கொண்டுள்ளனர் என்பதை மதிப்பிடும் 10 குறிகாட்டிகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் இக்குறியீடு, எத்தனை பேர் வறுமையில் உள்ளனர் என்பதையும், அவர்களின் வறுமையின் தீவிரம் என்ன என்பதையும் உள்ளடக்கியவாறு கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டை கணக்கிடும் பொறுப்பு நிதி அயோக்கிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் முன்னேற்றத்தை கண்காணித்தல், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் தரவரிசை மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல், சீர்திருத்த செயல் திட்டங்களை தயாரித்தல் ஒரு உள்நாட்டு தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடை உருவாக்குவது ஆகியவற்றை செய்ய நிட்டி ஆயோக் பணிக்கப்பட்டுள்ளது.

நிட்டி ஆயோக் பல பரிமாண வறுமைக் குறியீட்டு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. பல பரிமாண வறுமைக்கு றியீட்டின் அடிப்படையில் மாநிலங்களை தர வரிசைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள பல பரிமாண வறுமையின் சவால்களை எதிர்கொண்டு சீர்திருத்த செயல்பாட்டுத் திட்டங்களை உருவாக்கும் நோக்கத்திற்காக நிட்டி ஆயோக் அமைச்சகங்களுக்கிடையேயான பல பரிமாண வறுமைக் குறியீட்டு ஒருங்கிணைப்புக் குழுவை (MPICC) அமைத்துள்ளது. தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டை அளவிடுவதற்கான குறிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் இக்குழுவிடமே உள்ளது.

நிட்டி ஆயோக்கின் வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்களுக்கான 2019 அறிக்கையில் இந்தியாவின் வறுமையின் அளவு 21.92 விழுக்காடாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் பல பரிமாண வறுமைக் குறியீட்டின் 2019, 2020ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியாவின் வறுமையின் அளவு 27.91 விழுக்காடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டிற்கான தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது. பல பரிமாண வறுமைக் குறியீட்டின் தர வரிசைப் பட்டியலில் இந்தியா 2018ல் 105 நாடுகளில் 53 வது இடத்திலும், 2019ல் 101 நாடுகளில் 53 வது இடத்திலும், 2020 ல் 107 நாடுகளில் 62 வது இடத்திலும் உள்ளது.

நிட்டி ஆயோக்கை சார்ந்த மேம்பாட்டு கண்காணிப்பு, மதிப்பீட்டு அலுவலகத்தைச் சேர்ந்த வேணுகோபால் மோத்கூர், நினா பட்கையன் ஆகியோர் தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலகத்தின் -71 மற்றும் -75 சுற்றின் தரவுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பல பரிமாண வறுமைக் குறியீட்டை மதிப்பிட்டுள்ளனர். இவர்களது ஆய்வுக் கட்டுரை ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் - உலக பொருளாதார மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2021 ஜனவரியில் வேலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவீட்டில் உணவு நுகர்வு விலக்கப்பட்டுள்ளது, அதாவது உணவு நுகர்வு வறுமைக்கான அளவீட்டில் உள்ளடக்கப்படவில்லை.

இந்த பல பரிமாண வறுமைக் குறியீட்டில் வருவாய், சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவை ஒவ்வொன்றும் ¼ பங்களிக்கின்றன. இந்தக் குறியீட்டில் நான்கில் ஒரு பகுதி வருவாயை அடிப்படையாகக் கொண்டது. இதில் வருவாய் டெண்டுல்கர் முறையின் வறுமைக் கோட்டின் மாதாந்திர செலவினத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மேம்பாடு ஏற்பட்டதன் விளைவாக நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2014-15ல் 17.68 விழுக்காடாக இருந்தது 2017-18ல் 12.85 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014லிருந்து 2018 வரை மூன்று ஆண்டுகளில் அகில இந்திய அளவில் 14.40 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் பல பரிமாண வறுமைவீதம் 26.9 விழுக்காட்டிலிருந்து 13.75 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் -19 தாக்கத்தால் இந்தப் பலன்களில் தலைகீழ் மாற்றத்திற்கு வழிவகுக்கலாம், வறுமை 2014-15-க்கு முந்தைய நிலைக்கு உயரும் நிலையும், கிராமப்புறங்களில் வறுமை மிகவும் அதிகமாக உயரும் நிலை ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையிலுள்ள வறுமைக் கோட்டுக்கான வரைமுறையை நீர்த்துப் போக செய்யும் விதத்தில் பல பரிமாண வறுமைக் குறியீட்டை பயன்படுத்தும் போக்கு காணப்படுகிறது. உணவு நுகர்வுசெலவினம் அடிப்படையிலான வறுமைக் கோட்டை கணக்கிட்டு அதனுடன் கூடுதலாக பல பரிமாண வறுமைக் குறியீட்டை அளவிடுவதே வறுமையின் அளவை சரியாக மதிப்பிடுவதற்கும், அதைக் குறைப்பதற்கான கொள்கை, செயல்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் உதவுமே தவிர வறுமைக் கோட்டை, பல பரிமாண வறுமைக் குறியீட்டால் பதிலீடு செய்வது வறுமையைக் குறைத்து மதிப்பிடவே பயன்படும். பட்டினி கிடந்து கல்வி பெறுவதையும், பட்டினி கிடந்து வாடகை கட்டுவதையும், பட்டினி கிடந்து அத்தியாவசியப் பொருட்களையும், சேவைகளையும் பெறுவதையும் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டதற்கான குறியீடுகளாக ஒரு போதும் கருத முடியாது.

ஆரம்பத்தில் திட்டக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வறுமைக் கோட்டிற்கான 2400 கலோரி நுகர்வு நெறி 1974ல் 2200 கலோரி அளவுக்கே மதிப்பிடப்பட்டது.பின்னர் காலப்போக்கில் 1890 கலோரி அளவுக்குக் குறைக்கப்பட்டது, அதன் பிறகு டெண்டுல்கர் முறையில் அது 1800 கலோரியாகக் குறுக்கப்பட்டது. இப்பொழுது கணக்கிடப்படும் பல பரிமாண வறுமைக் குறியீட்டை அளவிடுவதற்கு உணவு நுகர்வு தரவுகள் அறவே பயன்படுத்தப்படவில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று ஒரு பழமொழி உண்டு அதற்கு மிகப் பொருத்தமான வரையறையாக இந்தியாவின் வறுமைக்கோட்டிற்கான அளவுகோல் உள்ளது.

இந்தியா மொத்த உள் நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 5வது இடத்தில் உள்ளது. உலகின் ஐந்தாவது மிகப்பெறும் பொருளாதாரமாக இந்தியா கருதப்படுகிறது. வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா தனி நபர் வருவாய் அடிப்படையில் 128வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் வறுமையைக் குறைப்பது அரசின் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்திய அரசு எவ்வாறு வறுமையைக் குறைத்துள்ளது என்றால் வறுமைக்கான அளவீட்டைக் அடிமட்டமாகக் குறைப்பதன் மூலம் கோடிக்கணக்கான வறிய ஏழை மக்களையும் அரசு திட்டங்களுக்கு பயனாளர்களாகத் தொடராத வண்ணம் வறுமைக் கோட்டிற்கு மேலே தள்ளியுள்ளது.இது வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கை அல்ல, இந்திய அமைப்பு முறையில் வறுமையை நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கையே.

இந்தியாவில் பொருளாதாரத்தை வேகமாக வளரச் செய்தல், வறுமையைப் போக்குவதற்கான சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதே வறுமையை போக்குவதற்கான இரட்டை உத்தியாகக் கருதப்படுகிறது. ஆனால் நவீனதாராளமய கொள்கைகளின் அடிப்படையில் சமூகத் திட்டங்களுக்கும், பொதுத் துறைகளுக்குமான அரசு செலவினங்களை இந்திய அரசு மேலும் மேலும் குறைத்துக் கொண்டே உள்ளது. இதனால் இந்தியாவில் வறுமையின் அளவு குறையவில்லை மாறாக அதிகரித்தே உள்ளது. பொருளாதாரச் சமமின்மையின் அதீத உயர்வும் வறுமை அதிகரிக்கும் போக்கையே சுட்டிக் காட்டுகிறது. ஆனால் வறுமையின் அளவு அரசு தரப்பு அளவீடுகளால் பெருமளவு குறைத்தே காட்டப்படுகிறது. அரசின் அடிமட்ட வறுமைக் கோட்டு வரையறை பல கோடிகணக்கான மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியதாகக் காட்ட ஆளுங்கட்சிகளின் ஊழல் அரசியலுக்கே உதவியுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் தாக்குதலுக்குப் பின் பொருளாதார முடக்கத்தினாலும், வேலையின்மை, வருவாய் இழப்பு, சுகாதாரச் செலவுகள், விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் தாக்கத்தால் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் பல கோடிக் கணக்கான மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்டறியவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சரியான வறுமைக் கோட்டு அளவுகோலை பயன்படுத்துவது அவசியம். பல பரிமாண வறுமைக் குறியீடு உணவு நுகர்வின் அடிப்படையில் செய்யப்படாதது பெருங்குறைபாடாக உள்ளது.

உணவு நுகர்வு செலவினம் மற்றும் உணவல்லாத கல்வி, உறைவிடம், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய அனைத்து அத்தியாவசிய பொருட்கள், சேவைகளுக்கான செலவினங்களை இன்றைய விலைவாசிக்குத் தக்கவாறு மதிப்பிட்டு வறுமைக் கோட்டை மறுவரையறை செய்வது மிகவும் அவசியம். இதில் சரிவிகித உணவின் அடிப்படையில் உணவு நுகர்வு செலவினம் கணக்கிடப்பட வேண்டும், சரிவிகித உணவு என்பது வெறும் கலோரி, புரதம், கொழுப்பு மட்டுமல்ல, அதில் விட்டமின்கள், தாது உப்புக்கள் ஆகிய அனைத்து நுண்ணூட்டச் சத்துக்களும் அடங்கும். ஆகவே உணவு நுகர்வு செலவினக் கணக்கீட்டில் விட்டமின், தாதூப்புக்கள் ஆகிய அனைத்து நுண்ணூட்டச் சத்துக்களையும் உள்ளடக்க வேண்டியது மிகவும் அவசியம். தற்போதுள்ள குறுக்கப்பட்ட பொது விநியோக முறையை தளர்த்தி தேவை அடிப்படையில் அனைவருக்கும் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் விதத்தில் பொது விநியோக முறையை செயல்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். அனைவருக்கும் உணவு பாதுகாப்பையும், வேலைவாய்ப்பையும் வழங்குவதன் மூலமே வறுமையின் அளவைக் குறைக்க முடியும்.

- சமந்தா

Pin It