நூல் அறிமுகம்

 

கு. சின்னப்ப பாரதி அண்மையில் எழுதிய ‘‘பாலை நில ரோஜா’’ என்ற நாவலில் அவர் ஒரு புதிய தளத்திற்கு வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களுடைய வாழ்க்கை முறை, வறுமை, அவர்களின் போராட்டம், அதில் ஏற்படும் அடக்குமுறை ஆகியவற்றைப் பற்றி மண்ணின் மணத்தோடும், வரலாற்றுப் பார்வையோடும் படைப்புகளைத் தந்த சின்னப்ப பாரதி, வேறு களத்திற்கு இந்த நாவலில் வந்திருக்கிறார். சிறிய வயதில் வறுமைக்கு ஆட்பட்டு, படிப்பதற்குப் படாத பாடுபட்டு, ஒரு அதிகாரியாக, மாவட்ட ஆட்சியர் நிலைக்கு உயரவேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தி, ஐ.ஏ.எஸ். அதிகாரியானால் எளிய மக்களுக்காகத் தன் பதவியைப் பயன்படுத்தவேண்டும் என்ற உறுதிகொண்ட நெஞ்சினை உடைய மூர்த்தி என்ற ஒரு பாத்திரத்தைப் படைத்து நாவலைத் தந்திருக்கிறார் பாரதி.

மூர்த்தி ஏழ்மையில் படித்து, வளர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகிறான். அப்படி ஆனதும் ‘‘ன்’’ போய் ‘‘ர்’’ வந்துவிடுகிறது. சொந்த வாழ்க்கையிலும், அரசுப் பணியிலும் நேர்மையாக இறுதிவரை அவர் நடக்கிறார். மூர்த்தியினுடைய கடமை தவறாத, நேர்மையான பணியைப் பார்த்துப் பாராட்டும் முதல்வர், அவரைத் தனியே அழைத்து, அவருக்கு இருக்கும் நல்ல பெயரை வைத்து ஏழை மக்களை அமைதிப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே நிலமற்ற விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தை மாற்று இடம் தருவதாகக் கூறி அவர்களை வெளியேற்றி, அந்த இடத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூறும்போது மாவட்ட ஆட்சியரான மூர்த்தி அதை ஏற்க மறுத்து விடுகிறார். முதல்வரே கூறிய போதும், அவர் தன்னைப் பகடைக்காயாக்க இடம் தராமல் உறுதியுடன் நிற்கிறார். மனசாட்சிப்படி நடக்க எண்ணி அவரே வேறு இடத்திற்கு மாறுதல் கேட்டுக் கடிதம் எழுதுகிறரர். அத்துடன் நாவல் முடிகிறது.

நாவலின் முற்பகுதி மூர்த்தி படித்து வளர்ந்த, அல்லல்பட்ட வாழ்க்கையைச் சொல்கிறது. பிற்பகுதி அரசுப் பணியில் ஆற்றிய செயல்களைக் கூறுகிறது. இந்த நாவலைப் படித்து முடிக்கும்போது, இந்த நாவல் எதார்த்தப் படைப்பா? அவருடைய மூர்த்தி எதார்த்தப் பாத்திரமா? என்று கேள்வி எழுகிறது. ஒவ்வொரு தொழிலில் இருப்பவர்களுக்கும், அவர்களின் தொழில் சார்ந்த பொதுக் குணங்கள் இருக்கும், இந்தப் பொதுக் குணம்தான் எதார்த்தம். பொதுக் குணம் அல்லாதவை எதார்த்தமாகாது. மருத்துவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு, முதலாளிகளுக்கு இப்படி எல்லாப் பிரிவினருக்கும் அவரவர் தொழில் சார்ந்து, பொதுக் குணம் இருக்கும். படைப்பில் பொதுக் குணம் என்பது அச்சில் வார்த்தது போல் இருக்காது, அப்படி இருந்தால் அந்தப் படைப்பு தோற்கும். சம்பந்தப்பட்ட நபரின் தனித்தன்மையோடும், சூழலோடும் படைப்பு வெளிப்படும் போது அது வெற்றிப் படைப்பாக அமைய வாய்ப்புண்டு. வாழ்க்கையில் அரிதாகக் காணப்படும் பாத்திரங்களும், நிகழ்வுகளும் எதார்த்தம் என்ற வட்டத்திற்குள் வராது. அவை பொது குணத்தைப் பிரதிபலிக்காது. உண்மையான வாழ்க்கையைக் காட்டாது. அதனால்தான் மெகா சீரியல்களைத் தொலைக்காட்சியில் காண்பவர் எவரும் அவற்றை எதார்த்த உருவாக்கமாகக் கொள்வதில்லை. தொழிலாளர்களின் பொதுக் குணம்தான் அவர்களை ஒரு வர்க்கக்கோட்டில் நிறுத்துகிறது. கருங்காலித்தனம் பொதுக் குணம் அல்ல. அது அரிதாக இருப்பது. அது வர்க்கநிலைப்பாட்டில் வராது.

அதிகார வர்க்கத்திற்கு என்று ஒரு பொதுக் குணம் உண்டு. சின்னப்பபாரதியின் மூர்த்தி அப்படி ஒரு பொதுக் குணம் படைத்த அதிகாரவர்க்கப் பாத்திரம் அல்ல,

மனிதர்கள் இப்படி இருக்க வேண்டும் என்று படைப்பாளி ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அப்படிப்பட்ட படைப்புகள் கற்பனாவாதப் படைப்புகளாகவே அமையும். அக்காலத்தில் டாக்டர் மு.வ. எழுதிய நாவல்களையும், அவற்றில் இடம் பெற்ற பாத்திரங் களையும் அதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். சின்னப்ப பாரதி படைத்திருக்கும் மூர்த்தியும், நாவலின் நிகழ்ச்சிகளும், போக்கும், முடிவும் ஒரு கோணத்தில் பார்க்கும் போது எதார்த்தவாதத்தைத் தாண்டி கற்பனைவாதப் படைப்பாகவே தோன்றும், ஆனால் மறு கோணத்தில் அது அப்படி இருக்காது.

சின்னப்ப பாரதி இந்த நாவலை தனக்கு நேரடியாகத் தெரிந்த, பழகிய ஓரிரு அதிகாரிகளை ஒரு முழுமையான பாத்திரமாக்கி நடந்த உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து, சம்பந்தப்பட்ட பாத்திரத்தின் சுயசரிதைப் பாணியில் சொல்லும்போது, அது ஒரு உண்மையைச் சொல்லும் நாவலாக மாறி விடுகின்றது. மூர்த்தி என்ற பாத்திரத்திற்குள் சின்னப்ப பாரதி நெருங்கிப் பழகிய ஓர் அதிகாரி அமர்ந்திருக்கிறார். பெரும்பாலான பாத்திரங்களும் நிகழ்வுகளும் கற்பனை அல்ல. உண்மையை எழுதும்போது, அது கற்பனாவாதம் என்ற எல்லையைத் தாண்டிவிடுகிறது. நாவலின் பெயரே பாலைவன ரோஜா தானே? வருங்காலச் சந்ததிக்கு ஒரு முன் மாதிரியாக, ஊக்கம் தரும் சக்தியாக, நம்பிக்கை அளிப்பதாக மாறிவிடுகிறது.

இந்த நாவலில் ஒரு முக்கிய அம்சம் உண்டு. தொழிலாளர்கள் சங்கம், அரசுப் பணியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் மறுபக்கத்தையும் சின்னப்ப பாரதி இந்த நாவலில் படம் பிடித்துக் காட்டுகிறரர். அவர்கள் திசை மாறுவதை அம்பலப்படுத்துகிறார். இந்த முயற்சியைச் சங்கங்களுக்கு எதிரானதாகக் கொள்ளக்கூடாது. ‘‘சங்கம்’’ நாவல் எழுதியவர் சங்கத்திற்கு எதிராகச் செல்வாரா? இதை நல்லெண்ணத்தின் அடிப்படையில் எழுந்த ஒரு விமர்சனமாகவே பார்க்க வேண்டும். அதே சமயம் நேர்மையுடனும், வர்க்கப்பார்வையுடனும் செயல்படும் பெருமாள் பாத்திரத்தையும் அவர் படைத்திருப்பது கவனத்திற்கு உரியதாகும். உழைக்கும் வர்க்கத்தின் அமைப்புகள் சரியான திக்கில் செல்லவேண்டும் என்பதற்கான இடித்துரைக்கும் முயற்சியே தவிர இது வேறல்ல என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

பாத்திரங்கள் பேசும்போது, பாத்திரங்கள் தான் பேசவேண்டும், நாவலாசிரியர் தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்ள வேண்டும் இது சின்னப்ப பாரதிக்குத் தெரியாதா?

சின்னப்ப பாரதியின் தமிழ்நடையில் எப்போதும் பழமொழிகளும், சொல்லாடல்களும், கதைக்களத்தின் பிரத்தியேக அம்சங்களும் கொஞ்சும். இந்த நாவலிலும் அவை உண்டு. அவை இல்லாமல் சின்னப்ப பாரதி இல்லை.

சின்னப்ப பாரதியின் கதைக் கரு விரிவடைகிறது என்பதற்கு இந்த நாவல் ஒரு விளக்கம். அது அவருக்குப் பெருமை சேர்க்கிறது என்பது அடுத்தபக்கம்.

"பாலை நில ரோஜா"

கு. சின்னப்பபாரதி

என்.சி.பி.எச்.

சென்னை - 98

பக்: 299 | ரூ.140