இந்தக் காலத்திலும் இப்படி ஒருத்தனா என்று எண்ணத் தோன்றும் என் கதையைக் கேட்டால் உங்களுக்கு. அதை வாங்கி அப்படி ஒரு பாடுபட்டுவிட்டேன் நான். இனிமேல் அது எனக்கு வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். உங்களுக்கு வேண்டுமானால் அது அவசியமான ஒன்றாக, உங்கள் வாழ்க்கையில் கலந்துவிட்ட, பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கலாம். என்னைப் போன்றவனுக்கு அது ஒரு தொல்லைதான். அதை அறிவியலின் உச்சத்தில் விளைந்த அவஸ்தை என்றுதான் சொல்வேன் நான்.

அது எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் என் நண்பன்தான் விலைகொடுத்து வாங்கிக் கொடுத்துவிட்டான். நண்பனின் அன்பிற்காக பயன்படுத்திப் பார்த்தேன் . இரண்டுமாதம் கூட அதை என்னால் வைத்துக்கொள்ள முடியவில்லை . அதற்குள் அவ்வளவு தொல்லைகளை சந்தித்துவிட்டேன். என்னடா இவன் அதைத் தொல்லை என்கிறான் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அது ஒன்றும் தப்பு இல்லை. நான் எனக்கு மட்டுந்தான் தொல்லை என்றேன். அதற்கான காரணங்களைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். நான் சொல்லும் காரணங்கள் கூட உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

ஒரு நாள் இரவு பனிரெண்டு மணியிருக்கும் ஆழ்ந்த உறக்கத்தில் நான். அம்மாவிடமிருந்து செல்பேசி அழைப்பு. துடித்துப் பிடித்து எழுந்து அம்மாவிடம் பேச்சு கொடுத்தேன். ஒரே அழுகை. பேசவே முடியவில்லை அம்மாவால். குழம்பிப்போனேன். தன்னிலைக்குத் திரும்பிய அம்மா

“எப்படி இருக்குறப்பா… உனக்கு ஏதோ ஆபத்து நடக்குற மாதிரி கெனவு கண்டம்பா… த்தரமா இரு சாமி… நீதான் எங்களுக்கு எல்லாமே”

என்று கூறிவிட்டு செல்பேசியை வைத்துவிட்டார்கள்.

சங்கடமாய்ப் போய்விட்டது எனக்கு. இத்தனைக்கும் இரவு ஏழுமணிக்குத்தான் அம்மாவிடம் பேசினேன். அதற்குள் இந்த கூத்து. அன்று இரவு சிவராத்திரியாகத்தான் கழிந்தது எனக்கு.

ஒரு நாள் என் நண்பன் எனக்கு தவறிய அழைப்பு விட்டுக்கொண்டே இருந்தான். அவன் தொல்லை தாங்காமல் எடுத்துப் பேசினேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பேசியிருப்பேன். எல்லாமே ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத பேச்சுக்கள்தான். நல்லவேளை என் செல்பேசியிலிருந்த தொகை தீர்ந்து அதுவாகவே துண்டித்துக்கொண்டது. இதைக் கேள்விபட்ட என் இன்னொரு நண்பன் சொன்னான் அவன் மிஸ்டு கால் மன்னன் என்று. அவன் இதுவரை யாரிடமும் தன் சொந்தக் காசில் பேசியதில்லையாம்.

காலை எட்டு மணியிருக்கும் அலுவலகத்திற்குச் செல்ல பேருந்து பிடிக்கும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஊரிலிருந்து மாமா அழைக்கிறார். அலுவலகத்தில் போய் பேசிக்கொள்ளாலாம் என்று எடுக்காமல் விட்டுவிட்டேன். மணி பத்து இருக்கும். மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு. பொறிந்து தள்ளிவிட்டார் மனிதர். செல்பேசியை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய் என்கிறார். மாமா, அக்காவிற்கு ஒரு போன் போட்டு விசாரிக்கக் கூடவா உனக்கு நேரமில்லை என்கிறார். இப்பவே இப்படி இருக்குற நீ கல்யாணம் ஆனா கண்டுக்கவே மாட்ட போலிருக்கிறதே என்றார் பாருங்கள், அதுதான் அவர் பேச்சின் உச்சமாக நினைக்கிறேன் நான். செல்பேசி வாங்குவதற்கு முன் மாமா இப்படியெல்லாம் பேசியதேயில்லை. ஊருக்குச் சென்றால் அவர்களையும் நேரில் போய் பார்த்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு வருவதோடு சரிதான்.

என் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒருநாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டோம். அன்று என் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டேன். எல்லோரும் மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றோம். சென்னை மாநகருக்கு அருகில் உள்ள பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியாக ஒரு புதுப்படம் பார்ப்பதாகத் திட்டம். நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது பிற்பகல் ஒருமணிவரை. என் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டது. இயந்திரத்தில் ஏதோ கோளாறாம், நான் வந்தால்தான் சரிசெய்ய முடியும் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்கள். அப்போதுதான் என் நண்பன் அருகில் வந்து கேட்கிறான், நீ செல்பேசியை அணைத்து வைக்கவில்லையா என்று. இந்த சூழ்ச்சியெல்லாம் நமக்குத் தெரிந்தால்தானே. அன்றைய சுற்றுலா அவ்வளவுதான்.

ஒருநாள் என் தங்கையிடமிருந்து அழைப்பு. அவளோடு செல்பேசியில் பேசிக்கொண்டே சாலையின் ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். பேசிக்கொண்டே சாலையின் வலப்பக்கமாக வந்துவிட்டேன். என்னைக் கடந்த லாரிகாரன் வண்டியை நிறுத்திவிட்டு, கள்ளக்காதலி கூட பேசினு போறியா… ரோட்ல பாத்துப்போ… இல்லாட்டி அப்டியே மேல போவ வேண்டியதுதான்… என்று சொல்லிவிட்டு விருட்டென்று கெளம்பிவிட்டான். அவமானமாய்ப் போய்விட்டது எனக்கு. எதிர் முனையில் யார் பேசுகிறார்கள் என்றுகூட தெரியாமல் இப்படி கத்திவிட்டுச் செல்கிறானே என்று மனசு நொந்துகொண்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் என் அக்காளின் மகள் இறந்துபோனாள். அவள் சாவிற்குப் போயிருந்தோம். அங்கு சிலர் பேசிக்கொண்டார்கள் அவள் இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு ஏதோ ஒரு செல்பேசி அழைப்பு வந்ததாகவும் அதில் பேசிய அவள் சற்று நேரத்தில் தூக்கிட்டு இறந்து போனாள் என்றும். இந்த செல்பேசி அவளிடம் இல்லாமலிருந்திருந்தால் அவள் உயிர் இப்படி அநியாமாய் போயிருக்காது. எந்தத் தகவலாய் இருந்திருந்தாலும் அவளுக்குச் சற்றுத் தாமதமாக வந்திருக்கும், அவள் இப்படி மரணித்து இருக்கமாட்டாள். என்ன செய்வது செல்பேசியில் வந்த குரல்தான் அவளுக்கு எமனாகிவிட்டது.

இவ்வளவு நடந்த பிறகும் என் கையில் அது இருக்கலாமா… அதனால்தான் எறிந்துவிட்டேன் ஒரு குப்பையில். யார் யார் எல்லாம் எண் எண்ணிற்கு முயற்சிக்கிறார்களோ? நான் விடுதலையாகிவிட்டேன். நீங்கள்கூட முயற்சித்துப் பாருங்கள். தூக்கி எறிய ஏதாவது குப்பைத் தொட்டியோ கடலோ தயாராக இருக்கிறது.

யாரோ என்னைக் கூப்பிடுகிறார்கள். ஓ என் நண்பன்தான் கூப்பிடுகிறான். வெளியில் நின்று சீக்கிரமாய்க் கிளம்பச் சொல்கிறான். அவன் மகனுக்குப் புதிதாக ஒரு செல்பேசி வாங்கி கொடுக்கப் போகிறானாம். நான் வேண்டாம் என்று சொன்னால் கேட்கவா போகிறான். வாங்கட்டும் அவன் மகனும் என்னைப்போல் மாறட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

Pin It