சம்பூகனுக்குச் சிறு வயதில் இருந்தே ஆர்வம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது. இந்த முனிவர்கள் தவம் செய்து நம்மால் கற்பனையும் செய்ய முடியாத ஆற்றல்களைப் பெறுகிறார்களே! நாமும் அவ்விதம் ஏன் செய்யக் கூடாது? தன் பாட்டனாரிடம் இதை அடிக்கடி கேட்பான். "தவம் செய்ய வேண்டுமானால் பிராமணனாகப் பிறந்து இருக்க வேண்டும்" என்று அவன் பாட்டனார் கூறியதைக் கேட்டு, தான் பிராமணனாகப் பிறக்காமல், சூத்திரனாகப் பிறந்து விட்டதை எண்ணி மிகவும் வருந்தினான்.

ஒரு முறை அவனுடைய பாட்டனார் விசுவாமித்திரரைப் பற்றி விரிவான கதையைக் கூறும் போது சம்பூகன் இடைமறித்தான். "தாத்தா! பிராமணர்கள் மட்டும் தான் தவம் செய்ய முடியும் என்று கூறினீர்களே? இப்பொழுது க்ஷத்திரியன் ஒருவன் தவம் செய்ததாகக் கூறுகிறீர்களே! எப்படி?" சம்பூகனின் கிடுக்குப்பிடி வினாவில் சிக்கிக் கொண்ட அவனுடைய பாட்டனார் "க்ஷத்திரியர்களும் தவம் செய்வது உண்டு. ஆனால் பிராமணர்களைப் போன்று எல்லை அற்ற ஆற்றலைப் பெற முடியாது. விதிவிலக்காக விசுவாமித்திரர் மட்டும் பிராமணர்களுக்குச் சமமாக ஆற்றல் பெற்று விளங்கினார்." என்று பதில் கூறினார். உடனே சம்பூகனும் "அப்படி என்றால் நானும் தவம் செய்தால் விதிவலக்காக ஏதாவது பெற முடியும் அல்லவா?" என்று கேட்க அவனுடைய பாட்டனார் "சூத்திரர்களாகப் பிறந்த நமக்கு அதெல்லாம் முடியாது சம்பூகா" என்று கூறினார். இனி மேல் கதை கூறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டார்.

சம்பூகனுக்குத் தான் பிராமணனாகப் பிறக்காதது குறித்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனால் அவனுடைய வேலைகளை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. அவனுடைய தந்தை அவனைத் திட்டிப் பார்த்தார். பயன் ஏதும் விளையவில்லை. தாய் இனிய சொற்களைச் கூறிப் பார்த்தாள். அதற்கும் பயன் இல்லை. சம்பூகன் எப்போதும் பித்துப் பிடித்தவன் போலவே இருந்தான்.

சம்பூகன் வேலையில் நாட்டம் இல்லாமல், பித்துப் பிடித்தவன் போலவே இருந்ததைப் பார்த்த அவனுடைய தாய் மாமன் "சம்பூகா! இந்தச் சின்ன வயதில் பெரிய விஷயங்களைப் பற்றி எல்லாம் யோசிக்காதே. பெரியவனாக வளர்ந்த பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம். இப்பொழுது உன் வேலையில் கவனத்தைச் செலுத்து." என்று கூறிப் பார்த்தார். அனால் சம்பூகனால் அமைதி அடைய முடியவில்லை. தவம் செய்து அரிய பெரிய ஆற்றல்களைப் பெற வேண்டும் என்பதில் இருந்து அவனுடைய மனதை மாற்ற முடியவில்லை. இது அவனுடைய தந்தைக்குச் சினத்தை மூட்டியது. ஒரு நாள் அவர் அவனை நையப் புடைத்து விட்டார். அடி வாங்கிய சம்பூகன் வீட்டை விட்டு ஓடி விட்டான்.

வீட்டை விட்டு ஓடிய சம்பூகன், பக்கத்தில் உள்ள காட்டில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு முனிவர்களும், அவர்களுடைய மாணவர் கூட்டங்களும் வாழ்ந்த இடத்திற்கு அருகில் சென்றான். அங்கு ஆசிரமத்திற்கு வெளியில் இருந்து கொண்டு எடுபிடி வேலைகள் செய்து கொண்டு இருந்த சூத்திரர்கள் சிலரைக் கண்டான். அவர்கள் ஆசிரமத்திற்கு வெளியில் காவல்காரர்களாகவும், மரங்களின் மேல் அமர்ந்து கொண்டு, ஏதாவது கொடிய மிருகங்கள் வருகின்றனவா என்று எச்சரிக்கை செய்யும் வேலைகளிலும், மற்றும் பிற குற்றேவல்களைச் செய்வதிலும் ஈடுபட்டு இருந்தனர். அவகளுடன் சேர்ந்து வேலை செய்தால், தவம் செய்யும் முனிவர்களைப் பக்கத்தில் இருந்து பார்க்க முடியுமே என்ற ஆசை சம்பூகனின் மனதில் உதித்தது. தன் ஆசையை அங்கிருந்த சூத்திரர்களிடம் கூறி,அவர்களுடன் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான். அவர்களும் அந்த ஆசிரமத்தின் தலைமை முனிவரிடம் சம்பூகனை அழைத்துச் சென்று, காவல் வேலையில் சேர்த்துக் கொள்ள அனுமதி கேட்டனர். அந்த முனிவர் சம்பூகனை அழைத்து விசாரித்தார். சம்பூகன் கூறிய விவரங்களை எல்லாம் கேட்ட அந்த முனிவர், தாய் தந்தையின் சொற்படி நடக்க வேண்டும் என்றும், சூத்திரன் தவம் செய்ய ஆசைப்படுவது பாவம் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த சம்பூகன், வேறு காட்டை நோக்கி நடந்தான்.

இன்னொரு காட்டில் ஒரு ஆசிரமத்தில், இதே போல் காவல் வேலைக்கு முயன்றான். இம்முறை தனக்குத் தவம் செய்ய உள்ள விருப்பத்தை மறைத்தான். தான் செய்யும் விவசாயம், ஆடு மாடு மேய்க்கும் வேலையை விட, தவ முனிவர்களுக்குப் பக்கத்தில் இருந்து, அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் அதிகமாக உள்ளதாகக் கூறினான். இதைக் கேட்ட அந்த ஆசிரம முனிவர்கள் அவனைக் காவல் வேலைக்கு வைத்துக் கொண்டனர். அவ்வாறு காவல் வேலையில் சேர்ந்த சம்பூகன், கொடிய மிருகங்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பதுடன், கூடவே முனிவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்தான். ஆண்டுகள் பல சென்ற பின்னும், யாரும் தொடர்ந்து தவம் செய்ததை அவனால் காண முடியவில்லை.

அவன் கண்டதெல்லாம் யாகம், ஹோமம் என்ற பெயரில் நெருப்பை மூட்டி, உணவு வகைகளைத் தீயில் சுட்டதையும், அவற்றை உண்டதையும் தான். ஆசிரமத்தில் இருந்த அனைவரும் மூன்று வேளைகளும் நன்றாக உண்டதையும், யாருமே பட்டினி கிடக்கவில்லை என்பதையும் கண்டான்.

அப்படி என்றால் ஆண்டுக் கணக்கில் உணவு, நீர் எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்து அரிய பெரிய ஆற்றல் பெறுவதாக அவன் பாட்டனாரும், தாய் தந்தையரும் சொன்ன விவரங்கள் பொய்யா? சம்பூகனின் மனம் அரித்துக் கொண்டு இருந்தது. சம்பூகன் இப்பொழுது வாலிப வயதை அடைந்து விட்டான். தான் சிறுவனாக இருந்த போது ஒரு முனிவரிடம் தவம் செய்யும் ஆசையை வெளியிட்டதினால் திருப்பி அனுப்பப்பட்டது அவன் மனதில் பசுமையாகப் பதிந்து இருந்தது. ஆகவே முனிவர்களுடன் பேசும் பொழுது அதைப் பற்றி ஒரு வார்த்தையும் வராமல் எச்சரிக்கையாகவே இருந்தான். ஆனால் இவ்வளவு ஆண்டுகளில் யாரும் தவம் செய்வதைக் காணவே முடியாத போது, தவம் என்பதே பொய்யோ என்று ஐயப்படலானான்.

இவ்வாறு இருக்கையில், ஒரு நாள் அந்த ஆசிரமத்திற்கு, ஒரு புரோகிதர் வருகை தந்தார். அவரைப் பார்த்த சம்பூகன் ஒரு கணம் திகைத்து விட்டான். ஏனெனில் அப்புரோகிதர் தன்னுடன் வேலை பார்க்கும் மூஷிகதாசைப் போலவே இருந்தார். வியப்பை அடக்க முடியாத சம்பூகன் மூஷிகதாசைப் பார்த்து விசாரித்தான். மூஷிகதாசும் தன் உணர்ச்சியில் சிறதும் மாறுதல் இன்றி "யார்? அந்த கிரிஜ்ஜிராஸ்வனா?" என்று கேட்டான். "பெயரெல்லாம் தெரியாது. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படியே உன்னை உரித்து வைத்தாற் போல் இருக்கிறது." என்று சம்பூகன் சொல்ல, "அவன் என்னை உரித்து வைத்தாற் போல் இல்லை. நான் தான் அவனை உரித்து வைத்தாற் போல் இருக்கிறேன். அவன் தான் என் தந்தை" என்று மூஷிகதாஸ் சொன்னதும், சம்பூகன் அதிர்ந்து விட்டான்.

அவன் அதிர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில் எப்பொழுதும், யாரிடமும் மரியாதையாகவே பேசும் மூஷிகதாஸ் ஆசிரமத்திற்கு வருகை தந்து இருக்கும் ஒரு புரோகிதரை அதுவும் அவரைத் தந்தை என்று கூறி விட்டு, 'அவன்', 'இவன்' என்று சற்று மரியாதைக் குறைவாகப் பேசியதை முதன் முதலில் கண்டு அதிர்ச்சி அடைந்தான். இன்னொரு காரணம், 'அப்படிப்பட்ட ஒரு புரோகிதரின் மகன் எப்படிச் சூத்திரனாக இருக்க முடியும்?' இவ்வாறு துன்ப துயர வாழ்க்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும்?' சம்பூகன் மூஷிகதாசிடம் கேட்டே விட்டான்.

மூஷிகதாசும் அதைப் பற்றி விளக்கமாகக் கூறினான். "இந்த கிரிஜ்ஜிராஸ்வரன் இருக்கிறானே! அவன் பிராமணன் தான். அவன் ஒரு முறை எங்கள் கிராமத்தின் பக்கம் வந்த போது என் தாயாரைப் பார்த்தானாம். என் தாயார் மிகவும் அழகாக இருப்பாள். என் தாயாரின் அழகில் மயங்கிப் போன இவன் மூன்றாம் தாரமாகவோ, நான்காம் தாரமாகவோ என் தாயாரை வலுவில் மணந்து கொண்டான்." என்று மூஷிகதாஸ் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சம்பூகன் இடைமறித்து "என்னது? பிராமணர்கள் சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வார்களா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

"சுமாரான அழகாக இருந்தால் வைப்பாட்டியாக வைத்துக் கொள்வார்கள். மிகவும் அழகாக இருந்தால், அவள் மற்ற யாருடனும் போய் விடக் கூடாது என்ற பயத்தில் திருமணம் என்ற சடங்கை நடத்தி, வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துக் கொள்வார்கள். என் தாயார் மிகவும்அழகாக இருப்பாள்." என்று மூஷிகதாஸ் விளக்கினான்.

"சரி! அப்படி என்றால் அவருக்குப் பிறந்த நீ பிராமணன் அல்லவா? நீ ஏன் எங்களுடன் சேர்ந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாய்?" என்று சம்பூகன் கேட்ட உடன், "சம்பூகா! பிராமணனுக்குப் பிறந்தவர்கள் அனைவரும் பிராமணர்கள் அல்ல; பிராமணனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவன் தான் பிராமணன் அல்லது பிராமணத்தி. பிராமணனுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறப்பவர்கள் சூத்திரர்களே! அவர்களை வளர்க்கும், பராமரிக்கும் பொறுப்பு பிராமணனைச் சாராது. தாய் தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு. அது மட்டும் அல்ல; தந்தை பிராமணர் என்பதற்காக எவ்விதமான சலுகையையும் எதிர்பார்க்காமல் இருக்கும்படி கண்டித்து வைப்பதும் அவள் பொறுப்பு. ஒரு சூத்திரனுக்கு மகனாகப் பிறந்து இருந்தால் தந்தையின் அன்பு கிடைத்து இருக்கும். இவனுக்கு மகனாகப் பிறந்ததினால் அதனை முற்றிலும் இழந்து விட்டேன். அதனால் தான் இவனைப் பற்றிப் பேசும் பொழுது நான் முற்றிலும் கோபாவேசம் ஆகி விடுகிறேன்." என்று மூஷிகதாஸ் விளக்கினான்.

வாலிப வயதில் அடியெடுத்து வைத்திருந்த சம்பூகனுக்கு இந்த விவரங்கள் புதிதாகவும் அதிச்சிக்கு மேல் அதிர்ச்சி தருவதாகவும் இருந்தன. கூடவே மனதில் ஒரு மயிரிழை அளவு நம்பிக்கை ஒளி பிறந்தது. என்ன தான் தந்தையின் கவனிப்பும், அரவணைப்பும் இல்லாமல் வளர்ந்து இருந்தாலும், பிராமணர்களுக்கு நெருக்கமாக வாழ்ந்ததினால் தவம் செய்வதைப் பற்றி ஏதாவது தெரிந்து இருக்கும் அல்லவா? தந்தையிடம் இருந்து தெரிந்து கொள்ளாவிட்டாலும், தாயிடம் இருந்து ஏதாவது தெரிந்து இருக்கும் அல்லவா? அதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் கொண்ட சம்பூகன் தன் உள்ளக் கிடக்கையை மூஷிதாசிடம் தெரிவித்தான்.

"அதைப் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியவில்லை சம்பூகா! ஆனால் எனக்குத் தெரிந்து யாரும் ஆண்டுக் கணக்கில் ஏன் – நாட் கணக்கில் கூட, தவம் என்ற பெயரில் ஒரே இடத்தில் உண்ணாமலும் உறங்காமலும் இருந்தது இல்லை. ஏதோ ஒரு நாழிகை அல்லது இரண்டு நாழிகை அப்படி இருப்பார்கள். சிலர் உபவாசம் என்று சொல்லிக் கொண்டு ஒரு நாள் முழுக்க உண்ணாமல் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். அவ்வளவு தான். நாட் கணக்கில் சாப்பிடாமல் இருந்ததை நான் பார்த்தது இல்லை." என்று மூஷிகதாஸ் கூறிய உடன் "யாரும் காணாத தனி இடத்திற்குச் சென்று எதையும் உண்ணாமலும், அசையாமல் அமர்ந்து இருந்தும், தவம் செய்து அரிய பெரிய ஆற்றலைப் பெறுவதாகச் சொல்கிறார்களே! அது எப்படி?" என்று சம்பூகன் கேட்டான்.

"அப்படி யாரும் அரிய பெரிய ஆற்றலைப் பெற்று அதிசயங்களைச் செய்ததாக என் வாழ்நாளில் பாக்கவில்லை. ஏதோ அந்த முனிவர் அப்படித் தவம் செய்தார்; இந்த முனிவர் இப்படித் தவம் செய்தார்; அவருக்கு அந்த ஆற்றல் இருக்கிறது; இவருக்கு இந்த ஆற்றல் இருக்கிறது என்று கூறுகிறார்களே ஒழிய, எனக்குத் தெரிந்து மனித ஆற்றலுக்கு மேலாக எந்த ஒரு ஆற்றலையும், எந்த முனிவரும் பெற்று இருப்பதாகத் தெரியவில்லை" என்று மூஷிகதாஸ் கூறியதற்கு "நமக்கு எல்லாம் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஆனால் நமக்குத் தெரியாமல் அப்படி இருக்கலாம் அல்லவா?" என்று சம்பூகன் திருப்பிக் கேட்டான். தவம் செய்து அரிய பெரிய ஆற்றலைப் பெற வேண்டும் என்ற ஆசை கொண்ட சம்பூகனால் அப்படிப்பட்ட ஒரு ஆற்றல் இல்லை என்று கேட்பதை விரும்ப முடியவில்லை.

இதைக் கேட்ட மூஷிகதாஸ் "எனக்குத் தெரியவில்லை சம்பூகா! அப்படி இருந்தாலும் இருக்கலாம்." என்று கூறினான். உடனே சம்பூகன் தனக்குத் தவம் செய்து அரிய பெரிய ஆற்றலைப் பெறும் ஆசை இருப்பதை மூஷிகதாஸிடம் கூறினான். அதைப் பற்றித் தன்னால் கருத்து ஏதும் கூற முடியவில்லை என்று அவன் கூறினான்.

இரண்டு நாட்கள் கழித்து, அந்த ஆசிரமத்து முனிவர், கிரிஜ்ஜிராஸ்வனுடனும், சில மாணவர்களுடனும் சேர்ந்து வெளியில் புறப்பட்டார். திரும்ப வருவதற்குச் சில மாதங்கள் ஆகும் என்றும், அதுவரையில் ஆசிரமத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படியும் மற்ற மாணவர்களிடம் கூறி விட்டுச் சென்றதை மூஷிகதாசும் சம்பூகனும் கேட்டார்கள்.

சம்பூகனுக்கு மனதில் ஒரு ஆசை துளிர்த்தது. ஆசிரமத்தில் முனிவர் இல்லாத பொழுது, வேலைச் சுமை குறைவாக இருக்கும்; வேலை பார்ப்பவர்களில் ஒருவர் அல்லது இருவர் இல்லா விட்டாலும், அது ஆசிரமத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. இதைப் பயன்படுத்தி, தான் சற்று தொலைவில் உள்ள காட்டிற்குச் சென்று, தவம் இருந்து அரிய பெரிய ஆற்றலைப் பெறலாம் என நினைத்தான். அதை வெளியில் கூறிய போது, அது வீண் வேலை என்று மற்றவர்கள் கூறினார்கள். இருந்தாலும், தங்களுள் ஒருவன் அரிய பெரிய ஆற்றலைப் பெற்றால், அது தங்களுக்கும் பெருமை என்று நினைத்த அவர்கள் சம்பூகனுடைய யோசனைக்கு ஒப்புக் கொண்டார்கள்.

சம்பூகனும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். வழியில் அவனுக்குப் பிடித்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, தவம் செய்ய ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அவனுக்குப் பசித்தது. ஆனால் பசியை அடக்கிக் கொண்டு 'ஓம்' 'ஓம்' என்று மனதில் உச்சரித்துக் கொண்டே இருந்தான். சிறது நேரம் கழித்து மல மூத்திர உபாதை உண்டானது. அதை அடக்க முடியாமல் எழுந்து போய் உபாதையைத் தீர்த்துக் கொண்டு மறுபடியும் வந்து அமர்ந்தான். ஒரு நாள் முழுக்க இவ்வாறே 'ஓம்' என்று மனதில் உச்சரித்துக் கொண்டே இருந்தான். இரவில் அவனுக்கு உறக்கம் வந்தது. ஆனால் அதையும் அடக்கிக் கொண்டு தவம் இருந்தான். அவன் மன உறுதியுடன் தான் தவம் செய்தான். ஆனால் அவனுடைய மன உறுதி அவனை மயக்கமடைவதில் கொண்டு போய்விட்டது.

இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்த மூஷிகதாஸ் அவனைத் தேடி வந்தான். சம்பூகன் மயக்கம் அடையும் நிலையில் இருப்பதைப் பார்த்த உடன், சில முதலுதவிகளைச் செய்து மயக்கத்தில் இருந்து மீட்டான். பின் வற்புறுத்தி நீரையும் உணவையும் கொடுத்தான். பின் ஆசிரமத்திற்கே இருவரும் திரும்பி விட்டனர்.

இந்நிகழ்வின் மூலம் ஆண்டுக் கணக்கில் உண்ணாமல் உறங்காமல் தவம் செய்வது என்பது நடவாத செயல் என்று சம்பூகன் நன்றாகப் புரிந்து கொண்டான். ஆனால் இதே விஷயத்தை நன்றாகப் புரிந்து கொண்டாலும், வெளியில் கூறாமல் அமைதியாகவே இருந்த மூஷிகதாசைப் போலல்லாமல், தவம் என்பதும், தவத்தினால் அரிய பெரிய ஆற்றல் பெறலாம் என்பதும் பொய் என்று பரப்புரை செய்யத் தொடங்கினான். இதனால் ஆசிரமத்தில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் அடைந்தனர். அவர்கள் சம்பூகனைக் கண்டித்து அடக்கி வைக்கப் பார்த்தனர். ஆனால் சம்பூகன் அடங்குவதாகத் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் விவாதிக்கலானான்.

கல்வி கற்காத சம்பூகனின் வினாக்களுக்கு, மெத்தப் படித்த பிராமண மாணவர்கள் விடை அளிக்க முடியாமல் திணறினார்கள். அரசனிடம் கொண்டு போய் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் யாத்திரைக்குச் சென்று இருக்கும் தங்கள் ஆசிரியர் வந்து விடட்டும் என்று பொறுமையுடன் காத்து இருந்தார்கள். ஆசிரியர் யாத்திரையை முடித்துத் திரும்பி வந்த உடன், சம்பூகன் தவம் செய்யப் புறப்பட்டுப் போன விவரத்தையும், தவம் என்பது பொய் என்று உணர்ந்து கொண்ட விவரத்தையும், மனித ஆற்றலுக்கு மேலாக, அமானுஷ்ய ஆற்றல் எதுவும் இல்லை என்று மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு உள்ள விவரத்தையும், அவனுடைய வினாக்களுக்குத் தங்களால் விடை அளிக்க முடியாமல் திணறுவதையும் கூறினார்கள்.

அனைத்து விவரங்களையும் கேட்ட அம்முனிவர் கோபாவேசம் அடைந்தார். "சூத்திரன் ஒருவன் தவம் செய்வதற்கு எப்படி முயலலாம்?" என்று கோபம் அடைந்த அவர், நேராக அயோத்தியை நோக்கிப் பயணமானார். வழியில் ஒரு பிராமணனுடைய மகன் மரணமடைந்து இருப்பதைக் கண்டார். அப்படி அந்தப் பிராமணனுடைய மகன் மரணம் அடைந்ததற்கு, சூத்திர சம்பூகன் தவம் செய்தது தான் காரணம் என்று கூறச் சொல்லி, அந்தப் பிராமணனையும் உடன் அழைத்துச் சென்று, மன்னர் இராம பிரானிடம் முறையிட்டார். இராமன் சம்பூகன் எங்கே, எப்போது தவம் செய்தான் என்றும், பிராமணனுடைய மகன் எங்கே, எப்போது, எப்படி இறந்தான் என்றும் கேட்ட உடன், குலகுரு வசிஷ்டர் "இராமா! ஒரு பிராமணன் சூத்திரன் மீது புகார் அளித்தால் அதை ஒரு க்ஷத்திரியனாகிய நீ இப்படி விசாரிப்பது முறை அல்ல. அதுவும் வருணாசிரம தர்மப் பிறழ்வு பற்றிய புகார் எனும் போது, பிராமணர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டு, அந்தச் சூத்திரனைத் தண்டிப்பது தான் சரி." என்று அறிவுரை கூறினார். உடனே இராமனும் "குருவே! அந்தச் சூத்திரனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்?" என்று கேட்க, "ஒரு சூத்திரன் தவம் செய்ய எண்ணியதே குற்றம்; அப்படி முயன்றது அதைவிடப் பெரிய குற்றம்; அதோடு நில்லாமல் தவம் என்பதும், அதனால் அரிய பெரிய ஆற்றல் கிடைக்கிறது என்பதும் பொய் என்று ஒரு சூத்திரன் உணர்ந்தது மன்னிக்க முடியாத குற்றம்; தான் உணர்ந்த உண்மையை வெளியில் சொன்னது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய குற்றம். வருணாசிரம தர்மத்தைத் தலை கீழாகப் புரட்ட முயன்ற அவனைத் தலை கீழாகத் தொங்க விட்டுத் தலையை வெட்டி விடு. மேலும் இம்முனிவர் கூறுவதில் இருந்து அந்தச் சம்பூகன் ஒரு பெரிய அறிவாளி என்று தோன்றுகிறது. ஆகவே உன் ஆட்களை அனுப்பித் தண்டனையை நிறைவேற்ற முயன்றால், சிக்கல் ஏற்பட்டாலும் ஏற்படும். ஆகவே நீயே சென்று அவனைக் கொன்று விட்டு வா" என்று வசிஷ்டர் கூறினார்.

தன் குலகுருவின் அறிவுரையைத் தலை மேற்கொண்ட இராம பிரான், உடனே புறப்பட்டுச் சென்று, சம்பூகனைப் பிடித்துத் தலை கீழாகத் தொங்க விட்டு, அவனுடைய கழுத்தை வெட்டினார். பிராமணர்கள் மகிழ்சியால் இராம பிரானைக் கொண்டாடினார்கள்.

- இராமியா

(இச்சிறுகதை சிந்தனையாளன் செப்டம்பர் 2013 இதழில் வெளியானது)

Pin It