கரையோரங்களில் பனை பூக்களைப்போல காய்ந்துப் போன மனித விட்டைகள். குமித்து வைத்த சந்தனமாக மலங்கள். ஈக்கள் அதில் கதம்பமாக மொய்த்துக்கொண்டிருந்தன. மண்ணில் புதைந்தபடி ஊமைச்சங்குகளும், சிப்பி ஓடுகளுமென கடற்செல்வங்கள் வெளியே எட்டிப்பார்த்தன.

       கலட்டி விடப்பட்ட மிதியடிகளைப்போல விரவிக்கிடந்தன கட்டுமரங்கள். கரை ஒதுங்கி குளிர்க்காய்ந்த படகுகள். கரை நீள, அகலாய் விரிந்துக்கிடந்தது. ஒருவர் மீன் வலையை விரித்து காய வைத்துக்கொண்டிருந்தார். இரண்டு பெண்கள் பெரிய படுதாவை மணற்பரப்பில் விரித்து அதில் கருவாடுகளை குமித்து, விரவிக்காய வைத்துக்கொண்டிருந்தார்கள்.

fishermen 370கரையின் விளிம்பில் மேகத்தைத்தொடும் உயரத்தில் கலங்கரை விளக்கம் இருந்தது. அதன் உச்சியில் ஒரு வெள்ளைக்கொடி பறந்துக்கொண்டிருந்தது. அதனையொட்டி நின்றுக்கொண்டிருந்த தென்னை மரங்கள் அதன் உயரத்தை எட்டிப்பிடிக்க தென்னங்கீற்றுகள் அலாவிக்கொண்டிருந்தன. கடலலையின் ஓசைக்கேற்ப அவை வளைந்துக்கொடுத்து சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன..

       மஞ்சள் தேய்த்துக்குளித்த பெண்ணைப்போல சூரியன் தகித்தது. கடலைக்கு சற்று மேலே பறப்பதும், தண்ணீரை உரசி செல்வதுமாக மீன் கொத்திப் பறவைகள் பறந்துக்கொண்டிருந்தன. அதைத் தாண்டிய தூரத்தில் நான்கு படகுகள் கரையை நோக்கி வந்துக்கொண்டிருந்தன. அவற்றை ஒரு சேரப்பார்க்கையில் அவை ரவிவர்மன் தூரிகையில் உயிர்ப்பித்த ஓவியம் போல தெரிந்தது.

 கரையில் நான்கு பெண்கள் தலையில் முந்தானையை போட்டுக்கொண்டு, கூடையை இடுப்பில் வைத்துக்கொண்டு கையை வேகமாக வீசி வேகு, வேகுவென வடக்கிலிருந்து தெற்காக நடந்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அவ்வபோது கொட்டியசிரிப்புச்சத்தம்மட்டும் எனக்கு கேட்பதைப்போல இருந்தது. அவர்களைத்தொடர்ந்து ஒரு குட்டி சிறுமி அழுதுக்கொண்டும் தன்னை தூக்கச்சொல்லி அடம் பிடித்தவாறும் ஓடினாள். அவளை விரட்டிப்பிடிக்க பிஞ்சுக்காலடிகள் அவளைத்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன.

 “அக்கா.... “என்றவாறு அவர்களை விளித்தேன். கடலலையின் உக்கிரமான பேரிரைச்சலில் அந்த அழைப்பு காற்றில் கரைந்து உலா்ந்துப்போனது. சிறுமி மட்டும் மெல்ல திரும்பிப்பார்த்தாள். அந்த அழைப்பு அவளுக்கு கேட்டிருக்கும் போலும். அழுகையை ஒரு கனம் நிறுத்தி என்னை திரும்பிப்பார்த்து கொண்டே நடந்தாள்.

“உங்களைத்தான் “என்றவாறு மறுபடியும் விளித்தேன். சிறுமி அதற்கு மேல் நடக்கவில்லை. கன்னத்தில் வழிந்த கண்ணீரைத்துடைத்துக்கொண்டு மூக்கில் வழிந்த சளியை மூக்கிற்கு குறுக்கே கையை கொண்டுச்சென்று ஒரு இழு இழுத்தாள். பிறகு நடந்துக்கொண்டிருந்த அவளது அம்மாவைப்பார்த்தாள். உடுத்தியிருந்த பாவாடையை தூக்கி சொறுகிக்கொண்டு ஓடியவள், அம்மா சேலையைப் பற்றி இழுத்து என்னைக்காட்டினாள்.

 “என்னடி...?” என்று எரிந்து விழுந்தாள் அவளது அம்மா. அந்தச்சிறுமி பாவம். அந்த ஒரு கனம் ஆடிப்போனாள். கைப்பிடி கருவேப்பிள்ளை கொத்துப்போன்றிருந்த அவளுடைய பூஞ்சை உடம்பு நடுங்கியது. முகம் சட்டென சூம்பிப்போனது.

“அவங்க கூப்பிடுறாங்கம்மா “

 “யாரை...................?“

       “உன்னத்தான் “

நான் அவர்களை நோக்கி நடந்துக்கொண்டிருந்தேன். அவர்கள் அந்த இடத்தில் நின்றார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். கிசுகிசுத்துக்கொண்டார்கள். தலையில் கிடந்த முந்தானையை எடுத்து இடுப்பில் சொறுகிக்கொண்டு, இடுப்பில் வைத்திருந்த அன்னக்கூடையை கீழே வைத்தார்கள்.

        “வேலப்பனை பார்க்கணும்”

       “எந்த வேலப்பன்?”

        “மீனவச்சங்கத் தலைவர் வேலப்பன்“

        “மீனவச்சங்கத் தலைவரா? இல்ல மீன் பிடிப்புச் சங்கத் தலைவரா? “

 தலையை ஒரு பக்கம் சாய்த்துக்கொண்டு சரியாகச் சொல்லுங்க எனும் தொனியில் ஒரு பெண்மணி கேட்டிருந்தாள். அதற்கு மற்றொரு பெண் “ஆமாங்ண்ணே. சரியாச் சொல்லங்க. இந்தக் குப்பத்துல ரெண்டு பேரு இருக்காங்க. மீன் பிடிப்புச் சங்கத் தலைவர் வேலப்பன் இவளுடைய வூட்டுக்காரர். அதோ பாருங்க ஒரு குடிசை தெரியுது. அதுக்கும் பக்கத்தில ஒரு மஞ்சள் வீடு தெரியுதுங்களா? அதை ஒட்டி ஒரு தென்னை மரம் தெரியுது பாருங்க. அதுக்கும் பக்கத்தில இருக்கிற காலனி வீடுதான் இவளுடைய வீடு. கடலுக்கு போக கிளம்பிக்கிட்டிருக்கிறார். மீனவச் சங்கத் தலைவர்னா பெரிய இடம். மேம்பாலத்தை ஒட்டி இருக்கிற பங்களாதான் அவருடைய வீடு. நீங்க யாரப்பார்க்கணும்?” எனக்கேட்டுவிட்டு வேகமாக கண்களைச் சிமிட்டிக்கொண்டாள்.

       “மீனவர் சங்கம் வேற. மீன் பிடிப்பு சங்கம் வேறங்களா?”- கேட்டேன் நான்.

 “பின்னே இல்லைங்களா..................? மீனவ சங்கம் பெரிய சங்கம். அவங்களுக்கு அரசியல் பின்புலம் உண்டு. தேர்தலில் போட்டியிடுவாங்க, எம்.எல் ஏ, எம்.பி ஆகிறவங்க.”

 “மீன் பிடிப்பாளர் சங்கம்..........?“

       “புள்ளை, பொண்டாட்டியை குப்பத்தில விட்டுட்டுப் போயி வலை வீசி மீன் பிடிச்சு வயித்தக்கழுவுறவங்க.................“

அவள் சொல்லிய பதிலில் நான் சிலாகித்துப் போனேன். மேலும் சொல்லுங்க எனும் வகையில் அவர்களை ஆழமாகப் பார்த்தேன்.

 “நீங்க இந்த ஏரியாவுக்கு புதுசுங்களா?”அந்த சிறுமியின் தாயார் கேட்டார்.

“ம்”என்றவாறு தலையை ஆட்டினேன்.

 “என்னடா இத்தனை சங்கம் இருக்குனு ஆச்சரியமா இருக்கா?”

“ம்” என்றேன்.

“அட என்னாண்ணே நீங்க. இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இதுத்தவிர மீன் விற்பனையாளர்கள் சங்கம், மொத்த விற்பனையாளர்கள் சங்கம் என இன்னும் பல சங்கங்கள் இருக்கு “

என்னுடைய இமை ஏறி இறங்கியது. உதட்டைப்பிதுக்கிக்கொண்டேன்.

 “அதையும் தாண்டி ஆளும் கட்சி, எதிர்கட்சி, இந்து, முஸ்லீம், கிறிஸ்டின் பாகுபாடுகள் வேற இருக்குங்கண்ணே “என்றவள் அவளை உரசி நின்ற மற்ற பெண்களைப்பார்த்து அப்படிதானே என்றவாறு தலையாட்டி வைத்தாள். நான் அவர்களுடைய முகத்தை ஒரு சேரப்பார்த்தேன். அவர்களுடைய முகம் கலாய்ப்பு இல்லாமல் இறுகிப்போயிருந்தது.

 “எல்லா சங்கங்களும் ஒன்னுச் சேருங்களா?” கேட்டேன்.

 “ஊக்கூம்” என்றவாறு உதட்டைப்பிதுக்கினாள். அவளது செய்கைக்கு மற்றப்பெண்கள் கொல் லென சிரித்து வைத்தார்கள். “சிலோன்காரன்க நடுக்கடல்ல வச்சி மீன் பிடிக்கிறவங்களை சுட்டுத்தள்ளுனா சடலம் கரைக்கு வருகிற அன்னைக்கு மட்டும் பேதம் கடந்து எல்லாச் சங்கங்களும் ஒன்றுக்கூடும். அத்தோட அந்த ஒரு நாள் கூத்து முடிஞ்சுரும்............ “

எனக்கு கண் கட்டியது. படகோட்டி எம்.ஜி.ஆர் நினைவில் வந்துப்போனார். கடல் மேல் பிறக்க வைத்தாய், எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தமாய்..... முகாரி ராகம் எனக்குள் யாரோ பாடினார்கள்.

 இந்திய தேசத்தை சூழ்ந்திருப்பது ஒரே கடல்தான். அதைததான் நாம் இந்தியமாக்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா என வெவ்வேறு பெயரிட்டு அழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரே கடலைப்போலதான் நம் மக்களும். ஆனால் சாதியால், மதத்தால், நிறத்தால், மொழியில் உடைந்து அல்லவா கிடக்கிறார்கள். யாரோ பேச வேண்டிய தத்துவத்தை எனக்குள் நான் பேசிக்கொண்டேன்.

“சிலோன்காரங்களால நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீங்களோ.........?”

 நான் அப்படிக்கேட்டதும் ஒரு இளம் வயதுப்பெண்ணின் கண்கள் உடைந்து கண்ணீர்ச்சுனை பெருக்கெடுத்தன. முந்தானையை அள்ளி வாயிற்குள் திணித்துக்கொண்டு குமறினாள். அவளை ஒட்டி நின்றவள் சொன்னாள் “இவ என் நாத்தனார். கல்யாணம் முடிஞ்ச மறு வருசம் சிலோன்காரன் துப்பாக்கிக்கு கணவனை பறிக்கொடுத்திட்டு நிக்கிறா. இன்னும் வருசம் திரும்பல. ம்....எல்லாத்தையும் கடற்தேவன் ஒருத்தன்தான் பார்த்துக்கிட்டு இருக்கான்...” என்றபடி வானத்தையும் கடலையும் ஒருசேர ஏற இறங்கப் பார்த்தாள். அவளுடைய கண்களில் கடல் நீர் உடைந்து கண்ணீராக வழிந்தன.

 “நான் ஒரு கிறுக்கி. வந்த சோலி என்ன, யாரைப்பார்க்கணுமென எதையும் கேட்காம நான் மட்டும் பேசிக்கிட்டிருக்கேன். நீங்க யாரைங்கண்ணே பார்க்கணும்................?”

 “வேலப்பன் “

       “மறுபடியும் தலையும் இல்லாம, வாலும் இல்லாம மொட்டையாக சொல்றீங்களே”

       “தாடி வச்சிக்கிட்டு முன் தலையில் கொஞ்சம் வழுக்கை விழுந்துபோய் இருப்பாராமே”

       “அப்ப எங்க வூட்டு ஆம்பளைத்தான்” என்றவள் வீட இருக்கும் பக்கம் பார்வையைச் செலுத்தினார். மகளின் உச்சந்தலையை தடவி “இவரை அழைச்சிக்கிட்டுபோய் அப்பாவைக்காட்டு” என்றாள்.அவள் அப்படிச்சொன்னதும் அந்தச்சிறுமி சட்டென புன்னகைப்பூத்தாள். குதூகலத்தில் ஆட்கொண்டாள். நடையை தாவி எடுத்து வைத்து நடந்தாள். அவளுடைய பிஞ்சுப்பாதங்கள் மண்ணில் சிற்பமாக ஓடினாள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிமென்ட் சாலை நீண்டுக்கிடந்தது. அதன் இருபுறமும் அரசுக்கட்டிக்கொடுத்த காலனி வீடுகள் வரிசையாக இருந்தன. அது பார்க்க தொடர்வண்டி பெட்டியைப்போல இருந்தன. ஒவ்வொரு வீட்டின் சுவர்களிலும் சுனாமி அறைந்த சுவடுகள் தெரிந்தன. வீடுதோறும் ஒரு வேப்பமரமும் இரண்டு தென்னை மரங்களும் இருந்தன. வேப்பமரத்தில் மஞ்சள் துணி சுற்றப்பட்டிருந்தன. எட்டும் உயரத்தில் ஆணியடித்து அதில் கருகிய மல்லிகைப்பூமாலை தொங்கிக்கொண்டிருந்தன.

மீன் வலையை அள்ளி முதுகில் போர்த்தியபடி கடலை நோக்கி செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார் வேலப்பன். அழுக்குப்படிந்த சட்டை, செம்பட்டை படர்ந்த தலைமயிர், தொடை வரைக்குமாக தூக்கிக்கட்டிய கைலி, அரை வட்டமடிக்கும் கைகள்... என அவரைப்பார்க்கையில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையில் உள்ள உழைப்பாளி ஒருவர் இயங்குவதைப்போல இருந்தது.

 “அப்பா......... “என்றபடி கூப்பாடு போட்டுக்கொண்டு அவர் பின் ஓடினாள் அந்த சிறுமி. போன வேகத்தில் அவரது கால்களைக் கட்டிப்பிடித்து அரை வட்டமடித்தாள். மகளை அள்ளித் தூக்கி நெற்றியில் ஒரு முத்தம் பதித்தாள். “அப்பா.... இதோ இந்த மாமா உன்னை பார்க்கணுமாம்” பிஞ்சுமொழியில் சொல்லிக்கொண்டு என்னை நோக்கி கையை நீட்டினாள். அவள் என்னை திரும்பிப்பார்த்தார். நான் கையை உயரே தூக்கிக்காட்டியபடி புன்னகைத்தேன். பதிலுக்கு அவர் “வணக்கம் தம்பி “என்றார்.

 “நீங்க யாரு?” கரகரக்குரலில் அவர்.

 “நீங்க வேலப்பன் தானுங்களே..............”என்றபடி நான்.

அவர் முன் வழுக்கை விழுந்தபோய் ஏறிய நெற்றியுடன் இருந்தார். கன்னத்தில் கறுப்பும் வெள்ளையுமான தாடி அப்பிக்கிடந்தன. பற்கள் காரை விழுந்தப்போய் புளியங்கொட்டை வடிவத்திலும், நிறத்திலும் காட்சியளித்தன.

        “ஆமாம். நீங்க...............?“

 “என் பேரு குமரேசன். புதுக்கோட்டை “என்றேன்.

என்னை ஒரு கனம் ஏற இறங்கப்பார்த்தார். நான் கட்டியிருந்த கட்சியை வேட்டியைப்பார்த்தார். பிறகு “ம். சொல்லுங்க?” என்றார்.

        “தங்கச்சிக்கு கல்யாணம். கட்சிப்பிரமுகர்கள் வாராங்க. பொறிக்கிற மாதிரி உயிர் மீன் வேணும்”

 “எவ்வளவு?”

 “இரநூறு கிலோ “

 “எப்ப வேணும்?”

“வருகிற திங்கட்கிழமை விடியுறதுக்குள்ள வேணும்.“

 “நீங்கதான் வந்து எடுத்துக்கிறணும். சரிங்களா........?“

 “ம். உங்களுக்கு எந்தக்கஷ்டத்தையும் கொடுக்க மாட்டேன். நானே வந்து எடுத்துக்கிறேன் “

 “இரநூறு கிலோ போதும்களா?“

 “போதும்ங்க “என்றேன். எவ்வளவு எனக்கேட்டு அவர் கேட்டப்பணத்தில் பாக்கி வைக்காமல் முழுப்பணத்தையும் கொடுத்தேன். செல்லமாக அந்தக்குழந்தையின் கன்னத்தில் கிள்ளினேன். பதிலுக்கு அந்த குழந்தை என் கன்னத்தில் கிள்ள என்னை நோக்கித் தாவினாள். அந்தக்குழந்தையின் கையில் ஐம்பது ரூபாய் திணித்தேன். முதலில் வாங்க மறுத்தவள் பிறகு வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ் மாமா” என்றாள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்றைய தினம் திங்கட்கிழமை. மீன் வாங்குவதற்காக கடற்கரைக்குச் சென்றிருந்தேன். மீன்களை ஏற்றிச்செல்ல மினி லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. கலங்கரை விளக்கம் வெளிச்சத்தை பீச்சி அடித்துக்கொண்டிருந்தது. வியாபாரிகள் படகுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள். “படகுகள் கரை வந்து சேர எப்படியும் ஒரு மணி நேரமாகலாம்”என பேசிக்கொண்டார்கள். பெண்கள், குழந்தைகள் என பலரும் கரையில் குழுமிப்போயிருந்தார்கள். சிலர் மணற்பரப்பில் பெரிய துண்டை விரித்து அலைப்பேசியில் உள்ள வெளிச்சத்தைக் கொண்டு சீட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள்.

விடிக்காலப்பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. கிழக்கு வானம் மெல்ல விடிந்துக்கொண்டிருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் தொலைவில் படகுகள் தெரிந்தன. அதைப்பார்த்து பலருடைய முகங்கள் பூப்பூவாய் மலர்ந்தன.

கரையின் விளிம்பில் வேலப்பனின் மனைவி நின்றுக்கொண்டிருந்தார். அவர் அருகினில் அவளுடைய மகள் வழக்கம் போல அழுதுகொண்டும், தேம்பிக்கொண்டும் நின்று கொண்டிருந்தாள் “இந்தக்குழந்தைக்கு எந்த நேரமும் அழுகைத்தான் போலும்” என்றவாறு அவளைப்பார்த்தேன்.

இருபது படகுகள் ஒரு சேர கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. பெண்கள் படகு ஒதுங்கப்போகும் இடத்தை நோக்கி ஓடினார்கள். பல பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்து அழுதார்கள். அந்த இடம் ஒரே களேபரமாக இருந்தது. என் அருகினில் புகை புகைத்தபடி நின்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் “ஏன் அழுகிறார்கள்?” எனக்கேட்டேன்.

. “மீன் பிடிக்க முடியாமல் வெறும் படகோடு திரும்பினால் இப்படித்தான் அழுவார்கள் “என்றார் அவர். அவர் அப்படிச்சொன்னதும் எனக்கு அழுகை வந்துவிட்டது. மார்பு கிடந்து அடித்துக்கொண்டது. என் தங்கையின் திருமண வைபோகம் நினைவில் நிழலாடியது. சமையல்க்காரர் நினைவில் வந்துப்போனார். கட்சித் தலைவர்கள், விருந்தினார்கள், உறவு முறைகள், சொந்தம், பந்தம் எல்லாரும் என் கண் முன்னே வந்து நின்றார்கள்.

சமையல்க்காரர் சொன்ன நேரத்திற்குள் மீனை கொடுத்தாக வேண்டும் என்றிருந்தார். இல்லையென்றால் நீங்க எதிர்ப்பார்க்கிற அளவுக்கு சாப்பாடு பிரமாதமாக இருக்காது என அவர் சொல்லிருந்தார். நான் என்ன செய்யப்போகிறேன்.....? நான் ரொம்பவும் அவசரப்பட்டு விட்டேனோ. முழு பணத்தையும் வேறு கொடுத்துவிட்டேன். கொஞ்சம் பாக்கி வைத்து கொடுத்திருந்திருக்கலாம். இல்ல சந்தையில உயிர் மீனாக இல்லாமல் பழைய மீனையே வாங்கியிருந்திருக்கலாம்.... “புகை மூட்டமாக நினைவோட்டம் என்னை அப்பின.

படகுத்துறைமுகம் ஒரே களேபரமாக இருந்தது. போகிறவர், வருகிறவர் எல்லோருடைய முகத்திலும் கானல்வரிக்கோடுகள் தெரிந்தன. மீனவப்பெண்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தார்கள்.

 “யாருப்பா... வேலப்பன் கிட்ட உயிர் மீன் கேட்டது?”என்றவாறு ஓர் அழைப்பு என்னை நோக்கி வந்தது. மகிழ்ச்சியின் ஆழ்க்கடலுக்குள் சென்றேன். அழைப்பு வந்த திசையை நோக்கி ஓடினேன். பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்த ஒருவர் “எங்கே வண்டி? மீன் பெட்டியை எங்கே வைக்க?” என்றவாறு கத்தினார். நான் அவருக்கு முன்பாக துள்ளிக்குதித்து ஓடினேன். வாகனத்தைக் காட்டினேன். பெட்டிகளை வாங்கி அடுக்கினேன். மீன்கள் உயிரோடு இருக்கிறதா? ஆவல் பொங்கப்பார்த்தேன். தண்ணீருக்குள் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. தண்ணீர்தான் கொஞ்சம் சிவப்பாகஇருந்தது.

- அண்டனூர் சுரா

Pin It