இதுவரை பின்கண்ட கருத்துகளை நிலைநாட்ட முயன்றுள்ளேன்:

  • பிராமணர்கள்தான் இந்தோ-ஆரிய சமுதாயத்தில் சூத்திரர்களை இரண்டாவது வருணத்திலிருந்து நான்காவது வருணத்துக்குக் கீழிறக்கினார்கள்;
  • சூத்திரர்களை இழிவுபடுத்த பிராமணர்கள் கையாண்ட உபாயம் உபநயனம் செய்துகொள்வதற்கு அவர்களது உரிமையை மறுத்ததாகும்;
  • சூத்திரர்களை இழிவுபடுத்துவதற்குப் பிராமணர்கள் அளவற்ற வெறி கொண்டதற்குக் காரணம் சூத்திர மன்னர்களது கொடுங்கோன்மையின், ஒடுக்குமுறையின்கீழ் அவர்கள் அவதிப்பட்டதும் அவமதிக்கப்பட்டதுமேயாகும்.

இவையாவும் தெள்ளத்தெளிவாக இருந்தாலும் சிலர் பின்வருபவை போன்ற சில கேள்விகளைக் கேட்கக்கூடும்:

  • ஒரு சில மன்னர்களுடனான சச்சரவு பிராமணர்களை சூத்திர சமுதாயம் முழுவதன் பகைவர்களாக ஏன் ஆக்க வேண்டும்?
  • எல்லையற்ற பகைமை உணர்வையும் பழிதீர்க்க வேண்டும் என்ற வெஞ்சினத்தையும் தோற்றுவிக்கும் அளவுக்கு இந்த ஆத்திரமூட்டல் மிகப் பெரிய அளவுக்கு இருந்ததா?
  • இவ்விரு தரப்புகளிடையேயும் சமரசம் ஏதும் ஏற்படவில்லையா? அவ்வாறு சமரசம் ஏற்பட்டிருந்தால் சூத்திரர்களைப் பிராமணர்கள் இழிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா?
  • இந்த இழிநிலையால் சூத்திரர்கள் எந்த அளவுக்கு அவலமும் அவதியுமடைந்தனர்?

ambedkar eravada prisonஇந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை என்பதையும் அவற்றை ஆழ்ந்து பரிசீலிப்பது, ஆராய்வது அவசியம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். இக்கேள்விகளுக்குப் பதிலளிப்பதுதான் முறை.

ஒருசில மன்னர்களுடனுள்ள தகராறுகள் காரணமாக சூத்திரர்கள் சமுதாயம் முழுவதையுமே இழிவுபடுத்த ஏன் முற்பட வேண்டும் என்று கேள்வி இயல்பானதும் இங்கு முற்றிலும் பொருத்தமானதுமாகும். இரண்டு விஷயங்களை மனதிற் கொண்டால் இக்கேள்விக்குப் பதிலளிப்பது கடினமல்ல.

முதலாவதாக, பிராமணர்களுக்கும் சூத்திர மன்னர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களை இயல் 9ல் விவரித்தோம். இவை தனிப்பட்ட மோதல்களாகத் தோன்றினாலும் உண்மையில் அவை தனிப்பட்ட மோதல்கள் அல்ல. பிராமணர்கள் தரப்பில் அவர்களது முழு இனமே ஈடுப்பட்டிருந்தது என்பதில் ஐயமில்லை. வசிட்டர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தவிர ஏனைய எல்லா நிகழ்ச்சிகளும் பொதுவாக பிராமணர்கள் சம்பந்தப்பட்டவையாகும். ஆனால் மன்னர்களைப் பொறுத்தவரையில், தனிப்பட்ட மன்னர்கள் பிராமணர்களுடன் மோதும் நிகழ்ச்சிகளாக அமைந்துள்ளன. ஆனால் அதே சமயம் இவர்கள் அனைவரும் சுதாசனுடைய அதே குடும்பகால் வழியைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

சுதாசனைப் பொறுத்தவரையில், மோதல் பிராமணர்களுக்கும் சத்திரியர்களில் சூத்திரக் குலத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலாகவே அமைந்திருந்தது. இதுகுறித்து எவ்வகையிலும் ஐயப்படத் தேவையில்லை. பிராமணர்களுடன் மோதிய ஏனைய மன்னர்களும் சத்திரியர்களில் சூத்திர குலத்தைச் சேர்ந்தவர்களே என்று கூறுவதற்கு நம்மிடம் நேரடியான சான்று ஏதுமில்லை. எனினும் அவர்கள் சுதாசனின் வழிவந்தவர்களே என்ற முடிவுக்கு வருவதற்கு நமக்கு வேறு சில சான்றுகள் உள்ளன.

மகாபாரதம் ஆதி பருவத்திலிருந்து (முய்ர், தொகுதி I, பக். 126) எடுத்து மறுபக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் குடிவழி விளக்க அட்டவனையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

பிராமணர்களுடன் மோதலில் ஈடுபட்ட சத்திரிய மன்னர்களிடையேயான பரஸ்பர உறவு சில சுவையான தகவல்களைத் தருகிறது: புரூருவன் (முய்ர், தொகுதி I, பக்.126) இளையின் புதல்வன், மனு வைவசுவதனின் பேரன். நகுஷன் (முய்ர், தொகுதி I, பக்.307) புரூவனின் பேரன். நிமி (முய்ர், தொகுதி I, பக்.316) மனு வைவசுவதனின் மகனான இக்ஷவாகுவின் புதல்வன். திரிசங்கு (முய்ர், தொகுதி I, பக்.362) இக்ஷவாகுவின் மரபுக் கொடிவழியில் 28ஆவது இடத்தைப் பெற்றவன். சுதாசன் (முய்ர், தொகுதி I, பக்.362) இக்ஷவாகு மரபுவழி வந்தவன்; இந்தக் கொடிவழியில் 50ஆவதாக இருப்பவன். வேணன் (சுதாசனின் தந்தையான திவோதாசன் புருஷ்களின் மன்னன் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் புருஷர்கள் இக்ஷவாகுகள் என வருணிக்கப்பட்டிருக்கின்றனர்) மனு வைவசுதனின் மகன்.

இவர்கள் அனைவரும் மனுவின் வழிவந்தவர்கள் என உரிமை கொண்டாடுகின்றனர்; சிலர் அவர் வழியிலும் இரு சிலர் இக்ஷவாகு வழியிலும் வந்ததாகக் கூறுகின்றனர். மனு, இக்ஷவாகுவின் பரம்பரையினர் என்பதால் இவர்கள் அனைவரும் சுதாசனின் உறவினர்கள் என வாதிட வாய்ப்பு உண்டு. சுதாசன் ஒரு சூத்திரன் என்பதால் இந்த மன்னர்கள் அனைவரும் அனைவரும் சூத்திர இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாகிறது.

 மரீசி

காசிபன் =தக்ஷாயணி (தக்ஷ

பிரஜாபதியின் புதல்விகளில் ஒருத்தி)

 ஆதித்தர்கள் விவஸ்வதன்

 மனு யமன்

 (இவருக்கு 10 புதல்வர்கள்)

 
   

வேணன் (1)

 திரிஷ்ணு (2)

 நௌஷியதன் (3)

 நாபகன் (4)

 இக்ஷவாகு (5)

 கருஷன் (6)

 சர்யாதி (7)

 இளை (8)

 பிரிக்ஷத்ரன் (9)

 நாபகௌசியன் (10)

பிராமணர்களுடனான இந்த மோதல்களில் ஒரு சில சூத்திர மன்னர்கள் மட்டுமின்றி சூத்திர சமுதாயம் முழுவதுமே ஈடுப்பட்டிருந்தது என்பதற்கு நேரடி சான்று ஏதுமில்லை என்றாலும், இவ்வாறு அனுமானிப்பது தவறாகாது. வாழ்க்கையானது சிந்தனையிலும் செயலிலும் குலமரபு நாகரிகத்தின் அடிப்படையில் அமைந்திருந்த பண்டைக்காலத்தில், தனிநபர் ஒருவர் செய்யும் காரியம் அவர் சார்ந்த குலம் முழுவதுமே செய்யும் காரியமாகக் கருதப்பட வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையிலிருந்த காலத்தில் இந்த மோதல் நடைபெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பண்டைய சமுதாயங்கள் அனைத்திலும் குலமரபுக் குழுவோ அல்லது இனமோ தான் அடிப்படைக் கூறாக இருந்ததேயன்றி தனிநபர்கள் அடிப்படைக் கூறாக இருக்கவில்லை. எனவே தனிநபர் இழைக்கும் குற்றம் இனம் முழுவதுமே இழைக்கும் குற்றமாகவும், அதேபோன்று இனம் இழைக்கும் குற்றம் ஒவ்வொரு தனிநபரும் இழைக்கும் குற்றமாகவும் கருதப்பட்டு வந்தது. இந்த உண்மையை மனதில் கொண்டால், தீங்கு செய்யும் மன்னர்களை வெறுப்பதோடு பிராமணர்கள் நிற்காமல், சூத்திர இனம் முழுவதையுமே வெறுத்தனர்; எல்லா சூத்திரர்களுமே உபநயனம் செய்து கொள்ளக் கூடாது என்று தடைவிதித்தனர் என்று கூறுவதில் தவறு எதையும் காணமுடியாது.

II

இத்தகைய மோதல்கள் ஏற்படும் அளவுக்கு ஆத்திரமூட்டல்கள் இருந்தன என்று கூறுவதில் எத்தகைய கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை. இரு தரப்புகளிலுமே கோபதாபங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எளிதில் உணர்ச்சி கொந்தளிப்புகளைக் கிளர்த்திவிடக்கூடிய பல சூடான பிரச்சினைகள் அவர்கள் மத்தியில் இருந்து வரவே செய்தன.

பிராமணர்களைப் பொறுத்தவரையில் சமூக மேலாதிக்கம் பெறுவதற்கும் தங்களுக்கு விசேஷ சலுகைகள் ஈட்டுவதற்கும் முன்வைத்த கோரிக்கை மிகவும் மட்டுமீறியவையாகவும் சகிக்கவொண்ணாதவையாகவும் இருந்தன என்பது தெள்ளத்தெளிவு.

பிராமணர்கள் முன்வைத்த கோரிக்கைகளின் பட்டியல் (கானேயின் தர்மசூத்திரத்தில் இடம்பெற்றுள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டதாகும். தொகுதி II (1) பக்கங்கள் 138-153) வருமாறு:

1) பிராமணனை எல்லா வருணங்களின் குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2) இதர எல்லா இனங்களின் கடமைகளைத் தீர்மானிப்பதும், அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவர்களது வாழ்க்கைத் தொழில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதும் பிராமணரது ஏக உரிமையாகும்; இதர எல்லா வகுப்பினரும் அவனது ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்; இத்தகைய ஆணைகளுக்கு இணங்கவே மன்னர் ஆட்சி செய்ய வேண்டும்;

3) பிராமணன் மன்னனது அதிகாரத்துக்கு உட்பட்டவன் அல்ல. மன்னன் பிராமணனைத் தவிர ஏனைய எல்லோரையும் ஆள்பவன்.

4) (1) கசையடி; (2) விலங்கிடுதல்; (3) அபராதங்கள் விதித்தல்; (4) நாடு கடத்தல்; (5) கண்டித்தல்; (6) கைவிடப்படல் முதலியவற்றிலிருந்து விதிவிலக்குப் பெறுவதற்கு பிராமணன் உரிமையுள்ளவன்.

5) ஒரு சிரோத்ரியன் (வேதங்களைக் கற்றறிந்த பிராமணன்) வரி விதிப்பிலிருந்து விடுபட்டவன்.

6) ஒரு பிராமணன் புதையலைக் கண்டெடுத்தால் அந்தப் புதையல் முழுவதும் முழுவதன் மீதும் பாத்தியதைக் கொண்டாட அவனுக்கு உரிமை உண்டு. புதையலை மன்னன் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணனுக்குத் தந்துவிட வேண்டும்.

7) வாரிசில்லாமல் ஒரு பிராமணன் இறந்துவிட்டால் அவனது சொத்தை மன்னர் எடுத்துக் கொள்ளக் கூடாது; இதற்கு மாறாக அதனை சிரோத்தியர்கள் அல்லது பிராமணர்களுக்குப் பங்கிட்டுத் தர வேண்டும்.

8) மன்னன் சாலையில் செல்லும்போது ஒரு சிரோத்ரியனை அல்லது பிராமணனைக் கண்டால் பிராமணனுக்கு வழிவிட்டு விலகிச் செல்ல வேண்டும்.

9) பிராமணனுக்குத்தான் முதலில் வணக்கம் தெரிவிக்க வேண்டும்.

10) பிராமணன் புனிதமானவன். கொலை செய்த கொடிய குற்றத்தைச் செய்திருந்தால்கூட அவனுக்கு மரண தண்டனை விதிக்கலாகாது.

11) பிராமணனைத் தாக்குவதாக அச்சுறுத்துவதோ, அவனை தாக்குவதோ, அவனது உடம்பிலிருந்து இரத்தம் வரும்படிச் செய்வதோ குற்றமாகும்.

12) சிலவகை குற்றங்கள் விஷயத்தில் மற்ற வகுப்பினரைவிட பிராமணனுக்குக் குறைந்த தண்டனையே விதிக்க வேண்டும்.

13) வழக்கில் சம்பந்தப்பட்டவன் ஒரு பிராமணனாக இல்லாத போது மன்னன் ஒரு பிராமணனை சாட்சியாக அழைத்தல் கூடாது. (எண் (XIV)ஐ கானே குறிப்பிடவில்லை. ஆனால் ஆதர்வ வேதத்தில் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. V.17.8-9; முய்ர், தொகுதி I, பக்கம் 280 பார்க்க.)

14) ஒரு பெண்ணுக்கு பிராமணர்களல்லாத பத்து முன்னாள் கணவன்மார்கள் இருந்தாலும்கூட, ஒரு பிராமணன் அவளை மனப்பானாயின் அவன் மட்டுமே அவனுடைய கணவனாக இருப்பான், அவள் ஒரு ராஜன்யனையோ, வைசியனையோ மணந்தாலும் அவர்கள் அவளுடைய கணவன்களாக இருக்க முடியாது.

பிராமணர்கள் கொண்டாடிய இந்த உரிமைகளையும் சலுகைகளையும் பற்றி விவாதித்த பிறகு திரு.கானே பின்வருமாறு கூறுகிறார். (மேற்படி நூல், பக்கங்கள் 153-154)

“பிராமணர்களுக்கு மேற்கொண்டு வழங்கப்பட்ட சலுகைகள் வருமாறு: பிச்சை எடுப்பதற்காக எந்த வீட்டிலும் தங்குதடையின்றி நுழையும் சுதந்திரம், விறகு, மலர்கள், தண்ணீர் முதலியவற்றைத்தம் இஷ்டம் போல் சேகரிக்கும் உரிமை, இது திருட்டு என்று கருதப்பட மாட்டாது; பிறர் மனைவிமார்களுடன் எவர் குறுக்கீடுமின்றி தாராளமாக உரையாடும் உரிமை, கட்டணம் ஏதுமின்றி படகில் ஆற்றைக் கடக்கும் உரிமை, மற்றவர்களுக்கு முன்னால் மறுகரையில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் உரிமை; வாணிகத்தில் ஈடுபடும்போதும், படகைப் பயன்படுத்தும்போதும் பிராமணர்கள் சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை. பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு பிராமணன் களைத்துப்போய், சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாதிருக்கும் போது, மற்றவர்களிடமிருந்து அவர்களைக் கேட்காமல் இரண்டு வெல்லக்கட்டிகளையும், இரண்டு கிழங்குகளையும் எடுத்து உண்பது தவறாகாது.”

இந்தச் சலுகைகள் காலப்போக்கில் மேன்மேலும் வளர்ந்துவிட்டன என்பதில் ஐயமில்லை. இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இவற்றில் எவை மரபு ரீதியாக நிலைநாட்டப்பட்டுவிட்ட உரிமைகளாகிவிட்டன என்ற கூறுவது கடினம். எனினும் மிகவும் எரிச்சலூட்டும் (i), (ii), (iii), (viii), (xiv) போன்ற சில சலுகைகளும் உரிமைகளும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்தன என்பதில் ஐயமில்லை. பண்பும் சுயமரியாதையும் மிக்க எவரையும் 

சத்திரிய மன்னர்களைப் பொறுத்தவரையில் இந்த அவமதிப்புகளை, இழிவுகளை, பழிப்புகளை சகித்துக் கொண்டிருப்பார்கள், பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எப்படி அவர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? பிராமணர்களுடன் மோதல்களில் ஈடுபட்ட சத்திரிய மன்னர்களில் பெரும்பாலோர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. சந்திரவம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்களுடன் (புரூவனும் நௌஷனும் தான் சந்திரவம்ச சத்திரியர்களைச் சேர்ந்தவர்கள் என்பதை பின்வரும் குடிவழி அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்: 

 

 சோமன் = தாரை

 

 

 புதன் = இளை

 

 

 புரூரவன் = ஊர்வசி

 

 

 ஆயு

 

 

 நகுஷன்

புரூவனின் தாய் வைவசுவத மனுவின் புத்திரி என்பதை மனதிற் கொண்டால், இவர்களும் பிராமணர்களுடன் மோதலில் ஈடுபட்ட சூரிய வம்ச சத்திரியர்களின் உற்றார் உறவினர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.) ஒப்பிடும் போது இவர்கள் கல்விகேள்வியிலும் பெருமித உணர்விலும், வீரத்தீரத்திலும் மாறுபட்டவர்கள். சூரிய வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் பராக்கிரமிக்கவர்கள். சந்திரவம்சத்தைச் சேர்ந்த சத்திரர்களோ இயல்பாகவே மனோதிடமற்றவர்கள், தன்மானமில்லாதவர்கள். முதலில் குறிப்பிடப்பட்டவர்கள் பிராமணர்களை எதிர்த்து உறுதியாக நின்றார்கள்.

பிந்தியவர்களோ பிராமணர்களிடம் சரணடைந்து அவர்களுடைய அடிமைகள் போலாகி விட்டார்கள். இது இவ்வாறு தான் இருக்க முடியும். ஏனென்றால் சந்திர வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் கல்வி கற்பதில் அவ்வளவாக நாட்டமில்லாதவர்கள். சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் அப்படியல்ல. அவர்கள் அறிவு வளத்தில், கல்வி கேள்விகளில் பிராமணர்களுக்கு சமதையானவர்களாக, இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கும் மேம்பட்டவர்களாக இருந்தனர்.

ரிக் வேதத்தில் அடங்கியுள்ள விஷயங்களைச் சுருக்கிச் சொல்லும் அநுகிரமணிகையின்படியும், வழிவழிச் செய்திகளின்படியும் கீழ்வரும் பாசுரங்கள் பின்கண்ட மன்னர்களால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது:

“vi. 15: விதகாவ்யம் (அல்லது பரத்வாஜம்); x.9; சிந்துவிபன், அம்பரீஷனின் புதல்வன் (அல்லது திரிதிராசன், திவஸ்தியின் மகன்); x.75: சிந்துக்ஷித், பிரியமேதனின் புதல்வன்; x. 133. சுதாசன், பிஜவாணனின் மகன்; x. 134, மந்தாத்ரி, யுவநாஸ்வன் மகன்; x. 179. சிபி, உசீநரனின் மூத்த புதல்வன், பிரதர்த்தன், திவோதாசன் மகன், காசி மன்னன், வசுமனசன், ரோகிதஸ்வனின் புதல்வன், x. 148, பிரிதி வைனியன்”.

மச்ச புராணமும் ரிக் பாசுரங்களை இயற்றியவர்களின் பட்டியல்களைத் தந்துள்ளது. (முய்ர், தொகுதி I, பக்கம். 279) அது வருமாறு:

“பிருகு, காசியன், பிரதேசன், தாதிசன், ஆத்மவதன், ஔர்வன், ஜமதக்னி, கிரிபன், ஷரத்வதன், அரீஷ்திஷ்சேனன், யுதாஜித், விதஹ்யன், சுவர்சாசன், வைணன், பிரிது, திவோதாசன், பிரமஸ்வரன், கீரித்ஸன், சௌநகன் – இவர்கள் பாசுரங்கள் இயற்றிய பத்தொன்பது பிருகுகள். ஆங்கீரசன், வேதாசன், பரத்வாஜன், பாலந்தனன், ரிதபாதன், கார்கன், சிதி, சங்கிரிதி, குருதிரன், மாந்தாத்ரி, அம்பரீஷன், யுவ நாஸ்வன், புருகுத்சன், பிரத்யும்னன், சிரவனஸ்யன், அஜமிதன், ஹர்யஷ்வன், தக்ஷபன், கவி, பிரிஷ தஷ்வன், விருபன், கன்வன், மூத்கலன், உதத்தியன், சரத்வதன், வஜஸ்ரவசன், அபஸ்யன், சுவிட்டன், வாமதேவன், அஜிதன், பிரிகதுக்தன், திர்கதமசன், காக்சிவதன் ஆகிய இந்த முப்பத்தி மூவரும் புகழ்பெற்ற ஆங்கீரசர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பாசுரங்கள் இயற்றியவர்கள்.

இனி அடுத்து காசிபர்களைப் பற்றிப் பார்ப்போம்.... காதியின் புதல்வரான விசுவாமித்திரர், தேவராஜன், பாலா மதுசந்தாசன், ரிஷபன், அக்மர்ஷணன், அஷ்தகன், லோகிதன், பிரிதகிலன், வேதஸ்ரவசன், தேவரதன், புரனஷ்வன், தனஞ்சயன், புகழ்பெற்ற மிதிலாவாசியான சலங்கயனன் – இவர்கள் பதின்மூவரும் பக்தி சிரத்தைமிக்க சிறந்த குசிகர்களாவர். மனு வைவசுவதன், இதன், மன்னன் புரூரவன் ஆகிய இவர்கள் சத்திரியர்களிடையே பாசுரங்களைச் சாற்றுவதில் மிகவும் தேர்ந்தவர்கள்.

பாலந்தன், வந்தியன், சம்ஸ்கீர்த்தி இவர்கள் மூவரும் வைசிகர்களிடையே புகழ்பெற்ற பாசுரகர்த்தாக்களாவர். இவ்வாறு தொண்ணூற்று ஒன்று பேர் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களிடையே பாசுரங்கள் இயற்றியவர்கள் என்று பிரபலம் பெற்றவர்கள்.

இவ்வாறு, வேத பாசுரங்களை இயற்றியவர்களின் பட்டியலில் பல சத்திரியர்களின் பெயர்கள் மட்டுமின்றி, பிராமணர்களுடன் மோதலில் ஈடுபட்ட பல சத்திரியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. வேத பாசுர கர்த்தாக்களில் சத்திரியர்கள் சிறப்புற்றுத் திகழ்கின்றனர். மிகவும் புகழ்பெற்ற வேத பாசுரமான காயத்ரி மந்திரம் சத்திரியரான விசுவாமித்திரர் படைத்தளித்ததே ஆகும். இத்தகைய பண்பாற்றலும் திறமையுமிக்க சத்திரியர்களால் பிராமணர்களின் சவாலை ஏற்காதிருப்பது சாத்தியமல்ல.

தங்களுடைய வீரதீரத்திலும் கல்வி அறிவிலும் மிகுந்த பெருமிதம் கொண்ட சத்திரிய மன்னர்கள் பிராமணர்களின் நியாயமற்ற, அதீதமான கோரிக்கைகளைக் கண்டு பெரிதும் மனம் புண்பட்டனர்; எல்லையற்று கோபாவேசமுற்றனர்; பிராமணர்களின் சவாலை உருக்கு உர்தியோடு எதிர்கொண்டனர்; அவர்களுக்கு ஈவு இரக்கமின்றிப் பாடம் போதித்தனர். வேணன் பிராமணர்களை வேறு இரக்கமின்றிப் பாடம் போதித்தனர். வேணன் பிராமணர்களை வேறு எந்த கடவுளையும் வணங்காது தன்னையே வணங்கும்படிச் செய்தான்; புரூரவர்கள் அவர்களது செல்வத்தைச் சூறையாடினர்.

நகுஷன் அவர்களைத் தனது இரதத்தில் பூட்டி நகரெங்கும் இழுத்துச் செல்லும்படிச் செய்தான். குடும்பத்தில் எல்லாச் சமயச் சடங்குகளையும் செய்வதற்கு குடும்பப் புரோகிதருக்கு தலைமுறை தலைமுறையாக இருந்துவந்த பிரத்தியேக உரிமையை நிமி பறித்துக் காற்றில் பறக்கவிட்டான். ஒருசமயம் தன்னுடைய குடும்பப் புரோகிதராக இருந்த வசிஷ்டரின் புதல்வனை உயிரோடு அக்னிக்கு இரையாக்கினான்.

எனவே சூத்திரர்களைப் பழிக்குப் பழிவாங்க வேண்டும், அவர்களை பஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற வன்மம், அடக்கமுடியாத வெறி பிராமணர்களுக்கு ஏற்படுவதற்கு இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும்.

III

பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படும் சாத்தியக்கூறைப் புலப்படுத்தும் சில சான்றுகள் உள்ளன என்பதில் ஐயமில்லை; சிலர் இந்த சான்றுகளின்பால் நம்பிக்கை வைக்கவும் கூடும். இந்த சான்றுகளின் தகைமை குறித்து ஏன் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன்னர் அவற்றின்மீது கவனம் செலுத்துவது விரும்பத்தக்கதாக இருக்கும். இந்த சமரச முயற்சி குறித்து மகாபாரதத்திலும் புராணங்களிலும் ஆங்காங்கு காணப்படும் கதைகளில்தான் இந்த சான்றுகள் அடங்கியுள்ளன.

சமரசம் பற்றிய முதல் கதை இரண்டு குலத்தவர்கள் சம்பந்தப்பட்டது; இவர்களில் முதல் குலத்தினர் பாரதர்கள், விசுவாமித்திரர் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்; இரண்டாவது குலத்தினர் திரித்சூக்கள், வசிஸ்டர் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர். பாதர்கள் வசிஷ்டர்களின், திரித்சூக்களின் பகைவர்களாக இருந்தனர் என்பது ரிக் வேதத்திலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. அது கூறுவதாவது: (முய்ர், தொகுதி I, பக்கம்.354)

III. 53-24 – “ஓ, இந்திரா, இந்தப் பாரதப் புத்திரர்கள் வசிஷ்டர்களைத் தவிர்க்கும் விருப்பத்தோடு அவர்களை நெருங்கவில்லை.”

அவர்கள் சமரசம் செய்து கொண்ட விவரம் மகாபாரதம் ஆதிபருவத்தில் காணப்படுகிறது. (முய்ர், தொகுதி I, பக்கம்.361) அது கூறுவதாவது:

“அவர்களுடைய பகைவர்களின் பெரும்படைகள் பாரதர்களை அடித்து நொறுக்கின. பாஞ்சால மன்னன் தன்னுடைய நான்கு வகையான சேனைகளுடன் பூமியே அதிரும்படியாக மன்னன் சம்வரனனைத் தாக்கினான்; மண்ணுலகைத் துரிதமாக வென்ற பிறகு, அம்மன்னனை அவனுடைய பத்து சேனைகளுடன் சேர்த்து முறியடித்தான். பின்னர் மன்னன் சம்வரனன் தன்னுடைய மனைவிகள், அமைச்சர்கள், புதல்வர்கள், நண்பர்கள் முதலியோர்களுடன் நாட்டின் எல்லையில் மாபெரும் சிந்து நதி தீரத்திலுள்ள ஒரு புதர்க்காட்டில் போய் அடைக்கலம் அடைந்தான்.

அங்குள்ள ஒரு கோட்டையில் நீண்டகாலம் வசித்துவந்தான். அங்கு ஆயிரம் ஆண்டுக்காலம் வசித்து வந்த போது தகையார்ந்த வசிஷ்ட முனிவர் அவர்களிடம் வந்தார். பாரதர்கள் அனைவரும் அவரை மிகவும் பயபக்தியோடு வரவேற்றனர். முனிவர் அமர்ந்ததும் மன்னர் அவரிடம் பின்வருமாறு இறைஞ்சி வேண்டினான்: “தாங்கள் எங்கள் குருவாக இருக்க மனமுவந்து ஒப்ப வேண்டும், எங்கள் ராஜ்யம் எங்களுக்குத் திரும்பவும் கிடைக்க அருள்கூர வேண்டும்”.

வசிஷ்டரும் இதற்கு இணக்கம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, மன்னனுக்கு அவனது ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்படிச் செய்தார்; உலகம் முழுவதிலும் சத்திரிய இனத்தின்மீது அரசுரிமை செலுத்துவதற்கும் புருவின் வழித்தோன்றலான சம்வரனுக்கு அதிகாரம் அளித்தார். பின்னர் பரதன் முன்னர் ஆண்டுவந்த அந்த அற்புதமான நகருக்கு சம்வரன் திரும்பி வந்தான்; இதர எல்லா மன்னர்களும் தனக்குக் கப்பம் செலுத்தும்படிச் செய்தான்.”

இரண்டாவது கதை பிருகுகளுக்கும் கிருதவீரியன் என்ற சத்திரிய மன்னனுக்கும் இடையே நடைபெற்ற மோதலையும், பின்னர் அவர்கள் சமரசம் செய்து கொண்டதையும் கூறுகிறது. இந்தக் கதை மகாபாரதம் ஆதிபருவத்தில் காணப்படுகிறது. அது கூறுவதாவது: (முய்ர், தொகுதி I, பக்கங்கள் 418-449)

“கிருதவீரியன் என்று ஒரு மன்னன் இருந்தான். வேதங்களைக் கற்றறிந்த பிருகுக்கள் அவனுடைய புரோகிதர்களாக இருந்தனர். அவர்களுக்கு மன்னன் தாராளமாக, ஏராளமாக வாரி வழங்கினான். இதனால் அவர்கள் நூற்றுக்கணக்கான பசுக்களையும், மலைமலையாக பணத்தையும் சம்பாதித்துவிட்டனர். கிருதவீரியன் வானுலகு சென்றபிறகு அவனுடைய வழித்தோன்றல்களுக்குப் பணம் தேவைப்பட்டது. பிருகுக்களிடம் ஏராளமாகப் பணம் இருப்பது அவர்களுக்குத் தெரியும்.

எனவே, இந்த இக்கட்டான சமயத்தில் பணம் உதவும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்காக அவர்கள் பிருகக்களிடம் வந்தனர். அவர்கள் வருவதை அறிந்து பிருகுக்களில் சிலர் தங்கள் பணத்தைப் பூமிக்கடியில் புதைத்து வைத்துவிட்டனர்; சிலர் பிராமணர்களிடம் கொடுத்துவைத்தனர்; வேறு சிலர் தங்களிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்று ஏதோ சிறிது பணத்தைத் தந்தனர். இதற்கிடையே ஒரு சத்திரியன் பூமியைத் தோண்டிக் கொண்டிருந்தபோது, ஒரு பிருகுவின் வீட்டில் பணம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டான்.

இது கேள்விப்பட்டு சத்திரியர்கள் திரண்டனர்; இந்தப் புதையலைப் பார்த்தனர்; அவர்கள் மிகவும் சீற்றமடைந்து, தாங்கள் விஷமென வெறுத்துவந்த பிருகுகள் அனைவரையும் கொன்று குவித்தனர்; கருவில் உள்ள குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. எனினும் கொல்லப்பட்ட பிருகுக்களின் விதவை மனைவிகள் இமாலயத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டனர்.

இவர்களில் ஒருத்தி இன்னும் பிறக்காத குழந்தையைத் தனது தொடையில் மறைத்து வைத்துக் கொண்டாள். உளவு பார்க்கும் ஒரு பிராமணத்தி மூலம் இதனைத் தெரிந்து கொண்ட சத்திரியர்கள் அந்தக் குழந்தையையும் கொன்று பழிவாங்குவதற்கு முயன்றனர். ஆனால் அக்குழந்தை தனது தாயின் தொடையிலிருந்து, ஆயிரம் சூரியன்கள் பிரகாசிப்பது போல் வெளிவந்து சத்திரியர்களின் கண்களை எல்லாம் குருடாக்கிவிட்டது. அவர்கள் சிந்தை சிதைந்து, மனம் குலைந்து சிறிதுகாலம் மலைகளில் சுற்றித் திரிந்துவிட்டு பிறகு அந்தத் தாயின் கருணையை வேண்டி அவளிடம் திரும்பி வந்தனர்; தங்கள் கண்பார்வை திரும்பக் கிடைக்க அருள்கூர வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.

அந்த அன்னையோ தன்னுடைய அதிசயக் குழந்தை ஔர்வனிடம் செல்லும்படிக் கூறினாள்; வேதம் முழுவதும் ஆறு வேதாந்தங்களும் அவனிடம் அடைக்கலம் புகுந்திருக்கின்றன என்றும், தன்னுடைய உற்றார் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கவே அவன் அவர்களது கண்பார்வையைப் பறித்துவிட்டான் என்றும், அவன்தான் இதைத் திரும்பத் தரமுடியும் என்றும் சொன்னாள்.

அவ்வாறே அவர்கள் அவனிடம் சரணடைந்தனர்; அவர்களது கண்பார்வையும் திரும்பிற்று. எனினும் பிருகுக்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்குவதற்கு எல்லா ஜீவராசிகளையும் அழித்தொழிக்கும் நோக்கத்தோடு ஔர்வன் கடும் தவம் செய்யத் தொடங்கினான். அவனது தவத்தின் உக்கிரம் கண்டு தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் நடுநடுங்கினர்; எனினும் அவனது எண்ணத்தை மாற்றும் பொருட்டு அவனுடைய பிதுர்களே அவன் முன்தோன்றினர்.

சத்திரியர்கள் பழிவாங்கப்படுவதைத் தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தனர்; கொலைகார சத்திரியர்கள் செய்த படுகொலையைத் தங்களது பலவீனம் காரணமாக பெரிதுபடுத்தாது விட்டுவிடவில்லை என்றும் கூறினர். ‘மூப்பினால் கிலேசமடைந்து பெரிதும் துன்புற்று வந்த நாங்களேதான் அவர்களால் படுகொலை செய்யப்பட வேண்டுமென்று விரும்பினோம்.

சத்திரியர்களிடம் வெறுப்பைக் கிளர்த்திவிட்டு அவர்களை ஆத்திரமூட்ட வேண்டும் என்று விரும்பிய எங்களில் யாரோ ஒருவர்தான் வேண்டுமென்றே ஒரு பிருகுவின் வீட்டில் பணத்தை ஒளித்துவைத்திருக்கிறார். இது தான் நடந்த உண்மை. விண்ணுலகம் செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த எங்களுக்குப் பணம் எதற்கு?’ என்று அவர்கள் வினவினர். தற்கொலை செய்து கொள்ளும் குற்றத்தைச் செய்ய விரும்பாததால் இந்த உபாயத்தைக் கைக்கொண்டோம் என்றும் சமாதானம் கூறினர். முடிவாக கோபத்தை அடக்கும்படியும்,, செய்ய உத்தேசித்திருக்கும் பாபத்தைச் செய்யாமலிருக்கும்படியும் ஔர்வனை வற்புறுத்தினர்.

‘மகனே, சத்திரியர்களையும் ஏழு உலகத்தையும் அழித்துவிடாதே. உன் கோபத்தை அடக்கிக்கொள். இல்லையேல் அது உன் தவத்தின் வலிமையைக் குன்றச் செய்துவிடும்’ என்று அறிவுரை கூறினர். ஆனால் ஔரவன் தான் மேற்கொண்ட சபதத்தை செயல்படுத்தாமல் இருக்க முடியாது என்று பதிலளிக்கிறான். தனது சினத்தை வேறு ஏதேனும் இலக்கின் மீது செலுத்தினாலொழிய அது தன்னையே சுட்டெரித்துவிடும் என்று கூறுகிறான்.

தன்னுடைய மூதாதையர்கள் பரிந்துரைக்கும் கருணையைவிட நீதியும் நியாயமும் கடமையுமே தனக்கு முக்கியம் என்று வாதிடுகிறான். எனினும் அவனுடைய மூதாதையர்கள் எப்படியோ அவனைச் சமாதானப்படுத்தி, அவனது கோபாக்கினியை கடலில் எறிவதற்கு இணங்க வைக்கின்றனர்; அங்கு அது நீர்ப் பூதத்தைத் தாக்குவதில் ஈடுபடும் என்றும், இதன் மூலம் அவனது சபதம் நிறைவேறும் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு அது வேதங்கள் கற்றவர்களுக்கு மட்டுமே தெரிந்த மாபெரும் ஹயசிராசம் ஆயிற்று; அது அந்த நெருப்பை விழுங்கி நீரைக் குடிக்க வல்லதாகும்”.

மூன்றாவது கதை ஹைகயாசின் மன்னன் கிருதவீரியன் புதல்வன் அர்ஜூனனுக்கும் பரசுராமனுக்கும் இடையே நடைபெற்ற மோதலையும் பின்னர் அவர்களிடையே ஏற்பட்ட சமரசத்தையும் பற்றிக் கூறுகிறது. இந்தக் கதை மகாபாரதம் வன பருவத்தில் காணப்படுகிறது. அது வருமாறு: (முய்ர், தொகுதி I, பக்கங்கள் 449-454)

கிருதவீரியனின் மகனும் ஹைகயாசின் மன்னனுமான அர்ச்சுனன் ஆயிரம் புயங்களை உடையவன் என்று கூறப்படுகிறது. அவன் தாத்தாரேயனிடமிருந்து தங்கத்தாலான வானூர்தி ஒன்றைப் பெற்றான். அது முன்னேறிச் செல்லும்போது அதனை எதிர்த்து யாரும் நிற்க முடியாது. இவ்வாறு அவன் தேவர்களையும், யட்சர்களையும், ரிஷிகளையும் அடிபணிய வைத்தான்; எல்லா உயிர் ராசிகளையும் அடக்கி ஒடுக்கினான். தேவர்களும் ரிஷிகளும் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.

அப்போது விஷ்ணுவும் அர்ச்சுனனால் அவமதிக்கப்பட்ட இந்திரனும் சேர்ந்து அவனை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரு திட்டம் தீட்டினர். அச்சமயத்தில் காதி என்ற ஒரு மன்னன் கன்யகுப்ஜத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு சத்தியவதி என்றொரு மகள் இருந்தாள். இந்த இளவரசி இருஷிகன் என்ற ரிஷிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அவர்களுக்கு ஜமதக்னி பிறந்தான். ஜமதக்னிக்கும் அவனுடைய மனைவி ரேணுகைக்கும் ஐந்து புதல்வர்கள். இவர்களில் எல்லோருக்கும் இளையவன்தான் வலிமைக்கும் ஆற்றலுக்கும் புகழ்பெற்ற பரசுராமன்.

தந்தையின் கட்டளைப்படி அவன் தன் தாயை (பாவகரமான ஆசையில் வீழ்ந்து தனது முந்தைய பத்தினித் தன்மையில் இருந்து வீழ்ச்சியுற்றவள் இவள்) கொன்றான். முன்னதாக மூத்த புதல்வர்கள் நால்வரும் இவ்விதம் தாயைக் கொல்ல மறுத்துவிட்டார்கள். இதனால் தந்தையின் சாபத்துக்கு ஆளாகிப் பகுத்தறிவைப் பறிகொடுத்தார்கள். ஆயினும் பரசுராமனின் விருப்பத்துக்கு இணங்க அவனுடைய தாய்க்கு அவனுடைய தந்தை மீண்டும் உயிர் கொடுத்தார். அவனுடைய சகோதரர்களுக்கு மீண்டும் பகுத்தறிவைத் தந்தார்.

பரசுராமனையும் கொலைக் குற்றத்திலிருந்து அறவே விடுவித்தார். யாராலும் வெல்லற்கரியவனாகத் திகழ்வதற்கும் நீண்ட ஆயுளுக்கும் தந்தையிடமிருந்து அவன் வரம் பெற்றான். அவனது வரலாறு இப்போது மன்னன் அர்ச்சுனன் (அல்லது கார்த்தவீரியன்) கதையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அர்ச்சுனன் ஒருசமயம் ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு வர நேரிட்டது. அவருடைய மனைவி அவனை மிகுத்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தாள். ஆனால் அவன் முனிவரின் யாகப் பசுவின் கன்றுகுட்டியைக் கவர்ந்து சென்றதாலும் அவருடைய மேன்மைமிக்க மரங்களை வெட்டிச் சாயத்ததாலும் இந்த மரியாதையை, மதிப்பை இழந்து விட்டான்.

இந்த வன்முறையைப் பற்றி அறிந்த பரசுராமன் அர்ச்சுனனைத் தாக்கி அவனுடைய ஆயிரம் கைகளையும் வெட்டி வீழ்த்தி அவனைக் கொன்றுவிட்டான். இதற்குப் பழிக்குப் பழிவாங்கும் பொருட்டு அர்ச்சுனனுடைய புதல்வர்கள் பரசுராமர் இல்லாத நேரத்தில், சாந்த சொரூபியான முனிவர் ஜமதக்னியைப் படுகொலை செய்தனர்.

பரசுராமன் திரும்பிவந்தபோது தன்னுடைய தந்தை படுகொலை செய்யப்பட்டதை அறிந்து அடங்கவொண்ணா சீற்றமும் சினமும் கொன்டான்; இதற்குப் பழிவாங்க சத்திரிய இனம் முழுவதையும் அழித்தொழிக்க சபதமேற்றான்; தன்னுடைய ஆயுதங்களை ஏந்தி ஆயிரக்கணக்கான ஹய்ஹயாக்களுடன் சேர்த்து அர்ச்சுனனது எல்லாப் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் வெட்டி வீழ்த்தினான்; பூமியையே குருதிச் சேறாக்கினான். இவ்வாறு பூமியிலிருந்து சத்திரியர்கள் அனைவரையும் கருவறுத்த பிறகு, பரசுராமன் ஆழ்ந்த இரக்க உணர்ச்சி மேலிட, கானகத்துக்குச் சென்றுவிட்டான்.

சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. ரைப்யனின் மகனும் விசுவாமித்திரரின் பேரனுமான பராவசு ஒரு பொதுச்சபையில் பரசுராமனைப் பழித்துப் பின்வருமாறு இடித்துப் பேசினான்: ‘யயாதியின் நகரில் நடைபெற்ற வேள்விக்கு வந்திருந்த பிரதர்தனும் ஏனையோரும் சத்திரியர்கள் இல்லையா? உன் சபதத்தை நீ நிறைவேற்றவில்லை என்பதையே இது காட்டுகிறது. அப்படியிருக்கும்போது இந்த சபையில் நீ வீணாக ஜம்பமடித்துக் கொள்கிறாய். இந்த வல்லமை மிக்க சத்திரியர்களுக்குப் பயந்துதான் நீ மலைகளுக்கு ஓடிவிட்டாய். இப்போது பார், சத்திரியர்கள் இனம் நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது.’

இயல்பாகவே முன்கோபியான பரசுராமன் இந்தச் சொற்களைக் கேட்டதும் ஆவேசமாக வெகுண்டெழுந்தான்; தன் சக்திமிக்க ஆயுதங்களைக் கையிலெடுத்தான். இதற்கு முன்னர் அவனிடமிருந்து தப்பிப் பிழைத்த நூற்றுக்கணக்கான சத்திரியர்கள் இப்போது வல்லமை மிக்க மன்னர்களாக வளர்ந்துவிட்டிருந்தனர். எனினும் பரசுராமன் அவர்களையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை; அவர்களுடைய குழந்தைகளுடன் சேர்த்து அவர்களை வெட்டித் தீர்த்தான்.

இந்த உலகை இனிமேல்தான் காணவிருந்த எண்ணற்ற பச்சிளம் சிசுக்களையும் பழிவாங்கினான். சில குழந்தைகள் அவர்களது தாய்மார்களால் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறு இருபத்தொரு தடவை சத்திரியர்களைப் புவியிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு, அஸ்வமேத யாகத்தின் இறுதியில் புவியை கசியபருக்கு தட்சிணையாகக் கொடுத்துவிட்டான்.’

பரசுராமருக்கும் சத்திரியர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலை இவ்வாறு வருணித்த பிறகு மகாபாரத ஆசிரியர் அவர்களிடையே ஏற்பட்ட சமரசத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார்: (முய்ர், தொகுதி I, பக்கங்கள் 451-452)

“இருபத்தொரு முறை சத்திரியர்கள் அனைவரையும் புவியிலிருந்து துடைத்தெறிந்த ஜமதக்னியின் மகன் மலைகளிலேயே தலைசிறந்த மலையாகிய மகேந்திரமலைக்குச் சென்று தவம் செய்யலானான். அவன் சத்திரியர்களை உலகிலிருந்து ஒழித்துக்கட்டிய பிறகு, அவர்களின் விதவைகள் பிராமணர்களிடம் வந்து குழந்தை வேண்டினார்கள். சமயப் பற்றுமிக்க பிராமணர்கள் எவ்விதச் சிற்றின்ப ஆசைக்கும் இடம் கொடாதவர்கள். அவர்கள் உரிய பருவங்களில் இந்தப் பெண்களிடம் கூடினார்கள். இதனால் கருவுற்ற அப்பெண்கள் வீரஞ்செறிந்த சத்திரியச் சிறுவர்களையும் சிறுமிகளையும் பெற்று ஆளாக்கி சத்திரிய குலம் தொடரச் செய்தார்கள். இவ்வாறுதான் பிராமணர்கள் சத்திரியப் பெண்களிடமிருந்து ஒழுக்கமான முறையில் சத்திரிய இனத்தை மீண்டும் உயிர்ப்பித்துத் தந்தார்கள். அப்போதிலிருந்துதான் பிராமணர்களுக்குக் கீழான நான்கு சாதிகள் உருவாயின.”

பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களையும் சமரசங்களையும் விவரிக்கும் மேலே கூறிய நிகழ்ச்சிகள் எல்லாம் பிராமணர்கள் மீது போர்த்தொடுத்து வரலாற்றில் இடம் பெற்றுள்ள சத்திரிய மன்னர்கள் சம்பந்தப்பட்டவை அன்று. பிராமணர்களுடன் சமரசம் செய்துகொண்ட இந்த மன்னர்களில் முதலாவதாகக் குறிப்பிடப்பட வேண்டியவன் கல்மாஷாபாதன், (பின்வரும் நிகழ்ச்சிகளில் வரும் மன்னர்கள் 9ஆவது இயலில் குறிப்பிடப்படும் அதே மன்னர்கள்தானா என்பதை என்னால் நிச்சயமாகக் கூறமுடியவில்லை. எனினும் அவர்கள் இக்ஷ்வாகு குலத்தைக் கூறமுடியவில்லை. எனினும் அவர்கள் இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.) இவன் சுதாசனுடைய புதல்வன் என்று கூறப்படுகிறது.

(இந்த சுதாசன் யார் என்று திட்டவட்டமான முறையில் எனக்குத் தெரியவில்லை. இங்கு கூறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து அவன் பைஜாவன சுதாசனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.) இந்தக் கதை மகாபாரதம் ஆதிபருவதில் இடம்பெற்றிருக்கிறது. கல்மாஷபாதனுக்கும் (முய்ர், தொகுதி I, பக்கங்கள் 415-418) வசிஷ்டருக்கும் இடையேயான பகைமை பற்றிய விவரங்களை ஏற்கெனவே தந்துள்ளோம். (இயல் 9 பார்க்க.) அவர்களிடையே ஏற்பட்ட சமரசம் பற்றிய விவரம் வருமாறு:

‘அவர் (வசிஷ்டர்) பற்பல மலைகளிலும் நாடுகளிலும் சுற்றித் திரிந்துவிட்டு தம்முடைய மருமகளும் தமது மூத்த மகன் சக்தியின் (சக்தி என்பதுதான் சத்திரி என்று இங்கு தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.) விதவை மனைவியுமான அத்ரிசெந்தியுடன் வீடுவந்து சேர்ந்தார். சூலுண்டிருந்த அவளுடைய கருப்பையிலிருந்து வேதங்கள் ஓதும் ஒலி அவளுக்குக் கேட்டது. குழந்தை பிறந்ததும் பராசரன் என்று அவனுக்குப் பெயர் சூட்டப்பட்டது. தன்னுடைய மருமகள் கருவுற்றிருப்பதை அவளிடமிருந்து தெரிந்துகொண்டபோது, ‘இனி ஏன் கால்வழி நீடிக்கும்’ என்று விசிஷ்டர் நிம்மதியடைந்தார்; தம் உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியை அத்துடன் கைவிட்டார்.

எனினும் கானகத்தில் மன்னன் கல்மாஷபதன் எதிர்ப்பட்டான். அவர்கள் இருவரையும் விழுங்குவதற்கு இருந்தான். ஆனால் அப்போது வசிஷ்டரின் வாயிலிருந்து வலிமைமிக்க அனல் காற்று வெளிப்பட்டு அவனைத் தடுத்து நிறுத்திவிட்டது. வசிஷ்டர் ஒரு மந்திரத்தை ஓதி அவன்மீது நீரைத் தெளித்தார். பன்னிரண்டு ஆண்டுகளாக அவனைப் பீடித்திருந்த சாபத்திலிருந்து அவன் விடுபட்டான். பின்னர் மன்னன் வசிஷ்டரிடம் பின்வருமாறு கூறினான்: ‘மிக உன்னதமான முனிபுங்கவரே, நான்தான் சௌதாசன். தாங்கள்தான் என்னுடைய குடும்ப குருவாக இருந்தீர்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்களோ, அதை மகிழ்வோடு செய்வேன்’.

இதற்கு வசிஷ்டர் பின்கண்டவாறு பதிலளித்தார்: ‘இதுவரை விதிவசத்தால் நடந்ததாகும்; இப்போது போய் உன் நாட்டை ஆள்வாயாக. ஆனால் மன்னனே, ஒருபோதும் பிராமணர்களைப் பழித்துரைக்காதே.’ மன்னன் பின்வருமாறு பதிலளித்தான்: ‘பிராமண சிறேஷ்டர்களை இனி ஒருகாலும் வெறுக்க மாட்டேன்; தங்கள் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து தங்களை எல்லா வகையிலும் பெருமைப்படுத்துவேன். இக்ஷூவாகுகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தாங்கள் அருள்கூர வேண்டும்.

தாங்கள் எனக்குப் பிள்ளை செல்வத்தை அளித்தருள வேண்டும்.’ அவனது வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வசிஷ்டர் அவனுக்கு வாக்குறுதி அளித்தார். பிறகு அவர்கள் அயோத்திக்குத் திரும்பினார்கள். அரசுக் கட்டிலுக்கு ஒரு வாரிசை உருவாகித் தருவதாக வசிஷ்டர் உறுதிமொழி அளித்தபடி, ராணி அரசனால் கருவுற்று, பன்னிரண்டு ஆண்டுகள் முடிவில் ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள்.’ (அவளுடைய பெயர் மதயந்தி, அனுசாசன பருவத்தில் மித்திரசகனின் மனைவியாக அவள் குறிப்பிடப்படுகிறாள். மித்திரசகன் என்பது கல்மாஷபாதனின் மற்றொரு பெயர். முய்ர், தொகுதி I, பக்கங்கள் 418, 423, 514)

இரண்டாவது நிகழ்ச்சி மகாபாரதம் அனுசாசன பருவத்தில் இடம் பெற்றிருக்கிறது. (முய்ர், தொகுதி I, பக்கம் 374) அது வருமாறு:

‘இக்ஷூவாகு குலத்தில்உதித்த சௌதாசன் ஒருசமயம் தன்னுடைய குடும்ப குருவும், நிலைபேருடைய ஞானியும், ரிஷிகளிலே தலைசிறந்தவரும், மூவுலகையும் கடந்து செல்லக்கூடியவரும், சமயச் சார்புடைய புனித ஞானத்தின் கருவூலமான வசிஷ்டரை வணங்கி பின்வருமாறு வினவினான்: ‘ஒருவன் மூவுலகிலும் மிகப் புனிதமான எதை இடையறாது ஆராதனை செய்து வந்தால் மிக உன்னதமான நிலையை அடையலாம்?’ இதற்கு வசிஷ்டர் பதிலளிக்கும்போது, எப்படி பசுக்களை மிகவும் அன்பாதரவோடுப் பேணிப் போற்றிப் பராமரித்து வந்தால் ஒருவர் மிக உயரிய நிலையை அடையலாம் என்பதை சவிஸ்தாரமாக விவரித்துக் கூறுகிறார்; இந்தப் பிராணிகளுக்குள்ள சில அற்புதமான உயரிய பண்புகளை எடுத்துரைக்கிறார்; பசுக்களே நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் அனைத்து ஜீவராசிகளின் ஆதார அடிப்படையாக இருப்பதை விளக்குகிறார்; பசு பிரபஞ்சம் முழுவதிலும் ஊடுருவிச்சென்று கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தின் அன்னையாகத் திகழ்வதை வருணித்துக் கூறுகிறார். மிகவும் அடங்கிப்போன அந்த மன்னன் இச்சொற்களை மிகச் சிறந்தவையாக, ஒப்புவமையற்றவையாக மதித்து, பிராமணர்களுக்கு ஏராளமான பசுக்களை வாரி வழங்குகிறான். ஆக, இங்கு சௌதாசன் ஒரு ஞானியாக மெச்சிப் பாராட்டப்படுவதைப் பார்க்கிறோம்.”

பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது சம்பந்தமான மூன்றாவது நிகழ்ச்சியில் சுதாசனின் வழிதோன்றல்கள் குறிப்பிடப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சி மகாபாரதம் சாந்தி பருவத்தில் விவரிக்கப்படுகிறது. (மேற்படி நூல், தொகுதி I, பக்கங்கள் 455-456)

“புவியை ஆளும் அதிகாரத்தைப் பெற்றதும் காசியபர் அதனை பிராமணர்களின் இருப்பிடமாக்கிவிட்டுக் கானகத்துக்குச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து சூத்திரர்களும் வைசியர்களும் பிராமணர்களின் மனைவிமார்களுடன் முறைகேடாக நடந்துகொள்ள ஆரம்பித்தனர். இதன் விளைவாக அரசாங்கம் என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.

வலிமையற்றவர்கள் வலிமைமிக்கவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டனர். யாரும் எந்த சொத்துக்களின் மீதும் உரிமை கொண்டாட முடியவில்லை. கொடியவர்களின் பாவச்செயல்களால் பூமிதேவி மிகுந்த வேதனையும் வாதனையும் அடைந்தாள்; நீதியின் பாதுகாவலர்களான சத்திரியர்களால் விதிமுறைகளின்படி பாதுகாக்கப்படாததால் அமைதியும் ஒழுங்கும் குலைந்து மேன்மேலும் மோசமாகி வந்தது. இதனால் பூமகள் திகிலும் பேரச்சமும் கொண்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருப்பதைக் கவனித்து விட்ட கசியபர் அவளைத் தனது தொடையால் (யுரு) தாங்கிக் கொண்டார்; இதனால் அவள் யுருவி எனப் பெயர் பெற்றாள்.

பின்னர் கசியபரின் சினம் தணிந்ததும் பூமிதேவி அவருடைய பாதுகாப்பை நாடினாள்; தனக்கு ஒரு மன்னனைத் தரவேண்டும் என்று வேண்டினாள். இதுகுறித்து அவள் பின்வருமாறு கூறினாள்: “ஹைஹயாஸ்களின் இனத்தில் பிறந்த பல சத்திரியர்களை பெண்களிடையே வைத்துக் காப்பாற்றி வருகிறேன். அவர்கள் என்னுடைய பாதுகாவலர்களாக இருக்கட்டும்.

பௌரவர்களின் வழித்தோன்றலும், விதுரதனது புதல்வனும், ரிக்ஷவத் மலைப்பகுதிகளில் கரடிகளால் வளர்க்கப்பட்டவனுமான ஒரு சத்திரியன் இருக்கிறான், அவன் என்னைப் பாதுகாக்கட்டும். இதேபோன்று சௌதாசனுடைய வாரிசு அன்புள்ளமும் பெருஞ்சிறப்பும் வாய்ந்த குரு பராசரனால் வளர்க்கப்பட்டு வருகிறான், அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.

பராசரன் ஒரு பிராமணனாக இருந்தபோதிலும் ஒரு சூத்திரனைப் போல் அவனுக்குப் பணிவிடைகள் செய்த காரணத்தால் அந்த இளவரசன் சர்வகர்மன் என அழைக்கப்படுகிறான்.; இவ்வாறு காப்பற்றப்பட்ட இதர பல மன்னர்களையும் கணக்கிட்டுக் கூறிய பிறகு பூமி மாதா மேலும் கூறலானாள்: ‘இந்த சத்திரிய வழிதோன்றல்கள் யாவரும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக இருந்துவருகின்றனர்; தியோகரர்கள், பொற்கொல்லர்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் என்னைப் பாதுகாப்பார்களேயானால் நான் நிம்மதியாக இருப்பேன். அவர்களுடைய தந்தைமார்களும் பாட்டன்மார்களும் ஏன் பொருட்டு பரசுராமனால் வேட்டையாடிக் கொல்லபட்டு விட்டனர்.

அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது ஏன் கடமை. கஸ்யபர் போன்ற ஒரு மாபெரும் மனிதரால் என்றென்றும் பாதுகாக்கப்படுவதை நான் விரும்பவில்லை; ஒரு சாதாரண மன்னன் இருந்தால் போதும், நான் மனநிறைவு அடைவேன். எனது இந்தக் கோரிக்கை துரிதமாக, நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.’ இதன் பேரில் கஸ்யபர் பூமிதேவி சுட்டிக்காட்டிய சத்திரியர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை அரசர்களாக ஆக்கினார்.”

இத்தகையதுதான் சான்று. இதனை எவரேனும் ஒப்புக்கொள்ள முடியுமா? இதனை ஏற்கக்கூடாது என்பது மட்டுமல்ல, இப்படிப்பட்ட சான்று குறித்து நாம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

முதலாவதாக, சமரசம் பற்றிக் கூறும் கதைகள் எல்லாம் சத்திரியர்களின் நன்மதிப்புக்கு, தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில்தான் முடிவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சத்திரியர்கள் மிகவும் இழிவான முறையில் சரணடைவதாகவே காட்டப்படுகிறது. பாரதர்கள் வசிஷ்டர்களின் பகைவர்கள். திடீரென்று அவர்களது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்படுகிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்; இதனால் தங்களுடைய ராஜ்யத்தை இழகின்றனர். அவர்கள் தங்களது பன்னெடுங்காலப் பரமவைரியான வசிஷ்டரை அணுகி, தங்களுடைய குருவாகி இந்தப் பேரிடரிலிருந்து, இக்கட்டிலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றனர்.

பிருகுக்கள், சத்திரியர்கள் பற்றிய கதையில் விட்டுக் கொடுக்காமல் தீவிரமாகப் போராடும் பெருமித மனோபாவம் கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். கல்மாஷபாதன் போன்ற ஹைஹய சத்திரியர்கள் பற்றிய கதையில் வெற்றி பெற்ற பிராமணர்களுடைய பெண்களைத் தந்து சத்திரியர்கள் சமரசம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இவையெல்லாம் பிராமணர்களைப் பெருமைப்படுத்தும், சத்திரியர்களைப் சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடு இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளாகும். கீழ்த்தரமான, மட்டமான, வெறுக்கத்தக்க, அருவருப்பான, கொச்சையான, வீண் புகழ்ச்சி செய்யும் இத்தகைய கதைகளை வரலாற்று உண்மைகளாக யார் ஏற்றுக்கொள்வார்கள்? பிராமணீயத்தின் கடைந்தெடுத்த ஆதரவாளர்கள்தான் இவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

இப்படிப்பட்டதுதான் சமரசப் பிரச்சினை குறித்த சான்றின் லட்சணமாகும்! பிராமணர்களுக்கும் சுதாசனின் வழித்தோன்றல்களின் சூத்திரர்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகக் கூறப்படுவது வெறும் புனைகதை. உண்மையில் அப்படிப்பட்ட சமரசம் ஏதும் ஏற்படவில்லை என்பதை மெய்ப்பிப்பதற்கு போதிய சான்று உள்ளது. முதலாவதாக, வசிஷ்டரின் பேரனும் சக்தி அல்லது சக்திரியின் புதல்வனுமான பராசரன் தன்னுடைய தந்தை சூத்திர அரசன் சுதாசனால் உயிரோடு சுட்டெரிக்கப்பட்டார் என்பதைக் கேள்விப்பட்டபோது எல்லா உயிர் ராசிகளையும் முழு மொத்தமாகக் கொள்வதற்கு சபதமேற்றான் என்பதை மறுக்க முடியாது.

முழு மொத்தமாகக் கொள்வது என்பது ஓர் உருவகமான கருத்தாகும் என்பதில் ஐயமில்லை. சுதாசனின் வழித்தோன்றல்களை அதாவது சூத்திரர்களைப் பொதுவாக பழிவாங்க வசிஷ்டர் உறுதிகொண்டார் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. பிருகுக்களும் சத்திரியர்களும் இவ்வாறு மோதிக் கொண்டார்கள் என்பதையும், முந்தியவர்கள் பிந்தியவர்கள் மீது வன்முறையற்ற முறையில் எவ்விதம் வெற்றிகொண்டார்கள் என்பதையும் எடுத்துக் கூறி தனது சபதத்தை நிறைவேற்ற வேண்டாமென்று பராசரனை வசிஷ்டர் தடுத்து நிறுத்திவிட்டார் என மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் இந்தக் கதை உண்மையாக இருக்க முடியாது; ஏனென்றால் மற்ற கதைகளைப் போலவே பிராமணர்களைப் பெருமைப்படுத்துவதற்காக இதுவும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு கட்டுக்கதையே ஆகும்.

இரண்டாவதாக, சூத்திரர்களுக்கு எதிராக பிராமணர்கள் இயற்றிய சட்டங்கள் பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையே எத்தகைய சமரசமும் ஏற்படவில்லை என்பதை மெய்ப்பிக்கும் மிகவும் வலுவான சான்றாக உள்ளன. சூத்திரர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட இத்தகைய சட்டங்களை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கும் அவற்றின் வளர்ச்சியையும் அசாதாரணமான இயல்புகளையும் பற்றி முன்னமேயே கூறியிருக்கிறோம்.

இத்தகைய கறுப்புச் சட்டங்களின் பின்னணியில் இப்போது எஞ்சியிருக்கும் பணியெல்லாம் இத்தகைய சமரசம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல என்பதை வலியுறுத்துவதேயாகும். பிராமணர்கள் சூத்திரர்களை மன்னிக்காதது மட்டுமல்ல, சூத்திரர்களது சந்ததியினரின் பால் கூட இதே ஈவு இரக்கமற்ற அரக்கத்தனமான பழிவாங்கும் போக்கையே கடைப்பிடித்தனர்.

இது குறித்துப் பலருக்குத் தெளிவான கருத்து ஏதும் இல்லாததால் சண்டாளர்களையும் நிஷாதர்களையும் பற்றிய சில உண்மைகளை இங்கு எடுத்துரைப்பது உசிதமாக இருக்கும். சண்டாளர்களும் நிஷாதர்களும் கலப்புத் திருமணங்களால் பிறந்தவர்கள். நிஷாதன் ஓர் அநுலோமன்; சண்டாளனோ பிரதிலோமன். அநுலோமாக்கள் (பின்கண்ட அட்டவணையில் காட்டியுள்ள ஆறுவிதமான அநுலோமாக்கள் இருகின்றனர்;)

தந்தை தாய் சந்ததியின் பெயர்
பிராமணன் சத்திரியன் முர்தவாசிக்தன்
பிராமணன் வைசியன் அம்பஷ்தன்
பிராமணன் சூத்திரன் நிஷாதன்
சத்திரியன் வைசியன் மகிசியன்
சத்திரியன் சூத்திரன் உர்கன்
வைசியன் சூத்திரன் கரணன்

உபநயத்துக்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். எனினும் விந்தையான முறையில் இந்த விதிமுறைக்கு ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது: அதாவது சூத்திரப் பெண்ணிடம் பிராமணனுக்குப் பிறந்த மகன் அநுலோமன் என்ற போதிலும் உபநயனம் செய்து கொள்ள அவனுக்கு உரிமை இல்லை. இந்த விதிவிலக்கு ஏன் செய்யப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வது சுவையானதாக இருக்கும். இந்த மனம்போனபோக்கான, கொடுமையான செயல் ஒருவரது பகைவனது குழந்தைகளைப் பழிவாங்கும் குரூரமான செயலேயன்றி வேறல்ல என்பதே இதற்கு ஒரே பதிலாக இருக்க முடியும்.

அடுத்து, பிரதிலோமாக்களை (கௌதம தர்மசூத்திரம் IV.21 கானேயின் மேற்கோள், II, பாகம் I, பக்கம் 229.)

தந்தை தாய் சாதியின் பெயர்
சூத்திரன் பிராமணன் சண்டாளன்
சூத்திரன் சத்திரியன் க்ஷ்த்தர்
சூத்திரன் வைசியன் அயோகவன்
வைசியன் பிராமணன் சூதன்
வைசியன் சத்திரியன் வைதேகன்
சத்திரியன் பிராமணன் மகதன்

எடுத்துக்கொண்டால், இவர்கள் அனைவரையும் மனிதப் பிறவிகளிலேயே மிகமிகக் கீழானவர்கள் என்று மனு குறிப்பிடுகிறார். அதேசமயம் பிரதிலோமாக்களைப் பீடித்திருக்கும் கறை, வடு எல்லோர் விஷயத்திலும் ஒரே மாதிரியானதாக இல்லை. உரிமைகள் சலுகைகள் விஷயத்தில் அயோகவர்களும் க்ஷுத்தர்களும் நம்ப முடியாத பரிவோடு நடத்தப்படுகின்றனர்; சண்டாளர்களோ சொல்லொண்ணா பழிப்புக்கு உள்ளாகின்றனர். மனு ஸ்மிருதியிலுள்ள பின்கண்ட விதிகள் இந்த அப்பட்டமான பாரபட்சத்தைத் துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றன:

அயோகவர்களைப் பொறுத்தவரையில் மனு ஸ்மிருதி பின்வருமாறு மட்டுமே கூறுகிறது:

தச்சுத் தொழில் ஓர் அயோகவனின் தொழிலாக இருக்கும்.

 x.46. க்ஷத்தரைப் பொறுத்தவரையில் மனுஸ்மிருதி கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

 ....வளைகளில் வசிக்கும் பிராணிகளைப் பிடிப்பதும் கொல்லுவதும் க்ஷத்தர்களின் தொழில்.

இவர்களுக்குக் கீழான தொழில்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

 சண்டாளர்களைப் பற்றி மனு ஸ்மிருதி கூறியிருப்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்:

 ‘ஒரு சண்டாளனும் பன்றியும், சேவலும் நாயும், மாதவிலக்கான பெண்ணும் அலியும் பிராமணன் உணவு உண்பதைப் பார்க்கலாகாது.-“ iii. 239

சாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், சண்டாளர்கள், புக்கசர்கள், முழு மூடர்கள், கர்வமுடையவர்கள், கீழ்ச்சாதியினர், அந்நியாவசாயிகள் முதலியோர்களுடன் சேர்ந்து வாழக்கூடாது –iv. 79

சண்டாளன், மாதவிலக்கான பெண், சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவன், மகப்பேறுற்ற நிலையிலுள்ள பெண் இவர்களைத் தொட்டாலும் பிணத்தையோ அல்லது பிணத்தைத் தொட்டவனையோ தொட்டாலும் குளித்தால் தீட்டுப் போய்விடும் – v. 85.

நாய்களால் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியும், மாமிசம் உண்ணும் இதர பிராணிகளால் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியும், சண்டாளர்கள் மற்றும் இதர தஸ்யுக்களால் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியும் பரிசுத்தமானவை என்று மனு அறிவித்திருக்கிறார். V. 131.

ஓராண்டுக்குள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கும், விரத்ய பெண்ணுடனோ அல்லது சண்டாளப் பெண்ணுடனோ கணவன் மனைவிபோல் கூடி வாழ்பவனுக்கும் இருமடங்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் – viii. 373.

தனது சொந்த சாதியைச் சேர்ந்த மனைவி அருகிலிருக்கும் போது வேறொரு பெண்ணால் இதைச் செய்ய மதிகேடாக அனுமதிப்பவன் இம்மியளவுகூட ஒரு சண்டாளனை விட சிறந்தவனாகமாட்டான் – ix. 87.

சண்டாளர்கள், சுவபகாக்களின் குடியிருப்பு இடங்கள் கிராமத்திற்கு வெளியே இருக்க வேண்டும்; அவர்களுக்கு உண்கலங்கள் ஏதும் இருக்கக்கூடாது; நாய்களும் கழுதைகளும்தான் அவர்களுடைய உடைமைகளாக இருக்க வேண்டும். – x. 51.

தவிரவும், நன்மை தீமை நன்கு தெரிந்த விசுவாமித்திரன் பசி தாளாமல் ஒரு நாயின் இறைச்சியை உண்ண முற்பட்டது சண்டாளன் கையிலிருந்து உணவு வாங்கி உண்பதற்கு ஒப்பாகும். – x. 108.

ஒரு பிராமணன் திருப்படையலின் பொருட்டு ஒருபோதும் ஒரு சூத்திரனிடமிருந்து பொருள்களை யாசகம் பெறக்கூடாது; ஏனென்றால் ஒரு சூத்திரனிடமிருந்து இவ்வாறு யாசகம் பெற்று நைவேத்தியம் செய்பவன் மரணத்திற்குப் பின்னர் ஒரு சண்டாளனாக பிறப்பான் – vi. 24.

சண்டாளப் பெண்களுடனோ அல்லது கீழ்ச்சாதியைச் சேர்ந்த வேறு பெண்களுடனோ சிற்றின்பத்தில் ஈடுபடுதல், அவர்களிடமிருந்து உணவு வாங்கி உண்ணுதல், பரிசுகளைப் பெறுதல் போன்றவற்றை ஒரு பிராமணன் தன்னையறியாமல் செய்யும்போது நிலை தடுமாறுகிறான். ஆனால் இதையே நெஞ்சறிந்து செய்யும்போது அவன் அந்தச் சண்டாலர்களுக்குச் சமமானவனாகிவிடுகிறான். – xi. 175

பிராமணனைப் படுகொலை செய்பவன் நாய்கள், பன்றிகள், கழுதைகள், ஒட்டகங்கள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், வனவிலங்குகள், பறவைகள், சண்டாளர்கள், புக்கசர்கள் கருப்பையில் பிரவேசிக்கிறான். – xi. 55.

அயோகவர்கள், க்ஷத்தர்கள் ஆகியோர் நடத்தப்படும் முறையுடன் ஒப்பிடும்போது சண்டாளர்கள் ஏன் வேறுபட்ட முறையில் நடத்தப்படுகின்றனர்? அதிலும் இவர்கள் அனைவரும் பிரதிலோமாக்களாக இருக்கும்போது இந்தப் பாகுபாடு ஏன்? பிரதிலோமாக்களிலேயே சண்டாளன் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு ஏன் மிகவும் இகழார்ந்த முறையில், வெறுக்கத்தக்க முறையில், மோசமான முறையில் நடத்தப்பட வேண்டும் பெரிதும் வெறுக்கப்படும் சூத்திரர்களின் வழித்தோன்றலாக அவன் இருப்பதே இதற்குக் காரணம். ஒருவரது பகைவனது குழந்தையை ஈவுஇரக்கமற்றுப் பழிவாங்கும் இழிவினும் இழிவான செயலேயன்றி இது வேறன்று.

இவை யாவற்றிலுமிருந்து பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையே எத்தகைய சமரசமும் ஏற்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

IV

இனி அடுத்து கடைசி ஆட்சேபத்துக்கு வருவோம். சூத்திரர்கள் இந்தோ-ஆரிய சமுதாயத்தில் மிகப்பெரிய பகுதியினராக இருக்கக்கூடும் என்ற எண்ணம் இந்த ஆட்சேபத்துக்கு அடிப்படையாக இருப்பதாகத் தோன்றுகிறது. இத்தகைய எண்ணம் இருக்கும் போது, உபநயன மறுப்பு போன்ற கொடுமையை சூத்திரர்கள் அமைதியாக சகித்துக் கொண்டிருப்பது விந்தையாகத் தோன்றுகிறது. ஏனென்றால் சூத்திரர்கள் இந்து சமுதாயத்தில் மிகப் பரந்த மக்கட் தொகையினராக இருக்கையில் இந்தோ-ஆரிய சமுதாயத்திலும் சூத்திரர்கள் மிகப் பெரும் மக்கட் தொகையினராகவே இருப்பார்கள் என்பதே இத்தகைய எண்ணத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கக் கூடும்.

ஆனால் இத்தகையதோர் அனுமானம் ஆதாரமற்றதாகும். ஏனெனில் இந்தோ-ஆரிய சமுதாயத்தைச் சேர்ந்த சூத்திரர்கள் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த சூத்திரர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு இனத்தவர்களாவர். இந்து சமுதாயத்தைச் சேர்ந்த சூத்திரர்கள் இந்தோ-ஆரிய சமுதாயத்தைச் சேர்ந்த சூத்திரர்களின் இனரீதியான வழிதோன்றல்கள் அல்லர்.

இந்தோ-ஆரிய சமுதாயத்தில் ‘சூத்திரர்கள்’ என்ற சொல்லுக்குள்ள பொருள் இந்து சமுதாயத்தில் அந்த சொல்லுக்குள்ள பொருளிலிருந்து அறவே வேறுபட்டது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறியதாலேயே இந்தக் குழப்பம் எழுந்துள்ளது. இந்தோ-ஆரியர்களிடையே சூத்திரர் என்ற சொல் ஒரு குறிப்பிட்ட மக்களைக் குறிக்கும் இடுகுறிபெயராகும். அது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும் பெயர். இந்து சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் சூத்திரர் என்னும் சொல் இடுகுறிபெயரே அல்ல.

மாறாக, அது கீழான, நாகரிகமற்ற மக்களைக் குறிக்கும் ஒரு அடைமொழி. கலாசாரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தப் பொதுஅம்சமும் இல்லாத பலதரப்பட்ட, கதம்பமான இனங்களின், குழுக்களின் ஒரு ஒட்டுமொத்தத் திரளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கேலிப்பெயரே இது. சூத்திரர்கள் என்ற பெயரில் அவர்களை அழைப்பது தவறு.

இவர்களுக்கும் ஆரிய சமுதாயத்தில் பிராமணர்களை பகைத்துக் கொண்ட சூத்திரர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த அப்பாவிகளான, பழிபாவமற்ற, சம்பந்தா சம்பந்தமின்றி அவர்களைக் கோரக் கொடுமைகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாக்குவது பரிதாபத்திலும் பரிதாபமாகும்.

இந்தோ-ஆரிய சூத்திரர்களும் இந்து சமுதாயத்தின் சூத்திரர்களும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள் என்ற உண்மையை தர்மசூத்திரக் கர்த்தாக்களே ஒருசமயம் உணர்ந்திருந்தனர் என்பது தெள்ளத்தெளிவு. அவர்கள் சற்சூத்திரர்களுக்கும் அசற்சூத்திரர்களுக்கும் அதேபோன்று அனிரவாதித சூத்திரர்களுக்கும் நிரவாசித சூத்திரர்களுக்கும் இடையே வேறுபாடு கண்டதிலிருந்து இதனைத் தெரிந்து கொள்ளலாம். சற்சூத்திரன் என்றால் பண்பாடுள்ள சூத்திரன் என்று பொருள்; அசற்சூத்திரன் என்றால் பண்பாடற்ற சூத்திரன் என்று பொருள். நிரவாசித சூத்திரன் என்பது கிராம சமூகத்திற்குள் வாழும் சூத்திரனைக் குறிக்கிறது.

அனிவாசித சூத்திரன் என்பது கிராம சமூகத்திற்கு வெளியே வாழும் சூத்திரனைக் குறிக்கிறது. சட்டங்கள் இயற்றுபவர்களின் கண்ணோட்டத்தில் சூத்திரர்களின் நிலைமை மேம்பட்டு வருகிறது என்பதையும், சமூகக் கூட்டுறவில் முன்னர் எவரும் அனுமதிக்கப்படாதபோது இப்போது சிலர் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதையும் இது காட்டுகிறது என்று கூறுவது தவறு (பார்க்க: கானே II (1) ப. 123 இந்த வேறுபாடுகள் பற்றிய இவரது கருத்து சூத்திரர்கள் படிப்படியே தமது இழிநிலையிலிருந்து உயர்ந்தனர் என்ற பொருள்படுவது தவறானது.)

சற்சூத்திரர்கள், நிர்வாசித சூத்திரர்கள் என்பது ஆரிய சமுதாயத்தின் சூத்திரர்களையும், அசற்சூத்திரர் என்பது இந்து சமுதாயத்தின் ஒரு பகுதியாக உருவாகத் தொடங்கிய சூத்திரர்களை கேலிப் பெயரில் அழைப்பதையுமே குறிப்பிடுகிறது என்பதே சரியான பொருள் விளக்கமாக இருக்க முடியும்.

ஆரிய சமுதாயத்தின் சூத்திரர்களைப் பற்றியே இங்கு நாம் பேசுகிறோம். அவர்களுக்கும் இந்து சமுதாயத்தின் பிற்கால சூத்திரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, இவ்வாறிருக்கும்போது, இந்து சமுதாயத்தின் சூத்திரர்கள் இவ்வளவு பெரும் எண்ணிகையில் இருப்பதை இந்தோ-ஆரிய சமுதாயத்தைச் சேர்ந்த சூத்திரர்களும் இதேபோன்று பெரும் எண்ணிக்கையில் இருந்திருக்கக்கூடும் என்ற கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமா, குலமா, இவற்றின் ஒரு பகுதியா அல்லது குடும்பங்களின் ஒரு குழுவா என்பது நமக்குத் துல்லியமாகத் தெரியாது.

எனினும் அவர்கள் ஒரு பெரிய இனமாக இருந்தாலும்கூட அவர்களது எண்ணிக்கை ஒரு சில ஆயிரங்களுக்கு மேல் இருக்க முடியாது. பாரதர்கள் சிறு எண்ணிக்கையிலேயே இருந்தனர் என்பது ரிக் வேதத்தில் vii. 33.6 திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சதபத பிராமணம் பாஞ்சால மன்னன் சோன் சத்ரசகன் நடத்திய அசுவமேத யாகம் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறுகிறது: (மேற்கோள்: ஆல்டன்பர்க்கின் ‘புத்தர் வாழ்க்கை’, பக்கம். 404)

“சத்ரசகன் அசுவமேத யாகம் செய்யும்போது கவசமணிந்த ஆராயிரம் தௌர்வசர்கள் எழுந்து நின்றனர்.”

தௌர்வாச இனத்தவர் எண்ணிக்கை ஆயிரம் என்பதை இது குறிப்பதாக இருந்தால் சூத்திரர்கள் மிகப் பெரும் எண்ணிகையில் இருக்க முடியாது என்பதையே இது காட்டுகிறது.

எண்ணிக்கை பிரச்சினை ஒருபுறமிருக்க, இடரைத் தவிர்க்க சூத்திரர்கள் என்ன செய்திருக்க முடியும்? அவர்கள் பகைத்துக் கொண்ட சில பிராமணர்கள் அவர்களுடைய உபநயனத்தைச் செய்ய மறுக்கும்போது, அவர்கள் பகைத்துக் கொள்ளாத இதர பிராமணர்களின் சேவையைப் பெற்றிருக்க முடியுமா? இத்தகைய சாத்தியக்கூறு பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிளைமைகளைப் பொறுத்திருக்கிறது.

முதலாவதாக, எல்லாப் பிராமணர்களும் இந்த விஷயத்தில் ஐக்கியமாக இருந்தார்களா, அந்த ஐக்கியத்தை உடைப்பது சாத்தியமாக இருந்திருக்குமா என்பது நமக்குத் தெரியாது. இந்தப் பிரச்சினை சூடான பிரச்சினையாக இருந்தபோது பிராமணர்கள் ஒரு சாதியாக உருவாகி இருந்தனரா என்பதையும் நாம் அறிவோம்.

எனினும் ரிக் வேத காலத்தில்கூட பிராமணர்கள் ஒரு தனி வகுப்பினராக இருந்தனர் என்பதும், தங்களது வகுப்பு நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதில் குறியாக இருந்தனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. (கானே, தொகுதி II(1) பக்கம். 29) இத்தகைய நிலைமையில் பிராமனர்களின் சதியை உடைப்பது சூத்திரர்களுக்குக் கடினமாக இருந்திருக்கும். இரண்டாவதாக, உபநயனம் செய்து வைப்பது குடும்ப புரோகிதரின் பிரத்தியேக உரிமையாகவும் இருந்திருக்கக்கூடும். வேள்விகள் நடத்துவது அச்சமயம் குடும்பப் புரோகிதரின் தனி உரிமையாக ஆகிவிட்டிருந்ததை நிமி மன்னனின் கதை காட்டுகிறது.

(மேலது, பக்கம். 175) இத்தகைய கருத்துகளுக்கு ஆதாரம் இருக்குமாயின், பிராமணர்கள் தங்களுக்கு எதிராக ஒரு பொது முன்னணி அமைத்துக் கொள்வதைத் தடுப்பதற்கு சூத்திரர்களால் அதிகள் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது தெளிவு.

இரண்டாவதொரு சாத்தியக்கூறு எல்லா சத்திரியர்களிடையும் ஒரு போது முன்னணி உருவாகியிருந்தால் பிராமணர்களின் எதிர்ப்பைத் தாக்குப்பிடித்து நின்றிருக்க முடியும். இத்தகைய ஒருநிலை அச்சமயம் சாத்தியமாக இருந்ததா என்பது ஊகத்துக்குரிய விஷயமே ஆகும். முதலாவதாக, உபநயன உரிமையை இழந்தது தங்களது எதிர்கால அந்தஸ்தை பாதிக்கும் என்பதை சூத்திரர்கள் உணர்ந்திருந்தார்களா? அவ்வாறு அவர்கள் உணர்ந்திருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இரண்டாவதாக, சத்திரியர்கள் ஓர் ஒன்றுபட்ட அமைப்பாக இருந்தார்களா? அவ்வாறு இருந்திருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமே.

மூன்றாவதாக, ஏனைய சத்திரிய மன்னர்கள் சூத்திரர்களிடம் பரிவும் அனுதாபமும் கொண்டிருந்தனரா? ரிக் வேதத்தில் கூறப்படும் தசராஜன் யுத்தம் உண்மையாக இருக்குமாயின் சூத்திரர்களுக்கும் இதர சூத்திரரல்லாத மன்னர்களுக்கும் தெளிவாகிறது.

இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை எல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, உபநயனம் செய்துகொள்ளும் உரிமை பிராமணர்களால் சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டது உண்மையே என்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. 

(பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 11)

Pin It