
ஆறு இரண்டுபடும்.
படித்துறையில்
படையலிடும்
பெண்களின்
பார்வைபடுவதற்காக
நிறைந்தோடும் நீரில்
சொருகுத்து அடிப்பார்கள்
முருகையனும்
நண்பர்களும்.
மூழ்கி... மூழ்கி...
தண்ணீரின் ஆழத்தில்
தரை தொட்டு
கைப்பிடி மண் எடுத்து
மேலே வந்து
காட்டுபவனே
ஆம்பளை சிங்கம்!
அப்படி அசத்திதான்
கமலத்தின் கழுத்தில்
மூன்று முடிச்சிட்டான்
முருகையன்.
ஐந்தாண்டு கழித்து...
ஆறு பார்க்க வந்த
மகனுக்காக
மண் எடுக்க
மூழ்கிய முருகையன்
மூச்சடங்கிப் போய்
பிணமாய் மிதந்தான்.
இப்போது
இருபத்தொன்பது வயதான
அவன் மகன்
ஆற்றிலிருந்து மண்
எடுக்க
அத்தனை
சிரமப்படுவதில்லை.
வானம் பார்த்துக் கிடக்கும்
மணற் பரப்பிலிருந்து
லாரி லாரியாய்
அள்ளி விற்று
அற்புதமாய்
கட்டியிருக்கிறான்
நீச்சல் குள பங்களா.
- கோவி. லெனின்