மனித உடலின் பெரும் பங்கு நீரால் உருவானது.

காற்று இன்றி ஒரு மணித்துளி கூட உயிர்வாழ முடியாது. நீர் இல் லாமல் சில மணிநேரங்கள் மனிதன் உயிர்வாழ முடியும்.

இவை இரண்டு மட்டுமே மனிதன் உயிர்வாழப் போதமாட்டா.

நிலம் வேண்டும்; தீ வேண்டும்; விசும்பு அல்லது விண்வெளி அல்லது ஆகாயம் வேண்டும்.

“நிலம் தீ நீர் வளி விசும்போடு அய்ந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்பது, உலகம் என்பது என்ன என்பதற்கு விடை.

“நீரின்றி அமையாது உலகு” என்பது திருக்குறள்.

தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ் நிலத்தில் ஓடிக் வைகை கடலில் விழுவது, தாமிரபரணி ஆறுகள் மட்டுமே.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பொருநை முதலான ஆறுகளின் தோற்றம் (அ) தலைமடை தமிழ்நாட்டில் இல்லை. பிறமொழிக்காரர் நாடுகளில் உள்ளன. முல்லைப் பெரியாறும் அப்படியே.

அந்தப் பிற மொழி நாடுகளும் தமிழகமும் இந்தியாவில் தான் உள்ளன.

ஆனால் தலைமடைகளைப் பெற்றுள்ள நாடுகள், இந்திய அரசு வலியுறுத்தினாலும், உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு நீர்விடச் சொன்னாலும் கருநாடக மொழி மக்களும், தெலுங்கு மொழி மக்களும், மலை யாள மொழி மக்களும் இணங்கினால்தான் நம் ஆறுகளில் தண்ணீர் வரும்.

காவிரி ஆறு தன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. அதை மறித்து மேட்டூர் அணை கட்டப்பட்டது 1920க் குப் பிறகுதான்.

தலைமடையிலுள்ள கருநாடக ஏரிகள் நிரம்பி வழிந்து ஓடும் நிலைமை இருக்கிற போதுதான், வேறு வக்கு இன்றிக் காவிரியில் நீர்விடுகிறார்கள். அவர்கள் ஏரிகள் வழிந்தோடும் போது மட்டுமே காவிரியில் அட்டியின்றி நீர் வருகிறது.

தமிழக அரசும் மக்களும் - கருநாடக அரசும் மக் களும் முட்டி மோதிக் கொள்வதிலேயே நாம் குறியாக இருக்கிறோம்.

வெள்ளையன் காலத்திலும் காங்கிரசு ஆட்சிக் காலத்திலும் கருநாடகத்தார் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. தமிழகத்தார், தட்டிப் கேட்கவில்லை.

தி.மு.க.-அ.தி.மு.க. ஆண்ட 50 ஆண்டுக் காலத்திலும் கருநாடகத்தார், கேரளத்தாரின் அடாவடிகள் நிற்க வில்லை; குறையவில்லை.

தமிழக மக்கள் - கட்சிகள் - இயக்கங்கள் எல்லாம் நீர்ப் பங்கீடு உரிமைப் போரிலேயே மூழ்கி இருக் கிறோம்.

இன்று, காவிரிக்கு நீர்தரும் மேட்டூர் அணையில், 27 அடி உயர நீர்மட்டுமே உள்ளது.

காவிரியிலிருந்து குடிநீர் பெறும் மக்கள் - வேளாண் நீர் பெறும் மக்கள் திக்கும் திசையும் தெரியாமல் தவிக் கிறார்கள்.

water problem 600அவரவர் ஊரில் இருக்கிற சிற்றேரி, ஏரி, பேரேரி இவற்றில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும் - அதற்குத் தமிழக மக்களின் முயற்சியும் - தமிழக அரசின் முயற்சி யும் மட்டுமே என்றென்றும் உதவும் என்கிற பொறுப் புணர்ச்சியும், புரிதலும், அறிவும் ஏன் எத்தரப்புத் தமிழர்க் கும் வரவில்லை? ஏன் எந்தக் கட்சி ஆட்சிக்கும் வரவில்லை?

அதற்கான அக்கறையும் முயற்சியும் குறைந்தது 95 ஆண்டுகளாக - மூன்று தலைமுறைகளாக அறவே இல்லையே ஏன்?

எட்டுக்கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டில் 41,000 ஏரிகள் உள்ளன.

50 ஏக்கர் முதல் 5,000 ஏக்கர் வரை நீர்பாயும் அளவுக்கு நீர் பிடிக்க ஏற்ற ஏரிகள் இவை.

இவை நம் காலடியிலும் புழக்கடையிலும் உள்ளன.

இவற்றைப் பற்றி ஊர்நாட்டாண்மைக்காரர், ஊராட்சித் தலைவர், சாதித் தலைவர்கள், மக்கள் அமைப்புகள், ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகள் - உள்ளூர் ஆசிரியர்கள், படித்த இளைஞர்கள் எவருமே கவலைப்படுவதில்லையே ஏன்? இதைப்புரிந்து கொள்ள அறிவில்லையா? பொறுப் பில்லையா? அக்கறை இல்லையா? இதற்குத் தீர்வு காண்பது பற்றியே எத்தரப்பாரும் கவலைப்படவில்லை என்றால், என்ன பொருள்?

நாம் செய்ய வேண்டியது தான் என்ன?

1. அந்தந்த ஊர் ஏரியின் ஆழம், அகலம், பரப்பு, நீர் கொள்ளளவு என்பதைப் பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை ஆவணங்களிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. ஏரிக்கு வரத்து வாய்க்கால், போக்கு வாய்க்கால் இவை எங்கே என்று அடையாளப்படுத்த வேண்டும். ஏரியின் பரப்பை அளந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

3. ஊராட்சியின் மாதாந்தரப் பொது மக்கள் கூட்டத் தில்-ஏரி வாய்க்கால்களையும், ஆக்கிரமிப்பை யும் தூர்வாரும் பொறுப்பு முழுவதையும் ஊர் மக்களே, நிர்ணயிக்கப்பட்ட வரி மூலம் நிதி திரட்டிக் கொண்டு, ஊர் மக்களே தூர் வார வேண்டும்.

இதற்குப் பெயர்தான் குடிமராமத்து முறை.

ஏரி உள்வாய், கலங்கு, மதகு இவற்றைத் தூர் வாருவது-பழுது பார்ப்பது என்பவற்றை மூன்றாண் டுக்கு ஒருமுறை பொதுப் பணித்துறையினர் செய்ய, அந்தந்த ஊராட்சியினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இன்றைய இளந்தலைமுறையினரும் படித்தவர்களும் ஊர்ப் பெரியவர்களும் இவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்!

நீராண்மைக்கு உடனடித் தீர்வும் நிரந்தரத் தீர்வும் இதுதான் என்கிற அதேநேரத்தில், இரண்டாம் பட்சமாக - இரண்டாம் நிலைப்பாடாக நீராண்மை பங்கீட்டு உரிமைக்கும் போராடுவோம்!

நீரின்றி அமையாது உலகு!

Pin It