ஆண்டனர் அன்று அரசர்களும் சிற்றசர்களும்
படைகள் கூட்டிப் போருக்குள் நடத்தினர். 
அந்நாளில் நாடுகளும் காடுகளும், 
வேந்தரும் மாந்தரும் சேர்ந்திடப் 
பிறந்து வளர்ந்தன பேரரசுக்கள்.
பலநூறு ஆண்டுகள் அவை 
பல்லின மக்களை அரசோச்சிய 
வரலாறு கூறிக் கிளறிடும் இன்று 
என் சிந்தையை.
குடியரசென்றும் சுதந்திரமென்றும்
உரிமையென்றும் மலிந்து மண்ணில்
வாழும் இந்நாளில், நாடுகள்
பிரிந்திடவே கண்டோம்; கேட்டில்லை
அவை எங்கும் இணைந்திட.
குடியரசு தாழ்வென்றோ, சுதந்திரம் பீழையென்றோ
பிடிப்பதல்லயென் வாதம் இங்கே; பாரீர்!
சுதந்திரம் கண்டோம்; தாய்வீடாம் பாரதம்
துண்டாடக்கொண்டோம்; கண்கொண்டுகாணீர்!
ஈழமென்றும், இரங்கூனென்றும்,
கிழக்கு மேற்கெனப் பாகிஸ்தானென்றும்,
சிங்கப்பூர், கோலாலம்பூரெனவும்,
மலேயா மற்றும் பிறவெனவும் துண்டாடப்பட்டோம்.
எஞ்சியது? இருந்தெழுந்து நடமாட இடம் குருகியதே! 
மேலும், துயர்தரும் போர்கள் இன்றும் மூண்டின்னும் 
ஓயவில்லை! அகமிழந்து, புறமுடைந்தோர், அவ்வதையில்
உயிரிழந்து புதைபட்டோர், எண்ணில் அடங்கார்!
இருப்போர் உரிமைக்கென தாயிழந்தாள் அவ்வுயிர்கள்!
அமைதி கொள்ளுமோ அவள் நெஞ்சம்?
இதில், சிங்களமும் ஈழமும் இன்னும் துண்டாட
எந்நெஞ்சு பொறுக்குதில்லையே, நொறுங்கிட அழுகிறேன்! 
'நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே'
பார்கவி அறைந்துரை நம்நெஞ்சில் ஈரத்தில்
பாயும் வேர்போல் வளரவில்லையே ஏன்,ஏன்,ஏன்?
ருசியாவில் குடியாட்சியென்றும் சுதந்திரமென்றும்
போர்க்கொடி தூக்கினரே! பயன்? பல்வெட்டுத்
துண்டுகளாய் நாடுகள் சிறுபட்டுச் சிதைந்துற,
இனவெறித்தாண்டவத்தில் எண்ணிக்கையின்றி மாண்டோர்
பலர் ஒருமண்குழியில் புதைந்திட்டப் பலமண்குழிகள் கண்ட
பாடம் நெஞ்சில் உறைத்ததா? அறியேனே நான்! 
மீண்டும்! சுதந்திரத்தில் பீழையில்லை; குடியரசில் குறைவில்லை.
குரங்கின் கையில் பூமாலயைவிட செடியிலிருந்து சிரிக்கும்
பூவிலே சிறக்கும் அழகு! ஒப்புவீர்தானே?
'ஐக்கியநாடுகள்' கண்டோம்; 'கொழிக்குமாம் செல்வம்' என்று
குவலயமே வியந்திட, நாமும் இணைந்தோம் நாவெல்லாம்
வழிந்திட; அந்நாடு நடந்து வந்த வழியும் சுவடும்.
நடாத்தும் நீதியும் நியதியும், நடைபோட்டுப் போகும்
திக்கையும் திசையையும் சீரான சிந்தையில் சீர்தூக்கிக்
கணிக்கின், இது நமக்கு வேண்டா! நம் தாயின்
இயல்புக்கு இது முரண் என்போம்! நம் நாடும்
நாகரீகமுமே பெரிதெனத் தாய்மேல் ஆணையிட்டுத்
தீர்க்கமாய்க்கொள்வோம்! அதையே பெரிதாய் வளர்க்கச்
சூளுரைதுச்செல்வோம் வாழ்வில்!
ஐயகோ! அந்நாட்டு வழியே இனி எம்நாட்டு வழியென
கண்மூடிக் கழிப்பிடச்சேற்றையும், கண்விழியக் கடற்கறை
மணலையும் வாரிப்பூசிப் புகழ்தேட முனைந்து பரபரப்பதைக்
கண்டோரே! மாநகரங்களிலே திரைப்படத்தேவாங்குகளும்
மார்பையும் மானத்தையும் திறையிட்டுக் கறைபடாது
காக்கவிரும்பாதவைதனை ஏலமிடத்துனியும் மடாந்தைகளும்
இணைந்து துணிந்தே தம் சதைச்சந்தையை வெள்ளித்திரை
நாகரீகமெனப்போர்த்தித் தாய்த்தமிழ் நாட்டுக்குள் திணிக்கும் 
இணக்கேடுகண்டு கொதிக்கிறது கனலாய் தமிழ்த்தாய் தந்தநெஞ்சம்! 
இதில், வடமொழி வேண்டாமென்றோம் செந்தமிழ் கெடுமென்று.
ஆரியம் ஓய்ந்தது பிறமொழிக் கலப்பாலெனக் கொள்ளேன்.
பலமொழிகட்குத்தாயாகி ஓய்ந்திருப்பாள்! என் அனுதாபம்!
செந்தமிழ் இனிக்க இனிக்க சமச்செவ்விருந்து பலபடைக்கும்
தேந்தமிழ்த்தாயின் மக்காள்! நாடேவாழ்வோர், பிறதேசம்
பெயர்ந்து குலம்வாழத் தொழில்புரிந்து வாழ்வோர்,
தமிழ்மூச்சே 'தாம்' என்று உயிர் கொண்டிருக்கும் உடன்பிறப்புக்காள்!
கன்னடமும் கழிதெலுங்கும் கவின்மலயாழமுந் துளுவும்
நம்தாயுதரத் தங்கைகளாயின், நாம் ஒன்றாய் இருந்த நாள்போல்
இம்மொழியெல்லாம் ஓர்மொழியாக வழிதரமாட்டீரோ?
தாய்வீட்டாரெல்லாம் ஓர்வீட்டாராய் இணைந்திடச்
செய்வழி காணீரோ! மொழியால் இணைவோம்!
மண்ணால் இணைந்துள்ளோம்! எழுத்தால் இணைவோம்!
உணர்வால் இணைய, இனமும் இல்லமும் இணைந்திருக்குமே!
ஒற்றுமையால் யாவரும் உயர்வோம்! 

அ.முத்தன், நியூயார்க் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It