இணையில்லா இறைவனின்துணைக் கொண்ட விளையாட்டு
நினைவில்லா சந்தோஷம்
கணக்கில்லா உணவுகள்
இத்தனை நாள் அனுபவித்த இன்பங்கள்
அத்தனையும் இனிதே முடிந்தது
இந்த மண்ணில் பிறந்தவுடன்
தொலைந்தான் பெயரில்லா முதல் கடவுள்
அன்னையின் அரவணைப்பு
அனைவரின் புன்சிரிப்பு
அழுதவுடன் அன்புணவு
தொழக்கூடிய இறை உடம்பு
இத்துடன் தான் தொலைத்தான்
முத்தான பல்லுடையான்
வண்ண வண்ண பல உடைகள்
வெண்ணையான பதார்த்தங்கள்
சின்ன சின்ன கவலைகள்
மண்ணிலே விளையாட்டு
மன முழுதும் மகிழ்ச்சியென
கண பொழுதை கழித்து வந்த
பொறுப்பில்லா சிறுகுழந்தை
நர்சரியில் சேர்ந்தவுடன்
தொலைந்து விட்டான்
பள்ளியிலே சிறு படிப்பு
வெள்ளி வரை கண்டிப்பு
விடுமுறையில் விளையாட்டு
நடுபகலில் நல்லுணவு
கடுப்பான சில வாத்தி போக
அணு அணுவாய் அத்தனையும்
அனுபவித்த சின்ன பையன்
தொலைந்து விட்டான்
நண்பர்களுடன் இராப் படிப்பு
நண்பகலிலும் விளையாட்டு
பெண் பற்றி தனி கனவு
கண் கண்டால் காதலுணர்வு..
சின்ன சிறு பொய்கள்
டீன் ஏஜ் பையனிவன்
தெரியாமல் தொலைந்து விட்டான்
கல்லூரி மேல் படிப்பு
பலர் முன்னால் ராகிங்கு
மலர் செண்டாய் தலை கிராப்பு
மலர் தாவும் மன வண்டு
கலர் கலராய் பல கனவு
கலங்கடிக்கும் நட்புணர்வு
கவலையற்ற தனி வாழ்வு
உலகை வெல்லும் மதி கொண்ட
நல்லவன் ஒருவனிவன் உலகமயமாதலில்
மெல்ல தொலைந்து விட்டான்
- கற்பனை பாரதி (ponnu_
கீற்றில் தேட...
தொலைந்து போனவர்கள்
- விவரங்கள்
- கற்பனை பாரதி
- பிரிவு: கவிதைகள்