சமூகவியல் பாடத்தில்
ஈழப் போராட்டத்தை
மனப்பாடம் செய்து
ஒப்பிக்கும் போது
குண்டுகளால் காயம்பட்ட
பள்ளிக்கூட சுவர்கள் சொல்லும்
மாணவர்களிடம்
சிங்களன்
சுவரை சுட்டுத்
தோற்றுப் போனது...

தீயில் எரிந்தும்
உயிரோடு பிழைத்த
நூலக நூல்கள் சொல்லும்
படிக்கும் வாசகர்களிடம்
தீயினால் சுட்டப்புண் இது...

வழிபடுகிற பக்தர்களிடம்
உடைந்து நொறுங்கிய
Tamil Eelam
தேவாலயம் சொல்லும்
தமிழீழ விடுதலைப் போராளிகளே
கடவுள் என்று...

பழைய பனைமரத்தின் உச்சியில்
புதிய வாகைப்பூ பூக்கும்
போருக்காய் குடியிருந்த
பதுங்குக் குழிகளில்
தண்ணீர் நிரம்பி
மீன்கள் முட்டையிட்டு
குஞ்சு பொரிக்கும்...

விடுதலைக்குப் பிறகு முளைத்த
மரஞ்செடிக் கொடிகளின்
கிளைகள் யாவும்
துப்பாக்கி உருவத்தை
ஞாபகப்படுத்தும்...

அகதி என்றொரு வார்த்தை
இனி அகராதியில்
அனாதையாகிவிடும்...

வானத்தில் சிறகுவிரித்துப் பறக்கும்
செம்பகக் குருவிகள்
வான்ப்படைப் பறந்த
ஒத்தையடிப் பாதையில்
பறந்து போகும்...

சாக்காடாய் கிடந்த மண்
பூக்காடாய் மாறும்
ஈ.மு. ஈ.பி.
வரலாறு எழுதப்படும் போது....

- கவிபாஸ்கர்

Pin It