1. தூக்கம்

இன்றைய நேர்முகத்திற்காக
நேற்றிரவெல்லாம் உறங்கவில்லை என்கிறாயே…

தேர்வு நடத்தியவன்
இன்றிரவு முதல்
தூங்கவே மாட்டான்
என்பதை அறிவாயோ?

2. விழிமொழி

யாமறிந்த மொழிகளிலே
உன் விழிமொழி போல்
இயல்பானது எங்கும் காணோம்.

3. நகலெடுத்தல்

உனைப் பார்த்த மாத்திரத்தில்
பார்த்தவர் எவராலும்
கவிதை எழுதமுடிகிறது.

நகலெடுத்தலில்
என்ன சிரமம் இருக்கப் போகிறது?

4. புஷ்பா டீச்சர்

மீன்கள் மாமிசப்பட்சிணி என
புஷ்பா டீச்சர் சொன்னபோது
ஒத்துக்கொள்ளவில்லை.

உன் கண்கள் முழுமையாய்
என்னை விழுங்கிய பிறகுதான்
புஷ்பா டீச்சரிடம்
ஒழுங்காய் விலங்கியல் படிக்கவில்லை
எனத் தெரிகிறது.

5. கூந்தலும் நீரும்

தலைத்துவட்டலில்
கடைசியாய் உன் கூந்தல் நீங்க…

உள்ளுக்குள்
ஓடி ஒளிகின்றன
நீர்த்திவலைகள்.

6. வாசம்

உனைப் பிரிய
மறுக்கும் ஆடைகள்
ஆறுதலாய்
உன் வாசத்தை
அபகரித்துச் செல்கின்றன.

7. புதுமை

அணிய அணிய
புதிதாகின்றன
உன் ஆடைகளும் அணிகலன்களும்.

- அ.சீனிவாசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.