இரண்டு குரோட்டன்ஸ் இலைகளை
இணைத்துக் கட்டிய
மென்பஞ்சுக் கூட்டில்
நான் இட்டு வைத்திருந்த
சுண்டு விரலளவு மெல்லிய
வெண்முட்டைகளைக் காணவில்லை
பார்வையால் வருடிப் பார்க்கிறேன்
சிதைந்து கிடக்கும் என் நேற்றைய கூட்டை
உன் விழிகளை நம்பி
விட்டுப் போனவன் நான்
கேள்விகளும் இல்லை
பதில்களும் இல்லை
ஒரே ஒரு முறை மட்டும்
பார்த்துவிடத் துடிக்கிறேன்
சின்னஞ்சிறிய வெண்சங்குகள்
போன்று
என் இதயத்தில் உருண்டு
கொண்டிருக்கும் அந்த
மெல்லிய முட்டைகள்
உன் இதயத்திலும்
உருண்டு கொண்டிருக்கின்றனவாவென்று
அவ்வளவு தான்
- தங்கேஸ்