நாமோ பாதுகாப்பான
படித்துறை என்று
நம்பி இறங்கிய நதி
பாறைகளிலும் கற்களிலும்
நம்மை புரட்டிக் கொண்டு
கடலின் அந்தகார ஆழத்திற்கு
கொண்டு செல்வது ஏன்?
தண்ணீரால் சீவப்பட்டு
மிக மிக மிருதுவான
உன் முகம் போல்
குளிரும் கூழாங்கற்களில் ஒன்றை
கைகளில் எடுத்துக் கொண்டு கூவுகிறேன்
யாழினி யாழினி
திக்கற்ற கனவுகளாய்
நதியில் தோன்றும்
நீர்க்குமிழ்களையெல்லாம்
உன் பிஞ்சு விரல்களால்
உடைத்து உடைத்து
சாப விமோசனம் தா
கனவுகள் என்றால் ஓர் நாள்
உடையத் தானே வேண்டும்
- தங்கேஸ்