கீற்றில் தேட...

மிகவும் விசித்திரமாக இருக்கிறது
நேசத்தின் பொருட்டு
ஏதாவது ஒன்றை பரிசளிப்பது

நான் நேசத்தை முதலில்
கடலென்று தான்
நினைத்திருந்தேன்
பிறகு கருப்பு தேன் சிட்டென்று
மாற்றிக் கொண்டேன்

இப்பொழுதெல்லாம்
அதைப் பற்றி நினைத்தால்
நீல வானம்
ஞாபகத்திற்கு வருகிறது

வழக்கம் போல
சட்டை நாதரிடம் போய்
கேட்டேன்
"தொலைந்து போகிறவன்
ஏன் எதையாவது
நினைத்து தொலைக்க வேண்டும்"?
என்று பதிலுக்கு கேட்டார்

இப்போது
நான் எதையாவது
நினைத்து
தொலைப்பதேயில்லை

இந்த நிமிடம்
நீ என் கண்முன் வந்து
அன்பின் நிமித்தம்
உனக்கு என்ன வரம்
வேண்டுமென்று
கேட்டால்
"உன் சேலையில்
என்னை ஒரு ஊதா நிறப் பூவாக்கி விடு "
என்பேன்.

- தங்கேஸ்