1.

'இனி நடப்பவையெல்லாம்
நல்லவையாகவே இருக்கும்'
என நீ சொல்லும்போதே
முதல் நல்லது
நடந்து விடுகிறது சகியே!

2.

சுற்றமும் நட்பும்
எல்லோருடனான
உரையாடல்களையும்
'பத்திரமா இரு'
என்பதாக முடிப்பதால்
தொலைந்து போகாமல்
இருக்க முடிகின்றது!

3.

மழையில் நனையாத பக்கம்

உள்ளாடைகளுக்கு மேல்
வார்மர்
ஆடைகளுக்கு மேல்
ஜெர்கினோ ஸ்வெட்டரோ
அணிந்துகொண்டு
சுத்தமாக மழைத்துளியோ
இயற்கையான குளிர்காற்றோ
உட்புகாத காரின் உள்ளிருந்தவாறு

வீட்டு கேட்டின் முற்புறம்
மழைக்கு ஒதுங்கியிருப்பவர்களை
விரட்டுபவனின் மனதில்
இந்த மழையால்
எப்படி ஈரம் சேர்க்க முடியும்!

4.

பேய்கள்
இருந்திருக்கலாம்.
இருந்திருந்தால்
இவ்வளவு பயம்
இருந்திருக்காது.

5.

குளிர்காலங்களிலும்
குளிர்பிரதேசங்களிலும்
தேனீரின் வேகத்தில்
ஆறிவிடுகிறது
ஊடல்!

- அ.சீனிவாசன்