நீ இருக்கும் அரங்கில்
எவர் கிறுக்கலும் கவிதை
எவர் கவிதையும் கிறுக்கல்

*
ஜன்னலை பிறருக்குத் தந்து விட்டு
பேருந்தையே எடுத்துக் கொள்ளும்
பெருங்காற்று நீ

*
வீதிக்கே
கோலம் போட்டது போல
உன் வீடு

*
நிமிர்ந்து பார்க்க வேண்டாம்
ஒரு நொடி நிழலில் நின்று செல்
மறுநொடி மலர்ந்து விடும் மரம்

*
வாழ்நாள் முழுக்க
நான் திருந்தப் போவதில்லை
முத்தமிட்டே உனை எழுப்புவேன்

*
அழகென்று அலட்டிக் கொள்ளாதே
அணு அணுவாய் ரசித்து
உனை அழகாக்கியவன் நான்

*
கதவொட்டி நீ நிற்கையிலெல்லாம்
கவிதைவரி பாசனம்
வாசலுக்கு

*
சிறுவயதில் சக்கரை மிட்டாய் என்பேன்
இப்போதென்றால் சொல்லி இருப்பேன்
நீ டக்கர் மிட்டாய்

*
ஹைக்கூகான கடைசி சொல்லுக்கு
காத்திருந்தபோது தான்
உன் காதோரம் சுருண்ட முடி கண்ணில் பட்டது

*
கவிதை நூலுக்கு உன் பெயரையும்
அட்டைப் படத்துக்கு உன் படத்தையும்
வைப்பது எக்காலம்

- கவிஜி