R15ல் அவன் தோளிறுகப் பற்றியணைத்து
பறக்குமவளின் தோடு
அங்குமிங்குமாய் ஆட்டுகிறதென்னை;
கரட்டூர் சாலையின் பள்ளங்களில்
ஏறி இறங்கி, இறங்கி ஏறும்
எனது RX100ன் முன்சக்கரத்தில்
மேலெலும்பிச் சுழலும் சேற்றுநீரோடு
புலியென உறுமும் புத்திக்குள்
கலர்கலர் புறாக்கள்
வானத்துக்குச் சிறகுதரப் பறக்கின்றன;
இறுகத் தழுவும் சுகந்தத்தில் தொலைதல்
எள்ளளவெனினும்
அதன் கொள்ளளவு பெரிது;
அதிலும்,
இருசக்கர வாகனத்தின் பின்னமர்ந்து
ஆணின் முதுகு பிளக்கத் தழுவி
இதயம் கொய்தலென்பது
கண்கள்மூடி
கைகளை விரித்து காற்றில் விட்டபடி
காரணமேதுமின்றி
காதலூட்டுதலாகும்.
- திருமூ