கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு ஓரு கவிதாஞ்சலி

திட்டமிட்ட சதிகளால்
மீண்டும் மீண்டும் உனது குழந்தையை
அவர்கள் கொன்றுவிட்டார்கள், கபீர்,
உனது சொந்தக் குழந்தையை….

உள்ளவற்றை உள்ளபடி காண்பதற்கும்
தீயவற்றைக் கண்டிக்கவும்
இந்த தேசத்தின் மீது அக்கறை காட்டவும்
அதற்கு மேலும்….
உனது குழந்தைகளுக்கு நீ கற்றுக்கொடுத்தாய்

தனது நாற்காலியில் கட்டுண்டு
நீ வகுத்த பாதையில் அடியெடுத்துவைத்து
இந்தக் குழந்தை
சர்வதேசப் பார்வைக்கு
காஷ்மீர் பள்ளத்தாக்கை திறந்துவிட்டது
ஏனென்றால் இந்தக் குழந்தை
கந்தமாலிலிருந்து காகுளம் வரை
காடுகளில் கார்போரேட் கொள்ளையை
எதிர்த்து பழங்குடிகளுக்காகப் போராடியது
அவர்கள் உனது குழந்தையை
கொன்றுவிட்டார்கள் கபீர்,
உனது சொந்தக் குழந்தையை…

கைகளில் விலங்கு பூட்டி
அண்டாச் சிறையில் அழுகக் கிடத்தினார்கள்
உனது குழந்தைக்கு
உட்கார நாற்காலி தரவில்லை
கழிவறை செல்ல வழிசெய்யவில்லை
அனுமதி கேட்டு குமாரி
நீதின்றங்களில் அல்லாடினாள் கபீர்,
அலைந்து திரிய வேண்டியிருந்தது
கவிதையையும் உரைநடையையும்
கற்பித்துக் கனவுகளை விதைத்துக்கொண்டு
களித்திருக்க வேண்டிய உனது குழந்தையை
அவர்கள் கொன்றுவிட்டார்கள் கபீர்,
உனது சொந்தக் குழந்தையை…

தனிமைச் சிறையிலும் கூட சாக மறுத்த
உனது குழந்தையை
வளரும் புற்களின் ஒலிகளில்
வாழ்வின் நேசத்தைக் கண்ட
உனது குழந்தையை
அவர்கள் கொன்றுவிட்டார்கள் கபீர்,
உனது சொந்தக் குழந்தையை…

கபீர், நீ தான்
இந்தக் குழந்தையின் இதயத்தில்
அன்பின் விதைகளை விதைத்தாய்
இரக்கமற்றவர்களின் இதயங்களை
அடைகாக்காமல்
நீ எப்படி மறைந்து போனாய்
அவர்கள் உனது குழந்தையை
கொன்றுவிட்டார்கள் கபீர்,
உனது சொந்தக் குழந்தையை…
இப்போது உன்மீது தான் கறைகள்
படிந்துள்ளன.
__________________________________________

இக்கவிதை தனிநபர் உடற்குறைபாடுகளை கடந்துவரும் எந்த முயற்சியும் மாறுபாட்டுக்கு இடமின்றி மனித இனம் முழுவதன் உடற்குறைபாடுகளைக் கடந்து வருவதற்கான முயற்சிகளுடன் பிணைக்கப்பட்டது என்று எங்களுக்குக் கற்பித்த பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கான கவிதாஞ்சலி ஆகும்.

ஷஷாங்க் எஸ்.ஆர் பெங்களூரு உயர்கல்விக்கான தேசிய நிறுவனத்தில் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியுரிமைக்கான அனைத்திந்திய அமைப்பில் செயலக உறுப்பினர். அவரது படைப்புக்களும் மொழிபெயர்ப்புக்களும் நியாயபதா, சம்வாடா மற்றும் பிற கன்னட இதழ்களில் வெளிவந்துள்ளன.

தமிழில்: நிழல்வண்ணன்
நன்றி: மேக்டூப் மீடியா.காம் (maktoobmedia.com)