அறிவுக்கு ஏங்குகிறவன்
வாழக் கூடாதா
ஆற்றலில் ஓங்குகிறவன்
வாழவே கூடாதா
ரத்தச் சகதியில்
வழிந்தோடுகிறது சாதி சாக்கடை
பித்தம் தலைக்கேறிய ஆணவம்
குத்தி கூறுபோட்டு
பெருங்குற்றம் செய்திருக்கிறது
சிறாரை வெட்டும் சிறார்
மானுடம் எங்கு போகிறது
போட்டி பொறாமை
போகிற போக்கில்
கொலை செய்யத் துணியுமா
வளர்ந்த பிழையா
வளர்ப்புப் பிழையா
வீடு புகுந்து வெட்டுவது
வீரம் என்று எவன் சொன்னது
அத்தனை வெட்டுகளையும்
வெற்றியாக நினைப்பது வேதனை
வெட்டியவன் ஒருபோதும்
வீரனாவதில்லை
மாறாக வீணனாகிறான்
வளராத மீசை முறுக்குகிறது
விளங்காத மூளை
பாவப்பட்ட உயிர்களை
குதறி வைத்திருக்கிறது
ஆதிக்க சாதி
வேறென்ன சொல்ல
சட்டம் கடமையைச் செய்யுமா
கடனே எனச் செய்யுமா
நெஞ்சு பொறுக்குதில்லையே
இன்னும் எத்தனை காலத்துக்கு
கிறுக்கு பயலுகள் கையில் கத்தி
இரத்தம் பொங்க எளியவன் சாவு

- யுத்தன்

Pin It