சிதம்பரம் நடராஜர் கோவிலில் 20 தீட்சதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கை. நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடை மீது ஜெயசீலா என்ற 37 வயது பெண் பக்தை - அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவரை சிற்றம்பல மேடையில் ஏறக்கூடாது என்று தடுத்து கொடூரமாக தீட்சதர்கள் தாக்கியிருக்கிறார்கள். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தீட்சிதர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்களை அரசுப் பிடியில் இருந்து விடுவித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக் கிறார்கள். தில்லை நடராஜர் கோவில் தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. ஆனால் தீட்சிதர்களுக்குள்ளேயே இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பக்தர்கள் காணிக்கைகளை கொள்ளையடிப்பதிலும் பங்கு போடுவதற்கும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் இரத்தம் சிந்துவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அங்கே தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடக்கூடாது என்று சண்டித்தனம் செய்து வன்முறையிலே தீட்சிதர்கள் இறங்கிய வரலாறுகளும் உண்டு. ஆறுமுக நாவலர்என்ற பெரியவர் இதற்காக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி இறுதியில் அவர் மரணமும் அடைந்து விட்டார்.

கோவில்கள் பார்ப்பனர்கள் பிடியில் இருக்கும் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்பதற்கு தில்லை தீட்சிதர்கள் கோவிலைத் தவிர வேறு உதாரணம் இல்லை. சில காலம் அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்தபோது கிடைத்து வந்த உண்டியல் வருமானத் தொகை, தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிற்கு வந்ததற்குப் பிறகு மிகப் பெருமளவிற்கு குறைந்து விட்டது. காரணம், உண்டியல் பணத்தை தங்களது சொந்தப் பணம் போன்று தீட்சிதர்கள் கொள்ளையடித்துக் கொள்வது தான் காரணம். தமிழ்நாட்டில் மதமாற்றம் நடக்கிறது. சி.பி.அய் விசாரணை வேண்டும் என்று கேட்கிற அளவிற்கு ஆகாயத்திற்கும், பூமிக்கும் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் சங்கிகளும், பாஜகவினரும், ‘இந்து’ மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் பக்தை சிற்றம்பல மேடையில் நின்று சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று தீட்சத பார்ப்பனர்கள் எதிர்ப்பதும், அந்தப் பெண்ணை தாக்குவதும் போன்ற தீண்டாமை வெறியில் செயல்படுவதை கண்டிப்பதற்கு தயாராக இல்லை.

மதமாற்றம் கூடாது, இந்து மதத்தில் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் இந்து மதத்தின் நாற்றம் இப்படி தீண்டாமை வெறியாக மாறிப்போய் வீசிக் கொண்டிருப்பதை ஏன் இவர்கள் கண்டிக்க மறுக்கிறார்கள்?

கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள், அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களின் யோக்கியதை இப்படி இருக்கிறது என்று ஏன் கேட்க தயங்குகிறார்கள்? பாஜகவின் அஜெண்டா என்பது பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நிறுத்து வது என்பது தான். மதமாற்றமோ, கோவில்களை அரசுப் பிடியில் இருந்து விடுவிப்பதோ இல்லை என்பதே இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It