புனிதப் பசுக்கள் அதிகம்
பல்கிவிட்டன
புனிதப் பசு பால் கறப்பதைவிட
மூத்திரம் பெய்வதையே
பெருமையாகக் கருதுகிறது

சந்தனச் சகதியும் தன்
சாணத்திற் கிணையாகாதென
இறுமாப்பு கொண்டு அலைகிறது

தன் மாமிசம் தின்னும்
எண்ணம் கொண்டோரை
மாறுகால் மாறுகை வாங்க
படையொன்று திரட்டி வைத்துள்ளது

கடைந்த பாற்கடலில்
விளைந்த காமதேனு
கேட்டதெல்லாம் தருமென்ற
கதையொன்று இருக்குதன்றோ!

அதன் பொருட்டு வசிஷ்டருடன்
சண்டை செய்து தோல்வியுற்றார்
விஸ்வாமித்திரர் என்கின்ற
கதையொன்றும் இருக்குதன்றோ!

வசிஷ்டர்தம் வாரிசுகள்
பசுமாட்டை முன்னிருத்தி
பசிக்கென்று பசுதன்னைப்
புசிக்கின்ற எளியோரின்
பச்சை ரத்தம் குடிக்கின்றார்

பால்மட்டும் தருமென்றால் நல்ல பசு
வேட்டதெல்லாம் தருமென்றால்
விஷப் பசுவாகாதோ!

இதுவரை பால்மட்டும் கறந்த பசு
இப்போது விஷம் கறப்பானேன்!
சவகாசம் சரியில்லை அதற்கு
சனாதன மந்தையுடன் சேரலாமோ!

சாதுவான பசுவுமின்று
சாதுக்களின் பேச்சைக் கேட்டு
தீதுசெய் மிருகமாக
திரிவதென்ன கோலமோ!

- மனோந்திரா

Pin It