இசைக்கு முன்னும் பின்னும்
இதயத்தின் எலாஸ்டிக்
சம்பவம் நெளிய வளைய பிடிக்கிறது

இழுத்தடைத்த போதும்
இன்னமும் தோகை விரிக்கிறது
அனல்காற்று

எதுவோ புரிபடவில்லை
முன்னும் பின்னும் நகரும்
தண்டவாளத்தின் தனிமை
கொடியது தான்

புருவம் அற்ற ஒற்றைப் பனைகளின்
நேர்த்தியில் இரவு சுழல்வது
ஜன்னல் திருப்பம்

ட்ராக் மாறும் தடதட சத்தங்கள்
கால் வழியே நெளியும் துக்கத்தை
நடுங்கக் கவ்வுவது
பிறகு பழக்கமாகி விடும்

நீங்கா ராத்திரிகளின்
நீலநிறக் கொண்டைகளை
அவிழ்த்தபடியே செல்கின்றன
தூர தேசங்கள்

ஒற்றைக்கண் இரும்பு பூதத்துக்கு
புறம் அற்ற நிலவே துணை

- கவிஜி

Pin It