நம்முடையது தியாக பூமி
இங்கு
ஒரு நெடுவாசல் என்ன?
ஒட்டு மொத்த தமிழகத்தையும்
தியாகம் செய்யலாம்
அதிலொன்றும் தவறில்லை
நம்முடையது தியாக பூமி

வர்ணாசிரமத்தின் கருவிலிருந்து
தியாகத்தின் திருஉருவாய்
சூத்திர அடிமைகளை
பிரசவித்தது
எம் பாரதத்தாய்த் திருநாடல்லவா?

சாதியத்தின் வெகுமதியாய்
மானுடம் மறுக்கப்பட்ட
பஞ்சமத் தியாகிகளை
உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்டதல்லவா எம் நாடு?

தாய்மை சிலுவையுடன்
கற்பு விலங்குடன்
சுயமிழந்த பாரதப் பெண்கள்
தியாகத்தின் மறு உருவமல்லவா?

மன்னர்களின் வெற்றிக்காய்
நரபலி தரப்பட்ட
தியாகிகளின் வழி வந்த
பெருமை நமக்குண்டு...

அரசனுக்காக தன் தலையை
அறுத்து வைத்த
வேளக்காரப் படையின்
உன்னதப் பரம்பரை நாம்...

வெள்ளையனுக்காக
கட்டை விரல் தந்த நெசவாளர்கள்;
பெரும் பஞ்சங்களில்
கொத்து கொத்தாய் மாண்ட பல லட்சம் பேர்;
இவர்கள் நம் முன்னோர்கள்
தியாகமுன்னோர்கள்

சந்தேகம் வேண்டாம்
நம்முடையது தியாகபூமி
ஒரு நெடுவாசல் என்ன?
ஒட்டு மொத்த தமிழகத்தையும்
தியாகம் செய்யலாம்

இருந்தாலும்
இந்த தியாகபூமியின் வரலாறு
எப்போதும் ஒநாய்களின் பசிக்கு
ஆடுகளின் தியாகமாகவே இருக்கிறது

குப்தர்களின் சோழர்களின் பொற்காலத்தில்
பூனூல் சாத்திரங்கள்
எளிய மக்களிடம்
தியாகங்களை கோரின

பூனூலுடன் இணைந்திருந்த உடைவாள்கள்
தியாக பூமியை கட்டியமைத்தன

பின்னர் வந்த
மெக்கலேக்கள்
நாகரீகத்தை பிச்சையிட்டதாகக் கூறி
தியாகங்களை கோரினர்

உடனிருந்த
ஜெனரல் டயர்களே
துப்பாக்கி முனையில் தியாகத்தைப் பறித்தனர்.

இன்று வரையிலும்
இந்த வரலாறு
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

மனுவின் பேரர்கள்
மெக்கலேயின் குழந்தைகள்
நம்மிடம் தியாகத்தை கோருகிறார்கள்

பன்னாட்டு உள்நாட்டு பெரு நிறுவனங்களின்
தீரா (லாபப்)பசி நோய்க்கு மருந்தாக
பழங்குடிகளின் காடுகளை
உழவர்களின் நிலங்களை
பெருநகர ஏழைகளின் வாழ்விடங்களை
தொழிலாளர்களின் எஞ்சியுள்ள உரிமைகளை
தியாகம் செய்யுமாக கோருகிறார்கள்
வளர்ச்சி கதைகளைக் கூறி...
தேசபக்த பஜனைகளைப் பாடி...

பாமர மக்கள் தியாகம் செய்ய
வேண்டுமெனக் கோருகிறார்கள்

பஸ்தார் பழங்குடிகள் போல
யாரேனும் எதிர்க்க தலைபட்டால்
படைகளை அனுப்பி
மனு நீதியை
புதிய தாராளவாத நீதியை
நிலை நாட்டி
தியாக பூமியை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள்

நாளை
நமது ஆட்சியாளர்கள்
தேசக் கடனை அடைக்க
அல்லது
நாட்டின் பாதுகாப்புக்காக
நமது சிறுநீரகங்களை
தேசபக்தியோடு தியாகம்
செய்யுமாறு கேட்பார்கள்

அதிலொன்றும் தவறில்லை
ஓநாய்களின் ஆட்சியில்
ஆடுகளிடமிருந்து தியாகம் கோருவதுதானே நியதி

Pin It