ஊரோரம் நாளுக்கு நாள் தேங்கும் மலத்தை
வலது இடது கையென அறியாது அள்ளுவதும்
விரவிக் கிடக்கின்றதை குவித்து அள்ளி
தலையில் தூக்கிச் செல்வதும்
ரோபோக்கள் அல்ல
மலமள்ளும் மனிதர்கள்.

நகக்கணுக்களில் தேங்கிய மஞ்சள் பூத்த வாடையைத்
துடைத்துக் கழுவினாலும் தீர்வதில்லை.

பத்து சதவீத இடஒதுக்கீடு பெறும் கைகளில்
உங்கள் பீய்யை
நீங்களே அள்ளுங்கள்

கழிவறை உள்வாயில் மாட்டிக் கொண்ட ஆணுறையை
உன் கைகளாலே எடுத்துப் பழகு.
கழிவறைக் கிடங்கு நிரம்பியதை
நீயே அப்புறப்படுத்து.
அப்புறப்படுத்திய கைகளில்
உன் மனைவியோடு பரிசம் கொள்.
உன் பிள்ளைக்கு முத்தம் கொடு.
அதே கையில் உன் குழந்தைக்கு உணவு ஊட்டிவிடு.
உன் வீடெல்லாம் கற்பூர வாசமாய்
வாடை அப்பட்டும்.

உன் வீட்டுப் பெண்களின் நாப்கின்களையும்
குழந்தையின் மலம் நிறைந்த டைப்பரையும்
நீயே சுமந்து செல்
பொது குப்பைக்கிடங்கு வரை.

வழிநெடுக மஞ்சள் நிற மலங்களுக்கு நடுவே
தெருவோர காய்ந்த மலத்தையும்
மூக்கை மூடாமல்
கடந்து சென்று பார்.

பீய்த்திக்கொள்ளும் வசவுகளுக்கு மத்தியில்
நாங்கள் புதியவர்கள் அல்ல என்பதை உணரக்கூடும்.

மலத்தூவாரம் கடந்து
அடுத்தாரின் மலவாடையை உடல் முழுக்க
சுமக்கும் எங்களுக்கு
ஓங்களிப்பு வாழ்நாளெல்லாம்.
மலமாகிப் போன வாழ்வில்
துர்நாற்றத்தைக் கழுவிக்கொள்ள
யாருக்கு வேண்டும்
தன்னிறைவு வாழ்வும்
விடுதலையும்
ஒதுக்கீடும்...

- கருநா

(கீற்றில் வெளிவந்த திராவிடன் தமிழ் எழுதிய ‘மஞ்சள்’ கட்டுரையை வாசித்த பிற்பாடு எழுதிய கவிதை.)

Pin It