கன்னலுக்குச் சுவைசேர்க்கக் கற்கண்டேன் வேண்டும்
கனிமொழியாம் தமிழ்வாழப் பன்மொழியேன் வேண்டும்
மின்னலுக்கே ஒளியூட்ட மின்விளக்கேன் வேண்டும்
இன்சுவையாம் தொன்மொழிக்குப் பின்மொழியேன் வேண்டும்
ஒருங்குறியில் தமிழுக்கேன் ஓரிடமும் இல்லை
ஒப்பில்லா நன்மொழியின் உரிமைக்கேன் தொல்லை
ஒருதலையாய் முடிவெடுத்தார் ஊறுசெய்வோர் கூடி
ஓயாமல் சூழ்ச்சிசெய்வோர் ஒழித்திடுவார் தமிழை
சாதியிங்கு கலந்துவிட்டால் சடுதியிலே சண்டை
சாகும்வரை மோதலினால் உடைவதுவோ மண்டை
ஓதுகின்ற தாய்மொழியில் ஓயாத கலப்பாம்
ஒருநாளும் அதைப்பிழையாய்க் கருதாத நினைப்பாம்
அருந்தமிழால் ஆளவந்தார் அதற்கானார் கூற்றே
அண்டிநிற்போர் அடிமைகளாய் அடிவருடுங் கூட்டம்
திருவான தீந்தமிழைத் திரித்துவருங் கிரந்தம்
திருத்திடவே இனிநாமும் திரண்டெழுவோ மின்றே!

- அர.செல்வமணி

Pin It