இரவல்
நிலவில்
விளையாடி ஓய்ந்த
என்னிடம்
இரவலாய் கேட்கப்பட்டது
வெண்ஒளி…
பாகன் சங்கிலி
களிறின் கால் சங்கிலி
கனமாக கட்டிக்கொள்கிறது
அங்குசக் கூறில்
மழுங்கிப்போன
பாகனின் பயத்தை
சாகாவரம்
எனக்குள் கிளைவிரித்த
பருவத்தில்
அடர்த்தியாய் கைகளுக்கு
எட்டிய
விதிமாய்க்கும் கிளப்பருவம்.
படர்கொடியாய் ஊர்ந்தென்னை
கடந்த
புவிக்காய்க்கும் இளம்பருவம் .
தளிர்கொம்பாய் விரல்நீட்டி
கலைத்த
செவிசாய்க்கும் சேய்ப்பருவம்.
எப்பருவம் என்னைக்கவரும்
என்றமரணஓலைக்கு
மனுகொடுக்காமல்
ஒரு குயவனிடம்
மண்ணாய் போகிறேன் ….
முனை மழுங்கிய தீ
சாலையில் அன்று நான் மட்டும் இல்லை
எதற்கோ ஓடிக்கொண்டிருந்தது
சமூகம்
சாணை சக்கரத்தை முதுகில் சுமந்தவனின்
வெறுங்காலை சாணைபிடித்தது
வெயில்
கடந்துபோனவர்களிடம் “கத்தி” கேட்காமல்
கத்தி யாசிக்கிறது
பசி
இங்கு தனி மனிதனுக்கு உணவில்லை
வெந்து தணிந்து விட்டதா உன்
தீ !
- சன்மது