மாலைப்பொழுது
மஞ்சள் வெயிலை
அனுமதிக்கவில்லை
மனங்கள் தோறும்
நிரம்பி வழிகிறது
எல்லையில் குருதிகள்.
உலக நிலங்கள் முழுவதும்
பேரிடர் காலக் கல்லறையை
அமைத்து அழச் செய்கிறது
உரோமம் உதிர்ந்த காலையும்
மரணத்தை எண்ணுகிற மாலையும்
தொலைகாட்சிப் பெட்டியில்
நிரம்பி வழிகிறது
மனித எண்ணிக்கைகளாய்
சடலங்கள்.

தேர்தல் முடிவுகளைப் போன்று
மரணத்தின் முடிவுகளை
மாவட்டங்களாய் சொல்லி நின்ற
செய்திகளை
உலகமே முதல் முறை
கேட்டுக் கொண்டுக்கிறது
இன்று ஊர் பெயரில் மரணத்தை
அழைக்கத் தொடங்கிவிட்டது.

கருணையற்ற முகமான
கிருமி நுரையீரலை பலம்கொண்டு
குத்திக் கிழித்து விடுகிறது
சரியான மருந்தில்லா
மாலுமிகள் என்ன செய்வார்கள்
வெளியில் மனிதப் படகுகள்
மரணங்களாய் நிலம் ஒதுங்கிறது.
கடைநிலை மனிதன்
கர்சீப்பை கட்டிக்கொண்டு
பசிக்காக போராடுகிறான்
ஒரு டைலர் சேனிடைசர்
வைத்துக் கொண்டு நூல் கோர்க்கிறார்
காசப்பு கடைக்காரர் கிருமிநாசினியை
தெளித்து விட்டு கறி வெட்டுகிறார்
எந்தப் பேரிடர் நோய்த்தொற்றாகட்டும்
காய்கறிகளை விற்றுகொண்டும்
நம் பசியை போக்குகிறது கடைத்தெரு.
கடைநிலை மனிதனர்களால்
நிரம்பியது நம் தேசம்.
எத்தனையோ வேண்டுதலையும் மீறி
நரபலியில் சிக்கித் தவிக்கிறது உலகமின்று
மனங்களும் ஆலயம் என்றார்கள்
நான் ஆலயத்தின் கதவுகளை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சட்டமன்றமும் நாடாளுமன்றமும்
மூடியே இருக்கட்டும்
திறந்திருந்த பொழுதும் இப்படித்தான்
புலர்ந்தது.

- ப.தனஞ்ஜெயன்

Pin It