நிலமற்றவர்களை
வழிமறித்து
கண்ணீரில்
பேதம் பார்ப்பவர்கள் கேட்கிறார்கள்.
நீ ஈழத்தமிழனா? இஸ்லாமியனா?

அகதி என்கிற சொல்லை வரலாற்றில் இருந்து
அழிக்க வேண்டியவர்கள்
அகதிகளை
அழித்தொழிக்கும் வேலையை
அற்புதம் என்கிறார்கள்.

கோட்சே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

காந்தியின் கோவணமும்
களவாடப்பட்டது,
அவரின் அகிம்சையைப் போலவே

புத்தியில்லாதவர்கள்
ஆட்சியில்
லத்திகளே நம்மை ஆள்கின்றன.

துப்பாக்கி குண்டுகளை
மதிக்கத் தெரிந்தவர்களுக்கு
எங்கள் உயிரின் மதிப்பு தெரியவில்லை.

வெறிநாய்கள்
கடித்துக் குதறிய
குழந்தையாய்
இந்திய ஜனநாயகம்.

அடுத்த தலைமுறைக்கு
விட்டுச்செல்ல
இனவெறியூட்டும்
விஷத்தைத் தவிர வேறொன்றும் இல்லை
நம்மிடத்தில்.

கட்டுவிரியன்கள்
கட்டுப்பாட்டில் இருக்கும் பாரதமாதா
பாலியல் வன்முறைக் கும்பலால்
படுகொலை செய்யப்படுகிறாள்.

இதைக் கண்டும்
காணாமல் மௌனமாய்
கடந்து செல்லும்
கோழைகளின் கூட்டத்தால்
இத்தனை அநீதியும்
சாத்தியமாகி இருக்கிறது.

அதிகாரத்திற்கு எதிரான பெருங்குரல்கள்
ஒன்றுகூடும் போது
கலைவது
மௌனம் மட்டும் அல்ல.
ஆதிக்கத்தின்
அதிகார வேட்டையும்.

- அமீர் அப்பாஸ்

Pin It