இஸ்லாமிய நண்பனுக்காக பாட்சா என்ற பெயரைத் தாங்கி தாதாவாக மாறி நன்மை செய்வது போல நடித்த ரஜினியின் பாட்சா படத்தைத் தூக்கிக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் அந்த ரசிகர்களையே மனம் கொதிக்க வைத்திருக்கிறது சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்த ஒரு செயல். இஸ்லாமியர்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நிறுவ முயலும் இந்துத்துவ வெறியரான உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த அந்த செயலே ரசிகர்களை மனம் கோண வைத்திருக்கிறது.

ரஜினிகாந்த் திரைப்படம் முடிந்ததும் ஆன்மீகப் பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டவர். அதன்படி, சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்திற்கு பின்பு இமயமலைக்கு சென்றார். இமயமலையிலிருந்து திரும்பும் வழியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கச் சென்றார். அவரை வரவேற்ற யோகியின் காலில் விழுந்து வணங்கினார் ரஜினி. இது யோகியின் அரசியல் பற்றிய புரிதல் கொண்டவர்களை மட்டுமல்ல, அரசியல் புரிதலற்ற ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கியது. கிட்டத்தட்ட 20 வயது இளையவரான யோகியின் காலில், தாங்கள் மதிக்கும் சூப்பர் ஸ்டார் விழுவதா என கொதித்தனர். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சுயமரியாதையை அதிகம் பின்பற்றும் மாநிலம். பெரியார் மண் என்றழைப்பதற்கே அதுதான் காரணம். இங்கு ஆன்மீகவாதிகள் கூட சுயமரியாதையைப் பின்பற்றுபவர்கள். தனது படங்களில் சுயமரியாதையைப் பற்றி வசனமெல்லாம் வைக்கும்படியாக செய்து அதனைப் பேசி நடித்து கைத்தட்டல் வாங்கியவரே ரஜினி. ஆனால் சுயமரியாதையற்று தன்னை விட இளையவரின் காலில் விழுந்தது ஏனென்ற கேள்வி எழுந்த நிலையில், ரஜினியே பத்திரிக்கையாளர் சந்திப்பில், யார் சந்நியாசியாக இருந்தாலும் அவர்களின் காலில் விழுந்து விடுவேன் என பதில் கூறினார்.rajini and yogi 357இந்தப் பதில் மேலும் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஏனென்றால் யோகியின் மதவெறி அரசியலும், இஸ்லாமியர் மீதான வெறுப்புணர்வும் நன்கு அறிந்தவர்கள் தமிழர்கள். முற்றும் துறந்தவர்களே சந்நியாசிகள். ஆனால் யோகி சந்நியாசி உடையை அணிந்து கொண்ட காவிப் பயங்கரவாதி என்பது தமிழர்கள் அறிந்த ஒன்று.

சந்நியாசியாக வேடம் தரித்த உத்திரப் பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் செய்த அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கோவிட் நோயின் தாக்கத்தால் 2019-ல் அனைத்து மாநிலங்களிலும் மரணங்கள் நிகழ்ந்தாலும், மக்களின் மரணங்கள் குறித்த தகவல்களையே மறைத்தவர்தான் இவர். மயானப் பதிவேட்டிலும், அரசுப் பதிவேட்டிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகப் பதியப்பட்டதை அனைத்து இணையப் பத்திரிக்கைகளும் அப்பட்டமாக தோலுரித்தன.

கங்கையில் கொத்துக் கொத்தாக சடலங்கள் மிதந்து வந்து கரை ஒதுங்கியது. கங்கை கரையில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிணங்களை அவை மேலிருந்த காவித்துணிகளே காட்டிக் கொடுத்தது. ஆனால் இந்த நேரத்தில் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த சிவலிங்கத்திற்கு பாலாபிசேகம் செய்து கொண்டிருந்தவரே சந்நியாசி யோகி. மேலும், இதே சமயத்தில்தான் மாவட்டம் தோறும் பசுப் பாதுகாப்பு மையம் அமைப்பதில் ஆர்வம் காட்டியவர் இவர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், போதிய படுக்கை வசதிகளின்றியும் பெரும்பாலானவர்கள் சமூகவலைதளங்களில் உதவி கோரிக்கை வைத்த பதிவுகள் ஆதாரங்களாக இருந்தும், யோகி இங்கு ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்து என எதற்கும் தட்டுப்பாடு இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்தார். அனைத்திற்கும் மேலான கொடுமையாக ஆக்சிஜன் இல்லை என தகவல் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தது யோகி அரசு.

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்து கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்றத் துரிதமாக செயல்பட்டார் கபீல்கான் என்ற மருத்துவர். தனது சொந்த செலவில் ஆக்சிஜன் உருளைகள் வாங்கி பல குழந்தைகளை மீட்ட மருத்துவர் கபீல்கானை குற்றவாளியாக சிறையில் அடைத்தவரே இந்த சந்நியாசி.

உத்திரப் பிரதேசத்தின் ஆதிக்கசாதி வெறியர்களால் ஹத்ராஸ் என்ற ஊரில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட தலித் பெண்ணின் விவரங்களை வெளியே கசிய விடாதவாறு காவல்துறை அதிகார மட்டங்கள் குப்பையைப் போல எரித்தது. இந்நிகழ்வை வெளிக் கொண்டு வந்த சித்திக் கப்பான் என்ற பத்திரிக்கையாளர் உபா சட்டத்தின் கீழ் யோகியால் பல்லாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக யோகி ஆட்சியில் 12 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டு, 138 பத்திரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டு இருக்கின்றனர். இப்படியாக கருத்து சுதந்திரத்தை நெறித்து தனது அரசினை எதிர்ப்பவர்களுக்கு உடனே சிறை என்னும் சர்வாதிகாரியே யோகி.

யோகியின் அரச அதிகார மட்டங்களே குற்றங்களுக்கு துணை போவது மட்டுமல்ல, யோகி ஆட்சியின் சட்டமன்ற உறுப்பினரே உன்னாவ் பகுதியைச் சார்ந்த பெண்ணை வன்புணர்வுக்கு உள்ளாக்கி, நியாயம் கேட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தையே அழித்த அவலங்கள் எல்லாம் யோகி ஆட்சியின் சாட்சியங்கள். பெண்களின் மீதான குற்றங்கள், தலித்கள் மீதான வன்முறை என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தில் (NCRB) முதலிடத்தை உத்திரப் பிரதேசமே பிடித்திருக்கிறது.

இஸ்லாமியர்கள் வீடுகளை இடித்துத் தள்ளும் நோக்கத்துடன் புல்டோசர் கலாச்சாரத்தை துவங்கி வைத்தவரே இந்த சந்நியாசி. குற்றவாளியாகக் கருதுபவர்களின் வீட்டை இடித்துத் தள்ளி அரசியல் அமைப்பு சட்டத்தை எள்ளி நகையாடுபவரே இந்த சந்நியாசி யோகி.

‘பசு காவலர்கள்’ என்ற பெயரில் குண்டர்களை நியமித்து மாடுகளை ஏற்றிச் செல்லும் இஸ்லாமியர்களைக் கொடூரமான முறையில் தாக்குவது, மாட்டிறைச்சி சாப்பிடுவதாகக் கூறி பலரை ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்யும் கும்பலை வளர்ப்பது, லவ் ஜிகாத் என்று கூறி மதம் கடந்து காதல் செய்யும் காதலர்களைத் தண்டிப்பது, இஸ்லாமியர்களை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி கொடுமைப்படுத்துவது என கும்பல் வன்முறையை இயல்பாக ஆக்கியவரே யோகி என்னும் சந்நியாசி..

இப்படிப்பட்ட ஒருவரின் காலில் விழுந்து, காவி உடை அணிந்தவரெல்லாம் சந்நியாசி என்ற பித்தலாட்டத்தை வெகுமக்கள் தளத்தில் நிறுவ முயலும் பிதற்றலே ரஜினியின் இந்த பேச்சு.

யோகி உ.பி முதல்வராகப் பதவியேற்று 6 வருடங்களில் 10713 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. 183 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதல்வராகப் பதவியேற்றதும் அரசியல் சட்டத்தை மதிக்காமல் புல்டோசர்கள் கொண்டும், என்கவுன்டர் மூலமாகவும் தண்டனைகளைத் தானே எழுதும் யோகியின் யதேச்சையதிகாரமும், ரஜினி நடிக்கும் திரைப்படங்களிலும், சமீபத்தில் நடித்த ஜெயிலர் திரைப்படத்திலும் கூட சட்டப்படியான நடவடிக்கைகளை மதிக்காமல், தானே தண்டனை கொடுக்கும் வகையில் நடிக்கும் கதாபாத்திரப் படைப்புகளும் ஒன்றாக இருப்பதால் யோகியின் காலில் விழுந்திருக்கலாமே ஒழிய, மற்றபடி சந்நியாசி என்று சொல்வதெல்லாம் யோகிக்கு பொருத்தமற்ற ஒன்றாகவே கருத முடிகிறது.

இன்று யோகியின் காலில் விழும் ரஜினி, யோகி செய்த கொலைகளையும், குற்றங்களையும், மனிதகுல விரோத செயல்களையும், நியாயப்படுத்துகிறாரா? அயோத்தி ராமன் கோவிலுக்கு சென்றதன் மூலம், யோகியின் கேடுகெட்ட ஆட்சி தான் ராமராஜ்யம் என்று சொல்கிறாரா?

யோகியின் யோக்கியதை குறித்து ரஜினி புளங்காகிதம் அடைந்தாலும், ரஜினி ஆன்மீகவாதி என்று ரஜினியின் செயலை நியாயப்படுத்துவோரும் உண்டு. ரஜினி நடிகராக மட்டுமின்றி, தான் ஆன்மீகவாதி என்று காட்டிக்கொண்டாலும், தன் நட்சத்திர பிம்பத்தை கட்டி எழுப்பும் விதமாக மாஸ் ஹீரோ பாத்திரங்களை உருவாக்கி நடித்தவர்.

இந்தக் கதாபாத்திரப் படைப்புகள் ஊடாக ரசிகர்களிடம் ஒரு தனி மனித சாகசத்தை ஊட்டியவர் ரஜினி. இந்த சாகசங்கள் சட்டப்படி குற்றம் என்பதே தெரியாத அறியாமை கொண்ட ரசிகர்கள் திரைப் பிரபலங்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதில் முதன்மையான பிரபலம் ரஜினி. அரசியலில் தனி மனித சாகசம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதனை செய்பவர்களே மோடியும், யோகியும். இவர்களை வழிகாட்டியாக ரஜினி ஏற்றதில் வியப்பில்லை.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து, ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக நடந்த பேரணியின் பொழுது போராட்டக்காரர்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைப் பார்த்து, சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று டிவிட்டரில் கொதித்தார் ரஜினி. அதிகார மட்டத்திற்கு ஆதரவான அரசியல் பேசத் தெரிந்த ரஜினி, காவல் நிலையங்களில் படுகொலை செய்யப்படும் அப்பாவி மக்கள் பற்றி என்றாவது வாய் திறந்திருக்கிறாரா? மக்களுக்கான உரிமை அரசியலைப் பற்றி பேசியிருக்கிறாரா?

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இளம் பெண்ணான ஸ்னோலின் உள்ளிட்ட 13 பேரைப் பலியிட்டு வெறியாட்டம் நடத்திய காவல் துறையைக் காப்பாற்ற, சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததுதான் காரணம் என்றும், எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி விடும் என்றும் கருத்துக்களை உதிர்த்தவர்தான் ரஜினி. தமிழ்நாட்டின் மொழி உரிமை, இட ஒதுக்கீடு உரிமை, சல்லிக்கட்டு உரிமை என தமிழர்கள் அனுவிக்கும் பல உரிமைகளும் போராட்டங்கள் மூலமாகவே கிடைத்தது என்கிற வரலாறு அறிந்திருந்தால் எப்படி ஒரு அரச பயங்கரவாதியான யோகியின் காலில் ரஜினி விழுந்திருக்கப் போகிறார்?

“ராமர் கோயில் கட்டப்படுவது வரலாறு. அதுவே எனது நீண்ட நாள் கனவு” என்று பத்திரிக்கையில் பேட்டி கொடுக்கும் ரஜினிக்கு, பாபர் மசூதியை இடிக்க நடந்த ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ வெறியர்களின் வெறியாட்டம் தெரியவில்லை, இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை தெரியவில்லை என்று அர்த்தமல்ல. சிறுபான்மையினர் ஆன்மீகத்தைப் புண்படுத்திப் பெறப்படும் தனது ஆன்மீக நலனே உயர்ந்தது என்று கருதும் சுயநலமே இந்தக் கூற்றில் அடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட சுயநல ஆன்மீகவாதி, அரசப் பயங்கரவாத சந்நியாசியை வணங்காமல் போனால் தான் ஆச்சரியம்.

ரஜினி தன்னை ஒரு ஆன்மீகவாதியாக, சனாதனியாக காட்டிக் கொண்டாலும், தமிழ்நாட்டிற்கு வெளியே தமிழ்நாட்டின் தமிழர்களின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறார். இதனாலேயே, பிறமொழிப் படங்களில், குறிப்பாக இந்திப்படங்களில் தமிழர்களை இழிவுபடுத்த வேண்டுமென்றால் ரஜினியை போன்று ஸ்டைல் செய்வதையும், அவர் போல் பஞ்ச் வசனம் பேசியும் ஏளனம் செய்வார்கள். ஏன், அமிதாப்பச்சனே ஒரு முறை ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டு கருப்பான தமிழர்களை ஏற்றுக்கொண்டதே எங்கள் சக்கிப்புத்தன்மைக்கு சான்று என தமிழர்களை இழிவுபடுத்தியவர் தான். இதையெல்லாம் ரஜினி அறியாதவரா? ரஜினியின் செயல்கள் தமிழர்களின் செயலாகிப் போவதே இன்று ரஜினியின் செயலை தமிழர்கள் விமர்சிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, ரஜினியின் செயல், அவரது சுயநலனுக்காக அவர் அறிந்தே செய்திருக்கக் கூடும். இதையொட்டி மேலும் பல கேள்விகள் எழுகின்றன.

முதலில், ஆன்மீக சுற்றுப்பயணம் என்றால் இமயமலைக்கு தான் செல்ல வேண்டுமா? தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடும் தமிழ்நாட்டில் தானே இருக்கிறது! அதென்ன தமிழ்நாட்டிற்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத பாபாவை வழிபட்டால் தான் உங்கள் ஆன்மீகம் ஏற்றுக்கொள்ளுமா? இப்படி பல கேள்விகள் உள்ளன. ஆனால் இப்பொழுது பேசுபொருளாகி இருப்பது ஆன்மீக சுற்றுலா சென்ற ரஜினியின் சுயமரியாதையற்ற, அறமற்ற செயல்கள் தான்.

ரஜினி ஒரு நடிகன் என்பதைவிட ஒரு நல்ல வியாபாரி! கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே தோற்றுபோன விவரமான அரசியல்வாதி! ரஜினி என்னும் உச்சநட்சத்திரம் உருவாக ஆன்மீகத்தையும் அரசியலையும் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல!

பாட்ஷா படத்திற்கு பின்னர் தான் முதல்முறையாக இந்த வழிமுறையை கண்டெடுத்தார் ரஜினி. அன்றிருந்த அரசியல் சூழ்நிலை மற்றும் ரஜினி என்ற நடிகனுக்கு இருந்த ஊடக பலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் இன்னொரு நடிகனை அரசியல் களத்தில் இறக்க தயாராகிக் கொண்டிருந்தது. இவை அரசியலாய் அவருக்கு கைகொடுத்ததோ இல்லையோ, இன்று வரை வியாபார ரீதியாக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் ஆசை காட்டி தனது தொண்டர் படையை தக்கவைத்துக் கொள்ள ரஜினிக்கு இது மிகவும் உதவியது.

தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் பின்னால் இருக்கும் காரணிகளை கண்டறிவது மிகவும் முக்கியம். ரசிகர் மன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்களின் எண்ணம் என்பது தாங்கள் மன்றம் வைத்திருக்கும் நடிகர் ஒருவேளை அரசியலில் ஒரளவுக்கு பெயர் பெற்று விட்டால் மன்றங்கள் அனைத்தும் கட்சி அலுவலகங்களாய் மாறும். மன்ற நிர்வாகிகள் அனைவரும் மிக சுலபமாக ஒன்றிய, மாவட்ட பொறுப்புகளை பெற முடியும். திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளில் இந்த பொறுப்புகள் பெற பொருளாதார ரீதியாகவும், சமூக/சாதி ரீதியாகவும் பெரிய பலம் வேண்டும். அத்தோடு தங்களின் பெயரை அனைவரும் அறிந்திருக்கவே பெரிய அளவில் பணம் செலவழித்திருக்க வேண்டும். ஆனால் அரசியலை நோக்கி நகரும் நடிகனின் ரசிகர் மன்றங்களில் இவை எதுவும் பெரிதாய் தேவையில்லை. அந்த நடிகனின் படங்களுக்கு போஸ்டர் அடிப்பது, கட்அவுட் வைப்பதுதான், பாலபிசேகம் செய்வது மட்டும் போதும். வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ. இந்த முறையில் இருவருக்கும் லாபம். நடிகனுக்கு தனது படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். ரசிகனுக்கு அரசியல் வாய்ப்பு. இதை பலர் பின்பற்றி வந்தாலும் அதை கண்டறிந்து செப்பனிட்டவர் ரஜினி.

தனது படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக திரையில் எடுக்கும் முயற்சிகளை விட திரைக்கு வெளியே எடுக்கும் முயற்சிகள் தான் அதிகம் என்பது அவரது கடந்த காலத்தை பார்க்கும் போதே புரியும்! ரசிகர் மன்றங்கள் பொதுவாக முன்னர் தமிழ்நாட்டில் இருந்து வந்தாலும் அரசியலை வைத்து அதை பெருக்கியவர் ரஜினி மட்டும் தான்.

தான் அரசியலுக்கு வருவதாய் மிக தெளிவாக படங்களில் காட்சிகளை இடம்பெற வைத்தார். ஒவ்வொரு படம் வெளியாகும் முன்பும் அரசியல் தொடர்பாக ரஜினி பேசுவது பல வருடங்களாக வழக்கமாக இருந்தது. அப்படியாக அவர் பேசியதால் சுமாரான படங்களுக்கும் ரசிகர்களால் நல்ல வரவேற்பு உண்டாக்கப்பட்டது. ரஜினி ரசிகர்களும் அரசியல் ஆசையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக எதிர்பார்த்திருந்தனர். போர் வரும் போது வருவேன் என வீர .வசனம் பேசினார். திரைத்துறையில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அதை செய்துவிட்டு அரசியலில் இறங்கும் முயற்சியை தொடங்கினார் ரஜினி. ஆனால் உடல்நிலையைக் காரணம் காட்டி விலகினாலும் இந்துத்துவ நோக்கத்தை நிறைவேற்றும் மறைமுக அரசியல்வாதியைப் போலவே நடந்து கொள்கிறார்.

ஆன்மீக அரசியல் என்கிற குப்பையை தூக்கிக்கொண்டு கட்சியில் சில பொறுப்பாளர்களையும் நியமித்தார். காலமும், சமுதாயமும் ஒரேபோல் இருப்பதில்லை.

உடல்நிலை சரியில்லை என்று காரணம் சொல்லி பின்வாங்கினாலும் தனது பாஜக சார்பு தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கு முற்றும் எதிரானது என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடே ரஜினியின் பின்வாங்கல். இந்த காலகட்டத்தில் தான் தர்பார் மற்றும் அண்ணாத்த என்ற இரண்டு படங்கள் வெளியாகி ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வியைத் தந்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பாஜக இந்துத்துவ எதிர்ப்பு ரஜினியை மிகப்பெரிய கேலிப் பொருளாக்கியது.

தற்போது ஜெயிலர் படம் வெளியாகி மக்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்னர் இருந்த எதிர்பார்ப்பு ரஜினியின் அதற்கு முந்தைய இரண்டு படங்களுக்கு இல்லை. ஆன்மீக அரசியல் என்ற போர்வையில் கொண்டு வந்த இந்துத்துவ அரசியலை கைவிட்டதனால் தமிழ்நாட்டு மக்கள் நடிகர் ரஜினிக்கு ஆதரவு தந்துள்ளனர் என்பதே இதன் பொருள். இப்படி அரசியலாய் முடிவெடுக்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியலுக்கும் பண்பாட்டுக்கும் மதிப்பளித்தாரா ரஜினி என்று பார்த்தால் இல்லை என்பதைதான் தனது சமீபத்திய நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் ரஜினி.

வெறுப்பின் வாயிலில் இருக்கும் தமிழ்நாட்டு சங்கிகளையே விரும்பாத தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு வளர்ந்த ஒரு நடிகர், அதற்கு முற்றிலும் எதிராய் இருக்கும் மதவெறி பிடித்த யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுவதை எந்த விதத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஜினியை தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிப்பதற்கு காரணம் வெள்ளைத்தோலும் பணக்கார பகட்டுத் தோரணையுமே கதாநாயகனுக்கான இலக்கணமாய் இருந்த காலத்தில் திராவிட நிறத்தில் வெகு சாமானியன் போலிருக்கும் ஒரு நடிகனைக் கண்டதும் தன்னை திரையில் காண்பது போல் தமிழ்நாட்டு மக்கள் ரஜினியை பார்த்தனர். பார்ப்பவர்களை தன்னுடைய உலகத்திற்கு கொண்டு செல்லும் வலிமை நிறைந்த வடிவமான திரைப்படத்தின் மூலம் ரஜினியை பார்த்து பழகிய தமிழர்கள், அவர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதாக உணர்ந்ததால் தான் சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் ரஜினி மீண்டும் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

இதெல்லாம் தெரியாதவரா ரஜினி! அல்லது இதெல்லாம் தெரியாதவர்களா அவரை இயக்குபவர்கள்? யோகி காலில் விழுந்தது, ராமர் கோயில் கட்டுமானத்தை போய் பார்த்தது, கொலைகாரனை வணங்கியது எல்லாம் எதேச்சையாக நடப்பதில்லை. சமூகத்தின் உயர்மட்டத்தில் இந்துத்துவ பாஜக அரசியலுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நிச்சயம் பொருளாதார நலன் இருக்கும். இந்தி திரையுலகில் அக்சய்குமார் இதற்கு சரியான உதாரணம். தன்னை இந்துத்துவ ஆதரவாளராக காட்டிக் கொண்டது மூலம் ஊடக கவனம், ஒன்றிய அரசு ஆதரவு, தேசிய விருது என்று தனக்கான அங்கீகாரத்தையும், பொருளாதார நலனையும் பெருக்கிக் கொண்டார். இதே பொருளாதார நலனை நோக்கி தான் ரஜினி இயங்கிக் கொண்டிருக்கிறார். தென்னிந்தியா முழுவதும் ரஜினியின் வியாபார எல்லை மிக வலுவாக உள்ள நிலையில் தன்னுடைய அடுத்த படங்களுக்கான வியாபாரத்தை இந்திய முழுவதும் கொண்டு செல்ல ரஜினியின் முயற்சியே இந்த ஆன்மீக நாடகங்கள்.

ஆனால் இப்படியான அப்பட்டமான சங்கித்தனம் தமிழ்நாட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார் என்றே கூறலாம். வியாபார எல்லையை வட இந்தியாவுக்கு ரஜினி கொண்டு செல்ல இப்படியான கீழ்த்தரமான வேலைகளை செய்வாரென்றால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அவருடைய படங்களுக்கான வரவேற்பு மீண்டும் அண்ணாத்த, தர்பார் காலகட்டத்துக்கே கொண்டு செல்லும்.

பாம்பே படம் வெளியீட்டிற்கு முன்னர் மணிரத்னம் சிவசேனைக் கட்சியை நிறுவிய பால் தாக்கரேவை சந்தித்தார். ஜெயிலர் படம் வெளிவந்த பின்னர் யோகியை ரஜினி சந்திக்கிறார். இஸ்லாமியர் மீது வெறுப்புணர்வைக் கட்டவிழ்க்கும் இந்துத்துவ வெறியர்கள் இவர்கள். யோகியை சந்திக்கும் இவரின் நோக்கம், திரையில் தலித், இஸ்லாமியர் சார்பு படங்களில் நடித்தாலும், உண்மையில் தானும் இந்துத்துவ சனாதனவாதியே என்பதை நிலை நிறுத்துகிறார். சாதி, மதம் கடந்து தன்னை நேசிக்கும் ரசிகர்களை ஏமாற்றுகிறார்.

அரசியல் கணக்கை உள்ளூர வைத்து செயல்படுபவர்களே திரைப் பிரபலங்கள். அரசியல் புரிதலற்ற ரசிகர் மன்றங்கள் இவர்களின் பகடைக்காய்கள். இவர்களின் அரசியல் சூதாட்டத்தை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எளிமையான வரிகளால் தனது பதிவில் விளக்கி விட்டார்.

“மிக ஆபத்தான அரசியல்வாதி ரஜினி,
மிக ஆபத்தான நடிகர் மோடி”

என்பதே அந்த வரிகள்.

- மே பதினேழு இயக்கம்

Pin It