வெண்சங்குக் கூட்டமொன்று வெண்சிறகு வீசிவீசி
வான்வெளியில் வந்துவிளை யாடும்-நமது
விழிகளதைத் தேடித்தேடி ஓடும்
பண்பாடும் பூங்குயில்கள் பூஞ்சோலை யில்
பறந்த பாஷையில்லாப் பாட்டுகளைப் பாடும்-மனம்
பளுநீங்கிப் பரவசத்தி லாடும் 

தோட்டத்தில் கூட்டமாக தோகைமயில் ஓடிவந்து
தானியத்தை தின்றுநின்று ஆடும்-அதைத்
துரத்தமனம் எப்படித்தான் கூடும்!
கூட்டிற்குள் குஞ்சிருக்க நெஞ்சிலன்பு தான்சுரக்க
காட்டிலிரை புள்ளினங்கள் தேடும்-அவை
கத்துமோசை கேட்கமனம் நாடும் 

வனத்திற்குள் எத்தனையோ வாசனைகள் தோன்றிவர
மூக்கினிலே இன்பம்விளை யாடும்-மனம்
வலிநீங்கி ஆனந்தமாய் ஆடும்
சனத்திற்குள் எத்தனைபேர் இந்தவகைக் காட்சிகளில்
சந்தோஷம் கண்டிடவே கூடும்-பலருக்குச்
சாப்பாடு கிட்டுவதே யோகம் 

மானைப்போல் துள்ளிவிளை யாடுகின்ற பேறெல்லாம்
மண்குடிசைப் பிள்ளைகளுக் கேது!-அவர்
வயிறுகாலி யாயிருக்கும் போது
தேனைப்போல் தித்திக்கும் கானத்தில் மூழ்கமனம்
தேகம்தேய் பாமரனுக் கேது!-அவன்
தாய்பசியில் தூங்குகின்ற போது 

பூங்காற்று வீசுகையில் புல்வெளியில் தூங்கிசுகம்
பெற்றிடவே ஏழைநினைப் பாரோ!-தான்படும்
பாட்டையதில் மூடிமறைப் பாரோ!
தாங்காத துன்பத்தில் தத்தளிக்கும் நேரத்தில்
தென்றல்தனைத் தீண்டநினைப் பாரோ!-உழவர்
தாரகைகள் பார்த்துரசிப் பாரோ! 

சோகநிழல் உஷ்ணத்தின் தாக்கமது தாளாமல்
சாலையோரம் தூங்குகின்றார் மக்கள்-மன
சாட்சியுள்ள பேருக்கது சிக்கல்
தாகத்தைத் தீர்க்கத்தண் ணீர்தேடி தூரத்தே
செல்கின்றார் பானையுடன் மக்கள்-நேர்
சிந்தனைகொண் டோருக்கது சிக்கல் 

சாதிமத பேதங்கள் சாஸ்த்திங்கள் வேதங்கள்
சீக்கிரமே செத்தொழிய வேண்டும்-சம
தர்மத்தை நிறுவத்தான் வேண்டும்
மேதினியில் மானுடராய்த் தோன்றியவர் யாவருமே
வேண்டியவை பெற்றுவாழ வேண்டும்-அதற்கு
வர்க்கங்கள் காய்ந்துதிர வேண்டும்

- மனோந்திரா

Pin It