கையோடு கொண்டு
கணக்கற்ற தெரு மலத்தை அள்ளி
ஓட்டைக் கூடையில் நிரப்பி
மேனியெல்லாம் மலம் வழிந்தோட
அள்ளிச் சுமந்த ஆத்தாளும்

கழுத்தளவு மலக்குழிக்குள்
கைவாளியோடு இறங்கி
மூச்சடக்கி மலமெடுத்த
அப்பனும்

மலம் அள்ளிச் சுமந்த வேளைகளில்
மனதில் சுமந்த எண்ணம்
ஒன்றே ஒன்றுதான்
எங்கள் மகன்
படிக்கச் செல்கிறான்
இந்த இழிவு
எங்களோடு முடியும்
என்பது மட்டும் தான்....

யாரும் சொல்லிவிடாதீர்கள்
அவர்களிடம்
சக்கிலி மகன் தானே
வா வந்து கக்கூஸ் கழுவு என
ஆதிக்க சாதி வெறியில்
அப்பாவிச் சிறுவனை
அடித்து கழுவ வைத்த
ஆசிரிய மிருகத்தின்
அடாத செயலை...

- வீர பாண்டி

Pin It