சின்னச் சின்ன தேர்வுகளில்
முதல் மதிப்பெண் எடுத்தேனென்றால்
அன்றைய பரிசு
கீற்றுக்கொட்டைகளில் படம் பார்க்கச் செல்லல்...

மணல் டிக்கெட் எடுத்துக் கொண்டு
பின்னே சுவரின் பக்கத்தில் மணலை மேடாக்கி
அதன் மீதமர்ந்து அண்ணனும் தம்பியும் படம் பார்த்துவிட்டு
இடைவேளையில் அம்மாவின் பக்கம் சென்று
இது வரை பார்த்த கதையையும்
இனி வரப்போகும் கதைகளையும் பேசி முடித்து
மணலில் கீழே கிடக்கும் பிலிம்களை பொறுக்கியெடுத்து
சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு
காசுவாங்கி... கடலை மிட்டாயும் முறுக்கும் வாங்கி
அதை படம் முடியும் வரை கொரித்து
"மருதமலை மாமணியே முருகய்யா"வை
ஒலிபெருக்கியில் கேட்டபடியே
கூட்டத்தோடு கூட்டமாய் நடந்து வீடுவந்தது..
அதனைப் பற்றி அடுத்த நாள் பள்ளியில் பேசி
அதில் நடித்த சிவாஜியாகவோ, ஜெமினியாகவோ
சில நாட்கள் நினைத்து திரிந்தது
அதை நினைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி...

இன்றைய அடுக்கு மாடி குடியிருப்பில்
ஒற்றைக் குடும்பமாய்
இறுகிய முகத்தோடு
மகிழ்ச்சியான ஒரு படம் பார்த்தாலும் கிடைப்பதில்லை...

Pin It