மழையை எதிர்பார்த்து
மாடியில் நின்றுகொண்டு
வரவேற்க ஆயத்தமாகின்றீர்கள்
நீங்கள்

மழையை எதிர்கொள்ள
குடிசையில் நின்று கொண்டு
ஆயுதபாணி ஆகின்றோம்
நாங்கள்

மெல்லிய தூறல்களை
தேனீரோடு அனுபவிக்கிறீர்கள்
நீங்கள்

தூறல் வலுக்கும் முன்னே
இரவு கஞ்சிக்காக
ஈர விறகுகளோடு
மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம்
நாங்கள்

மழை நீரை கையில் அடித்து
குழந்தை போல
விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள்

ஒழுகாத இடம் தேடி
ஒதுங்கி நின்று
பாத்திரத்தில் சொட்டும் நீரை
நீர் முட்டிய கண்களோடும்
குழந்தைகளோடும்
பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்
நாங்கள்

கதகதப்பான போர்வைக்குள் நுழைந்து
கண்ணயர்கிறீர்கள்
நீங்கள்

குளிரில் நடுநடுங்கி
கவட்டிற்குள்
உடல் சுறுக்கி
விழிப்பிற்கும் உறக்கத்திற்கும்
நடுவே
அல்லாடிக் கிடக்கிறோம்
நாங்கள்

மழை
எல்லோருக்குள்ளும்
ஒரே உணர்வுகளை
பொழிந்து விடுவதில்லை...

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.