என் உணவு என் உரிமை என்று நாம் சொல்வது போலத்தான் மதுகுடிக்கும் உரிமையும் என்று சிலர் வாதிடுகின்றனர். அப்படி வாதிடுபவர்களில் முற்போக்கு பேசும் அறிவுஜீவிகளும் கூட அடக்கம்.

tasmac 240மேலோட்டமாகப் பார்த்தால் என் மது என் உரிமை என்பது ஏற்புடையதாகவே தெரியும். ஆனால் உண்மையில் மது குடிப்பது தனிமனிதன் சார்ந்தது மட்டும் தானா என்றால், இல்லை என்பது தான் பதில். ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு குடும்பத்தின் அங்கம், சமூகத்தின் அங்கம். ஒரு தனிமனிதனின் குடிப்பழக்கம் அவனை நம்பி வாழும் குடும்பத்தையும், அவன் வாழும் சமூகத்தையும் பாதிக்கிறது எனும்போது எப்படி மதுவை வெறும் தனிமனித உரிமைக்குள் அடைக்க முடியும்?

எத்தனையோ குடும்பங்கள் குடிவெறியால் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. ஏன் நம் நண்பர்களில் ஒருவரோ, நாம் வசிக்கும் தெருவில் உள்ள ஒருவரோ கண்டிப்பாக குடிவெறிக்கு அடிமையாகி இருப்பார். அவர்கள் குடும்பம் படும் துயரத்தை நாமும் கூட பார்த்துக்கொண்டு தான் இருப்போம். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டோ அல்லது மறைத்துக் கொண்டோ மதுகுடிப்பது தனிமனித உரிமை என்று பேசுகிறோம்.

சமூகவெளியிலும் குடிவெறி நிகழ்த்திக் கொண்டிருக்கிற தீங்குகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கொலை, கொள்ளை, வன்முறை, வன்புணர்ச்சி இதையெல்லாம் தாண்டி இளம் தலைமுறையே குடிகார தலைமுறையாக உருவாகிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய தேதியில் பத்து, பனிரெண்டு வயது சிறுவர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாக மாறியுள்ளனர். பெண்களும் இந்த பேராபத்தில் இருந்த தப்பவில்லை. பேசன் என்ற பெயரிலும், அழகுக்கு என்ற பெயரிலும், பார்ட்டி கொண்டாட்டம் என்ற பெயரிலும் பெண்களையும் மதுப்பழக்கம் மெல்ல விழுங்கிக்கொண்டு இருக்கிறது.

படித்தவர் - படிக்காதவர், சிறுவர் - முதியவர் எல்லோரையும் இன்று இணைக்கும் கண்ணியாக மது மாறி இருக்கிறது. வயது பேதமில்லாமல் வீழ்ந்து கிடக்கிறார்கள் வீதிகளில் நிதானம் தெரியாத அளவுக்கு குடித்துவிட்டு.

சாவுவீடு, கல்யாண வீடு, காதுகுத்தல், சடங்கு, திருவிழா, பண்டிகைகள் எதுவாக இருந்தாலும் சரக்கில்லாமல் சந்தோசம் இல்லை என்னும் அளவுக்கு தமிழகத்தில் ஒரு பண்பு மாற்றமே நிகழ்ந்து இருக்கிறது.

பத்துவயதில் குடிக்கப் பழகும் ஒருவன் எதிர்காலத்தில் எப்படி வாழ்வான்? அவனை நம்பியிருக்கும் அவன் குடும்பமும் இந்த சமூகமும் என்ன ஆகும்?

இது மட்டுமல்ல குடிக்கு அடிமையான பல பதின்ம வயது இளைஞர்கள் மதுவோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் கஞ்சா, போதை, ஊசிப்பழக்கம் போன்றவற்றிற்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். போதையில் புதுமை தேடும் இவர்களது பயணம் மரணத்தில், மூளைத்திறன் இழப்பில், உடல் செயல் திறன் இழப்பில் போய்தான் முடிகிறது.

ஆண்டுக்காண்டு டாஸ்மாக் விற்பனை கூடுவது எதைக் காட்டுகிற்து? இந்த சமூகம் குடிகாரச் சமூகமாக மாறிக்கொண்டிருப்பதைத் தானே.

டாஸ்மாக் விற்பனை மட்டுமா கூடுகிறது? பாலியல் வண்புணர்வு, கொலை, கொள்ளை, சாதி மதக் கலவரங்கள், சகிப்புத்தன்மை போன்ற குற்றங்களின் எண்ணிக்கையும் அல்லவா கூடுகிறது. இதெற்கெல்லாம் மதுவும் ஒரு முக்கிய காரணி என்பதை மறுக்க முடியுமா? எத்தனை தீங்குகளை மனித சமூகத்துக்கு உண்டாக்கும் மதுப்பழக்கத்தை எப்படி நாம் தனிமனித உரிமை என்று சொந்தம் கொண்டாடலாம்?

மது என் உரிமை என்பவரின் மகனும் மகளும் நாளை இதே வசனத்தை இவருக்கே திருப்பிச் சொல்லும்போது சரிதான் என்று ஏற்றுக் கொள்வார்களா?

முன்னூறு ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் இருநூறு ரூபாய்க்கு குடிக்கிறார் என்றால் மீதமுள்ள நூறு ரூபாயில் எப்படி குடும்பத்தை நடத்துவார், பிள்ளைகளை படிக்கவைப்பார், நல்லது கெட்டதுகளுக்கான செலவை மேற்க்கொள்வார்?

உண்மையில் தொடர் குடிகாரர்கள் குடும்பத்தைப் பற்றிய கவலையை முழுமையாக விட்டுவிடுகிறார்கள். எப்படியாவது குடிக்க வேண்டும், போதை எப்போதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் குடும்பம் படும் கஷ்டத்தை வார்த்தையில் சொல்லிவிட முடியாது.

தகப்பனின் சம்பளம் வீட்டுக்கு வராததால் படிப்பைவிட்டுவிட்டு குறைந்த கூலிக்கு வேலைக்குப் போகும் சிறுவர் சிறுமியர், சித்தாள் வேலைக்கோ வீட்டுவேலைக்கோ போய் அல்லல்படும் குடும்பப் பெண்கள், கல்யாணம் ஆகாத முதிர்கன்னிகள், குடிப்பழக்கத்தால் திருமணம் செய்துகொள்ளும் தகுதியை இழந்து தண்டோட்டியாக தெருவில் திரியும் இளைஞர்கள். இதுதானே குடிப்பழக்கத்தால் கண்ட பலன்கள்.

இதுமட்டுமா? சமூகத்தில் என்ன நடந்தாலும் அதைகண்டு கொள்ளாத போக்கும் அதிகரித்து வருகிறது இந்த குடிப்பழக்கத்தால். எத்தனை கருப்புச்சட்டங்கள் வந்தாலும் சரி, எத்தனை விலைவாசி உயர்வு, சாதிமத மோதல்கள், சமூகக்கேடுகள் எது நிகழ்ந்தாலும் கண்டுகொள்ளாத, குடி ஒன்றே பிரதானம் என்னும் சமூகம் உருவாகிறது. உருவாகிறது என்பதைவிட திட்டமிட்டு ஆளும்வர்க்க அதிகாரவர்க்க கும்பல்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ஒரு மலட்டுச் சமூகத்தை குடிவெறி மூலமாக உருவாக்கி வருகிறது என்பதே உண்மை.

நாம் குடிப்பதற்கு ஆயிரம் காரணங்களை சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நம்மை குடிக்க வைப்பதற்கு அரசுக்கு இருக்கும் ஒரே காரணம் நாம் எந்த விழிப்பையும் அடைந்துவிடக் கூடாது என்பதுதான்.

குடிவெறி, சாதிவெறி, மதவெறி, இனவெறி போன்றவை எல்லாம் தன் மீதான கவனத்தை திசைதிருப்ப, தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கலை தங்குதடையின்றி நம்மீது திணிக்க,
கல்வி, விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் கார்ப்ரேட் ஏகபோகத்தை நிறுவ அரசால் ஊட்டி வளர்க்கப்படும் போதைகள் ஆகும். சாதி மத இன வெறி போதைகளை எதிர்ப்பது போலவே மதுபோதைக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும்.

இனியும் குடிப்பழக்கம் தனிமனித உரிமை என்று சொல்லிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் குடிவெறிக்கு எதிராகவும், குடிக்கவைத்து குடிகெடுக்கும் அரசிற்கு எதிராகவும், அது நம்மீது திணிக்கும் கழிசடை பண்பாட்டிற்கு எதிராகவும் மதுவிற்கு எதிராக போராடிவரும் தோழர்களோடு இணைந்து களத்தில் நிற்போம்.

மதுவிற்கும் அதை விற்கும் அரசிற்கும் எதிராக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தோழர் கோவனின் குரலில் சேர்ந்து சொல்லுங்கள்.

மூடு! டாஸ்மாக்கை! மூடு!

- வீர பாண்டி

Pin It