tea estateமூன்று புகைப்படங்கள் அனுப்பியிருந்தாள்
என் வீட்டுக்கு முன் எடுத்ததென்று
ஒன்றில் நிழல்கள் மேய்ந்து கொண்டிருந்த
மந்தைகளுக்கு நடுவே
நீண்ட கோடுகளாய் ஒளியின் கைகள்
அதன் நடுவே உயரமாக வளர்ந்து நிற்கும்
இரண்டு ரோஜாக்கள் சிறியதும் பெரியதுமாய்
இரண்டாவது புகைப்படத்தில்
சரிவுகளில்
தேயிலைகளின் அணி வகுப்பு
மூன்றாவது ஒன்றில்
இலைகளின் மீது சாய்ந்த படி
தோளோடு தோள் உரசி
நிற்கும் இரண்டு செர்ரி பழங்கள்
அவள் சொன்னாள்
மூன்று படங்களிலும் நானிருக்கின்றேன்
செர்ரி பழங்களாய் அவள்
சரிந்து கிடக்கும் மலையாய் அவள்
நிமிர்ந்து நிற்கும் ரோஜாக்களாய் அவள் என்றேன்
பதில் அனுப்பினாள்
எல்லாவற்றிலும் ஒளிரும்
வானம் நானென்றாள்.