உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது, கற்பித்தல் நன்றே
கல்லா மாந்தர் உள்ளனர் என்றால்
நில்லா தொழியும் கற்றவர் மாண்பு
கற்றவர் பெருமை தேர்ந்து தெளிந்திட
மற்றவர் கல்வியே உற்ற உரைகல்
கல்வி நல்காக் கசடர்கள் தம்மைத்
தொல்லியல் காட்சிப் பொருளாய் ஆக்கிடப்
பெருவிரல் பறிகொடா ஏக லைவனாய்
அரும்பெரும் கல்வியை உடைமை கொள்வோம்
(ஊறுபாடு நேர்ந்தவிடத்து உதவியும், (கல்வி உதவித் தொகையாக) மிக்க பொருளைக் கொடுத்தும், அதனால் நேரும் இழப்பு வருத்தம் முதலிய நிலைகளைக் கண்டு மாறுபடாதும், கற்பிப்பது நல்லது. (ஏனெனில்) கல்வி கற்காத மனிதர்கள் உள்ளார்கள் என்றால் கற்றவர்களின் சிறப்பு நில்லாது ஒழியும். கற்றவர்களின் பெருமையைத் தேர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது மற்றவர்களின் கல்வி தான் சரியான உரைகல் ஆகும். கல்வியை அளிக்க மறுக்கும் கசடர்களைத் தொல்பொருள் இலாகாவின் காட்சிப் பொருளாய் ஆக்கிட, ஏகலைவன் பெருவிரலைப் பறி கொடுத்து போல் அல்லாமல், உறுதியாய் நின்று அரும் பெரும் கல்வியை நமது உடைமையாகக் கொள்வோம்.)