உற்பத்தி மிகையினும் வறுமை நிலைமை
பற்பல வகையிலும் நிலைப்பதை உரைத்து
அனைவர்க்கும் வேலை அளித்திடும் பணியை
நினைக்கவும் இயலா முதலியம் தீதெனக்
கூறியும் அறிஞர் அசையா நின்றார்
மீறிய நிலையில் புவிவெப்ப உயர்வு
சந்தை வழியில் உயர்வதே கண்டு
சிந்தை மயங்கி விழிக்கின் றாரே
(முதலாளித்துவ அமைப்பில் மக்களுக்குத் தேவைப்படும் அளவை விட அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தாலும் மக்கள் வறுமையில் வாடுகின்ற நிலைமையையும், அனைவர்க்கும் வேலை அளிக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாத நிலையையும் காட்டி, முதலாளித்துவ அமைப்பு ஒரு தீய அமைப்பு என்று கூறியும் அறிஞர்கள் அசையாது நின்றனர். சந்தை வழியின் இயக்கம் (உழைக்கும் மக்களின் கதந்திரத்திற்கு எதிரானது என்ற) நிலையை மீறி புவி வெப்ப உயர்வினால் உலகத்தை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதை எடுத்துக் காட்டும் பொழுது சிந்தை மயங்கி விழிக்கின்றார்கள்.)
- இராமியா